Thursday, 29 December 2016

காத்திருப்பு


கடற்கரையில் அலைந்து கொண்டிருந்தேன். எத்தனை காலமாகி விட்டது இப்படி ஏகாந்தமாக கடற்கரையில் அலைவது. எப்படி வந்தேன் இங்கே? எங்கே யார் அழைத்து வந்தார்கள்? ஒன்றும் புரியவில்லை. இதுவரை எவ்வளவு நேரமாயிற்று? ஏன் பசிக்கவே இல்லை? எந்த கேள்விக்கும் விடை தர ஆளில்லை. அவரவர் கடல் அலைகளில் குழந்தைகுட்டிகளுடன் அலையில் கால் நனைத்து விளையாடுகிறார்கள். பார்த்து எத்தனை நாளாயிற்று. எனக்கும் அப்படி வாழத்தான் ஆசையாக இருந்தது. ஹூம் , எல்லாம் விதி. எனக்கு அந்தக் கொடுப்பினை இல்லை.

திடீர் என்று காவல் துறை வாகனங்களின் ஒலி. சாலையே பரபரப்பாயிற்று. 
ஓ. நான் கடற்கரையில் இருப்பது தெரிந்து அழைத்துச் செல்ல வந்திருப்பார்கள். என்னைப் பார்த்தால் குனிந்துபோலியாக பவ்யம் காட்டிக் கும்பிடும் கூட்டத்தை விட்டு விலகி நிற்பது கூட மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் மனிதக் குருதி குடித்த புலி போல அதிகாரத்தைக் குடித்து விட்டதுதான் எல்லாவற்றிற்கும் காரணமாயிற்று. அந்த சுவைக்கு எத்தனை சதிகள், அலைச்சல், துன்பங்கள்.

 சரி அங்கே ஒரே கூட்டமாக இருக்கிறதே என்னவென்று பார்ப்போம் என்று நடக்கிறேன். ஏதோ மௌன ஊர்வலம். பெரிய பெரிய கருப்புக் கொடிகள். பலர் முகத்தில் சோகம். சிலர் முகத்தில் சோகத்தை மீறிய மகிழ்ச்சி. பெரிய எழுத்தில் எகப்பட்ட பதாகைகளில்  கருப்பு எழுத்துக்கள் கண்ணீர் அஞ்சலி செய்தன. எங்கும் மௌனம். பதாகையை பார்த்ததும் திடுக்கிட்டேன். என்ன இதுஅக்கிரமம்?   
நான் இறந்த முதலாம் ஆண்டு நினைவு நாளாம். என்ன வேடிக்கை இது, இங்கே நான் குத்துக் கல்லாக இருக்க. குரலெடுத்துக் கத்துகிறேன், “அட முட்டாள்களா நான் உயிரோடு இருக்கிறேன்”. என்ன இது, யாரும் என் குரலை கேட்டதாக காட்டிக் கொள்ளவில்லை.

அஞ்சலி நிகழ்வை நடத்துவது யார் என்று பார்த்தால், ஆச்சரியம். என் கூட இருந்தவர்கள்தான். அவர்கள் பேசுவதைக் கேட்க அவர்களுடனேயே நடக்க என்னைப் பற்றிய அவர்கள் எண்ணங்கள் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. ஆகா என்னைச் சுற்றி நடப்பது உண்மையா அல்லது கனவா? கிள்ளிப் பார்த்துக் கொள்ள உடலைக் காணவில்லையே. இன்னம் அதிகமாக குழப்பம்.

வீட்டிற்குப் போனால்,தெரியும் என்னை எல்லாருக்கும் அடையாளம் தெரியும். எண்ணிய வேகத்தில் வீட்டிற்கு வந்தால், வீட்டில் நான் வளர்த்த நாய்கள் கூட குரைத்து துரத்தின. மனிதர்கள், நான் பணியாட்களை விளிக்க யாரும் என்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. ஏதோ மர்மமாக இருக்கிறது என்பது மட்டுமே புரிந்தது. என் தனியறையில் ஆளுயரக் கண்ணாடி ஒன்று இருக்கும் அதில்தான் என்னை தினமும் காண்பேன். அறைக்குள் நுழைந்து கண்ணாடியைப் பார்த்தால், யாரது? இது சத்தியமாக நானில்லை. ஏதோ நிறங்கள் வட்ட வட்டமாய் மாறி மாறித் தெரிகிறதே. கண்ணாடி கூட எனக்கு விசுவாசமாயில்லையா?

எதோ என்னைப் பற்றி யாரோ உரத்த குரலில் பேசுகிறார்கள். எனக்கு நினைவு மண்டபம் கட்ட ஏன் தாமதம் என்று. யாரோ சிலர் வாய் பொத்திச் சிரிக்கிறார்கள். என்ன ஆயிற்று எனக்கு? ஒன்றுமே விளங்கவில்லை.

மீண்டும் கடற்கரைக்கு வந்து காலாற சிந்தித்தபடி நடக்க, என்னது? என் பெயர் போட்டு நினைவிடம் என்று உள்ளதே. அருகே சென்றால் கட்டணம் வசூலித்து உள்ளே அனுப்புகிறார்களே . கையில் காசு வேறு இல்லை. ஆனால் யாரும் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. அருகே வந்தால் எதோ இழுக்க என்னுடல் சவப் பெட்டிக்குள், புதைக்கப்பட்ட நிலையில். சரி. ஒன்று செய்யலாம் உடலுக்குள் நுழைந்து விடலாமா?
முயன்று பார்ப்போம் என்றால் முடியவில்லை. கால் கட்டை விரல்களைச் சேர்த்துக் கட்டி வழியடைத்து விட்டனரே. கண்ணீர் மல்க கடற்கரையில் எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தேனோ தெரியவில்லை. எல்லா ஆட்டபாட்டங்களும் அடங்கி இருள் சூழ ஆரம்பித்தது. இப்படி ஒரு தனிமை வாய்த்தது ஒருபுறம் மகிழ்ச்சி மறுபுறம் பயமாயிருந்தது.

சுற்றி வைக்கப்பட்ட கயிற்றுக் குன்றில் சாய்ந்தபடி “ஓ” என்று கூச்சலிட்டபடி ஓடி வரும் அலைகளைப் பார்த்தவண்ணம் சிதறிக் கிடந்த  நினைவுகளை கோர்வைப் படுத்த ஆரம்பித்தேன். முடியவில்லை. துண்டு துண்டாக தொடர்பு படுத்த முயன்றதில் தோற்றுப் போனேன். அழுகை வந்தது. இடிச் சிரிப்பு, கந்தல் கந்தலாக அழுக்குப் பிடித்த உடை. எண்ணைய் காணாத சடைப்பிடித்த முடி இந்தக் கோலத்தில் வந்த மனிதனை பார்த்த எனக்கு பயமாக இல்லை. சட்டென அவர் மடியில் படுத்து அழ ஆரம்பித்தேன்.





“அழாதே. இப்போது என்ன நடந்து விட்டது, நீ அழுவதற்கு” என்றவரிடம் என் குழப்பத்தைக் கூற, மீண்டும் இடிச் சிரிப்பு.
“ப்பூ. இவ்வளவுதானா, நீ உன்னை அறிய என்னிடம் வந்தாய் குழந்தாய்”.
“உங்களை எப்படிக் கூப்பிட வேண்டும்”?
“நைனா என்று நான் அன்போடு எல்லோரையும் அழைப்பேன். நீ என்னை விரும்பினால் அப்படியே அழைகலாம் மகளே”
“ நைனா, நான் இறந்து விட்டேனா”?
“ இன்னும் இல்லை என்றுதான் சொல்லுவேன்”
“அப்படியானால், நான் அதிகாரத்தில் இருந்த போது கும்பிட்டுத் தொழுதவர்கள் இப்போது என் இருப்பை உணரவில்லையே”?
“ஓ. அப்படியா. நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. ஆன்மா என்ற பொருளில் சொன்னேன் நைனா”
“ நான் பெண்ணல்லவா”?
“ஆன்மாவிற்கு பால் பேதம் இல்லை மகளே”
“சரி. அப்போது என்னை எப்படி நைனா நீங்கள் மகளே என்று சொல்கிறீர்கள்”?
“நல்ல வினா, இதுவரை நம் உரையாடலில் நான் என்று தானே உன்னை சொல்லிக் கொண்டிருந்தாய். அதை விட்டு விட்டு வந்த பின் உன்னை அப்படிக் கூப்பிட மாட்டேன். முதலில் உன் பழைய நினைவுகளைக் களையலாம். ஆன்மா என்ற பாம்பு சட்டையை உரிப்பது போல்தான் பிறப்பு. புதிய பிறப்புக்கு முன் சில செய்திகளை நீ அறிய வேண்டியுள்ளது.என்னுடன் பயணிக்க தயாரா”?
“ சரி. வழிகாட்டுங்கள்”
“என் கையைப் பற்றிக் கொள். எனக்கு அந்த ஈசன் இட்ட பணி செய்யப் போக வேண்டும்”.
அந்த அழுக்கு மேனியிலிருந்தும்,சடைப்பிடித்த தலையிலிருந்தும் இதுவரை அறிந்திராத அபூர்வ நறுமணம் வீசுவதை அனுபவித்துக் கொண்டே வந்தேன்.
“ இந்த இடம் ஏதோ மீனவர் குடியிருப்பு போல இருக்கிறதே நைனா”
“ஆம். நீ பசியாக இருப்பாய். உனது இந்த உடலற்ற சூக்கும நிலையில் பிறர் உண்பதைப் பார்த்தாலே பசி நீங்கி விடும்”.
“ அந்த மண்டபத்தில் உட்கார். நடப்பதை கவனி”.
அந்த மண்சட்டியை தன் முன் வைத்து உட்கார்ந்தார். வந்த மீனவப் பெண்மணி, “சாமி, ராவையில் சாப்பிடாமக் கொள்ளாம எங்க பூட்ட. சூடா மீன் கொயம்பு வச்சிருந்தேன். இப்ப சாப்பிடறயா”?
“கொண்டு வா. அந்த சட்டியில் ஊத்திட்டுப் போ நைனா”
“ சாப்பிடாம இருக்கிறவங்களை வரிசையா உட்காரச் சொல்லு”.
“ அடுத்த சிறிது நேரத்தில் கிட்டத்தட்ட ஐம்பது பேர்கள் வந்து விட்டனர்.
“ மற்றொரு பெண்மணியை  பழைய சோற்றை மீன் குழம்பில் பிசைந்து அவர்கள் இலையில் பரிமாறச் சொன்னார். வரிசையில் அமர்ந்தவர்கள் இலைகளில் சூடான் மீன் குழம்புச்  சோறு. வரிசையில் அமர்ந்திருந்த ஒரு பிராமணர் மீன் குழம்பு என்பதை உணர்ந்து தயங்க, “நைனா, நீ எதை நினைக்கிறாயோ அதுதான் இலையில் வரும் , நல்லா சாப்பிடு” என்றார்.
அந்த பிராமணர் இலையில் கத்தரிகாய் சாம்பார் சாதம் சுடச்சுட.
என்ன அற்புதம். நம்ப முடியவில்லையே.

“ நைனா, இது புழல் காவாங்கரையில் உள்ள என் ஜீவ சமாதி.  என்னை சட்டிச் சித்தர் என்பார்கள். நான் எந்த அற்புதமும் செய்யவில்லை. அந்த ஈசன் இட்ட கட்டளையை நிறைவேற்றுகிறேன். அவ்வளவுதான். இந்தப் பித்தனுக்கு இந்த அட்சய பாத்திரம் சப்த கன்னிகைகள் மூலம் கிடைத்தது. உன் முற் பிறவி ஒன்றில் மணிமேகலை என்ற பெயருடன்  காவிரிப் பூம் பட்டிணத்தில் பிறந்து பசிப்பிணி போக்கிய அருந்தவச் செல்வியாக இருந்தாய். கடந்த பிறவியில் அதன் பலனாக அரச வாழ்வு உனக்கு வாய்த்தது. உன் மறுமைக்கு வழிகாட்ட ஈசனின் கட்டளையின் பேரில் சமாதியிலிருந்து வெளிப்பட்டு வழிகாட்ட வந்தேன். இந்த சட்டி வெறும் மண் சட்டியில்லை. அட்சய பாத்திரம். இன்னும் சிறிது காலத்தில் நீ மறுபடி பிறப்பாய். அப்படி பிறக்கும் போது எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்க இந்தப் பாத்திரம் உன்னிடம் வந்து சேரும். அதுவரை காற்றைப் போல் அலைந்து கொண்டுதான் இருக்க வேண்டும். இந்த இடைக்காலம் முடியும் போது வடலூருக்கு சென்று விடு. வள்ளலார் உன் மாயப் பிறவிச் சுழலில் இருந்து மீட்டு உன்னைக் கரை சேர்ப்பார். ஈசனை மனதாற நினைக்கும் போது நான் தோன்றி வழிகாட்டுவேன். சிவாய நமக” என்று அவர் சொல்லி மறையவும், மீண்டும்  கடற்கரையில் இலக்கின்றி அலைந்து கொண்டிருக்கிறேன். மறு பிறவிக்கான அழைப்பு இன்னும் வரவில்லை.  ஆனால் மனதில் அதிகார மமதையோ, ஆசையோ, குழப்பமோ எதுவும் இல்லை. 

