Friday, 6 October 2017

சங்கிலிக் கண்ணிகள்


சங்கிலிக் கண்ணிகள்

வெ.சுப்ரமணியன்.


ப்பும் மந்தாரமுமாக இருக்கும் ஐப்பசி மாதத்தின் குளிர்ந்த ஈரமான  காலைப் பொழுது. இந்தியன் மனித வள முகவாண்மை, உத்தமர் காந்தி சாலை சென்னை,  என்ற முகவரியில் இயங்கிய அந்தத் தனியார் நிறுவனத்தின் வரவேற்பறையில் எப்படியும் குறைந்தது நூறு பேராவது இருப்பதாகவே தோன்றியது.  முக்கால்வாசிப்பேர் அவரவர் கையில் இருந்த செங்கல் அளவு நீள அகல பரிமாணங்கள் கொண்ட தத்தம் முப்பரிமாணத் திரை செல் பேசியில் தங்களுக்கான உலகத்தில் மூழ்கியிருந்தனர். திடீரென அறை பரபரப்பானது.

சஃபாரி உடை அணிந்த வாட்டசாட்டமான உடற்கட்டும் போலீஸ் அதிகாரியை நினைவு படுத்தும் தோற்றத்துடன் வந்த ஒருவர் சற்றே அதிகாரமான உரத்த குரலில் பெயர் மற்றும் பதிவு எண் பட்டியலை வாசிக்கத் தொடங்கினார். கிட்டத்தட்ட பத்து நபர்களின் பெயர்களை வாசித்து முடித்தபின்,
‘பெயர் வாசித்தவர்கள் எல்லாம் முதலாம் மாடியில் அறை எண் 101 க்கு வந்து விடுங்கள்’ என்று சொல்லிவிட்டு  மாடிப் படியேற ஆரம்பித்தார். அதற்குள் பெயர் வராத பலர் ‘சார் எங்க பேர் படிக்கவில்லை’ என்றபடி பின் தொடர ‘அடுத்து கூப்பிடுவோம்’ என்று சொல்லிக் கொண்டே முதல் மாடியில்  101 அறைக்குள் புகுந்து விட்டார். 

அங்கே அந்த அறைக்கு வெளியிலும், படிக்கட்டிலும் நின்றவர்களை வரவேற்பு அறையில் சென்று அமரும்படி, காவலாளி கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாய் அன்போடு துரத்திக் கொண்டிருந்தார். ‘அடுத்த பேட்ச் எப்போது கூப்பிடுவாங்க சார்’, என்று காவலரிடம் விசாரிப்புகள். எப்படியும் இன்னும் அரை மணி நேரமாவது ஆகும் என்று தெரிந்ததும் கொஞ்ச கூட்டம் சமாதானம் ஆனது.
அடுத்தடுத்த கால் மணி நேர இடைவெளிகளில் பத்து பத்து பேராக அழைக்கப்பட மெல்ல மெல்லக் கூட்டம் கரையத் தொடங்கியது. அறை எண் 101 ல் நுழைந்த யாரும் திரும்ப வரவேற்பு அறைக்கு வந்த மாதிரித் தெரியவில்லை. அங்கிருந்து அவர்கள் வேறு வழியாக வெளியே அனுப்பப்பட்டிருக்கலாம். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக மருந்துக்குக் கூட ஒரு பெண் போட்டியாளர் அந்தக் கூட்டத்தில் இல்லை. 

சந்தோஷுக்கு இன்னும் பெயர் கூப்பிடப்படவில்லை. மணி ஒன்று என்று வரவேற்பறைக் கடிகாரம்  காட்டியது. பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. காலையில் திண்டிவனத்தில் அனந்தபுரி எக்ஸ்பிரஸில் ஏறுவதற்கு முன் செண்பகா வாங்கிக் கொடுத்த காபி சாப்பிட்டதுதான். டிரெயினுக்கு டிக்கெட் எடுத்த செண்பகாதான் சென்னை வரப் போக எல்லாவற்றுக்குமாக எக் மோரில் இறங்கும் போது ‘ஆல் தி பெஸ்ட், நாளை காலையில் பார்க்கிறேன்’ என்று சொல்லி அவன் உள்ளங்கையில் ஐநூறு ரூபாய்யைத் திணித்து விட்டு பதிலுக்குக் காத்திராமல் கூட்டத்தில் மறைந்து போனாள். 

ஆண்டவா, செண்பகாவிற்கு வேண்டியாவது இந்த வேலை எனக்குக் கிடைக்கணும். நாலு வருஷமாக எத்தனை இண்டர்வியூக்கள், எத்தனை சுடு சொற்கள், முதுகுக்குப் பின் சிரிப்புகள். சந்தோஷ் உண்மையாகவே சந்தோஷமாக இருந்து பல நாட்களாகிறது. இதையெல்லாம் தாங்குவதே செண்பகாவுக்காகத்தான். எப்படியும் இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அதற்குள் வேலை கிடைக்க வேண்டும். மாமா கொடுத்த கெடு அது. இல்லாவிட்டால் செண்பகாவுக்கு வேறு யாருடனாவது திருமணமானால்,  கல்யாணத்திற்கு போய் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்திவிட்டு மாப்பிள்ளைக்கு சிரித்த முகத்துடன் கை கொடுத்து விட்டு வர வேண்டியதுதான்.

இந்தப் பணம் ஐநூறு ரூபாயில் எப்படியாவது மிச்சம் பிடித்து அடுத்து எதாவது இண்டர்வியூ வந்தால் அவளையோ, வீட்டிலோ தொந்தரவு செய்யாமல்  போய் வந்து விடலாம். நல்லவேளை ஆண்டவன் திண்டிவனத்தில் பிறக்க வைத்தான். சென்னையானாலும், பாண்டி ஆனாலும் நூற்றம்பது ரூபாயில் போய் வந்து விடலாம். நெல்லை,மதுரை, திருச்சி என்றால் இன்னும் கஷ்டம். நிறைய இண்டர்வியூக்களை  இந்த சென்னையிலேயே ஏன்தான் வைக்கிறார்களோ?


சஃபாரிகாரர் வந்து கே. சந்தோஷ், திண்டிவனம் - ரெஜிஸ்டர் நம்பர் 13754 என்றதும் ‘டக்’ கென நினைப்பு மாறியது. 110 எண் அறையில் இவனுடன் இன்னும்  ஆறே ஆறு பேர். மூன்று பேர் இல்லை. ஆளுக்கு ஐந்தாறு பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம் போல ஒன்று தரப்பட்டது. அதில் வந்திருந்தவர்களின் குடும்பப் பின்னணி, அரசியல் தொடர்பு, உயர் பதவியில் உள்ள உறவினர்கள் குறித்து எல்லா விவரங்களுடன் கல்வித்தகுதியும் கேட்கப்பட்டிருந்தது. 

அடுத்து அதை நிரப்பிக் கொடுத்த பின்னர் நேர்முகத்தேர்வு வேறு ஒரு அறையில் தனித்தனியாக நடைபெற்றது. தேர்வு அப்படி ஒன்றும் கடினமாக இல்லை. பொதுவாக அவனுடைய சிந்தனைகள், நோக்கங்கள், பொழுதுபோக்குகள், நண்பர்கள் இப்படியே இருந்தது. மறந்து கூட அவன் படித்த தமிழ் இலக்கியத்தில் ஒரு வினா கூட கேட்கப்படவில்லை.

இதெல்லாம் முடிய மணி பிற்பகல் இரண்டு. பிங்க் நிறத்தில் கேண்டீன் சாப்பாட்டிற்கான காகித டோக்கனும், ஒரு வெள்ளைத் தாளில் அண்ணா நகரில் உள்ள ஒரு மருத்துவமனை விலாசமும் கொடுத்து சரியாக மூன்று மணிக்குள் சாப்ப்பிட்டு விட்டு மருத்துவமனைக்குப் போய் மருத்துவத் தகுதிக்கான தேர்வுக்கு போய் விட்டு மாலை ஆறு மணிக்குப் மீண்டும் திரும்ப இங்கே வர வேண்டும் என்று சொல்லி அனுப்பினார்கள். 

சாப்பாட்டு நேரம் கடந்து விட்டதால் கேண்டீனில் அதிகம் கூட்டமில்லை. தட்டை எடுத்துக் கொண்டு போனால் வயதான பெண்மணி ஒருவர் ஒரு கையிலிருந்த கரண்டியால் அதில் சூடாக சாதம் போட்டு, மறு கையில் உள்ள கரண்டியால் கொதிக்கக் கொதிக்க சாம்பாரும் ஊற்ற அடுத்திருந்த மற்றொரு பெண்  அதே போலவே வெண்டைக்காய்  பொரியலும், பறங்கிக் காய் கூட்டையும் பரிமாறினார்.

