Monday, 25 July 2016

காலப் பெட்டகம்


“ராகவா எழுந்திருடா, மணி எட்டு அடிக்கப் போறது”, என்ற அம்மாவின் குரல் கேட்டு எழுந்திருக்க முயன்றேன். ஆனால் கண்களைத் திறக்க முடியவில்லை. சுதாகரித்துக் கொண்டு கண்ணைத்திறந்து,
”என்னம்மா, அதற்குள்ளாகவா எட்டு மணியாகி விட்டது.இன்னிக்கு லீவுதானேமா, இன்னும் ஒரு மணி நேரம் தூங்கிட்டு ஒன்பது மணிக்கு எழுந்திருக்கிறேன்” என்றேன்.

“இல்லைடா, கொல்லைப்புறத்தில் செடிக்கு எல்லாம் தண்ணீர் விடப் போயிருந்தேன். அப்போ வாய்க்காலுக்கு குளிக்க வந்த உன் ஃபிரண்ட் ரகுவின் அம்மாவைப் பார்த்தேன். அவன் உன்னைப்பத்தி விசாரித்தானாம், உன்னை பார்க்கணுமாம்.உடம்பு சரியில்லாமல்  சோமசேகரன் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்காங்களாம். அதனால் சொன்னேன்.அப்புறம் ஏன் எங்கிட்ட சொல்லலைன்னு வானத்துக்கும் பூமிக்குமாக குதிப்பாய்.” என்றாள்.

ரகு என்றதும் பட்டென எழுந்தேன். “அப்படியா, என்ன உடம்புக்கு? அமெரிக்காவில எங்கியோ கலிபோர்னியாவில இல்லையா இருந்தான். எப்போ இந்தியா வந்தான்?” என்றபடி முகம் கழுவி காலைக்கடன்களை முடிக்கக் கிளம்பினேன். என்னவோ தெரியவில்லை மனம் பரபரப்பாக இருந்தது.
நானும், ரகுவும் பால்ய சினேசிதர்கள். வடிவேல் சார் கூட எங்களை டபரா, டம்ளர் என்று கிண்டல் செய்வார். வருகைப் பதிவேட்டிலும் அடுத்தடுத்த பெயர்கள்.எப்பொதும் நான் அவன் வீட்டிலோ, அவன் என் வீட்டிலோ இருப்போம். பள்ளியில் படிப்பில் அவன் படு சுட்டி. நான் சராசரி. ஆனால் அதில் அவனுக்கு கர்வம் துளியும் கிடையாது. எனக்கும் அவனுடன் பழகுவதில் தாழ்வு மனப்பான்மை இல்லை.

அவன் எப்போது படிக்கிறான். எப்போது உறங்குவான் என்பது யாருக்கும் தெரியாது. இரவு திண்ணையில் படுப்பதாகச் சொல்லிவிட்டு, வீட்டுக்குத் தெரியாமல் பத்து மணிக்கு வைராவிகுளம் டூரிங்க் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு அசந்து உறங்கினால் அதி காலை ஐந்து மணிக்கு எப்போதும் போல எழுந்து ஆற்றில் குளிக்கப்போக என்னை எழுப்பிவிடுவான். பள்ளிக்கூடத்தில் அவன் கேட்கும் கேள்விகளுக்கு பல ஆசிரியர்கள் திணறிப் போய்விடுவார்கள். அவன் தெருவில்உள்ள மற்ற பசங்களுக்கு புரியாத புதிர். நாங்கள் இரும்புக்கை மாயாவி, சிந்துபாத் படிக்கும் போது அவன் நூலகரிடம் ஜெயகாந்தன், புதுமைப் பித்தன்  புத்தகங்கள் பற்றி விசாரிப்பான். அவரோடு விவாதம் செய்வான். அதேசமயம் ராமு கனபாடிகளிடம் கடோபனிஷத்தில் சந்தேகம் கேட்பான். ஒரு தடவை பெருமாள் கோவில் அர்ச்சகரிடம், “நீங்க சொல்லும் மந்திரம் தப்பு இப்படி தப்புத்தப்பா மந்திரம் சொல்லி பெருமாளை ஏன் ஊரை விட்டு துரத்துற கைங்கரியத்தை உங்களை மாதிரி சிறப்பா யாரும் செய்ய முடியாது” ,என்று சொல்லிவிட்டு சரியா உச்சரிப்புடன் மந்திரங்களைச் சொல்ல அவர் பஞ்சாயத்தில் பிராது தர ஒரே அமர்க்களம்.