கீழ் வானில் கதிரவன் வர ஏதோ நினைவு ஊர்வலம் வருகிறது. பதாகையில் என் முற்பிறவிப் படத்துடன்  25 ஆவது ஆண்டு நினைவு நாள் என்று எழுதியிருந்தது.  

Saturday, 24 December 2016

இன உணர்வு

இன்னும் சரியாகப் புலர்ந்திராத ஜனவரி மாத காலை. மணி நாலரை ஐந்துக்குள் இருக்கும். தினசரி காலை நடைப் பயிற்சி என்பது பொதுவாக மெட்ரோ ரயில் நிலைய கார் பார்க்கிங் பகுதியில்தான். திரும்பத்திரும்ப ஒரே நேர்கோட்டில் கைத்தறியில் ஊடை நூலைப் போல  இயந்திரத்தனமாய் குறுக்காக போய் வருவது படு சலிப்பான ஒன்று . வழக்கமாக மார்கழி மாதம் முதலே சிலர் குளிருக்கும், பனிக்கும் பயந்து நடைப் பயிற்சிக்கு தற்காலிகமாக விடுப்பு எடுத்து விடுவர். சிலர் கோவில்களில் தெய்வ சேவைக்கு போய் விடுவார்கள். ஆகக் கூடி இன்று வழக்கமான நடை சினேகிதர்களில் யாரும் இல்லை.

 தன்னந்தனியாக மெட்ரோ ரயில் நிலையம் வந்தவனுக்கு எதிரே புதியதாக திறக்கப்பட்டுள்ள தானிய மொத்த அங்காடியைச் சுற்றிப் பார்க்க ஆவலாயிருந்தது. கடைகள் எதுவும் திறக்க வில்லை. ஆனால் முதன்மை வாயில் திறக்கவில்லை. வெளியில் இருந்த காவல்காரர்,
 “ சார், கடையெல்லாம் எட்டு மணிக்கப்பாலதான் திறப்பாய்ங்க” என்றார். “அதில்லைங்க சும்மா சுத்திப் பார்க்கலாம்ன்னு பார்த்தேன். எத்தனை கடை, எத்தனை வரிசை எல்லாம் பார்த்து பத்திரிக்கையில் எழுதப் போறேன். அது சம்பந்தமா உங்களுக்கு எதாவது விவரம் தெரியுமா”?
“ஆ, அதெல்லாம் தெரியாது சார். நான் நைட்டு டூட்டி. இப்பொ எட்டு மணிக்கு வேற ஆளு  டே டூட்டிக்கு வந்ததும்  கிளம்பிடுவேன். ஆபிஸ் ரூம் பத்து மணிக்கு தொறக்கும். அங்க விசாரிச்சிக்குங்க”. சின்னதாக அவருக்கு ஒரு நன்றியை ஆங்கிலத்தில் சொல்லி பதிலுக்கு “சரிதான் சாரை” வாங்கிக் கொண்டு நடையைக் கட்டினேன்.
தமிழ்நாட்டில் , அதுவும் சென்னையில் நன்றி என்றால் பதிலுக்கு யாரும் ஒன்றும் சொல்வதில்லை. ஆனால் அதையே ஆங்கிலத்தில் தேங்க்ஸ் என்றால் அப்படி ஒரு ரெசிப்ரொகேஷன்.
 
 அப்படியே காய்கனி மார்க்கெட் வந்தால் சரியான வாகன நெருக்கம். சில்லறை வியாபாரிகள் அவர்களின் சரக்கை ஊர்திகளில் ஏற்றிக் கொண்டிருந்தனர். மெல்ல வாகனங்களின் இடையில் புகுந்து புகுந்து “யோவ் பெரிசு வூட்டில் சொல்லிட்டு வன்ட்டியா, பார்த்துப் போ” என்று ஆசிர்வாதங்களை ஏற்றுக்கொண்டு  நடைமுடித்து சுலைமானின் டீ கடையில் உட்கார்ந்தேன்.
சிநேகமாக சிரித்த சுலைமான், “சார் என்ன சீக்கிரமே வந்தாச்சு என்றார்”.
“ மூணு மணிக்கே தூக்கம் கலைஞ்சிடுத்து சுலைமான், அதான்”.
நான் பல வருட வாடிக்கையாளன். ஆகவே எப்போது போனாலும் தூள் மாற்றி ஸ்ட்ராங்கா சர்க்கரை தூக்கலா போட்டுத் தருவார். என்னிடம் மட்டுமில்லை கடைக்கு வரும் எல்லாரிடமும் சிரித்து பேசி வாடிக்கையாளராக ஆக்கிக் கொள்ளும் அந்த சாமர்த்தியம் அவருக்கே சொந்தம்.

சாலையில் போக்குவரத்து அதிகரிக்க ஆரம்பித்தது. கடைக்குப் பக்கத்தில் CMBT அதாவது புறநகர் பேருந்து நிலைய நுழைவு வாயில். கடை எப்போதும் படுசுத்தமாக இருக்கும். கரைபடிந்த மேசைகள்,  ஈ மொய்ப்பது, அழுக்கு கண்ணாடித் தம்ளர், ஒரே எவசில்வர் பேசினில் எல்லா கண்ணாடித் தம்ளர்களையும் கழுவுவது இப்படி எல்லாம் அங்கே கிடையாது. ஒவ்வொரு முறையும் பயன் படுத்திய டம்ளர்களை முதலில் ஓடும் தண்ணீரிலும் அப்புறம்  மறுபடி  வென்னீரில் கழுவித்தான் அடுத்த முறை பயன்படுத்துவார்.  அதிகாலையிலேயே கடை திறந்தால் தினமும் சுமாராக இருபது இருபத்தைந்து லிட்டர் பால் ஓடும் என்பார்.


டீ மாஸ்டர் ஆறரை மணிக்குக் கடைக்கு வரும் வரை அவர் தான் மாஸ்டர்.
மாலை பஜ்ஜி, போண்டோ என்று போடுவார். அந்த பஜ்ஜி எண்ணெய் கூட ஒரு தரம் பயன் படுத்தியதை மறுதரம் பயன்படுத்த மாட்டார். எப்படியோ காலை நாலரை மணி முதல் இரவு பத்தரை வரை மாடா உழைச்சா எல்லா செலவும் போக மாதம் பத்தாயிரம் ரூபாய் மலப்புரத்தில் உள்ள குடும்பத்திற்கு பணம் அனுப்ப முடிகிறது என்று சொல்லுவார்.

கடை அருகே அரசு விரைவுப் பேருந்தொன்று நின்றது.
பேருந்துகள் உள்ளே நுழையும் முன்பே நிறுத்தப்பட, நுழைவாயிலில் மொய்க்கும் ஆட்டோ ஓட்டுநர்கள். உற்றுக் கேட்க அவர்களுக்கும், பயணிகளுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் படு சுவாரசியமாக இருக்கும்.
“இன்னா சார் எங்க போகணும்”?
“சின்மயா நகர் பா”
“ இருநூறு ரூபா கொடு சார்”
“ரொம்ப ஜாஸ்தி பா. ஷேர் ஆட்டோவில் பத்து ரூபாதான்”
“நடந்து போனா அது கூட ஆவாது சார். எம்மாம் லக்கேஜ் இருக்கு பாத்தியா? சரி. எவ்ளோ தருவே”?
“ மீட்டர் போடு மேல பத்து ரூவா தரேன்”
“ தோ டா, சாருக்கு மீட்டர் போடணுமாம்”
பார்ட்டி உசாரான ஆளு என்றால் அடுத்த ஆளை தேடிப் போவார்கள். சொல்லி வைத்த மாதிரி எல்லோரும் இருநூறு என்பார்கள். 
“ஏன்பா, நூறு ரூபாதான் ஆவும்பா. நூத்தம்பது தரேன்”.
“சரி சார். மேல பத்து ருவா போட்டுக்கொடு. போணியே நீதான் சார்”.
“நூத்தம்பதுதான்”.
 “பத்து ரூவா பாக்காதே சார்”.
“இல்லை நூத்தம்பதுதான்”
“அப்பால உங்க இஸ்டம். உக்காரு. சின்மயாநகர் எத்தினியாவது ஸ்டேஜ்”? ஆட்டோ கிளம்பியது.

கொஞ்சம் விடிந்து விட்டது. கடையை நோக்கி ஏழெட்டுப் பேர்கள் வந்தனர்.
அவர்களின் கட்சிக் கரை போட்ட வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை சீருடை சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த கட்சித் தலைவர் படம் எல்லாம் அவர்களை அடையாளப்படுத்தின.

வந்தவர்களில் ஓருவர்,”சேட்டா டீ போடு” என்றதும்
சுலைமான் மனசுக்குள்  தலையை எண்ணியபடி டீ போட ஆரம்பித்தார்.
வந்தவர்களில் ஒருவர் “அண்ணே இந்த முறை நமக்குத்தாண்ணே” என்று பேசியதெல்லாம் நமக்கு அனாவசியம். அவர்கள் வெளியில்  பிளாஸ்டிக் குடத்தில் இருந்த தண்ணீரில் வாய் கொப்பளித்து முகம் கழுவி பின் தேனீர் பருக ஆரம்பித்தனர். “ஏம்பா தண்ணி டேஸ்டு கடுப்பா இருக்கு? நல்ல தண்ணி வைக்கக் கூடாதா”? என்றார் கொஞ்சம் பார்க்க தலைவர் மாதிரி இருந்த ஆசாமி. கடையில் எடுபிடி வேலைகளுக்கு சுலைமான் ஒரு சிறுவனை வைத்திருந்தார்.
“என்ன சுலைமான், படிக்கிற வயசு சின்ன பையனை கடையில் வேலைக்கு வைக்கலாமா” என்றேன் ஒரு நாள்.
“ அதுவா சார், அந்த பையன் அப்பா நாலு வருஷத்து முன்னே வேற ஒரு பொண்ணோட ஓடிப் போயிட்டான். அவன் அம்மா எனக்குத் தெரிஞ்சவங்க. அவங்க வயித்துப் பாட்டுக்கு எதாவது உதவி செய்யணும் என்றால் யாராவது தப்பா பேசலாம். அதனாலெ, ஸ்கூல் போற மட்டும் இங்க இருப்பான். டீ மாஸ்டர் வந்ததும் நானும் அவரும் கடையப் பார்த்துப்போம். இவன் பள்ளிக்கூடம் போயிடுவான். சாயங்காலம் ஒரு எட்டு மணிவரை இருப்பான். அவங்களுக்கும் வேலை செய்து சம்பாதித்த எண்ணம் இருக்கும். நான் எதாவது எதிர்பார்ப்பேனோ என்ற பயம் அவங்களுக்கும் இருக்காது. எனக்கும் பெரிசா தர்மம் பண்ணிய எண்ணம் வராது”. என்றார்.
 மனசுக்குள் சுலைமான் ஒருபடி உயர்ந்து நின்றார்.