பக்கத்தில் இருந்த மூங்கில் கூடையிலிருந்து பாதி பொரியும் போதே எடுக்கப்பட்டு எண்ணை வடியாத கருப்புத் துகள்களுடன் கூடிய அப்பளங்களில் கொஞ்சம் சமாரான ஒன்றை எடுத்துக் கொண்டு சந்தோஷ் மேசைக்கு வந்தான். அவசர அவசரமாகச் சாப்பிட்டு வெளியே வந்தவனுக்கு அது பின் வாசல் என்பது புரிந்தது. வாசலில் இருந்த காவலாளியிடம்  அண்ணா நகருக்குப் போக பஸ் ஸ்டாப் பஸ் நம்பர் கேட்டு நடக்கும் போது மழை வரும் போல வானம் இருட்டிக் கொண்டு இருந்தது. 

பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த போது மறுபடியும் செண்பகா மனதுக்குள் அவசரமாக வந்து போனாள். பஸ் வரவும் உள்ளே ஏறி உட்கார்ந்து அண்ணாநகர் ரவுண்டாணா என்று டிக்கெட் வாங்கியவனின் சிந்தனையெல்லாம் மருத்துவத் தேர்வில் எல்லாம் சரியாக அமைந்து இந்த வேலை கிடைத்து விட வேண்டும் என்பதிலேயே இருந்தது. 

இடையில் பஸ்ஸில் ஏறி ஆட்டம் பாட்டம் என்று கொட்டமடித்த கல்லூரி மாணவர்களின் அலம்பல் அயர்ச்சியூட்டியது.  ஆறு வருடங்களுக்கு முன் தானும் இப்படி இருந்தவன்தான் என்ற நினைப்பே அருவெறுப்பாக இருந்தது. ரவுண்டாணா ஸ்டாப்பை சரியாகக் கேட்டு இறங்கிக் கொண்டவன் அடுத்த கட்டமாக அந்த மருத்துவமனையை விசாரித்துக் கண்டு பிடித்துப் போய்ச் சேர மணி  மூன்றைக் கடந்து ஐந்து நிமிடமாகி இருந்தது.

வரவேற்பில் இருந்த பெண்ணிடம் வெள்ளைச் சீட்டைக் கொடுக்க அவள் படு சிக்கனமாக, ‘நான்காவது மாடி, அறை எண் 437’ என்று சொல்லி சீட்டைத் திரும்பத்தந்தாள். நான்காவது மாடியில் அந்த அறைக்கு வெளியில் அவன் காத்திருக்க வெளியில் வந்த நர்ஸ்  இவனைப் பார்த்துவிட்டு ‘மெடிக்கல் டெஸ்ட் தானே சார்.என்னுடன் வாங்க’ என்று சொன்னாள். 

வெள்ளை காகிதத்தை வாங்கிக் கொண்டு நிறைய இரத்த மாதிரிகளை சின்னச்சின்ன குப்பிகளில் சேகரித்துக் கொண்டார்கள். என்னென்னவோ பெயர் தெரியாத மிஷின்களில் படுக்க வைத்து ஏகப்பட்ட எக்ஸ் ரே, ஈ.சி.ஜி, ஸ்கேன் எல்லாம் எடுத்துத் தள்ளினர்.  

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்குப்பின் ‘எல்லாம் முடிந்தது,சார் நீங்க போகலாம். ரிப்போர்ட் கம்பெனிக்கு அனுப்பி விடுவோம்’, என்று சொல்லப்பட்டது. ‘ இத்தனை டெஸ்ட் எடுத்தீங்களே, உடம்பில் எதாவது பிரச்சனை என்றால் சொல்லுவீர்களா’ என்று அப்பாவித்தனமாகக் கேட்டவனிடம் சிரித்தபடி, ‘அதெல்லாம் கம்பெனியில் கேட்டுக்குங்க சார்’ என்று பதில் சொல்லப்பட்டது. இந்த மருத்துவமனையில் இத்தனை சோதனைகளுக்கெல்லாம் எப்படியும் பத்து முப்பதாயிரம் செலவாயிருக்கும் என்று சந்தோஷுக்குத் தோன்றியது.

மறுபடியும் பஸ் பிடித்து நுங்கம்பாக்கம் வந்தான். கம்பெனி வரவேற்பு அறையில் தொலைக் காட்சிப் பெட்டியில் ஆதித்யா சேனலில் வடிவேலு காமெடி சப்தமின்றி ஓடிக் கொண்டிருந்தது. காலையில் பார்த்த யாரும் இல்லை.
அழுத்தமான சிவப்பு உதட்டுச் சாயம் அணிந்த சற்று மிகையான அலங்காரத்துடன்  இருந்த வரவேற்பு அலுவலகப் பெண், உதடு பிரியாமல் சிரித்து ,’எஸ் ஸர், வாட் கேன் ஐ டூ ஃபார் யூ ஸர்  ’ என்று சங்கீதமாக வினவினாள். 

சந்தோஷ் தான் காலையில் இண்டர்வியூவிற்கு வந்ததையும், இப்போது மெடிக்கல் டெஸ்ட் முடித்துவிட்டு வந்திருப்பதையும் தட்டுத்தடுமாறி பாதி ஆங்கிலமும் மீதி தமிழிலுமாகச்  சொல்லவும்,  ‘கைண்ட்லி வையிட் ஃபொர் சம் மோர் டைம் ஸர். ஐ வில் கால் யூ இன் ஃப்யூ மினிட்ஸ்’ என்று சொல்லி விட்டு யாருக்கோ தொலை பேசினாள்.

அவள் தாழ்ந்த குரலில் ‘எஸ் ஸர், ஓகே ஸர்’ என்று பல முறை சொல்லிவிட்டு இறுதியாக ஒரு தேங்க் யூ ஸர்’ சொல்லி பேச்சை முடித்த பின் , ‘ சந்தோஷ்’ என்று சன்னமான குரலில் கூப்பிட்டாள்.

‘ கங்கிராட்ஸ் சந்தோஷ் ஸர். யூ ஆர் ஆல்மோஸ்ட் செலக்ட்டட். ஜெஸ்ட் சம் ஃப்யூ டெஸ்ட் ரிசல்ட்ஸ் ஆர் எட் டு கம். ப்ளீஸ் சைன் தி வவுச்சர்ஸ் அன் கெட் யுவர் ட்ராவல் எக்ஸ்பென்சஸ் ஸர். டுமாரோ ப்ளீஸ் டூ கம் அட் நைன் இன் தி மார்னிங் ஸர்’ என்றபடி சில படிவங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு முள்ளங்கிப் பத்தையாக மூன்று ஐநூறு ரூபாய் நோட்டுகளைத் தந்தாள். 


மனசு மகிழ்ச்சியில் திக்குமுக்காடியது. செய்தியை சண்பகாவிடம் பகிர்ந்து கொள்ள பொதுத் தொலைபேசி ஒன்றைக்  கண்டுபிடித்து தகவல் சொன்னான். மீண்டும் டிரெயின் பிடித்து திண்டிவனம் போய்விட்டுத் திரும்ப நாளை வர வேண்டும். மின்சார ரயிலில் கண்னை மூடியபடி சிந்தனை. சம்பளம் பற்றிக் கேட்கவில்லை. எப்படியும் இண்டர்வியூ பயணச் செலவுக்கே ஆயிரத்து ஐநூறு தந்தவர்கள் கண்டிப்பாக நல்ல சம்பளம் தருவார்கள். கடவுளே அந்த மெடிக்கல் டெஸ்ட் எல்லாம் ஓகே ஆகி விட வேண்டும். மருவத்தூர் போய் வர வேண்டும். மனதுக்குள் ஆயிரம் பிரார்த்தனைகள்.

இரவு மணி பதினொன்று. டாக்டர். பெருநிலவழுதியின் கைபேசி அழைத்தது. எடுத்துப் பேசியவர்,

 ‘ஆமாம் சார். இப்பஅனுப்பிய நூத்துமுப்பத்தைந்து பேரில் சந்தோஷ் னு ஒரு கேண்டிடேட்டோட மெடிக்கல் ப்ரொஃபைல் நூறுக்கு நூறு மேட்ச் ஆகிறது. மற்ற ப்ரொஃபைல் எல்லாம் ஓகே ஆகிட்டா எல்லாம் சரியா வொர்க்கவுட் ஆகிடும்’.