திடீரென்று ஒரு நாள் அவனைக் காணவில்லை. பள்ளிக்கும் வரவில்லை. அவனை பார்க்காமல் தலை வெடித்துவிடும் போல் இருந்தது. சாயங்காலம் அவன் வீட்டிற்கு போய் விசாரித்தால், அவன் அம்மாவிடம் மெட்ராஸ் போகப் போறதாதா சொல்லி ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதாக சொன்னாள். “ஆயிரம் ரூபாய் புரட்டிக் கொடுத்தேன் , நேற்று ராத்திரி 7.30 மணி பாபனாசம் - சென்னை பஸ்ஸில் தான் கிளம்பிப்போனான். நாளைக்கழித்து காலையில் வந்து விடுவதாகச் சொன்னான்”.
“சரி, அவன் வந்ததும் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.
வியாழக் கிழமை பள்ளிக்கு பிரேயர் முடிந்து காலதாமதமாக வந்தான். முத்துசாமி சார் வகுப்பு. வாசலில் நின்றவனை அவர் சட்டையே செய்யவில்லை. “தலைகனம் பிடிச்சி அலையறான். பெரிய தாமஸ் ஆல்வா எடிசன் நினைப்பு” இப்படியெல்லாம் அவனைப்பற்றிய எண்ணம் அவருக்கு உண்டு.
காரணம் ஒருநாள் அவரிடம் கருப்புப் பொருள் (Dark Matter) பற்றி கேட்க, அவர் அது பற்றி தெரியாது, நான் தகவல் திரட்டிய பின் சொல்கிறேன் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் அவருக்கு எல்லா வாத்தியார்களின் பொதுப்புத்தி. மொளைச்சு மூணு எலை விடலை, இவனுக்கு அப்படி என்ன தெரியும் என்று. அவர் எதோ சம்பந்தம் இல்லாமல் விளக்கம் சொல்ல ,ரகு அது தவறு என்று சுட்டிக்காட்ட , பிரச்சனையாகி தலைமை ஆசிரியரிடம் போக,
வகுப்பில் மரியாதை இல்லாமல் ஆசிரியரை திட்டியதாக பொய்யாக புகார் தரப்பட்டது. கடுமையாகக் கண்டிக்கப் பட்டு,பத்து நாள் பள்ளியை விட்டு வெளியேற்றம். அவன் அம்மா மன்னிப்புக் கடிதமும் எழுதிக்கொடுத்து ஆயிரம் ரூபாய் வார்ட் கவுன்சிலரின் சிபாரிசுக் கடிதத்திற்கு மொய்யும் கொடுத்து பள்ளியில் மீண்டும் சேர்த்தாள்.

அதிலிருந்தே முத்துசாமி சாருக்கு அவனையும் அவன் கூட எந்தப் பையனைப் பார்த்தாலும் ஒரு வன்மத்துடனேயே கருவியபடி இருப்பார்.
“எக்ஸ்கியூஸ் மீ சார்” என்று நாலைந்து முறை கூப்பிட்டும் கண்டுகொள்ளப்படவில்லை. பிரிவேளை முடிந்து வெளியே வரும் போது
“தொரைக்கு, இன்னிக்கு லேட்டா வந்ததால் ஆப்சென்ட்தான். லேட்டுக்கும் இரண்டு நாள் வராமல் இருந்ததற்கும் காரணம் எழுதிக் கொடுத்துவிட்டு அடுத்த பிரிவேளைக்கு வகுப்புக்கு போ” என்றார்.