கடையை விட்டு சற்று விலகி அவர்கள் உரையாடியபடி தேநீர் பருகி காலி காகித கப்புகளை கீழே போட்டு விட்டு நடையைக் கட்டவும் தொடங்கினர். கடைக்கு  மற்ற பஸ்ஸிலிருந்து இறங்கிய பயணிகள் வர ஆரம்பித்திருந்தனர்.
சுலைமான் எடுபிடிக்கு வைத்திருந்த சிறு பையன் அவர்களைத் தொடர்ந்து போய்” சார் காசு தரலை” என்றான். அதில் தலைவர் போலிருந்தவர் நூறு ரூபாய் நோட்டை சட்டை உள்பாக்கெட்டிலிருந்து எடுத்து,” சிங்காரம், நீ போய் கடையில கொடுத்திட்டு லாடஜுக்கு வந்திடு”, என்றவாறு நடக்க ஆரம்பித்தார்.

கடைப் பையனுடன் வந்த தொண்டர் சுலைமானிடம் நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்து, “இந்தா எடுத்துக்க உன்காச. காலங்காத்தால தலைவரை அசிங்கப்படுத்திட்டயே. ஓடியா போயிட்டோம். கடைப்பையன் வந்து கேட்கற அளவுக்கு ஆயிடுச்சி” என்றார்.

சுலைமான்,” கடை திறந்து இப்பத்தான் அரை அவர் ஆவுது. சில்லறை இல்லை. கொஞ்சம் மாத்திக் கொடுங்க”. “யோவ் காசு வேணுமினு பயலை அனுப்பி அசிங்கப்படுத்தத் தெரியிது.சில்லறை மாத்தித் தரத் தெரியலையா? ஜூன் மாசம் கடை இருக்காது”.

சுலைமான் கடை இருக்கும் கட்டிடத்தின் சொந்தக்காரர் பெரிய புள்ளி. நல்ல செல்வாக்கானவர். அந்த ஏரியாவில் அவர் பெரிய தாதா. சுலைமானுக்கு மிகவும் நெருக்கமானவர். இருப்பினும் அதைக் காட்டிக் கொள்ளாமல் பையனை அனுப்பி சில்லறை வாங்கி எட்டு டீ க்கு உரிய காசை எடுத்துக் கொண்டு மிச்சம் தந்தார். 

காசை வாங்கி எண்ணியவன்,” என்ன கணக்கு”
“எட்டு டீ. ஒரு சிங்கல் டீ ஏழு ரூபாய் ஆக ஐம்பத்தாறு” சுலைமான்.
“ஏய் நானும் பார்க்கறேன் ரொம்ப ராங்காவே பேசற. வந்தேறி மலையாளத்தானுங்க இப்படி எங்கூரில வந்து சுரண்டி சாப்பிடறீங்கடா. ஐந்து டீ தந்திட்டு எட்டு டீ ன்னு சொல்லி ஏமாத்தி *** தின்னற **** பசங்க”. 
"நாங்க தமிழங்கடா, எங்க பூமிடா இது” என்று ஆரம்பிக்கவும்.
“ஏய் எட்டு டீ சாப்பிட்டு விட்டு அஞ்சுன்னு பொய் சொல்லாதே”
“யாருடா பொய் சொன்னது? மரியாதையா காச எண்ணி கொடுத்திடு. எலெக்சன் முடியட்டும் பாரு அப்புறம். எச்சக்கலை நாயுங்க”
“மூன்று டீ காசு தர முடியாது. டீ குடிச்சதானே” என்றபடி பக்கத்து கடைக்காரர்களை அழைக்க மலையாளத்தான்களை விரட்டணும் என்றபடி வீர வசனம் பேசி பம்மிப் பம்மி  காணாமல் போனான்.

குடிச்ச டீ க்கு காசு தர விரும்பாத இன உணர்வுப் போராளியை நினைத்து “சுலைமான் இவனுங்களை எப்படி சமாளிக்கிற” என்றேன்.
 “தினமும் எப்படியும் ஒரு ஆளு இப்படி வந்து சேருவான். அதெல்லாம் பார்த்தா தொழில் செய்ய முடியுமா சார். இவனுங்க ஆட்சிக்கு வந்தா அராஜகம் பண்ணுவாங்க அதை நினைச்சாத்தான் பயமாயிருக்கு.
யாரும் சாப்பிட இல்லாட்டா பால் காய லேட்டாகும் என்று தள்ளி விட்டிருப்பேன். நீங்கள் டீ சாப்பிடறத பாத்துட்டதால அப்படி சொல்ல முடியல. சாரி சார் இந்த கலாட்டா எல்லாம் பார்த்துட்டு நாளைக்கு வராம போயிடாதீங்க. இந்த அல்லக்கைகள் ஆடற ஆட்டம் தான் சார் தாங்க முடியாதென்றார்”. 
இன உணர்வின் மறுபக்கம் திகிலூட்ட வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

Tuesday, 20 December 2016

மாநகர பேருந்துப் பயணம்

கோயம்பேடு சத்திரம் பேருந்து நிறுத்தம் எப்போதும் போல் அன்றும் பரபரப்பாக இருந்தது. அங்கே எதிரே கட்சி அலுவலகத்தில் யாரோ ஐந்தாறு ஆட்கள் வெய்யிலில் வண்ணக் குடை பிடித்தபடி வீடியோ படம் பிடிக்க ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தனர். விதவிதமான வண்ணக் கொடிகள் கட்டிய கார்களில் அரசியல் பிரமுகர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். எதிர் வாடையில் நின்று இவற்றை வேடிக்கை பார்த்தபடி 46 எண் மாநகரப் பேருந்திற்காக காத்திருப்பது அந்த வெய்யில் நேரத்தில் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை.

டீக்கடை நிழலில் ஒதுங்க நினைத்தால் அரசியல் பேசும் கட்சிக்காரர்கள், “அண்ணே எம்புட்டு ஆனாலும் ஒரு கை பார்த்திடலாம்ணே. எப்படியும்
நிச்சயமா செயிச்சிடுவீங்க. தலைவரண்ட தெகிரியமா பேசுங்க”.
எனக்கு அரசியல் பேச்சில் அதிக சுவாரசியம் கிடையாது.

மேலும் என் ராசியான மிதுனத்திற்கு சந்திராஷ்டமம் என்று காலையில் தொலைகாட்சியில் பார்த்த ஜோசியர்கள் எல்லாம் ஒருத்தர் பாக்கியில்லாமல் சொல்லி எச்சரிக்கை செய்திருந்தனர். முடிந்தவரை மௌனம் காத்து, அன்றாட அலுவல்களை மட்டும் கவனிக்க வேண்டும். பொதுப் பிரச்சனைகளில், விவாதங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது என்று தினமலரும் உறுதிப்படுத்தியது.  இப்போ இதை இவன் ஏன் சொல்கிறான் என்ற நியாயமான சந்தேகம் உங்களுக்கு இதற்குள் வந்திருக்க வேண்டும். இந்த கதை முடியும் தருணத்தில் என் மௌனத்தை விளங்கிக் கொள்ள முடியும்.

சத்திரம் பஸ் ஸ்டாப் என்ற நாமம் கொண்ட அந்த பஸ் ஸ்டாப் அருகில் நின்ற ஒரே ஒரு ஆலமரமும் டிசம்பர் மாதம் பனியில் குளித்த தலையைக் காற்றில் துவட்டியதில் இருந்த இலைகளை கிட்டத்தட்ட முழுவதுமாக இழந்து குறைந்த இலைகளை வைத்துக் கொண்டு  கஞ்சத்தனமாக நிழல் தந்தது. அந்த சுடும் வெயிலிலும் பிளாட்பாரத்தில் உட்கார்ந்தபடி பூக்கட்டியபடி கருமமே கண்ணாயிருந்த பெண்கள். அருகில் பிளாஸ்டிக் பை நிறைய சாமந்திப் பூக்கள் மடித்துக் கட்டிய வாழை நார்கட்டு. சுற்றிலும் இரைந்து கிடக்கும் தொடுக்க இயலாத உதிரிப்பூக்கள்.

நம் கதாநாயகி யை அறிமுகம் செய்ய வேண்டிய காலம் வந்து விட்டது.
பக்கத்தில் ஒரு மூதாட்டி, சுருக்கம் விழுந்த முகம் வயது எப்படியும் எழுபது சொச்சம் என்று காட்டியது. என்னிடம் “தம்பி, 46 வண்டி வந்தா சொல்லுப்பா ராசா” என்றார். முதல் பார்வையில் அவரை அடையாளம் அறிய முயற்சி செய்தேன். எங்கோ பார்த்த ஞாபகம். சரியாகப் பிடிபடவில்லை.
“சரிம்மா”, என்ற எனக்கு அவர் எங்கே போகப் போகிறார் என்றறிய வேண்டி,” எங்க போகணும்” ஐ.சி.எப் ஆ” என்று கேட்ட என்னிடம்                          “ பட்டாளம் போகணும். பேரப்புள்ளைய பாக்கப் போறேன்” என்றார்.

என்னவெல்லாமோ பேருந்துகள் வந்தன. ஆனால் 46 வரவில்லை.
அந்த இருபது நிமிட நேரத்தில் என்னிடம் தன் குடும்பக்கதை பேச ஆரம்பித்து விட்டார். “எப்பா, உனக்கு எத்தினி பசங்க? கோவிச்சிக்காதே. உன்னைய பார்த்தால் என் உடன் பொறந்தவனைப் போல தோணுது, அதான் கேட்டேன்”.
“ஒரு பையன், ஒரு பொண்ணு, ஆயா”
“ஆமா. யாரு பெரிசு பையனா? பொண்ணா”?
“பையன் தான் பெரியவன்”.
“ இன்னா வயசாச்சு அவனுக்கு”?
பஸ் ஸ்டாப்பில் முன்னப்பின்ன தெரியாத வயதான பெண்மணியிடம் குடும்ப கதை எல்லாம் சொல்லும் தருணம் உங்களுக்கு வாய்க்காவிட்டால் நீங்கள் சத்தியமாகப் பாவிதான்.
“25 வயசாச்சு ஆயா”
“ தம்பி படிச்சி முடிச்சிருச்சா, வேலைக்குப் போவுதா”?
“ஆமா ஆயா, இஞ்சினியர் படிப்பு படிச்சிட்டு ஒரகடத்தில் ஒரு கார் கம்பெனியில் வேலை செய்யிறான். கல்யாணத்திற்குப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்”.
“ ஆங். ஒரகடம் கார் கம்பெனியா? ஹுண்டாய் கம்பெனியா? நல்ல சம்பளம் கிடைக்குமே” என்றவர்
“பொண்ணு பார்க்கும் போது நல்ல பொண்ணா பார்க்கணும் ராசா, பையனுக்கு எடுத்துச் சொல்லு அழகை விட கொணம் முக்கியம். என் புள்ளை அழகை பார்த்து மயக்கத்தில ஒரு ராங்கிக்காரியை கட்டிக்கிட்டு படாதபாடு படறான்”. “அவ பேச்சு கேட்டு என்னை மகன் துரத்தி விட்டான்” என்ற எல்லா மாமியார்களும் சொல்லும் கதையுடன் ஆரம்பித்தவர் மகளும், மருமகனும் தன்னை தாயைப் போல பார்த்துக் கொள்வது வரை சொன்னார்.
ஆனாலும் திருவள்ளூர் இந்துஸ்தான் மோட்டார் கம்பெனியில வேலை செய்த அவரது கணவர் இறக்கும் போது,” யாரையும் அண்டியிராதே கமலம்” என்ற அவரது வார்த்தைக்கு மரியாதை கொடுத்து தனிக்கட்டையாக வாழ்வது பற்றி சொன்னார். குறுங்காலீஸ்வரர் கோவில் சரபேஸ்வரர் கோவில் மண்டபத்தில் ஜாகை. கொஞ்சமா பூ கட்டி வியாபாரம். மதியம் கோவில் அன்னதானத் திட்டத்தில் சாப்பாடு இப்படியாக காலம் ஓடுகிறதை சொல்லிப் பெருமூச்சு விட்டார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஓடிவிட்டது.
கதை ஓடிவிட்டது.

அவரு விட்டுப்போன கிராஜுட்டி பணத்தை ஏமாந்து மருமகளிடம் கொடுத்து விட்டதில் அதிகம் வருத்தப்படவில்லை. “எப்படியும் எனக்கு பிற்காலம் அவதான் எடுத்துக்கப் போறா. சரி இப்போவே கொடுத்திட்டதா நினைச்சிக்கிட்டேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வரிசைகட்டி நாலைந்து பேருந்துகள் வர அதில் ஒன்று 46 ஆக இருந்தது.