மறு முனை, ‘சரி. நாளை மதியம் நான் அழைக்கிறேன்’ என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்தது.

ருத்திரவர்மன் ஐ.பி.ஸ்ஸின் தொலை பேசியில் அழைப்பு. எண்ணைப் பார்த்ததும் பரபரப்பானவர்,
‘ அய்யா, எல்லா ஃபைலையும் தரோவா பார்த்துட்டேன். கே. சந்தோஷ், திண்டிவனம் - ரெஜிஸ்டர் நம்பர் 13754 என்ற பையனுடையது லைன் கிளியரா இருக்கு. ஏழைக் குடும்பம். அரசியலிலோ இல்லை அதிகாரத்திலோ சொந்த பந்தம்  யாரும் இல்லை. ஒரு சாப்பாட்டுக்கே சிரமம். மத்தது அய்யா சரின்னு சொன்னா நாளைக்கே செட் பண்ணிடலாம்’.
‘ சரி. நான் நாளைக்கு காலையில் பேசறேன்’ தொடர்பு துண்டிக்கப்பட்டது.

விழுப்புரத்தில் இரவு ஒரு மணிக்கு ‘வெளுப்பு சிவா’ வின்  தொலைபேசி அடித்தது. ‘எவண்டா, இந்த அர்த்த ராத்திரியில் போன் போட்டு தொல்லை பண்றவன்’ என்றவாறு அலட்சியமாக எடுத்தவன் என்ணைப்பார்த்ததும்,

‘அண்ணாத்தே இன்னா மேட்டரு? திடீல்னு இந்நேரத்துக்கு போன் போடறீங்க’
மறுமுனை பேசப் பேச, இங்கே சிவா, ‘ சரிங்க அண்ணாத்தே, பக்குவமா செய்துடலாம். அதெல்லாம் எதுவும் ஆகாது. எல்லாம் என் பொறுப்பு. முடிச்சிட்டு காலையில் தகவல் சொல்றேன்ணே’ என்றதும் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மறுநாள் பொழுது விடிந்தது. அப்பாவிடம் கிடைத்த ஆயிரத்து ஐநூறு ரூபாயில் ஐந்நூறைத் தந்து விட்டு, உள்ளதிலேயே கொஞ்சம் சுமாராக இருந்த சட்டையை மாட்டிக் கொண்டு முதல் எக்ஸ்பிரஸ் வண்டியைப் பிடிக்க சந்தோஷ் திண்டிவனம் ரயில்வே ஸ்டேசனை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.   

 காலையில்  ‘ யோவ்  வழுதி, இன்னிக்கு எல்லாம் ரெடியாயிடும். எப்பயா ஆப்ரேஷன் பண்ணிக்கலாம்?’.

‘கொஞ்சம் பொறுங்க. கண்டதையும் தின்னு, கண்டவளையும் மேஞ்சதில இப்போ உடம்பு படு மோசமா இருக்கு. ஆர்கன் டொனேசன் ரூல்ஸ் வேற பிரச்சினையா இருக்கு’.

‘அதையெல்லாம் மாத்தி சட்டம் ஆக்கிடலாம்யா. சமூகத்தில் மிகப் பொறுப்பான பதவி வகிப்பவர்களுக்கு முன்னுரிமை தர சட்ட வடிவம் கொண்டு வர எதிர்க்கட்சியாரோட கூட பேசிட்டேன். எந்த பிரச்சனையும் இருக்காது. நீ ஆப்பரேஷனை சரியாப் பண்ணிணாப் போதும்’.

‘எப்படியும் இன்னும் இரண்டு நாள் போகட்டும். நெறய பொறுத்தாச்சு. அதிகபட்சம் இன்னம் ஒரு வாரம் இல்ல பத்து நாள். இன்னிக்குத் தேதி 16. அடுத்த 26 க்குள்ளயே பண்ணிடலாம்’.

அடுத்தது தமிழ் காத்த வேளுக்கு போனைப் போட்டவர்,

‘தம்பி வேள், இன்னிக்கு சொன்னபடி மொழியுணர்வு அறப் போராட்டம் ஆரம்பித்து நல்லா நடத்தணும். ஆனா வன்முறை கை மீறக் கூடாது. சட்டசபையில் அதுதான் முக்கியமா ஓடணும். வேண பணம் பொருளாளர் கிட்ட வாங்கிக்க’. 
'மீடியா, மக்கள் எல்லாரோட கவனமும் போராட்டத்தில் தான் இருக்கணும். மற்ற சிந்தனையெல்லாம் வராத அளவு சிறப்பா இருக்கணும், ஆமா’.

‘சரிங்க அய்யா. நீங்க கவலைப்படாதீங்க. நான் போராட்டத்த  என் கைக்குள்றயே வச்சிக்கிறேன்”.


தமிழ் காத்த வேளின் மொழியுணர்வுப் போராட்டம் ஆரம்பித்து சரியாக நான்காவது நாள். போராட்டத்தைப் பற்றித்தான் எல்லாத் தொலைகாட்சிகளிலும் அனல் பறக்கும் விவாதங்கள். காத்தவேள் தமிழ்த்தாயின் முன் வேலுடன் காவல் இருப்பது போல் கட் அவுட்கள் வீதிகளில் வைக்கப்பட காவல்துறை அகற்ற ஒரே களேபரம். வழக்கமான கடையடைப்பு, போலீஸ் வேன் எரிப்பு, மாணவர்கள் ஆர்ப்பாட்டம், அப்பாவி பஸ்கள் கல்லடி பட போராட்டம் கனஜோராக நடந்து கொண்டிருந்தது.

போராட்டம் தொடங்கிய ஆறாம் நாள் மாலை மூன்று தொடர்பற்ற செய்திகள் பத்திரிக்கைகளில் வந்திருந்தன.

மக்கள் தொண்டர் திரு. பெருங்கோவன் திடீர் உடல் நலக் குறைவு. சட்ட மன்றத்திலேயே மயங்கி விழுந்தார்.  
மருத்துவமனையில் அனுமதி. தமிழ் காத்த வேள் மக்கள் தொண்டரின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு போராட்டத்தை ஒத்தி வைப்பாரா?
என்பது இரண்டாம் பக்கத்திலும்,

உறுப்பு தானம் தொடர்பான புதிய சட்டம் எதிர்ப்பின்றி சட்டமன்றத்தில் ஏகமனதாக நேற்று ஏற்கப்பட்டது என்ற செய்தி ஆறாம் பக்கத்தில் ஒரு மூலையிலும்,

திண்டிவனம் அருகே கடந்த வாரம் அதிகாலையில் அடையாளம் தெரியாத வழிப்பறித் திருடர்களால் தாக்கப்பட்டதில் காயமடைந்த கே. சந்தோஷ் என்ற 27 வயது இளைஞன் மூளைச் சாவு அடைந்தான் என்பது பத்தாவது பக்கத்திலும் வந்திருந்தது.


சந்தோஷின் மரணத்தை முன்கூட்டியே முடிவு செய்த மக்கள் தொண்டர் பெருங்கோவன், மறுநாள் காலை உறுப்பு மாற்று சிகிச்சை செய்தும் பலனின்றி மருத்துவ மனையில் காலமானார். மக்கள் தொண்டர் பெருங்கோவனின் மரணத்தை மனிதர்கள் எவருமே  முன் கூட்டி முடிவு செய்யவில்லை.

