Saturday, 30 September 2017

பகல் வேஷங்கள்

‘வரவர தெருவில் நடக்கவே முடியல சார். ஒரே அசிங்கக் காடா இருக்கு. என்னதான் இந்த கார்ப்பரேஷனில வேலை செய்யறாங்களோ’. ஆதங்கப்பட்டு குறை சொல்லிய மனிதர் ஒரு கையில் பிடித்திருந்த வெள்ளைச் சடைநாய் டாமி இயற்கை அழைப்பை முடித்துக் கொள்ள அலை பாய்ந்து கொண்டிருந்தது. மறு கையில் பிடித்திருந்த கருப்பு குப்பை பையை அலட்சியமாக சுழற்றி குப்பைத் தொட்டியில் வீச , அது தொட்டிக்கு வெளியே விழுந்து சிதற, ‘ தினம் மெயிட் போட்டுறும். அவ இன்னிக்கு வரல’ என்றார்.
‘நான் உங்களை எதுவும் கேட்டலையே சார்’.
‘வாங்க சார் எங்க வீட்டுக்கு. ஒரு காபி சாப்பிடலாம்’.
வீட்டில் நுழைந்தவர், ‘டேய் முருகேசா, சாயங்காலம் வீட்டுக்கு போறதுக்குமுன்ன  அப்பாவுக்கு டயபர் மாட்டி விட்டுட்டு போயிடு. எனக்கு ஆபீஸ் முடிந்து கிளப் ஆண்டு விழாவுக்குப் போகணும். ராத்திரி வர பத்துக்கு மேல ஆகிடும்’.
காபி வர தாமதமாகியது. கிளம்ப எத்தனிக்கும் போது, ‘ஒரு நிமிஷம் சார். நீங்க பேப்பர் பாருங்க, நான் அதுக்குள்ள ஷேவ் பண்ணிக்கிட்டு உங்களோட காபி சாப்பிடறேன்’. சப்தம் வந்த திசையில் வாஷ் பேசனில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்க அவர் அதுபற்றி சிந்தனை இல்லாமல் முகச்சவரத்தில் முகத்தை வித விதமாக திருப்பியபடி மூழ்கியிருந்தார்.
‘சார், உங்களுக்கு மெட்ரோ வாட்டர்
 வருதா?’
‘கொஞ்சமா வருது. எங்களுக்குக் குடிக்க தாராளமாகப் போதும்’
‘அட, என்னங்க குடிக்க மெட்ரோ வாட்டரா? நம்ம வீட்டில் செடிங்களுக்கும், துணி துவைக்கவும்தான். இப்ப தண்ணி இல்லாம செடிங்க வாடுது. மனசுக்கு வேதனையா இருக்கு’  என்று வள்ளலாராக மாறியவர்,
‘தண்ணிய ஜனங்க நிறைய வேஸ்ட் பண்ணறாங்க சார். நான் நூத்தம்பது அடி போர் போட்டு சப் மெர்சிபிள் போட்டிருக்கேன். கொஞ்சம் உப்பா இருக்கும். அக்கம் பக்கத்தில கேட்டா ஒரு குடம் கூடத் தர மாட்டேன்.  வேஸ்ட் பண்ணுவாங்க’.
‘பேப்பர்ல என்ன சார் செய்தி? எல்லாத்திலும் ஒரே பொய்யும் புனைச்சுருட்டும். எங்க பாருங்க ஒரே லஞ்சம். நேர்மையானவங்க ரொம்ப அருகிப் போய்ட்டாங்க சார். வார்த்தை சுத்தம் இல்லை. நாடு எப்படி சார் உருப்படும்?
‘என்ன சார். இன்னிக்கு ஆபீஸ் போகலியா? ரொம்ப ஃப்ரீயா இருக்கிறாப்போல தெரிகிறது என்ற என்னிடம்,
‘ஒரு பத்துநாள் மெடிக்கல் லீவு போட்டிருக்கேன். மதுரையில் மச்சான் பேத்திக்கு காதுகுத்து போகணும். ஆடிட்,பட்ஜெட் அப்படி எதாவது வரும். இரண்டு நாளு லீவு தர மாட்டாங்க. அதால மெடிக்கல் லீவைத் தட்டி விட்டுட்டேன். டாக்டர் சர்டிபிகேட் தான் நூறு ரூபாய்க்கு கிடைக்கிறதே. என்ன ஒண்ணு சீட்ல பத்து நா இல்லாமல் போனா மேல் வரும்படி போயிடும்”.
காபி இன்னும் வரவில்லை. எனக்கு நிறைய வேலை இருந்தது.
‘அப்ப இன்னோரு நாளு வரேன் சார்’
‘காபி சாப்பிடாம போகறீங்க. பரவாயில்லை. அடுத்த வாட்டி வரும் போது கண்டிப்பாக சாப்பிடணும்’.
வாஷ் பேசன் குழாயில் நிறுத்தப்படாத நல்லியிலிருந்து களக் களக் என்று தண்ணீர் ஓடும் சத்தம் காதில் இன்னும் விழுந்தபடி இருந்தது.








No comments:

Post a Comment