பேருந்தில் நல்ல கூட்டம். பொதுவாக சென்ன மாநகர பேருந்துகள் நிறுத்தத்தில் அதிகம் கூட்டம் இருந்தாலும் அல்லது ஓரிருவர் கை காட்டினாலோ நிறுத்துவதற்கு அதிகம் வாய்ப்பில்லை என்பது என் அனுபவ ஞானம். அப்படி நிறுத்தத்தில் பேருந்து அதிருஷ்டவசமாக வந்து நின்றால் அது உங்கள் பாக்கியம். நம் நிறுத்தம் புறநகர் பேருந்து நிலையத்திற்கு அடுத்த நிறுத்தம். ஆகவே ஒரே சமயத்தில் நிறைய பேருந்துகள்வந்து நிற்பதால் எப்போதும் நெரிசல் அதிகம். பேருந்து வந்து நின்றது. அவரை வண்டி வந்ததைச் சொல்லி முன் வாயில் வழியாக ஏறச் சொன்னவன் அடித்துப்பிடித்து பின் வாயில் வழியாக ஏறி நூர் ஹோட்டல் நிறுத்தம் டிக்கெட் கேட்டு 20 ரூபாய் கொடுத்தேன். நடத்துனர் மூன்று ரூபாய் கேட்க இல்லை என்றேன். 

“படிச்சவன் படிக்காதவன் எல்லாரும் இப்படிக் கழத்தறுக்கிறாங்க” என்று சலித்துக் கொண்டவர் 13 ரூபாய் டிக்கெட் எச்சில் தொட்டு  தந்துவிட்டு, ”இறங்கும் போது 3 ரூபாய் தந்திட்டு 10 ரூபாய் வாங்கிக்க” என்று அதீத மரியாதையாகச் சொல்லி விட்டுக் கூட்டத்தில் காணாமல் போனார்.

என்.எஸ்.கே நகர் நிறுத்தத்தில்,” ஏய் கிழவி இறங்கிடு. வெள்ள போர்ட்டு பஸ்சில தான் 7 ரூபாய் டிக்கெட். இது டீலக்ஸ், நீல போர்ட் 13 ரூபாய். எத்தனைவாட்டி சொன்னாலும் புரியாதா” என்ற குரல் வந்த திசையில் கஷ்டப்பட்டு பார்த்தால் நம்ம கமலம் பாட்டிதான். 
“ ஏய் கெய்வி இந்த வயசில என்ன சுற்றுலா கேக்குது உனக்கு”?
 “கண்டக்டர், ஆயாவை காந்தி நகர் ஸ்டாப்பில் எறக்கி விடுப்பா.வேலங்காடு பக்கத்தில்தான். போய் படுத்துகிட்டா செலவு மிச்சம்” என்று ஒரு வழுக்கைத் தலை பெரிய தமாசு சொன்னார். அதற்கு  பஸ்ஸில் ஒரே சிரிப்பு. 

“ஏம்பா,எல்லா வண்டியும் ஒரே மாதிரித்தானே ஒரே வழிதானே போவுது. போற இடத்துக்குத்தானே காசு? கலர் போர்ட்டுக்கா காசு?” என்ற கமலம் பாட்டியின் நியாயமான கேள்வியை இதுவரை ஏன் யாருமே கேட்கவில்லை என்று நினைத்தேன். டீலக்ஸ் பஸ்சில் மட்டும் ஒழுகாமலா இருக்கிறது அல்லது சீட் உடையாமல் இருக்கிறதா என்ன? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அமைச்சர்களுக்கே பதில் சொல்லத் தெரியாதே, நடத்துனர் என்ன செய்வார், பாவம். கோபம் தலைக்கேற கமலம் பாட்டி கையைப் பிடித்து இறங்கு இறங்கு என்றபடி விசில் அடித்து நிறுத்தினார்.

நான் கூட்டத்தில் தடுமாறி கண்டக்டர் அருகில் வந்து “சார், எனக்கு நீங்க தர வேண்டிய பாக்கி 7 ரூபாயிலிருந்து எடுத்துக் கொள்ளுங்க” என்றேன்.
அதற்கு அவர் உன் சீட்ட காமி பின்னாடி எழுதிருக்கனா பாரு” என்றார்.
“ எழுதவில்லை, இறங்கும் போது மூணு ரூபா தந்திட்டு பத்து ரூவா வாங்கிக்க சொன்னீங்க”
 “சரி,சரி, இப்படி எழுதாம இருக்கவே மாட்டேன். நீ தான் சொல்லற. நம்பறேன்”, என்றபடி டிக்கெட் தருவதற்குள் பஸ்சிலிருந்த மக்கள்,
 “ பாரேன் இந்த வயசு காலத்திலும் ஆயா என்னமா சட்டம் பேசுது”. “இறக்கிவிட்டாத்தான் புத்தி வரும்”.
“இன்னிக்கி இதால லேட்”.
“ லேடீஸ் ஸ்பெஷல்” மாதிரி ஆயா ஸ்பெஷல் விட வேண்டும்”
என்றும் கமலம் பாட்டியை இறக்கி விட்டுப் பயணம் தொடர்வதிலேயே ஆர்வம் காட்டியது. கமலம்மாவின் பக்க நியாயமோ, பயணம் செய்யும் உரிமையோ, தைரியமோ எதுவும் அவர்களுக்கு பொருட்டாகத் தெரியவில்லை.

அடுத்த ரவுண்டாணா நிறுத்தத்தில் நிறைய கல்லூரி மாணவர்கள் ஏறினர். கண்டக்டர், பொதுமக்கள் யாரையும் சட்டை பண்ணவில்லை. ஒரே பாட்டும், கூத்தும். கிழவியை இறக்கிவிட அத்தனை ஆர்வம் காட்டிய பொது ஜனம் யாரும் வாயைத் திறக்கவில்லை. வழுக்கைத்தலை ஆசாமி பக்கத்தில் ஒரு சீட் காலியானது அவர் உட்காரப் போகவும், அந்த மாணவர்களில் ஒருவன் தன் பையை அதில் போட சண்டை வரும் சந்தர்ப்பம் உருவானது. ஒரு மாணவன் “தாத்தா உக்கார்ந்துகோ, டேய் பையை எடுடா” என்றான். வழுக்கைத்தலை ஆசாமி உட்கார்ந்ததும், சீட்டின் பின்புறப்பலகையில் தாளம் போட ஆரம்பித்தான் மற்றொருவன். இரட்டை அர்த்தப் பாடல்கள். கூச்சல் . நிற்பதே பரவாயில்லை என்ற எண்ணத்தில் வழுக்கைத் தலையர் இருக்கையிலிருந்து எழுந்து நிற்க ஒருவன்,
“பெரிசு இறங்கப் போறியா? இது பதினாலு கடை அடுத்ததுதான் வேலங்காடு” என்று சொல்லவும் பேய்ச் சிரிப்பு.
“டேய், துலுக்காணம் மவனே, என்னாடா ரொம்ப ஆட்டம் போடற, ஜாண்டாபீஸ் ஷ்டாப்புல டேசன்ல கம்ளேண்ட் சொல்லணுமா இல்லை உங்கப்பன் கிட்ட சொல்லணுமா ” என்றதும் சுவிட்ச் போட்டது  போல்  படு நிசப்தம். கடுவன் பூனையாக இருந்த கண்டக்டர் முதல் எல்லாரும் கமலம் பாட்டியை மரியாதையாகப் பார்த்தனர். பேருந்தின் வலது பக்க இருக்கைகளில் அமர்ந்திருந்த ஆண்கள் பலருக்கு அப்போதுதான் பொய்த் தூக்கத்திருந்து விழிப்பு வந்தது.

 காந்திநகர் ஸ்டாப்பிங்கில் வழுக்கைத்தலையர் ஐ சி எப் பில் இறங்க தயாராக படிக்கட்டு பக்கத்தில் வந்து நின்றார். வண்டி ஐ சி எப் பிற்கு வலதுபுறம் திரும்ப சிக்னலில் நின்றது. அவமான உணர்வா அல்லது அந்த காட்டுக் கூச்சலா என்று தெரியவில்லை, அவர் முகம் சரியாகவே இல்லை. சதசதவென்று சட்டை வியர்வையில் நனைந்திருந்தது. யாரும் எதிர்பாராவிதமாக பொத்தென மயக்கமுற்று படிக்குப் பக்கத்தில் உள்ள பெண்கள் இருக்கைக்கு அருகில்  கீழே விழுந்தார். அந்த பெண்கள் இருக்கையில் உட்கார்ந்திருந்த கமலம் பாட்டிதான் முகத்தில் தண்ணீர் தெளித்து முதலுதவி செய்து கொண்டிருந்தாள்.


பேருந்து எப்பவோ வேலங்காடு நிறுத்ததைக் கடந்து விட்டிருந்தது .

Saturday, 3 December 2016

பவுன் மூட்டை (நெடுங்கதை)


காரையார் என்ற நெல்லை மாவட்டத்தில் உள்ள ஊரில் அரசுப் பள்ளி ஆசிரியர் பணியில் சேர எனக்கு ஆணை வந்ததும் எல்லோரும் சொன்னதே,” அந்தப் பக்கத்து ஊர்கள் எல்லாம் நல்ல செழிப்பான ஊர்கள்தான். பக்கத்தில் இரண்டு அணைகள், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம், இயற்கை எழில் கொஞ்சும். ஆனா உன்ன மாதிரி ஆட்களுக்கு சரிப்பட்டு வராது பொறந்தது முதல் சென்னை வாழ்க்கையை அனுபவித்த உனக்கெல்லாம் அந்த கிராமத்து வாழ்க்கையெல்லாம் சரிப்பட்டு வராது” என்பதுதான்.





அவர்கள் வார்த்தைகள் கொஞ்சம் சிந்திக்க வைத்தது. நண்பன்  குமார் கூட , “டேய், எங்க சித்தப்பாவுக்கு தெரிந்த அரசியல் பிரமுகர் ஒருத்தரு இருக்காருடா. ஸ்கூல் எஜிகேஷன் டிபார்ட்மெண்டையே கையில் வைச்சிருக்கார். நீ இரண்டு லட்சம் செலவு பண்ணினால் போதும், இங்கே சிட்டி பக்கத்திலேயே எங்கனா ஒரு ஸ்கூலில் மாடிபிக்கேஷன் ஆர்டர் வாங்கிடலாம்” என்றான். “இதுவரை எதுக்குமே நான் லஞ்சம் கொடுத்ததில்லை. இனிமேலும் கொடுப்பதாக இல்லை” என்று சொன்னதும் சிரித்தான். “தோ டா, இன்னும் இரண்டு மாசத்தில் ஐந்து லகரம் தரேண்டா, டிரான்ஸ்பர் வாங்கிக் கொடுடா ன்னு என் வூட்டாண்ட நீ நிக்கப்போற பாரு” என்று சவால் வேறு விட்டான். அப்பா அம்மாவிற்கு என்னைத் தனியாக விட மனதில்லை.
இண்டர் நெட்டில் காரையார் என்ற பெயரை வைத்துத் தேட ஓரளவுக்கு பரிச்சயமானது. திருநெல்வேலியிலிருந்து சுமாராக ஒரு மணி நேரப் பயணம். மலை அடிவாரம் என்று சொல்ல முடியாது. ஆனால் ஆறேழு கிலோமீட்டர் தூரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை. நான் பணியாற்ற வேண்டிய பள்ளி மலை அடிவாரத்தில் பாவனாசத்திற்கு மேல் காரையாரில் அமைந்திருந்தது என்பதை அறிந்து கொண்டேன்.  அப்புறம் பெட்டி படுக்கை எல்லாம் கட்ட ஆரம்பித்தேன். அப்பா, அம்மா இருவருக்கும் நான் அங்கு போய் வேலை செய்வதில் விருப்பம் இல்லை. இருந்தாலும் அரசாங்க பள்ளி, மெரிட்டில் கிடைத்த வேலை என்பது ஒரு பக்கம். அப்பா கொஞ்சம் இடதுசாரி சிந்தனை கொண்டவர். ஆகவே லஞ்சம் கொடுத்து டிரான்ஸ்பர் என்பதில் உடன்பாடு இல்லை. மேலும் அவ்வளவு பணமும் கிடையாது.
திங்கள் கிழமை பணியில் சேருவதற்கு இரண்டு நாளுக்கு முன்பாகவே வெள்ளிக் கிழமையே நெல்லைக்கு போய் விட்டேன். நெல்லையில் சுமாரான ஒரு லாட்ஜில் தங்கிக் கொண்டு அந்த ஊருக்கு, பஸ் பிடித்து போனேன். நல்ல மார்கழி மாதக் குளிருடன் இதமான வெயில் சின்னச் சின்ன  அழகான கிராமங்கள் பச்சைப்பசேல் வயல்கள், தூரத்தே மேற்கு தொடர்ச்சி மலைகள் என்று பயணம் ரம்யமாக இருந்தது.