Saturday, 30 September 2017

பகல் வேஷங்கள்

‘வரவர தெருவில் நடக்கவே முடியல சார். ஒரே அசிங்கக் காடா இருக்கு. என்னதான் இந்த கார்ப்பரேஷனில வேலை செய்யறாங்களோ’. ஆதங்கப்பட்டு குறை சொல்லிய மனிதர் ஒரு கையில் பிடித்திருந்த வெள்ளைச் சடைநாய் டாமி இயற்கை அழைப்பை முடித்துக் கொள்ள அலை பாய்ந்து கொண்டிருந்தது. மறு கையில் பிடித்திருந்த கருப்பு குப்பை பையை அலட்சியமாக சுழற்றி குப்பைத் தொட்டியில் வீச , அது தொட்டிக்கு வெளியே விழுந்து சிதற, ‘ தினம் மெயிட் போட்டுறும். அவ இன்னிக்கு வரல’ என்றார்.
‘நான் உங்களை எதுவும் கேட்டலையே சார்’.
‘வாங்க சார் எங்க வீட்டுக்கு. ஒரு காபி சாப்பிடலாம்’.
வீட்டில் நுழைந்தவர், ‘டேய் முருகேசா, சாயங்காலம் வீட்டுக்கு போறதுக்குமுன்ன  அப்பாவுக்கு டயபர் மாட்டி விட்டுட்டு போயிடு. எனக்கு ஆபீஸ் முடிந்து கிளப் ஆண்டு விழாவுக்குப் போகணும். ராத்திரி வர பத்துக்கு மேல ஆகிடும்’.
காபி வர தாமதமாகியது. கிளம்ப எத்தனிக்கும் போது, ‘ஒரு நிமிஷம் சார். நீங்க பேப்பர் பாருங்க, நான் அதுக்குள்ள ஷேவ் பண்ணிக்கிட்டு உங்களோட காபி சாப்பிடறேன்’. சப்தம் வந்த திசையில் வாஷ் பேசனில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்க அவர் அதுபற்றி சிந்தனை இல்லாமல் முகச்சவரத்தில் முகத்தை வித விதமாக திருப்பியபடி மூழ்கியிருந்தார்.
‘சார், உங்களுக்கு மெட்ரோ வாட்டர்
 வருதா?’
‘கொஞ்சமா வருது. எங்களுக்குக் குடிக்க தாராளமாகப் போதும்’
‘அட, என்னங்க குடிக்க மெட்ரோ வாட்டரா? நம்ம வீட்டில் செடிங்களுக்கும், துணி துவைக்கவும்தான். இப்ப தண்ணி இல்லாம செடிங்க வாடுது. மனசுக்கு வேதனையா இருக்கு’  என்று வள்ளலாராக மாறியவர்,
‘தண்ணிய ஜனங்க நிறைய வேஸ்ட் பண்ணறாங்க சார். நான் நூத்தம்பது அடி போர் போட்டு சப் மெர்சிபிள் போட்டிருக்கேன். கொஞ்சம் உப்பா இருக்கும். அக்கம் பக்கத்தில கேட்டா ஒரு குடம் கூடத் தர மாட்டேன்.  வேஸ்ட் பண்ணுவாங்க’.
‘பேப்பர்ல என்ன சார் செய்தி? எல்லாத்திலும் ஒரே பொய்யும் புனைச்சுருட்டும். எங்க பாருங்க ஒரே லஞ்சம். நேர்மையானவங்க ரொம்ப அருகிப் போய்ட்டாங்க சார். வார்த்தை சுத்தம் இல்லை. நாடு எப்படி சார் உருப்படும்?
‘என்ன சார். இன்னிக்கு ஆபீஸ் போகலியா? ரொம்ப ஃப்ரீயா இருக்கிறாப்போல தெரிகிறது என்ற என்னிடம்,
‘ஒரு பத்துநாள் மெடிக்கல் லீவு போட்டிருக்கேன். மதுரையில் மச்சான் பேத்திக்கு காதுகுத்து போகணும். ஆடிட்,பட்ஜெட் அப்படி எதாவது வரும். இரண்டு நாளு லீவு தர மாட்டாங்க. அதால மெடிக்கல் லீவைத் தட்டி விட்டுட்டேன். டாக்டர் சர்டிபிகேட் தான் நூறு ரூபாய்க்கு கிடைக்கிறதே. என்ன ஒண்ணு சீட்ல பத்து நா இல்லாமல் போனா மேல் வரும்படி போயிடும்”.
காபி இன்னும் வரவில்லை. எனக்கு நிறைய வேலை இருந்தது.
‘அப்ப இன்னோரு நாளு வரேன் சார்’
‘காபி சாப்பிடாம போகறீங்க. பரவாயில்லை. அடுத்த வாட்டி வரும் போது கண்டிப்பாக சாப்பிடணும்’.
வாஷ் பேசன் குழாயில் நிறுத்தப்படாத நல்லியிலிருந்து களக் களக் என்று தண்ணீர் ஓடும் சத்தம் காதில் இன்னும் விழுந்தபடி இருந்தது.








Thursday, 23 March 2017

மகளிர் தினம்

“டார்லிங், இன்னிக்கு ஒரு முக்கியமான போர்ட் மீட்டிங் இருக்கு. கம்பெனி செகரட்டரி, செக்சன் ஹெட், லாயர் அப்புறம் சில போர்ட் மெம்பர்கள் கவர்ன்மெண்ட் நாமினி இப்படி பெரிய கும்பலை கூட்டிக்கிட்டுப் போகணும்  . நான் அதனாலஇன்னோவாவை எடுத்துக்கிறேன்.   நீ நல்லிக்கு போக நம்ம மாருதி ஆல்டோ வை எடுத்துக்க பிளீஸ்” என்று மனைவியிடம் கெஞ்சினார் சங்கரன். நான் மட்டும் என்னங்க லேடிஸ் கிளப் மெம்பர்கள் ஆறு பேர் போறோம். எப்படிங்க ஆல்டோவில போக முடியும். இதுல நம்ம கௌரவமும் இருக்கு புரிஞ்சிக்குங்க என்றாள்.

சங்கரன் ஒரு கணம் யோசித்தார். வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கும் தன்னால்  இப்போது முரண்படுதல் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க  முடியாது. வெளியில் சிரித்தபடி “ஓகே டார்லிங், நான் ஃபாஸ்ட் டிராக் புக் பண்ணிக்கிறேன். யூ கேரி ஆன்” என்று சொல்லியபடி கழுத்துப்பட்டியின் இறுக்கத்தை தளர்த்தியபடி கிளம்பினார்.

போன வாரம் அதிகம் விற்பனை இல்லாத தாய்மையின் குரல்  பத்திரிக்கையின் ஆசிரியர் இந்திர சாமியை ரவுண்டு கட்டிய உரிமையாளர் எப்படியும் இந்த மாதம் சர்க்குலேஷனை அதிகப்படுத்திக் காட்டாவிட்டால் பத்திரிக்கையை ஊத்தி மூட வேண்டியதுதான் என்று அபாய அறிவிப்பு செய்திருந்தார். இந்திர சாமிக்கு வாய்த்த துணை ஆசிரியர்களில் அதிகம் துடிப்பான ஆள் பால்துரை.  சும்மா அட்டகாசமான திறமைகள் கொண்ட ஆள். அவன்தான் அவருக்கு தேறுதல் சொல்லி “எல்லாம் பண்ணிடலாம் சார். கவலைபடாதீங்க. உங்க பத்திரிக்கை தர்மம் அது இது  எல்லாத்தையும் கொஞ்சம் ஒதுக்கி வையுங்க. நான் இரண்டு மாசத்தில் நம்ம பத்திரிக்கையை மார்க்கெட்டில் கும்முன்னு தூக்கிடறேன்” என்றான்.
“யப்பா, எல்லாம் செரிதான். நான் இருபது வருஷமா பத்திரிக்கை நடத்தியிருக்கேன். என் பேர் ரிப்பேர் ஆகாம பார்த்துக்க” என்றார் இந்திரசாமி.
“சரிங்க அய்யா” என்றவன் “ஒரு வாரத்தில் நல்ல செய்தியுடன் வருகிறேன் என்னைத் தேட வேண்டாம்” என்று காதலனுடன் ஓடிப்போக இருக்கும் காதலிகள் எழுதிவைக்கும் கடித வரிகளைச்  சொல்லிப் பறந்தான்.
போன வாரம் கன்னிமாரா நூலகத்தில் எதையோ தேட வந்த பால்துரைக்கு  “தொழில் அதிபர்களின் வளர்ச்சியில் மனைவியர் பங்கு” என்ற கட்டுரை கண்ணில் பட்டது. அதில் அதிகம் பிரபலமாகாத பத்து பெயர்களை முதலில் எடுத்துக் கொண்டு வரிசையாக தொலபேசியில் அழைத்தான். முதலில் மாட்டியது நம் மங்களம் சங்கரன் அவர்கள்தான்.  மங்களம் சங்கரன் பெரும் பணக்காரத் தந்தைக்கு ஒரே மகளாக பூமியில் ஜனித்ததுதான் அவரது சாதனை. மற்றபடி பணக்கார வீட்டுப் பெண்களுக்கே உரிய அலட்டல்கள் வெட்டி அரட்டைகள், ஸ்டேட்டஸை காட்ட என்று உள்ள கடைகளில் தினமும் போய் ஷாப்பிங் செய்தல் , வாட்ஸப், ஃபேஸ்புக் , ஐந்து நட்சத்திர ஹோட்டல் விருந்துகள், பணக்கார கிளப்புகள் போன்ற இத்தியாதி நித்திய கர்மானுஷ்டானங்கள் அவளுக்கும் உண்டு. வழக்கம் போல  ஒன்றும் ஐவேஜி இல்லாத நல்ல பழக்க வழக்கம் கொண்ட புத்திசாலியான கட்டின பசுவான அப்பா தேர்ந்தெடுத்த மாப்பிள்ளையை  கல்யாணம் பண்ணிக்கொண்டது . தந்தை கம்பெனியில் சேர்மன், மகள் வைஸ் சேர்மன், மாப்பிள்ளை நிர்வாக இயக்குனர். இப்போ சொல்லுங்கள் சங்கரன் அலுவலகத்திற்கு செல்ல ஃபாஸ்ட் டிராக் ஏற்பாடு செய்து கொண்டது சரியா இல்லையா என்று.
போனில் அம்மணியிடம் பேசிய பால்துரை முதலில் கட்டுரையைப் படித்து வியந்ததாக சொல்லி நேரில் சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினான். சந்திப்பின் போது, நிறையவே முகஸ்துதி செய்தவன் “அம்மா, உங்க சாதனைகள் இப்படி குடத்திலிட்ட விளக்காக இருக்கக் கூடாது. உலக அளவில் பரிணமிக்க வேண்டும். நீங்க மட்டும் கொஞ்சம் ஒரு இரண்டு மூணு லட்சம்செலவு பண்ணினால் போதும். அந்தப் பணமெல்லாம் உங்களைப் போன்ற மகாலட்சுமிக்கு சில்லரைக் காசு.அது நீங்க வாங்கும் ஒரு சாதாரண சேலை விலைதான்.  உங்க திறமைகளை உலகறியச் செய்து விடலாம் என்று ஆசை காட்டினான்.