பள்ளிக்கூடத்திற்கு இறங்க வேண்டிய இடம் வந்ததும் கண்டக்டர், “ஆள் இறக்கம்”, என்று சப்தமாகச் சொல்லி விசிலடித்து “சார்வாள், இறங்குங்க” என்றதும் ஊரை கூடுதலாகப் பிடித்துப்போனது. வழியேற கண்டக்டரிடம் பேசியபடி வந்ததில் நிறைய தெரிந்து கொண்டேன். “சார்வாள், கமல் நடித்த பாவனாசம் படம் பார்த்திங்கல்லா, அது இங்கனதாம் எடுத்தாவள்ளா” என்று சொல்லி ஆகக் கூடி மனதில் நல்லதொரு ஆரம்பம் தந்து விட்டார்.  அந்த பள்ளிக்குப் போக நான் இறங்கிய இடம் பாவனாசம் கோவில். பக்கத்தில் 50 அடி ஆழத்தில் சுழித்தோடும் தாமிரபரணி ஆறு. அங்கிருந்து காரையார் போக வேண்டும். படிக்கிற குழந்தைகள் எல்லாம் பெரும்பாலும் அங்கேயே உள்ள மலைக்கிராமங்களில்  வசிப்பவர்களே. விக்ரமசிங்கபுரம் என்ற வி.கே புரம் தான் அருகிலுள்ள பெரிய நகரம். பெரிய நெசவாலை ஒன்று அங்குள்ளது. வி கே புரத்தில் தங்கிக் கொண்டு தினம் காரையார் போக வர வசதியாக இருக்கும். அடுத்த முறை சென்னையிலிருந்து வரும் போது தண்டர்பேர்டை ரயிலில் போட்டு எடுத்து வந்து விட வேண்டும்.
தினம் வி கே புரத்திலிருந்து காரையார் செல்ல தோதாயிருக்கும். பேருந்து வர எப்படியும் ஒரு மணி நேரமாகும் என்பதால் எப்படி பொழுதைக் கழிப்பது என்று நினைத்தவன் கோவிலுக்குள் நுழைந்தேன்.

அதிகம் கூட்டம் இல்லை. சுற்றி வந்தவனுக்கு ஒரு பெரிய உரலில் மஞ்சள் இடிப்பதைப் பார்த்தேன். அர்ச்சகரிடம் விசாரித்ததில் மணமாகாத ஆண்களும், பெண்களும் மஞ்சள் கொண்டு வந்து இடித்தால்  விரைவில் திருமணம் ஆகும் என்ற ஐதீகம் என்றார். அப்போது தான்
 "சொன்னாலும் நீர் கேளீரே, சும்மா சுவர் போல் இருந்தீரே
பொன்னா பொன் ஆவரையுடன் பொன்னும் அத்தனை மாலைச் சாற்றால்
கன்னார் பேதி சிலை ரசம் காந்தம் வெள்ளியும் தானுருக்க
என்னாம் என்னாம் என்னாதே பொன்னாம் பொன்னாம் பொன்னாமே"
என்ற பாடலை யாரோ பாடக் கேட்டேன்.

இங்கே இந்த பாடலைப் பாடுவது யார் என்று நினைக்கும் போதே, “பவுன் மூட்டை சாமி வாங்க” என்று அர்ச்சகர் கூப்பிட்ட அந்த  ஆளைப் பார்த்தேன். எப்படிப் பார்த்தாலும் ஐம்பது வயது மதிக்கலாம் . நடு வயதுக்கே உரிய வழுக்கை, நரைத்த முடி, மழுமழு என்று சவரம் செய்த முகம், எம்.ஜி.ஆர்அரும்பு மீசை , தூய வெள்ளை வேட்டி, மல் ஜிப்பா, பச்சை கலர் பட்டை பெல்ட்,  கழுத்தில் தங்கத்தில் உருத்திராட்சம் கட்டிய தங்கச் சங்கிலி. நெற்றியில் பட்டையாக திருநீறு, சந்தனத்தில் குங்குமப் பொட்டு என்று கிராமத்து மைனர் மாதிரி தோற்றம், ஆனால் கையில் சம்பந்தமில்லாத இரண்டு அழுக்கு வேட்டி மூட்டைகள். என்னவோ மனதில் இனம் புரியாத உணர்ச்சி. துக்கமா, சந்தோஷமா என்று சொல்ல முடியாத உணர்ச்சி அந்த மனிதரைப் பார்த்ததும் ஏற்பட்டது. கைக் கடிகாரம் மணி எட்டு  என்று காட்டியது.
“செம்பு பொன்னாகும் சிவாய நமவென்னில்
செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்
செம்பு பொன்னாகும் சிரீயும் கிரீயுமெனச்
செம்பு பொன்னான திருவம் பலமே”
என்றபடி பாடிக்கொண்டு வந்தவர்
என் பக்கம் திரும்பி, “என்னைத் தேடி வந்து விடுவாய் என்று தெரியும். வா, படித்துறையில் நிதானமா உட்கார்ந்து பேசலாம்” என்று சொல்லிவிட்டு விடுவிடு என்று வெளியில் போனார் அந்த மனிதன்.

இந்தத் தோற்றத்தில் சென்னையில் இதுவரை யாரையும் பார்த்ததில்லை. யார் இந்த மனிதர்? நமக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்? நான் வந்த விஷயமே வேற , அப்படி இருக்க என்னுடன் பேச வேண்டுமாமே. கோவிலுக்கு வராமல் பஸ் ஸ்டாண்டிலேயே காத்திருந்திருக்கலாமோ? பள்ளிக்கு வேறு போக வேண்டும். அறை பார்க்க வேண்டும். அடுத்த சனி ஞாயிறில் சென்னை போக டிக்கெட் எடுக்க வேண்டும் இப்படி தலைக்கு மேல் வேலைகள் இருக்க யாரோ நாட்டு ஷோக்காளி கூப்பிட்டதை பெரிதாக எடுத்துக் கொண்டு போக வேண்டுமா?
அர்ச்சகரைக் கேட்கலாம் என்றால் கூட்டம் சேர ஆரம்பித்து விட்டதில் எதுவும் கேட்க முடியவில்லை.

சரி நம்ம வேலையை நாம் பார்க்கப் போகலாம் என்று முடிவெடுத்து பஸ் ஸ்டாண்ட் நோக்கி வரவும் காரையார் போகும் ஒரு தனியார் பேருந்து வரவும் சரியாக இருந்தது. கைகாட்டி நிறுத்தி வண்டியில் ஏறி விட்டேன். பேருந்து சட்டென நடு ரோட்டில் எஞ்ச்சின் அணைந்து போய் நின்று விட்டது.  பத்து நிமிடமாய் ஓட்டுநர் பலமுறை முயன்றும் வண்டி கிளம்பவில்லை. கண்டக்டர், “ எல்லாரும் இறங்கிடுங்க, வண்டி பிரேக் டவுண் ஆகிடுச்சு” என்று அறிவித்த அடுத்த நொடியில் கோவிலில் நான் பார்த்த மைனர் ஆசாமி வண்டியில் ஏறினார். வண்டிக்குள்ளிருந்து இறங்கும் யத்தனத்தில் இருந்த பயணிகளை, “எல்லாரும் இடத்தில் போய் உட்காருங்க. மாரிமுத்து நீ வண்டியை ஸ்டார்ட் பண்ணு” என்று கட்டளையிடும் குரலில் சொன்னார். ஓட்டுநர் மாரிமுத்துவும் வண்டியை இயக்க சமர்த்தாக எஞ்சின் இயங்க ஆரம்பித்தது.

வண்டிக்குள் ஏறி சுற்றும்முற்றும் பார்த்தவர், என்னைப் பார்த்து சிரித்து
“ சாயங்காலம் உன் காரையார் பள்ளிக்கூட வேலையெல்லாம் முடித்துக் கொண்டு என்னை படித்துறையில் பாரு” என்று சொல்லிவிட்டு இறங்கிப் போனார். பேருந்தில் இருந்த எல்லோரும் என்னையே பார்க்க வெட்கம் பிடுங்கித்தின்றது. வாழ்க்கையில் என்னையே நான் அன்னியமாக உணர்ந்தது அந்தக் கணத்தில் தான்.

கண்டக்டரிடம் காரையார் ஒரு டிக்கெட் என்று நூறு ரூபாய் நோட்டை நீட்டியதும்,
“ சார்வாளுக்கு எந்த ஊர்? பவுன்மூட்டை சாமியை மின்னகூட்டியே தெரியுமா? சாமிக்கு வேண்டிய ஆளுன்னு தெரிஞ்ச பின்னாடி டிக்கெட் எல்லாம் வேண்டாம் சார்.  உங்களுக்கு காசு வாங்கி சீட்டுக் கொடுத்தது முதலாளிக்குத் தெரிந்தால் என் சீட்டுக் கிழிஞ்சிடும். காரையாரில் எங்கே போகணும் சார்? அடுத்த டிரிப் மதியம் இரண்டு மணிக்கு காரையார் வருவேன். அதுக்குள்ள எல்லாம் முடித்து வந்திடுங்க. அப்புறம் விட்டா நாலு மணிக்குத்தான்” என்று மூச்சு விடாமல் பேசினார்.

என்னவோ தலை சுற்றியது. ஒன்றும் புரியவில்லை. நல்ல மர்ம நாவலைப் படிக்கிற மாதிரி இருந்தது. கண்டக்டரிடம் பவுன் முட்டை சாமி என்ற நாட்டு ஷோக்காளி பற்றிக் கேட்க நினைத்து வாய் திறந்த போது வார்த்தை வர மறுத்தது. நாக்கெல்லாம் உலர்ந்து போனது.
ஒரு வழியாக பள்ளிக் கூடம் வாசலில் நிறுத்தி இறக்கி விட்ட நடத்துனர்,
 “சார் மறக்காமல் சாமிய பார்த்திடுங்க. நான் இரண்டு மணி டிரிப்பில் உங்களை பிக்அப் பண்ணிக்கிறேன்.ரை ரைட்ட்ட்ட்” என்று இரட்டை விசில் கொடுத்ததும் பேருந்து  மெலிதாகப் புகையைக் கக்கி விட்டுச் சென்றது.

பள்ளிக்கூடம் சிறியதுதான். மொத்தமே என்னையும் சேர்த்தால் எட்டு ஆசிரியர்களும் ஒரு தலைமை ஆசிரியர், ஒரு அலுவலக உதவியாளர் மற்றும் ஒரு இளநிலை உதவியாளர் ஆக  பதினோரு பேர்கள். மாணவர்கள் மொத்தம் முன்னூற்றுச் சொச்சம்தான். வாத்திமார்கள் எல்லாம் அம்பாசமுத்திரம், கல்லிடை, விகே புரம் என்று  உள்ளூர் வாசிகள். நான் மட்டும்தான் மெட்ராஸ்காரன். என் தலையலங்காரம், உடையலங்காரம் எல்லாம் அவர்களிடமிருந்து கொஞ்சம் வேறுபட்டிருந்ததை என்னை அவர்கள் பார்த்த பார்வையில் அறிந்து கொள்ள முடிந்தது. அப்புறம் நான் விரைவில் மாறுதல் பெற்றுச் சென்று விடுவேன் என்ற எண்ணமும் அவர்களுக்கிருந்ததை அறிய முடிந்தது. முக்கியமாக அவர்கள் எல்லாம் நாற்பதைக் கடந்தவர்கள், மணமானவர்கள். நான் மட்டும்தான் நடு இருபதுகளில் இருந்த பிரம்மச்சாரி.