“அப்படியா ஆனால் நான் ஒன்றும் பெரிசா சேவை எதுவும் செய்யவில்லையே” என்றுஅப்புராணியாகக் கேட்ட மங்களத்தை
“அம்மா, அநுமனுக்கு அவன் பலம் தெரியாதாம். அத மாதிரி உங்க உயரம் உங்களுக்கு தெரியவில்லை. அதை தெரியவைப்பது என் கடமை” என்று சொல்லி இருபதாயிரம் தனது சேவைக் கட்டணமாக அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு வந்தான்.
ஒரு வாரம் கழித்து வண்ண வழு வழு அழைப்பிதழை எடுத்துக் கொண்டு வந்தவன் மங்களம் கையில் கொடுத்தான். பிரித்துப் பார்த்த மங்களத்திற்கு சந்தோஷத்தில் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. தங்க நிற எழுத்துக்களில் வரும் மகளிர் தினத்தன்று எழுச்சியுடன் சமூக வளர்ச்சிக்கு பாடுபட்ட திருமதி. மங்களம் சங்கரன் அவர்களை ‘பணிபுரியும் பாவையர் பேரவை’ என்ற உழைக்கும் மகளிர் அமைப்பு தாய்மையின் குரல் பத்திரிக்கையுடன் இணைந்து “ஒப்பிலா அன்னை” விருது வழங்கிக் கௌரவிக்கிறது. அன்னாரின் சேவைகளைப் பாராட்டி நகரின் நான்கு முக்கிய பிரமுகர்கள் பேசுவார்கள் என்றும் விழாவின் ஒரு அங்கமாக  பணிபுரியும் பாவையருக்கான நலத்திட்ட உதவிகளை செய்யவிருக்கிறார் என்று விளம்பியது. அழைப்பிதழைக் கண்டு மிரண்டு போன மங்களத்தை மேலும் மிரட்ட பத்துக்கு எட்டு வண்ணச் சுவரொட்டி, சிறு துண்டு பிரசுரங்கள் என்று கலங்கடித்தான். மொத்தமே அவன் அடித்தது எல்லாவற்றிலும் 100 தான். பத்திரிக்கை சாதாரண ஆட்களுக்கெல்லாம் வேண்டாம் . உங்க நட்பில் உள்ள பெரிய ஆட்களை மட்டும் அழையுங்கள், நிறைய கும்பல் இருந்தால் விழா கட்டுப்பாடாக இராது என்று அறிவுறுத்தினான். இப்போது செலவுக்கு மேலும் எண்பதாயிரம் வாங்கிக் கொண்டான்.
அடுத்தது காஜா மொகிதீனைப் பார்த்து நல உதவி வாங்க ஆள் ஏற்பாடு செய்ய வேண்டும். காஜா பிகு பண்ணிக் கொண்டான்.
“அப்பா பால்துரை, லேடிஸ் எல்லாம் கூட்டி வரது மகா தொந்திரவு. பத்திரமா கூட்டிப் போய் கொண்டு விடணும். பிரச்சினை வரக் கூடாது.”
“ என்னடா, உன்னய நம்பி கமிட்டாயிட்டேன். பார்த்து சொல்லுடா” என்றவனிடம்,
“ சரி. காலை எட்டுமணியிலிருந்து எட்டு மணி நேரம்தான் அதாவது மாலை நான்கு மணி வரை. இருட்டுக்கு முன்ன அவங்களை வூட்டில் விட்டிறணும் . இருபது பேரை கூட்டிப் போக திரும்ப கொண்டுவர டெப்போ டிராவலர் இரண்டு ஏற்பாடு பன்ணிடறேன். கூலி தனியா ஆளுக்கு ஐநூறு தரணும். அது தவிர இரண்டு வேளை டிபன், காபி ஒரு வேளை சாப்பாடு. எல்லாம் சேர்த்து மொத்தமா ஒரு ஐம்பதாயிரம் ஆகும் பரவாயில்லையா” என்றான். பால் துரை , மங்களத்திடம் விவரம் சொல்லி கூடுதாலாக ஒரு ஐம்பதாயிரம் கறந்தான்.
ஒரு நாள் கூலி இருநூறு ரூபாய் போயிடும், என்றவர்களைக் காஜா மொகிதீன்  போக வர ஏ.ஸி வேன் ,  மாலை ஐந்து மணிக்கெல்லாம் திரும்பிடலாம். காலை எட்டு மணிக்கு வீட்டில் வந்து ஏற்றிக் கொள்கிறேன் என்று உறுதி கொடுத்தும் சரிகைக் கரை போட்ட புடவை, நானூறு ரூபாய் பணம், டிபன், சாப்பாடு அப்படி, இப்படி ஒரு வாரமா  சொல்லிச் சொல்லி  வேப்பிலை அடித்து பரமு,முத்து, ரோசம்மா, மரியா, சக்தி என்று அப்படியும் இப்படியுமா இருபது பேரை தேத்திவிட்டான். ஊருக்கு வெளியே பெரிய கல்யான மண்டபத்தில் விழா. 

விழாவை ஒரு நாப்கின் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. பால்துரை  விளம்பரம் செய்து கொள்ள, போஸ்டர், அழைப்பிதழ், சிறு பிரசுரங்கள் செலவை அவர்களிடம் விட்டு விட்டான். விழாவில் வாழ்த்துரை வழங்கும் பெரிய மனிதர்கள் நால்வரும் அதிகாரமிக்க பதவியில் இருந்து ஓய்வு பெற்று தற்சமயம்  வீட்டில் அதிகம் பேச வாய்ப்பில்லாத,  பேச மைக் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருக்கும் ரிட்டயர்ட் ஆசாமிகள். அவர்களைக் கிட்டத்தட்ட இலவசமாகவே பிடித்து விட்டான். 


அவர்களின் உரையை வீடியோ கவரேஜ் செய்து , பத்திரிக்கையில் எழுத ஏற்பாடு செய்தாகி விட்டது.  ஆசிரியரிடம் நூறு பிரதிகளிக்கான ஒராண்டுச் சந்தாவுக்கான தொகை ரூ. ஒரு லட்சம் மங்களத்தால் செலுத்தப்படும். எல்லாச் செலவும் போக அவனுக்கு எப்படியும் ஒரு இருபத்தையாயிரம் நிற்கும்.  மங்களத்திற்குப் புகழ், விருது, பெருமை, நாப்கின் கம்பெனிக்கு விளம்பரம், முதிய அறிஞர்களுக்கு மேடை, பத்திரிக்கைக்கு அனாமத்தாக  நூறு ஓராண்டுச் சந்தா, ஏழைகளுக்கு உதவி என்று பல் நோக்காக இப்படி கவனமாகத் திட்டமிட்டு அருமையாக வலை பால்துரை பின்னியிருந்தான்.