ஓரளவுக்கு பரிச்சயம் ஆகி விட்டனர். மதியம் சத்துணவு ஆயாமா கொடுத்த சாதமும் சாம்பாரும் அத்தனை ருசியாக இருந்தது. இரண்டு மணி பேருந்து பிடிக்க சாலைக்கு வரும் போது அலுவலக உதவியாளர் கசமுத்து கூட வந்தார். அவரிடம் பவுன் மூட்டை சாமி பற்றிக் கேட்க நினைத்தால் மறுபடியும் எதோ ஒன்று என் வாயைக் கட்டியது. சம்பந்தமில்லாமல் எதையோ பேச முடிந்ததே ஒழிய பவுன் மூட்டை சாமி பற்றி எதுவும் பேச முடியவில்லை.

ஞாயிற்றுக் கிழமை வந்தால் தங்குவதற்கு கசமுத்து விகே புரத்தில் நல்ல இடம் பார்த்துத் தருவதாகச் சொன்னார். வாடகை அதிக பட்சம் ஆயிரம் என்றார். பெருந்து வந்தது. நடத்துனர் சினேகமாக சிரித்து சாப்பிட்டாச்சா சார், என்றவர் கசமுத்துவிடம், “அண்ணாச்சி, பவுன் மூட்டை சாமிக்கு  சார்வாளைத் தெரியும். அவாளத்தான் இப்ப பார்க்க பாவநாசம் போறாவ” என்று சொல்லிவிட்டுப் புறப்பட விசில்  கொடுத்தார்.

என்னை கோவில் அருகே இறக்கி விட்டார் நடத்துனர். படித்துறையில் நிறைய சுற்றுலாப் பயணிகள். கிட்டத்தட்ட ஐம்பது படிகள் கீழே இறங்க
ஸ்படிகமாய் தாமிரபரணி ஓடிக்கொண்டிருந்தது. காலையில் பார்த்த மனிதரைத் தேடினால் அந்த அங்க அடையாளத்தில் யாரும் இல்லை.

பக்கத்தில் உள்ள மண்டபத்தில் வந்து உட்கார்ந்த என் அருகில் வந்து அமெரிக்க உச்சரிப்பில், “கேன் யூ ரெககனைஸ் மீ, வீ மெட் சம் டைம் பேக் இன் சென்னை இன் எ மூவி தியேட்டர்” என்று ஆங்கிலம் பேசியவனை  உற்று நோக்கினேன்.
“டூ யூ ஸ்டில் கீப் தட் கோல்டன் பின் தட் ஐ ப்ரெசென்டெட் யூ தட் டைம்” என்றதும் புரிந்தது.

அது நன்றாக நினைப்பிருக்கிறது.  போன 2015 ஜனவரி 26 அன்று பெரம்பூர் எஸ்2 தியேட்டரில் “ஐ” படம் பார்க்கச் சென்றிருந்தேன். படம் ஆரம்பித்த பின் என் அருகில் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்த ஆசாமி இடை வேளையில் விளக்குகள் எரிய ஆரம்பித்ததும் அந்த ஆசாமியின் முகத்தைப் பார்த்தேன். “ சிரித்தபடி படம் எப்படி சார்” என்றான்
“ ம். பரவாயில்லை. ஆனா நம்ப முடியாத கதை” என்றதும்
“பல நேரங்களில் உண்மைகள்  கட்டுக்கதைகளை விட விசித்திரமாக இருக்கும் என்பார்களே. இப்போது கூட என்னால் நம்ப முடியாத ஒன்றை செய்ய முடியும்” என்றான்.
“உங்கள் சட்டையில் ஒரு குண்டூசி குத்தியிருக்கிறது அல்லவா. அதை என்னிடம் கொடுங்கள்”
கண்ணெதிரில் தன் கையில் வைத்திருந்த பையிலிருந்து  ஒரு பச்சிலையை எடுத்து அந்த குண்டூசி மீது தேய்த்துத் திரும்பவும் என்னிடமே திரும்பக் கொடுத்தவன், “ படம் முடிந்ததும் உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கு” என்றான்.
நான் கழிப்பிடம் சென்று விட்டு மீண்டும் இருக்கைக்கு வந்த போது ஆசாமியைக் காணவில்லை. சரி படம் போட்ட பின்னர் வருவான் போல என்று நினைத்திருந்தேன். அவன் படம் முடியும் வரை வரவேயில்லை. படம் முடிந்து வீட்டிற்கு வந்தவன் இந்த நிகழ்ச்சியை அடியோடு மறந்து விட்டேன். ஒரு வாரம் கழித்து சட்டையை துவைக்கப் போடும் போது கையில் ஏதோ குத்தி ரத்தம் வந்தது. சுரீர் என்ற வலியில் எடுத்துப் பார்த்தால் தங்க நிறமாக குண்டூசி இருந்தது கண்டு வியப்புற்றேன். அங்கே தியேட்டரில் நடந்தது நினைவுக்கு வர பக்கத்து மிஸ்ரிமல் சேட் அடகுக் கடைக்குப் போய் குண்டூசியை உரசிப் பார்க்க அசல் சொக்கத்தங்கம். என்னால் நம்ப முடியவில்லை. அதை பத்திரமாக என் டைரியில் குத்தி வைத்தேன். அதோடு சுத்தமாக மறந்து விட்டேன். அன்று தியேட்டரில் பார்த்த அந்த ஆசாமிதான் இப்போது என்னுடன் பாவநாசத்தில் படித்துறையில் பேசுபவன் என்பதை மூளை உணர்த்தியது.
“யா. நௌ ஐ ரிமம்பர்” என்றேன்.
“ஆர் யூ லுக்கின் ஃபார் சம் ஒன் ஹியர்”? என்றவன் சட்டென தமிழில், “காலையில் கோவிலில் அப்புறம் பஸ்ஸில் பார்த்த அந்த நாட்டு ஷோக்காளி மனிதரையா? அப்படியென்றால் அது நான்தான்”, என்றதும் திடுக்கிட்டேன். “சரி. இன்றிரவு என்னுடன் பாணதீர்த்தத்தில் தங்குகிறாய். அங்கே நிறைய அறிந்து கொள்வாய். புறப்படுவோம்”, என்றவனிடம்
“ஒரு நிமிஷம், நீங்கள் யார்” என்றேன் நடுங்கும் குரலில்.
“ அதை இன்றிரவு அறிந்து கொள்வாய். இது ஈசனின் கட்டளை. நாம் யாருமே மீற முடியாத ஒன்று. தலையெழுத்து என்று வைத்துக்கொள். உன் எல்லாக் கேள்விக்கும் விடை தருகிறேன்”.
பாணதீர்த்தத்தை நாங்கள் எப்படி அடைந்தோம் என்பது நினைவில் இல்லை. காட்டுப்பாதை ஒற்றையடித்தடத்தில் நடந்தது மட்டும் லேசாக நினைவில் இருந்தது. நாங்கள் இருவரும் அங்கு போய் சேர்ந்த நேரம் இரவு எட்டு மணி என்றது என் கைக்கெடிகாரம்.

கும்மிருட்டு. ஓ என்று அருவி விழும் பேரொலி. அமானுடமாக இருந்த அந்தச் சூழல் பயமாக இருந்தது. போதாத் குறைக்கு ஒரு அமானுடன் வேறு பக்கத்தில். பேசாமல் குமார் சொன்னதைக் கேட்டு மாடிபிக்கேஷன் ஆர்டருக்கு முயன்றிருக்கலாம். எல்லாம் விதி.

” தொம்மா, ஏ தொம்மா நான் வந்திட்டேன். கூடவே விருந்தாள் ஒருத்தரும் வந்திருக்காரு. சீக்கிரமா விளக்கு போடு. சாப்பாடு விருந்தாளுக்கு கொடு. களைச்சிப் போய் இருக்காரு என்று இருட்டில் எங்கோ பார்த்து குரல் கொடுத்தான். ஐந்து நிமிடம் கழிந்திருக்கும். ஒரு காணிக்காரன் கையில் அரிக்கேன் விளக்கோடும் ஒரு தூக்குச் சட்டியோடும் வந்தான்.
“ சாமி வந்திட்டீங்களா. கும்பிடறேன் சாமி” என்று சொல்லி தூக்குச் சட்டியைத் திறந்து “சாப்பிடுங்க”என்று என் முன் வைத்தான். இருந்த கொலைப்பசியில் என்ன பதார்த்தம் என்று கூட யோசிக்காமல் அள்ளி எடுத்து சாப்பிட ஆரம்பித்தேன். தினைமாவில் மலைத்தேன் ஊற்றி பிசைந்த களி. வாழ்க்கையில் முதல் முறையாக சாப்பிட்டேன். கொஞ்சம் பயம் தெளிந்திருந்தது.
“ தொம்மா, நீ கிளம்பு. நான் இவரோட தனியா பேசணும். சரியா சந்திரன் முக்கால் மேற்கே இறங்கும் போது வந்தாப் போதும்” என்றான்.

அப்புறம் அவன் சொன்னது இதுதான்.
“ என் பெயர் சிவாக்கியன். என்னை திருமழிசைப் பிரான் என்போர் சிலர்.  என்னை நாத்தீகன் என்றும் சொல்வார்கள். நீ கூட படித்திருப்பாயே
“நட்ட கல்லை தெய்வம் என்று புட்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொன என்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ”
என்ற பாடலை.
இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை எனக்கு சித்தித்தது. அதை என் அடுத்த தலை முறைக்கு மாற்ற வேண்டும். அதற்கு பொன் மீது ஆசையில்லாதவனை தேடினேன். அப்படித் தேடும் போது அவர்களிடம் உள்ள எதாவது இரும்புப் பொருளை தங்கமாக மாற்றிக் காட்டுவேன். தங்கமாக மாறியதை அறிந்ததும் என்னைத் தேடி அந்த ரகசியத்தை அறியவே எல்லோரும் முயல்வர். ஆனால் நீ ஒருவன் தான் என்னை அந்த வித்தைக்காகத் தேடி வரவில்லை. ஆகவே என் குருநாதர் சொன்னபடி பொன்னாசை அற்றவன் நீ என்று கண்டு கொண்டேன்”.
"எண்ணான வேதைகோடி உத்தமர்க்குக் கிட்டும் அல்லல்
உண்மையாம் சான்றோர்க்கும் தயை குணம் உள்ளோருக்கும்
தன்மையாம் மொழிகள் கூறி உகந்ததுமே பணிந்திட்டோர்க்கும்
வண்மையாம் மனமுள்ளோர்க்கும் மேன்மையாம் பலிக்கும் தானே"

“எண்ணிக் கணக்கிடமுடியாத கோடிக்கணக்கான ரசவாத முறைகள் உள்ளன.
அவை உத்தமர்களுக்கும், உண்மையான சான்றோருக்கும், இரக்க
குணமுள்ளோருக்கும் , உண்மையானதொண்டருக்கும், நல்ல மனம்
உள்ளவருக்குமே பலிக்கும்”
நான் என்னுடைய அடுத்த பிறவிக்கு வேண்டி சமாதி ஆகப் போகிறேன். அதற்கு முன் உன்னிடம் என் மூட்டையில் உள்ள பச்சிலைகளை உன்னிடம் ஒப்படைக்கிறேன். அதில் ஒன்றே ஒன்று மட்டுமே அய சொர்ண பத்ரம். அய சொர்ண விருட்சத்தின் இலை. அதை அடையாளம் காணும் முறையையும் உபதேசிக்கிறேன். தகுதி வாய்ந்த ஒருவரை  உன் வாழ்நாளில்  தேடிக்கண்டுபிடி. உன் பொறுப்பை அவனிடம் கொடுத்த பின்தான் உனக்கு அமர வாழ்வு சித்திக்கும். பொன் ஒரு ஆட்கொல்லி. இதை என் வரலாறைப் படித்துத் தெரிந்து கொள். ஆகவே கவனமாக இருப்பது உன் கடமை.  இப்போது நீ தைரியமாக துயில் கொள். நான் உனக்குக் காவலிருப்பேன்” என்றவர் யோக நிஷ்டையில் ஆழ்ந்தார்.
அவரையே பார்த்துக் கொண்டிருந்த நான் எப்பொழுது தூங்கினேன்  என்று நினைப்பில்லை. காலை வெயில் சுள் என்று முகத்தில் பட்ட போது , பாபநாசம் கோவில் படித்துறை மண்டபத்தில் படுத்திருந்தேன். பக்கத்தில் இரண்டு அழுக்கு மூட்டைகள்.