இன்னிக்கு மகளிர் தினம் கொண்டாட காரப் பாக்கத்தில் ஒரு கல்யாண சத்திரத்தில் விழாவை அந்த பன்னாட்டு நாப்கின் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. காலையில் ஒன்பது மணிக்கு  ஏ. சி .வேனில்  விழாவுக்கு போனதுமே டிபன் பொங்கல், இட்லியுடன் வடை மற்றும் காபி எல்லாம் காஜா மொகித்தீன் ஏற்பாடு செய்திருந்தான். இருபது பேருக்கும் 200 ரூபாயில் நைலக்ஸ் புடவை, ஒரு நாப்கின் பாக்கெட்,  வாசனை சோப்பு முதலான பொருட்கள், நானூறு ரூபாய் பணம் என்று எல்லாம் ஐம்பதாயிரம் ரூபாயில் அவன் ஏற்பாடு. அடுத்தது எல்லாரையும் படம் எடுத்தாங்க. ஒரே சந்தோசம்தான். மேடையில் மட்டும் இல்லாம கண்ணில் படும் எல்லா இடத்திலும் நிறைய நாப்கின் விளம்பர பேனர்கள். மேடையில் எண்ணி ஏழு நாற்காலிகள். நடு நாயகமாக மங்களத்திற்கு சிவப்பு வெல்வெட் சிம்மாசனம்.
காலை பது மணிக்கு விழாஆரம்பித்தது. சாரி சாரியாக கார்களில் விதவிதமான நறுமண வாசனையுடன் நூற்றுக்கணக்கில் மேல்தட்டு வர்க்க பெண்மணிகள் வந்திறங்கினர். யார் யாரோ பேசினார்கள். கை தட்டினார்கள். இவங்களுக்கு ஒன்னும் புரியலை. ஆனா மகளிர் விடுதலை எனற வார்த்தை வந்தா கைதட்ட சொல்லிட்டதாலே பிரச்சனை இல்லை.


முக்கிய பிரமுகரான மங்களம் பட்டுப்புடவையில், வைர அட்டிகையுடன் மேடைக்கு வந்தாங்க. அவங்களைப் பார்த்த ரோசம்மாவுக்கு மயக்கம் வராத குறை.  சக்தியிடம் வா, போயிடலாம் என்றாள்.மற்றவர்கள் புடவை வாங்கிட்டுப் போகலாம் என்று அவளைஅடக்கி விட்டனர்.


மங்களம் பெண் விடுதலை பற்றி ஆங்கிலத்தில் பொரிந்து தள்ளினாங்க.
ஏகப்பட்ட பாராட்டு. வந்திருந்த நான்கு ரிட்டயர்ட் முன்னாள் அதிகாரிகளும் தங்கள் பதவிக்கால பிரதாபங்களை அள்ளி விட்டு அரை மணி நேரம் பேசிய பின்னர் மங்களத்தையும் தர்மதேவதை, கருணையின் பிறப்பிடம், தமிழ் நாட்டின் அன்னை தெரசா என்றெல்லாம் முன்பின் தெரியாத மங்களத்தை கூச்சநாச்சமின்றி என்று புகழ்ந்து தள்ளினர்.  ரோசம்மாவுக்கு மட்டும் தான் தெரியும் மேடையில் பேசும் தன் எசமானியம்மா புடவையில் லேசா துருக்கறை பட்டதுக்கு எகத்துக்குத் திட்டியதுமில்லாமல் நாலு நாள் சம்பளத்தை வேறு பிடிச்சது. இன்னிக்கு புடவை வாங்க விடுப்பு எடுத்தது தெரிந்தால் ருத்ர தாண்டவம் ஆடி, இந்த மாத சம்பளத்தை முழுசா பிடிச்சிடும்.


மங்களத்திற்கு ஆளுயர மாலை போட்டு பாராட்டுப்பத்திரம் பால் துரை யால் உருவாக்கப்பட்ட லெட்டர்பேட் அமைப்பான 'பணிபுரியும் பாவையர் பேரவை'த் தலைவி என்ற வேடத்தில் வந்த ரோசம்மா வீட்டின் அருகில் வசிக்கும் துணை நடிகையைக் கொண்டு தரச் செய்த போது கூட்டத்தின் கவனம் தன் மீது இல்லாததை கவனித்தாள் ரோசம்மா. நைசாக பாத்ரூம் போவது போல் மெல்ல நகர்ந்து பாத்ரூமில் ஒளிந்து கொண்டாள். 

புடவை மற்றும் நாப்கின் வாங்கிக்க ரோசம்மா பேரை மைக்கில் கூப்பிட்ட போது, ரோசம்மா தப்பித்து விட்ட மகிழ்ச்சியுடன் பாத் ரூமுக்குள் மகளிர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்தாள்.

Tuesday, 21 March 2017

வாய்மையே வெல்லும்

                                   அலுவலகம் பரபரப்பாக இருந்தது. டெஸ்பாட்ச் ரங்கசாமி சாரை இன்னும் காணோம். தினத்தந்தியை விடவும் செய்திகளை முந்தித்தருவதற்கு அவரால்தான் முடியும். அழகு நெல்லைத்தமிழில் அவர் சொல்லும் செய்திகளைக்  கேட்கவே ஒரு ரசிகர் பட்டாளம் அலுவலகத்தில் உண்டு.   “ வேய் அக்கோண்ட்ஸ் அண்ணாச்சி,  இன்னும் இரண்டே மாசந்தான் பாத்துக்கிடுங்க. அப்புறம் நம்மாள கையில புடிக்க முடியாது. புள்ளிக்காரன் கெங்ககொண்டான் பக்கத்தில நூத்தம்பது ஏக்கர் வளைச்சிப் போட்டாச்சு. அதுல அம்பது அந்த விளாத்திகுளக்காரி இளைய குடியாளுக்காம். டிரான்ஸ்பரில போற ஊருக்கு ஊர் தொடுப்பு, எல்லாம் கலிகாலம். அந்த நெல்லையப்பந்தான் இந்த சவத்து மூதி கிட்டேந்து  நம்ம காப்பாத்தனும்”, என்று கேண்டீன் மரப்பெஞ்சில் உட்கார்ந்தபடி அரை கிளாஸ் டீயை லாவகமாக ஊதிக் குடித்தபடி அவர் கதை சொல்லும் அழகே தனி.


                                        ரங்கசாமி அந்த அரசு அலுவலகத்தில் பழம் தின்று கொட்டை போட்ட ஆசாமி. அந்த காலத்தில் டெஸ்பாட்ச் கிளார்க் வேலை என்பதே கொஞ்சம் சின்ன  மதிப்புக் கட்டையான வேலைதான். அதிகம் காசு பார்க்க முடியாது. இல்லை, காசே பார்க்க முடியாது. எப்போதாவது அத்தி பூத்தாற்போல் நேரில்  தங்கள் அவசரம் கருதி தபால் வாங்க வரும் ஆட்கள் மனமுவந்து தருவதுதான். மற்றபடி அவராக யாரையும் காசு கேட்டு துன்புறுத்தியதாக சொல்ல முடியாது. பொதுவாக காசு வரும் பிரிவுகளுக்கு சரியான போட்டி இருக்கும். ஆனால் டெஸ்பாட்ச் மேசை என்பது தண்டனைப் பிரிவு. யாரும் மேற் சொன்ன காரணத்தால் அதை விரும்பிக் கேட்பதில்லை.


                                             நம்ம ரங்கசாமி சார் பிறந்து வளர்ந்து  சர்வீசில் முக்கால் பகுதி குப்பை கொட்டியது திருநெல்வேலியில்தான். பக்கத்தில் சேரன்மாதேவி தான் சொந்த ஊர். ஓரளவுக்கு வசதியானவர். இரண்டு மூன்று ஏக்கர் நன்செய் நிலம், மட்டப்பாவீடு என்று நிம்மதியான கிராமத்து வாழ்வு. பேட்டை M.D.T இந்துக் கல்லூரியில்  பட்டப்படிப்பு முடித்ததும் சர்வீஸ் கமிஷன் எழுதி பாஸானவர். முதல் போஸ்டிங் சேலத்தில். தரையில் விழுந்த மீனாக துடித்துப் போனவர் சேர்ந்த பத்தே நாளில் ஆளைப்பிடித்து  மாற்றல் ஆர்டர் நெல்லைக்கு வாங்கி விட்டார்.