நிதானமாகச் சிந்தித்தேன். மூட்டையில் உள்ள இலைகளில் அய சொர்ண பத்ரம் எது என்பதை நான் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். மற்றபடி யாருக்கும் தெரியாது. மனிதனை கொல்லும் ஆட்கொல்லி நான் அடுத்த தலைமுறைக்கு தரப் போவதில்லை. அமர வாழ்வு எனக்கு வேண்டாம். பொன்னுக்கு இந்த மனிதகுலம் அடித்துக் கொள்ள வேண்டாம். நானும் பவுன் மூட்டை தூக்கி பைத்தியமாக, சித்தனாக அலைய வேண்டாம் என்று தீர்க்கமாக முடிவெடுத்தேன்.  மலையேறி ஒவ்வொரு இலையாக காட்டுக்குள் போட்டு இரண்டு மூட்டைகளையும் காலி செய்தேன். எதற்கும் இருக்கட்டும் என்று அய சொர்ண பத்ரத்தை அலைபேசியில் நாலைந்து படம் எடுத்துக் கொண்டு பாபநாசம் ஆற்றுக்கு வந்து தலை மூழ்கி கோவிலுக்குச் சென்றேன்.
தரிசனம் முடித்து வெளியில் வந்தால் கசமுத்து சார்வாள் திருநெல்வேலியிலிருந்து காலையிலே வந்திட்டீயள் போல, டீ காந்திமதி சார்வாள் நம்ம ஸ்கூலுக்கு வந்திருக்கிற கணக்கு சார் என்றான். வணக்கம் சொன்ன காந்திமதிக்குப் பின்னால் நேற்று மாலை பார்த்த ஆசாமி குறும்பாகச் சிரித்தபடி கையில் இரண்டு அழுக்கு மூட்டைகளை வைத்துக் கொண்டு என்னைப் பார்த்து, “சார்வாள் என்னதான் மறதியானாலும் லக்கேஜை இப்படி மறந்து விட்டிட்டு போகலாமா” என்றார்.  

Monday, 28 November 2016

குருதட்சணை


“அப்பா, எனக்கு இப்போ கல்யாணம் செய்து கொள்ள விருப்பமில்லை. என்னை ஒரு பரிட்சைக்கு தயார் படுத்திக் கொண்டிருக்கிறேன். அந்தப் பரிட்சையில் கிடைக்கும் முடிவுதான் என் மணவாழ்வு பற்றி முடிவெடுக்கும்” என்று மிகத் தெளிவாக ஆகாஷ் பேசியதும் அதிர்ந்து போனார் சிவசாமி.

“என்னப்பா, ஓன்றுமே புரியவில்லை. இப்ப வரன் பார்க்க ஆரம்பித்தால்தான்  நல்ல வரன் கூடி வர எப்படியும் குறைந்தது ஆறு மாதமாவது ஆகும். அப்புறம் சத்திரம் கிடைத்து பொண்ணு வீட்டுச் சௌகரியம் எல்லாம் பார்த்து கல்யாணம் முடிய இன்னும் ஒரு ஆறு மாசம். ஆகக் கூடி எப்படிப் பார்த்தாலும் ஒரு வருஷத்திற்குக் குறையாமல் ஆகிவிடும். அதற்குள் நீ சொல்கிற பரிட்சை எழுதி முடிவும் தெரிஞ்சிடும் ஆகாஷ். அதால நா இந்த மாதம் நல்ல நாள் நிறைஞ்ச அமாவாசையில் பார்க்க ஆரம்பிக்கிறேனே. என்ன காமாட்சி நீ என்ன சொல்ற”, என்றார் சிவசாமி.

“மன்னிச்சிங்க அப்பா, இது நீங்க நினைக்கிற மாதிரி ஒரு வருடத்தில் எழுதி பாஸ் பண்ணற பரிட்சை எல்லாம் இல்லைப்பா அதை விட நிறைய காலம் பிடிக்கலாம். மேலும் நான் இன்னமும் அதற்கு தயாராகும் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறேன். தயவு செய்து புரிஞ்சிங்கப்பா” என்றான் ஆகாஷ்.
“காமாட்சி, நம்ம பிள்ளை ஏதோ காதல், கத்திரிக்காய் என்கிறாங்களே, அதில எதாவது மாட்டிக்கிட்டான் போலிருக்கு. எல்லாம் இந்த டெலிவிசன் வந்தாலும் வந்தது பசங்க எல்லாம் ரொம்பவே கெட்டுப்போச்சு.”

“சரி. விட்டுச் சொல்லுடா, உனக்கு பிடிச்சிருந்தா அது யாரா இருந்தாலும் நான் வெக்கத்த விட்டு   அவங்க வீட்டுப் படியேறிப் போய் பொண்ணு கேட்கிறேன். சும்மா பரிட்சை அது, இதுன்னு சொல்லிட்டு திடீர்னு ஒருநாளைக்கி மாலையும் கழுத்துமா ஒருத்திய கூட்டிட்டு வந்து காலில் வீழ்ந்து ஆசிர்வாதம் பண்ணச் சொல்லி மானத்தை வாங்காதே”.

“ஏம்பா உங்க தலைமுறையில் எல்லாருக்குமே கல்யாணம் இப்ப வேண்டாம் என்றால் காதல் தான் கண்ணில வந்து நிற்குது. வேற காரணம் இருக்காதா இல்லை இருக்கக் கூடாதா? நீங்க நினைக்கிறது மாதிரி இது பேப்பரில் பேனாவால் எழுதற பரிட்சை இல்லைப்பா”
“ஓ, அப்படி என்னடா பெரிய பரிட்சை”?
“ஆங்.அதெல்லாம் உனக்கு புரியாதப்பா. நீங்க ஆன்ம தேடல் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிங்களாப்பா?

“கலெக்டர் ஆபீஸில் ஜூனியர் அசிஸ்டெண்ட்க்கு இருட்டு ரெக்கார்ட் ரூமில் பைலைத் தேடவே நேரம் இல்லை. இதில் ஆன்ம தேடலா? ஆமா அப்படின்னா என்னடா? கொஞ்சம் விவரமாதான் சொல்லேன்”.

“ அதுப்பா, நாம நம்மையே அறிய தேடற முயற்சிப்பா. ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தோண்டிப் பார்க்கணும். ஞானம் ஊற்றெடுக்கும் வரை தோண்டணும். அப்படி ஞானம் வந்திட்டா வேற இல்லற சுகங்கள் உடம்புக்கு தேவைப்படாது. புரிஞ்சுதாப்பா?

“என்னவோபா, இதுக்கு காதல் கத்திரிக்காயே தேவலை போலிருக்கே.
சரி. நீ கடைசியா என்னதான் சொல்லப் போறே”?
“ஒன்றும் பிரச்சனை இல்லைப்பா. இந்த தேடலுக்கு வழிகாட்டி வேண்டும். அதாவது நல்ல குரு வேண்டும். சில வருடங்களாகத் தேடி அவரையும் கண்டு பிடித்து விட்டேன். கோவர்த்தனகிரியில் உள்ள சுவாமி ஜோதி தீட்சானந்தா ஆசிரமத்திற்கு இந்த வாரம் சனிக்கிழமை போகிறேன். அங்கே ஒரு மாதம் தங்கி பயிற்சி எடுத்துக் கொண்ட பின்னர் ஞான தீட்சை பெற்றுக் கொண்டு குரு காட்டும் வழியில் என்னை அறிய முயலப் போகிறேன். அதில் ஒருவேளை தோல்வி கண்டால் நீங்கள் சொல்லும் இல்லற வாழ்வு முறைக்கு கண்டிப்பாக வந்து விடுவேன். வேறு எதுவும் சொல்ல இப்போது எனக்குத் தெரியவில்லை. அவ்வளவுதான்”.

சிவசாமியின் மனதின் கொஞ்சம் மகிழ்ச்சியும், நிறைய கவலையும் ஆக அடைத்துக் கொண்டது.

எங்கே தன்னோடு பணிசெய்த தசரதன் பையன் வேற்று மதப் பெண்ணை காதலித்து ரகசியமாக பதிவுத்திருமணம் செய்து கொண்டு வந்து தர்ம சங்கடத்தில் தசரதனை ஆளாக்கியது மாதிரி ஆகாஷ் தன்னைச் சங்கடத்தில் ஆழ்த்தவில்லை என்ற மகிழ்ச்சி இருந்தாலும், காமாட்சி,” ஏங்க, நம்ம புள்ளை சாமியாரா காவி கட்டிட்டு போயிடுமாங்க. பயமா இருக்குங்க” என்றபோது வெளியில் “அதெல்லாம் ஒண்ணியும் ஆவாது” என்று தைரியம் சொன்னால் கூட அடிமனத்தில் அப்படி ஒரு பயம் தொற்றிக் கொண்டிருப்பதை அவரால் உணர முடிந்தது.

கலெக்டர் ஆபீஸ் கேண்டீனில் கண்ணில் பட்ட நெருக்கமான நண்பர்களிடம் எல்லாம் சுவாமி ஜோதி தீட்சானந்தா பற்றி விசாரிக்கவும், அவர்கள் இரு வேறு விதமாக கருத்துச் சொல்லவும் மனசில் குழப்பம் அதிகரித்தது. மேலும் வேறு நண்பர்களை விசாரிக்கலாம் என்றால், சர்வே டிபார்ட்மெண்ட் குப்புராஜ், “ என்னண்ணே, சுவாமி ஜோதி தீட்சானந்தா சிஷ்யரா மாற்றிட்டாப்ல என்று பேசிகிறாங்களே” என்று குறும்பாகக் கேட்கவும் அவசரமாக மறுத்து, “ அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நேத்து பொழுதுபோகாம டீவி பார்த்த போது அவரது சொற்பொழிவு கேட்டேன். நல்லா இருந்துச்சு அதான் விசாரிச்சேன்”.
“அப்படியா நம்ம கலெக்டர் ஆபீசில் பேசறவங்க, நீங்க சுவாமிஜி கூட சம்பந்தம் பண்ணப் போற லெவல்ல விசாரிச்சதா பேசிக்கிட்டாங்க” என்றவனின் நக்கல் பேச்சிற்குப் பின்னர் அவர் அலுவலகத்தில் விசாரிப்பது இல்லை என்ற தீர்மானத்திற்கு வந்து விட்டார்.

ஆகாஷ் சனிக்கிழமைதானே ஆசிரமத்திற்குப் போவதாகச் சொன்னான். அவனுடன் தானும் காமாட்சியை கூட்டிக் கொண்டு செல்வது ஒரு மாதம் மூவருமாக தங்குவது என்று முடிவு செய்து விட்டார்.
சூப்பிரண்டெண்ட் ஒரு சிடு மூஞ்சி என்றால் அப்படி ஒரு சிடுமூஞ்சி. ஒரு விதமா ஆபிஸ் அசிஸ்டெண்ட் பாலையாவிடம்  நூற்றைம்பது ரூபாய் கொடுத்தனுப்பி மறுநாள் முதல் மெடிக்கல் சர்டிபிக்கேட்  மஞ்சக் காமாலை என்று பொய்யாக வாங்கியாச்சு. பாலையாவுக்கு தனியாக ஒரு நூறு வெட்டியாச்சு. இல்லையென்றால் கிராதகன் ஆபிஸ் முழுதும் கலெக்டர் வரை எல்லாருக்கும் போஸ்டர் அடித்து ஒட்டாத குறையாக திருட்டு மெடிக்கல் லீவு போட்டதை கரும சிரத்தையாக சொல்லி விடுவான். 

அடுத்தது சூப்பிரண்டெண்ட கவனிக்கனும். கவரிங் லெட்டரும் மெடிக்கல் லீவு விண்ணப்பம், டாக்டர் சர்டிபிக்கேட் மற்றும் முக்கியமான பேப்பர்கள் எல்லாவற்றையும் கொடுத்து பவ்யமாக நின்றார்.
“என்னது மஞ்சக் காமாலையா? காண்டீனில் முருகலா நெய் ரவா தோசை சாப்பிட்டதை பார்த்தேனே” என்றவர், முக்கியமான பேப்பரைப் பார்த்ததும் “சரி சரி. நாளைக்கு ஒரு நாள் அன் அபீஷியலா வந்து பெண்டிங் ஒர்க் எல்லாம் முடிச்சிடுங்க. அடிக்கடி லீவு எடுக்காதீங்க. உடம்பை பார்த்துக்குங்க” என்றார். பத்து முறை தேங்கியூ சார் சொல்லி சீட்டிற்கு வந்து உட்காரும் போது மனசு கொஞ்சம் ஆசுவாசப்பட்டது.

அடுத்தது ஆகாஷிடம் எப்படி நாங்களும் கூட வருகிறோம் என்பதை சொல்வது? கண்டிப்பாக அதை ஏற்றுக் கொள்ள மாட்டான். எப்படியாவது ஆசிரமத்திற்குப் போய் விட்டால் சாமியாரிடம் சொல்லி, கெஞ்சிக் கூத்தாடி பையனை மீட்டு வந்து விடலாம். சாமியாரே ஆகாஷை இல்லறத்திற்கு போகச் சொல்லி உத்தரவிடும் பட்சத்தில் அதிகம் பிரச்சனை இல்லாமல் சம்பந்தம் பண்ண துடித்துக் கொண்டிருக்கும்  தன் தங்கச்சியிடம் பேசி வர தையில் அதிக ஆடம்பரமில்லாமல் திருமணத்தை முடித்து விடலாம். பார்ப்போம். கொஞ்சம் கொஞ்சமாக மனதில் நம்பிக்கை வேர் விட ஆரம்பித்தது.

சாயங்காலம் ஆபீஸ் முடிந்து வீட்டிற்கு வந்தவருக்கு காபி கொடுத்த காமாட்சி, “ என்னங்க, என்ன செய்யப்போறீங்க. என் பிள்ளையை சாமியாராக விடமாட்டேன். அதுக்கு நான் என்ன வேணாலும் செய்யறேங்க” என்றாள்.
“அம்மாடி நீ எதுவும் செய்ய வேண்டாம். எல்லாம் நல்லபடி நடக்கும். நீ எதாவது செய்து என் திட்டத்தை கெடுத்திடாதே. அது போதும்” என்றார்.
ஆகாஷ் வந்ததும், ஆபீசில் சுவாமிஜி பற்றிக் கேட்டதையும் தனக்கே அவரைப் பார்த்து அருளாசி வாங்க ஆசையாக இருப்பதையும் சொன்னதும் மகிழ்ச்சியுடன், “வாங்கப்பா. பார்த்தீங்களா, ஸ்வாமிஜி இப்படித்தான் எல்லார் மனசிலும் புகுந்து குடிகொண்டு விடுவார்” என்று அரைமணி நேரம்  மூச்சு விடாமல் லெக்ச்சர் அடித்து ஓய்ந்தான்.

அப்புறம் காரியங்கள் கடகட என்று நடக்க ஆரம்பித்தது. ஆகாஷே அவருக்கு, காமாட்சிக்கு, அவனுக்கு கோவர்த்தனகிரி எக்ஸ்பிரசில் மூன்றாம் வகுப்பு  ஏர்கண்டிசன் டிக்கெட் எடுத்தான். சனிக்கிழமை ரயிலேறி ஞாயிறு காலை கோவர்த்தனகிரி வந்து சேர்ந்தாகிவிட்டது. ஆகாஷ் தியானம் பண்ண இடைஞ்சலாக இருக்கும் என்பதால் தனி அறையும் , சிவசாமிக்கும், காமாட்சிக்கு இரட்டைப் படுக்கை அறையும் எடுத்துக் கொண்டான். உணவு, தங்குவது மற்றும் இதர பயன்பாடுகளுக்கு மொத்தமாக முன்பணம் பத்தாயிரம் ரொக்கமாக ஆகாஷ் கட்டியதைப் பார்த்த சிவசாமிக்கு மயக்கமே வந்து விட்டது.





ஆசிரமத்தில் எல்லாம் ஒரு ஒழுங்கு, கட்டுப்பாடோடு நடந்தது. எல்லா வேலைகளையும் தன்னார்வத்தொண்டர்கள் செய்தனர். விருந்தினர்களி மிக மரியாதையாக நடத்தினர். எல்லாவற்றிற்கும் மேலாக எப்போதும் எதாவது நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டே இருந்ததால் சிவசாமிக்கும், அதிகம் வெளியுலகப் புழக்கம் இல்லாத காமாட்சிக்கும் நன்கு பொழுது போனது. அடிக்கடி, “நா பெத்து வளர்த்த புள்ளங்க, அவன் நல்ல வழிக்குத்தான் போவான். கெட்ட வழி அவனுக்கு சுட்டுப்போட்டாலும் வராது” என்று சிவசாமியிடம் சொல்ல, அவர் “ஆமா” என்று அழுத்திச் சொல்லி ஒற்றை வார்த்தையில் முற்றுப் புள்ளி வைத்தார்.

கோவர்த்தனகிரி வந்த பதினைந்தாம் நாள் சுவாமிஜி, சிவசாமியைப் பார்க்க அழைத்தாக சுவாமிஜியின் செயலாளர் கூட்டிச் சென்றார். சுவாமிஜி அறையில் அனுமதிக்கு முன் பல விசாரணைகள், சோதிப்புகள். இறுதியாக அறைக்குள் போன சிவசாமி தம்பதியினரிடம் ஆகாஷுக்கு தீட்சை வழங்கி, ஞானோபதேசம் செய்வதில் அவர்களுக்கு ஆட்சேபணை இருந்தால் சொல்லும்படி கேட்டதும், காமாட்சி தன் பிள்ளை சாமியாராகப் போவதை விரும்பவில்லை என்றாள். சிவசாமியும் அதை பிரதிபலித்து, “ நீங்க சொல்ற எந்த வகையான சேவையும் செய்ய அவனை அனுப்பி வைக்கத் தயார். ஆனால் சன்னியாசி ஆவது வேண்டாம். அவன் மனதை மாற்றுவது அவர் கையில் தான் உள்ளது என்று கண்ணீர் மல்க வேண்ட சுவாமிஜி சிரித்தார். இருபத்தோரு வயதுக்கு மேல் அவன் மேஜர். அவன் எடுக்கும் முடிவை கட்டுப்படுத்த யாருக்கும் அதிகாரமில்லை என்று சட்டம் சொன்னார். கொஞ்ச நேரம் மௌனமாக யோசித்தவர்,
 “ஆகாஷ் என்ன படித்திருக்கிறான்” என்றார்.
“பல் மருத்துவம் சுவாமி, ஆனால் பெரிதாக பிராக்டீஸ் இல்லை”.
“ஓ. அப்படியா, இவன் உங்களுக்கு ஒரே மகனா”?
“ ஆமாம்”
அருகில் வாய் பொத்தி பவ்யம் காட்டிய செயலாளரை பார்த்து ஆகாஷை அழைத்து வரச் சொன்னார்.
ஆகாஷிடம், “குழந்தாய், ஞானம் என்பது வெறும் இருபது நாள் பயிற்சியில் வந்து விடுவது இல்லை. உன் மனம் இன்னும் பக்குவப்பட வேண்டும். உன் பெற்றோருடன் பேசியதில் உன்னைத்தவிர அவர்களுக்கு வேறு பிடிப்பும் இல்லை. உன் தொழிலில் உனக்கு சேவை புரியவும் புகழ் பெறவும் ஒரு வழி காட்டுகிறேன். அந்த வழியில் நடந்து உன்னை உணர்ந்து கொள். சம்மதமா”? என்றார்.
“ஆன்மீக குருவே, அப்படியே செய்கிறேன். எல்லாம் உங்கள் சித்தம்” என்றான் ஆகாஷ்.

அதன்படி ஆகாஷ் சென்னையில் உள்ள சுவாமி ஜோதி தீட்சண்யா சேவை மையத்தில் பல் மருத்துவராக சேவை புரிய இடம் தரப்படும். ஆசிரமம் சொல்லும் கட்டணத்தில் ஏழைகளுக்குப் பல் மருத்துவம் செய்யட்டும். ஆசிரமம் ஆகாஷின் சேவைக்கு மாதம் சன்மானம் தரும். ஆசிரமம் எளிய அமைப்பு என்பதால் கருவிகள் வாங்குவது, நிறுவுவது எல்லாம் ஆகாஷின் செலவு. ஒரு வருடம் கடந்தபின் ஆகாஷ் விரும்பினால் சேவையைத் தொடர்ந்து ஆசிரமத்தின் மையத்தில் தொடரலாம். விரும்பினால் தனியே சொந்தமாகத் தொழில் செய்யலாம். தனியே தொழில் தொடங்கினால் இப்போது அதிகம் பேர் வர வாய்ப்பில்லை. ஆசிரமத்தின் நிழலில் தொழில் செய்தால் பாதுகாப்பு, பெயர் மற்றும் நிறைய வாடிக்கையாளர்களைப் பெற முடியும் என்று எடுத்துச் சொல்லப்பட்டது.

இந்த ஏற்பாடு மூவருக்கும் பிடித்திருக்கவே, சட்டப்படி ஒப்பந்தம் ஆசிரமம் தயாரித்தது. ஞான தீட்சை பெறும் நாளில் கையெழுத்தானது. அளவிலா மகிழ்ச்சியுடன் மூவரும் சென்னைக்கு வந்தனர். லீவு முடிந்து சிவச்சாமி பணியில் சேர்ந்தார். மறு நாளே பிராவிடண்ட் பண்டில் லோன் போட்டார். கொஞ்சம் காமாட்சியின் நகைகளை வங்கியில் விவசாயக் கடன் என்ரு சொல்லி அடகு வைத்தார். அங்கே, இங்கே என்று சிறிது கடன் வாங்கி பதினைந்து லகரங்கள் தேற்றிவிட்டார். ஆகாஷ் போய் ஆசிரம சேவை மையத்தின் கிளை மேலாளரிடம் பேசி விட்டு வந்தான். அவர்களும் அறை ஒதுக்கிக் கொடுத்தனர். கருவிகள் பன்னிரெண்டு லட்சம், இதர வேலைகளுக்கு ஒரு லட்சம் செலவு செய்தான்.  திறப்பு விழாவிற்கு சுவாமிஜியே நேரில் வந்திருந்தார்.

ஆகாஷுக்கு மனம் நிறைந்தது இருந்தது. எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. நான்கு மாதம் கழித்து ஒருநாள் காலையில் மையத்தில் தன் அறையைத் திறக்கப் போனவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவன் அறையில் வேறு ஒரு பல் மருத்துவர் அவன் இடத்தில் உட்கார்ந்திருந்தார். பதறிப்போய் மைய மேலாளரைத் தொடர்பு கொண்டால் அவர் ஆசிரமம் அவனுக்கு வழங்கிய பணி நீக்க ஆணையை மௌனமாகத்தந்தார்.

அதில் சரியாகப் பணிக்கு வராமல் இருப்பதாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. சரி. கருவிகளை எடுத்துக் கொள்ளப் போனால், ஒப்பந்தத்தில் கருவிகள் ஆசிரமத்தின் சொத்தாக கருதப்படும் என்ற ஷரத்து பல்லிளித்தது. ஆசிரமத்தின் சேவை மையத்தில் இவன் தகறாறு செய்யலாம் என்று  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் ஆகாஷை சாப்பிட்டுப்போட்ட எச்சில் இலையாக தெருவில் தூக்கிப் போட்டது ஆசிரமம்.
தான் நன்றாக ஏமாற்றப்பட்டதை சிவசாமிக்கு போன் செய்து சொன்னதும் அதிர்ந்து போனார். கடனை நினைத்து கண்ணீர் வந்தது. அவர் சொன்ன கதையை யாருமே நம்பத் தயாராக இல்லை.


கடைசியில் நகரத்தின் பெரும் புள்ளி  ஒருவர் எல்லாவற்றையும் கேள்விப்பட்டு சிவசாமியின் கடன் அடைத்து பார்க்க படு சுமாராக இருந்ததால் சரியாக வரன் அமையாமல் இருந்த  தன் மகளை ஆகாஷுக்கு திருமணம் செய்து கொடுத்து, தனியாக ஒரு கிளினிக்கும் வைத்துக் கொடுத்தது தனிக்கதை.