                                                அப்போது கொக்கிரகுளத்தில் இருந்த அந்த மாவட்ட  அலுவலகத்தில் டெஸ்பாட்ச் இடம் தான் காலியாக இருந்தது. புதுப் பையனுக்கு , அதான் நம்ம ரங்கசாமிக்கு அதை பெரிய கிடைத்தற்கரிய போஸ்ட் மாதிரி பில்டப் கொடுத்து நம்ப வைத்து ஏமாற்றி உட்கார்த்தினார்கள். இருந்தாலும் என்னவோ ரங்கசாமிக்கு அதுவே மிகவும் பிடித்துப் போனது. சேர்மாதேவியில் சரியாக காலை எட்டு மணி ரயிலைப் பிடித்து ஒன்பதரைக்கெல்லாம் அலுவலகம் வந்து விடலாம். படிக்கிற காலத்து வழக்கம் அதுதான்.  அப்புறம் வெளி அனுப்ப வேண்டிய நேற்றைய தபால்களை பிரிவு வாரியாக எண் கொடுத்து பதிவேட்டில் பதிந்து அலுவலக உதவியாளர் நடேசனிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு அஞ்சல் அலுவலகத்தில் சேர்ப்பிக்க பொறுப்பு ஒப்படைத்து விட்டால் மணி பதினொன்றாகிவிடும். அப்புறம் கேண்டீனில் காபி, டீ சாப்பிட போனால் அரட்டையுடன் அரை மணி நேரத்துப் பொழுது கழியும். மணி ஒன்றாகும் முன்னர்  முந்திய நாள் உள்ளே வந்த தபால்களை பதிவிட்டு அந்தத்த சூப்பிரண்டெண்ட் மேசைக்கு  அனுப்பி விட்டால் அன்றையபாடு கிட்டத்தட்ட முடிந்த மாதிரித்தான்.


                                          வேலைக்குச் சேர்ந்த புதிதில் முதல் ஒரு மாதத்தில் கன்னையன் சார் சொல்லிக் கொடுத்த நுணுக்கங்களை சட்டென பற்றிக்கொண்டார். தன் பதிவேட்டில் புள்ளி விவரங்களை சரியாக குறித்து வைத்து நல்ல திறமைசாலி ஆகிவிட்டார். மாலை ஐந்து முப்பது ரயிலைப் பிடித்தால்  ஆறரைக்கெல்லாம் வீட்டிற்குப் போய் விடலாம். அப்புறம் வயல், வரப்பு, வியாஜியம் என்று பால்ய நன்பர்களுடன் திண்ணை கச்சேரியில் பல செய்திகள் சேகரமாகும். மறு நாள் அவற்றை குமுதம் கிசு கிசு மாதிரி அத்தனை சுவையாக சொல்லி சிரிக்க வைப்பார்.
                                       பணிக்காலத்தின் இடையிடையே மாறுதல்கள் வரும். ஆனால் தலைமை அலுவலகத்திற்கு அரசியல் அழுத்தம் கொடுத்து காசு செலவு பண்ணி வரும் ஆட்கள் டெஸ்பாட்சில் உட்காருவார்களா என்ன? ஆகவே ரங்கசாமியின் சேவை உடன் உணரப்பட்டு டெபுட்டேஷனில் அந்த இடத்திற்கு அடுத்த 10 நாட்களில் மீண்டும் வந்து விடுவார். அப்படி அதிகம் போன ஊர் என்றால் பக்கத்து தூத்துக்குடிதான். ஆக வடக்கே கோவில்பட்டி கூட தாண்டியதில்லை. இருக்கும் இடமே பரம சுகம் என்பது நல்லதோர் சித்தாந்தம்தான். ஆனால் அது பலருக்கும் வாய்ப்பதில்லை. நம்ம ரங்கசாமிக்கு வாய்த்தது. அதை அனுபவிக்கும் மனசும் அவருக்கிருந்தது. அதிகம் ஆசைப்படாதவருக்கு வாய்த்த மகராசியும் அதே மாதிரி .



                                            கடவுள் எப்போதும் கருணையுடன் இருந்தாலும் , மனிதனின் கண்டுபிடிப்புகள் அப்படி இல்லை. தபால் துறை அழிந்து கொரியர் வளர்ந்தது. அப்புறம் ஈ மெயில் எல்லாம் வந்தபின்னர் டெஸ்பாட்ச் கிளார்க்குகள் நிலை கவலைக்கிடமானது. பல அலுவலகங்களில் அந்த பதவியில் இருந்தவர்களை வேறு பணிகளுக்கு மாற்றத் தொடங்கினர். அந்த நேரத்தில் நம்ம ரங்கசாமி சாருக்கும் புதிய பொறுப்பு தரப்பட்டது. கம்ப்யூட்டர் கற்றுக் கொள்வதில் அவருக்கு ஆர்வமும் இல்லை. கேட்டால் ,”கழுதை இன்னும் நாலு வருஷத்தில் ரிட்டயர்ட் ஆகிப் போற எனக்கு எதுக்கு கம்பியூட்டர்?” என்று அலட்சியமாக வசனம் பேசிச் சிரிப்பார். ஆக அவர் டெஸ்பாட்சில் ஈ ஓட்டுவதால் கூடுதலாக கொடி நாள், காச நோய் தடுப்பு  இத்தியாதி வசூல் பள்ளிகளிலிருந்து பெற்று கணக்கில் செலுத்தும் பணி தரப்பட்டது.



                                                பள்ளிகளுக்கு மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கொடிகளைப் பங்கிடுதல்    அப்புறம் அனுப்பி வைத்தல் பின்னர் நினைவூட்டி பணத்தை வசூலிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இதற்கு முன்பெல்லாம் உடனுக்குடன் பணத்தை கருவூலத்தில் செலுத்தி ரசீதை செலான் ஒட்டு கோப்பில் ஒட்டி வைப்பது நடைமுறை.



                                         கொக்கிரகுளம் அலுவலகத்திற்கு மாறுதலில் ஆபீசராக வந்த சத்தியமூர்த்திக்கு சின்ன வயசு. மனிசன் வந்ததும் முந்தைய நடைமுறைகள் எல்லாம் மாற்றப்பட்டன. பெயருக்கும் ஆளுக்கும் சம்பந்தமில்லாதவர். எங்கியோ கோயமுத்தூர் மாவட்டத்திலிருந்து வந்தவர். நிறைய நேர்மை பற்றி பேசுவார். வெளி மாவட்ட ஆள் என்பதால் அதிகம் அவர் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. காந்தியடிகளை விடவும் தான் நேர்மையானவன் என்ற தொனியில் அவர் ஊழியர்களிடமும் ஊள்ளூர் அரசியல்வாதிகளிடம் பேசுவார். ரங்கசாமி எந்த வேலைக்கும் லாயக்கில்லை என்று அடிக்கடி கடித்தபடி இருப்பார். ரங்கசாமிக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. பணத்தை கட்டும் போது சில்லறை ஐம்பது காசை விட்டு விட்டு கட்டுவது வழக்கம். அடுத்த முறையில் கட்டும் போது வரும் சில்லரையுடன் சேர்த்து கட்டுவார். அப்படி கட்டி செலான் கையெழுத்து வாங்கியவரை, “ என்ன ஏமாத்துறயா, இப்ப ஐம்பது பைசா குறைவா கட்டுவே, அப்புறம் நான் அசந்த நேரத்தில் ஆயிரக் கணக்கில் அமுக்கி ஆட்டயப் போட நூல் விட்டுப் பார்க்கிறாயா? சர்வீஸ் பூரா இங்கியே குப்பை கொட்டுறயாமே, தொலைச்சுப்புடுவேன் ஜாக்கிரதை.” என்று ஒருமையில் பேசியது ரங்கசாமியை சற்று மிரள வைத்தது. இது நாள் வரையில் ஒன்றாக இருந்த ஊழியர்களிடம் முதல் முதலில் சாதி வித்து விதைக்கப்பட்டது. அந்த விஷ விருட்சம் மடமடவென வளர்ந்து கிளைபரப்பி நின்றது. கொஞ்சி கொஞ்சிப் பேசும் இளநிலை உதவியாளர் ரூபா மேடத்திற்கு அவர் அருகில் இடம் தரப்பட்டது. பல முக்கிய முடிவுகளை ரூபாவே தன்னிச்சையாக எடுக்கும் அளவுக்கு செல்வாக்கு ஓங்கியது.


                                                     இந்த பேச்சிற்குப் பின்னர் ரங்கசாமியிடம் வரும் பணத்தை அவர் நேரடியாக ஆபீசர் சத்திய மூர்த்தியிடம் ஒப்படைத்து விட வேண்டும். சத்திய மூர்த்தி அதை முறையாக அரசாங்கக் கணக்கில் கட்டி விடுவது என்று ஏற்பாடானது. ரங்கசாமியும் ஒரு பதிவேடு போட்டு பணம் பெற்ற தினம், சத்திய மூர்த்தியிடம் வழங்கிய தினம் எல்லாம் குறித்து வைத்து அதில் அவ்வப்போது பக்கவாட்டில் கையெழுத்து பெற்றுக் கொண்டார்.  
மாவட்ட ஆட்சியாளர் அலுவலக பேச்சிமுத்து ரயிலில் ரங்கசாமியை பேட்டை ரயில் நிலையத்தில் பார்த்து,


                                                 “ என்ன அண்ணாச்சி, கொடிக்காசு நாலு லகரம் நிக்காப்போல இருக்கு”. “நேத்திக்கி மீட்டிங்கில் கலைக்டர் உங்க தலைவரை எழப்பிக் கேட்டாப்பில”. “அந்தாக்கில அவரு நீங்க நேருங்கூறுமா வசூல் பண்ணலையாட்டு இருக்கு, ஜாரிச்சி அடுத்த இரண்டு நாளில் கட்ட ஏற்பாடு செய்யுதேன்” என்னாரு. “சீக்கிரம் கணக்கை நேர் பண்ணுங்க” .
 “கரைச்சல் புடிச்ச சமாசாரம் நமக்கெதுக்கு அண்ணாச்சி,  இல்லாட்டா போலிஸ் கேஸ் கொடுக்கச் சொல்லியிருக்காரு கலைக்டர். அதால வார பொதன் கிழமைக்குள்ள முடிச்சிடுங்க” என்று சொல்லி விட்டுச் சென்றார்.


                                                          ரங்கசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. எதுவானாலும் பதிவேட்டில் பணம் கொடுக்கல் வாங்கலை பதிவு செய்து கையெழுத்து வாங்கி வைசிருக்கோமே என்ற தைரியம் இருந்தது. யோசனயாய் அலுவலகத்தில் நுழைந்தவரை எல்லோரும் பரிதாபமாகப் பார்ப்பது தெரிந்தது. வருகைப் பதிவேடு தலைவர் அறையில் இருந்தது. கதவைத் தட்டி விட்டு,  உள்ளே சென்றவரிடம்,


“ வாயா, ரங்கசாமி, அந்த கொடிக்காசு நாலு லட்சம் பணத்தை  ஒடனெ கட்டிடுயா, கலைக்டர் வேற மீட்டிங்கில் எழுப்பி விட்டு என்னவொ கேள்வி மேல கேள்வி கேக்காரு”.
                                                “நீரு பொண்ணுக்கு கல்யாணம் அமக்களமா பண்ணிய போதே நினைச்சேன் . அது சரியாப் போச்சு”, இந்தியா நாசமா போறதுக்கே உன்னை மாதிரி ஆளுங்கதான் காரணம். இதெல்லாம் சங்கத்தில் உள்ள ரௌடிபசங்க கிட்ட சொல்லி ஆர்ப்பாட்டம் எல்லாம் பண்ணாதே. நான் காண்டாறேனோ இல்லியோ கலைக்டர் செம காண்டாகிடுவார். ஆமா” என்றார் சத்திய மூர்த்தி.
 “போ, போயி சீக்கிரமா போலிசில் கையாடல் புகார் தருவதற்கு முன் பணத்தைக் கட்டிடு”.
                                             பல்லைக்கடித்தபடி வெளியில் வந்தவரை ஊழியர் சங்க செயலாளர் சசிதரன் மெல்ல கேண்டீனுக்கு கூட்டிப்போய் விவரம் தெரிந்து கொண்டார். ரங்கசாமியிடமிருந்து அவர் சத்திய மூர்த்தியின் கையொப்பம் பெற்றிருந்த பதிவேட்டை  வாங்கிக் கொண்டு அந்தப் பதிவேட்டின் பக்கங்களை அருகில் இருந்த கடையில்  கலர் ஜிராக்ஸ்  நான்கு பிரதிகள் எடுத்துக் கொண்டார். நடந்ததை எழுதி வாங்கி அதையும் பிரதியெடுத்து தான் ஒன்றை வைத்துக் கொண்டு ஒன்றை பதிவுத்தபாலில் மாவட்ட ஆட்சியருக்கும் மற்றொன்றை முதலமைச்சரின் தனிப்பட்டபிரிவுக்கும் அனுப்பினார்.


                                         இவற்றை எல்லாம் முடித்துக்கொண்டு அலுவலகம் வந்த ரங்கசாமி சத்திய மூர்த்தியிடம் சென்றார். ரங்கசாமி பதிவேட்டை ஆதாரமாக அவரிடம் காட்டி, தான் அவ்வப்போது சத்திய மூர்த்தியிடம் பணம் கொடுத்ததை கூறினார். அதை கூர்ந்து நோக்கியவர், “அப்படியா” என்றபடி,


                                    “சரி, அதில் உள்ளது என் கையெழுத்துதானா என்பதை சரி பார்க்க வேண்டும். மாலையில் என் வீட்டிற்கு எடுத்து வந்து விடு. இப்போது அவசரமாக வெளியே போகிறேன்” என்று சொல்லி  வெளியே போனார்.
சத்திய மூர்த்தியின் மனதில் இந்த சிக்கலை எப்படித் தீர்ப்பது என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. மாலையில் தன்னுடன் ஜீப்பில் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்து பதிவேட்டை வாங்கிக் கிழித்துப் போட்டு விடலாம். எதாவது பிரச்சனை செய்தால் அலுவலகத்தில் பணம் கையாடல் செய்ததைக் கண்டித்தேன். யாரும் அறியாமல் என் வீட்டில் புத்திமதி சொல்ல அழைத்து வந்தேன். அதனால் என்னைக் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறான் என்று போலிசில் புகார் கொடுத்து உள்ளே தள்ளி விடலாம். மனதில் திட்டம் சரியாக இருந்தது.


                                                         மாலை ஐந்தரை மணிக்கு ரங்கசாமியை, “ சார் வாங்க, வீட்டில் போய் அக்கவுண்ட் சரிபார்த்து விடுவோம். உங்களை பஸ் ஏத்தி விட சொல்லிடறேன் என்று அன்பொழுக கூப்பிட்டார். அதற்குள் சசிதரன், “அய்யாவுக்கு ஏன் சிரமம்? நாங்க ஆட்டோவில்  வந்துடறோம் சார்”. “ரங்கசாமி சார், நாம் போய் சேர்வதற்குள் அய்யா செக் பண்ணி விடட்டும். அப்புறம் நாளைக்கு ஒட்டு மொத்தமா சலான் போட்டு கட்டிடலாம்” என்றார். “இந்தாங்க அய்யா” என்று பத்து அலுவலக ஊழியர்கள் பார்க்கும் படி பதிவேட்டை  சத்திய மூர்த்தியிடம் தந்தார்.


ஆகா, பழம் நழுவிப் பாலில் விழுகிறதே. இந்த ரங்கசாமி அப்பாவி அது தெரியும் இந்த சசிதரன் கூட இப்படி அடி முட்டாளாயிருப்பானா?. ஏப்படியோ இன்னிக்கி நமக்கு குருட்டு அதிருஷ்டம். “அதுவும் செரிதான். டிரைவர் வண்டியை எடு” என்று சொல்லியபடி  கிளம்பினார்.


                                                   வண்டி வரும் வழியில் செல் போனைத் தேட அலுவலகத்திலேயே விட்டு விட்டு வந்தது நினைவுக்கு வந்தது. மீண்டும் அலுவலகத்தில் நுழைந்தவரை அழைத்தபடி இருந்தது செல்போன். “நொம்ப நேரமா அடிக்குது அய்யா”, என்றார் பணியிலிருந்த  இரவுக்காவல் பணியாளர்.

 “கொண்டாய்யா அதை” என்று சொல்லி வாங்கியவர் கையிலிருந்த பதிவேடு நோட்டை பக்கத்து மேசையில் வைத்து விட்டு , “அலோ, என்னம்மா” என்றார் சன்னமான குரலில்.  அழைப்பு வீட்டிலிருந்துதான். “ ஏங்க, இந்த அநியாயத்தை எப்படிங்க சொல்வேன். நம்ம நர்மதா கடிதாசி எழுதி வைச்சிட்டு யாரோ ஒரு பையனோட காலேஜில் இருந்து ஓடிப்போய்டாங்க. சீக்கிரமா வாங்க” என்றது மறுமுனை. மனது படபடக்க “இதோ உடனே வரேன்” என்று பதிலளித்தவர் அவசரத்தில் ரங்கசாமியின்  மேசையில் விட்டுச் சென்றது எதுவும் எழுதப்படாத சசிதரன் அவரிடம் கொடுத்த வெற்று கணக்கு நோட்டு. அதன் அட்டையில் வாய்மையே வெல்லும் என்று எழுதி காந்தியடிகள் படம் போட்டிருந்தது.