 காரணம் எழுதிய கடிதத்தில் சென்னை சென்று பாஸ்போர்ட் எடுக்க நேர்காணல் சென்றதால் இரண்டு நாள் விடுப்பும் , சென்னையிலிருந்து வரும் பேருந்து காலதாமதமாக வந்ததால் முதல் பிரிவேளை வரத்தாமதம் என்றும் எழுதியதைப் பார்த்த முத்துசாமி வாத்தியாருக்கு மயக்கமே வந்துவிட்டது.
ஒரு அப்பா இல்லாத பையன், அதிலும் மேல்நிலை வகுப்பில் படிக்கும் பொடியன் , தனியா சென்னைக்குப் போய் பாஸ்போர்ட் எடுக்கிறதா? அது சாத்தியமா? கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது.பொறியியல் பட்டதாரியான அவர் மகன் பாஸ்போர்ட் நேர்காணலுக்கு
“அப்பா, நீயும் துணக்கு வாங்கப்பா” என்று அழைத்ததும் அவனுடன் துணைக்கு சென்றதை நினைத்து வெட்கம் பிடுங்கித் தின்றது.
“ஏலெ, பொய்சொல்லாதேலே, பாஸ்போர்ட் எடுப்பது என்ன டெண்ட் கொட்டாய் சினிமா டிக்கெட்டாலெ கவுண்டரில் காசு கொடுத்து வேங்க? 18 வயசாவத எப்படிலே பாஸ்போர்ட் எடுக்க முடியும். பின்ன நாளைக்கு பாஸ்போர்ட் கொண்டி காணிக்கனும் ஆமா சொல்லிப் போட்டேன்” என்றார்.
“சரிங்க அய்யா”  என்று சுருக்கமாக சொல்லி பேச்சை முடித்துக் கொண்டான்.
இன்னும் நான்கு மாதம் பல்லைக் கடித்துக் கொண்டு ஓட்ட வேண்டும். பரிட்சை எழுதி ரிசல்ட் வந்து விட்டால், அப்புறம் பிரச்சனை இல்லை. அதற்கிடையில் வாத்தியாருடன் தகராறு பண்ணியதாக புகார் வந்தால் எல்லாம் பாழாயிடும் என்றவாறு ரகுவின் மனத்தில் சிந்தனை ஓடியதை நாங்கள் அறியவில்லை.

மதிய உணவு இடைவேளையில் நான், “என்னடா ரகு, இப்படி பாஸ்போர்ட் அது இதுன்னு மிரட்டுகிறாய்” என்று கேட்டதுதான் தாமதம் “ ராகவா இந்தப் படிப்பு எல்லாம் சுத்த வேஸ்ட். தலையெழுத்தென்னு இந்த சிலபஸ்லெ படிக்கிறேன்” என்றான். “பாரு எஸ்.எஸ்.எல்.சி முடித்தபிறகு அமெரிக்கா போய் படிக்கப் போகிறேன், அதுக்கு வேண்டி எல்லாம் செய்து விட்டேன். பாஸ்போர்ட் எடுத்துவிட்டேன். சென்னையில் ஒருத்தர் என்னை அமெரிக்காவிற்கு அனுப்பி படிக்க வைக்கும் செலவு எல்லாத்தையும் ஏற்றுக்கிறதா சொல்லியிருக்கார். அவரிடம் என் புராஜெக்ட் பத்தி எல்லாம் சொல்லியிருக்கேன். அவர் ரொம்பவும் இம்பிரஸ் ஆகிட்டார்டா” என்றான். என்னால் அவன் சொல்வதை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை. பத்தாம் வகுப்பு படிக்கும் என்னை மாதிரி ஒரு பொடிப்பய தனியா சென்னைக்கு போய் பாஸ்போர்ட் எடுத்து, புரவலரைப் பார்த்துப் பேசி , ஹும் ஆச்சரியம் தான்.

அப்புறம் நாட்கள் படு வேகமாக நகர்ந்தன. பரிட்சை எழுதியவன் மாநிலத்தில் முதலிடம் பிடித்தான். செய்தி வந்ததும் முத்துசாமி வாத்தியார் ஃபோட்டோக்கு வந்து விட்டார். ரகுவின் ஆற்றலை முதன் முதலில் தான் தான் கண்டுபிடிச்சதாக பேட்டி தந்தார். ரகுவும் அதை ஆமோதித்து தலையசைத்து அங்கீகரித்தான். அப்புறம் பைசா செலவில்லாமல் அந்த புரவலர் அவனை மேற்படிப்புக்கு வெளிநாடு அனுப்பியது. அவன் அம்மாவுக்கு கிராமத்தில் வசிக்க ஒரு பெருந்தொகையை வங்கியில் போட்டு அதன் வட்டியை பயன் படுத்த ஏற்பாடுகள் செய்தார். பத்தாண்டுகளுக்குப் பிறகு படித்து முடித்து சென்னை வந்தவன் அம்மாவை சென்னைக்கு கூப்பிட அவள் கிராமத்தை விட்டு வர மறுத்து விட்டாள்.
பென்சில்வேனியா பல்கலைகழகத்தில் இயற்பியல் பேராசிரியராக இருப்பதாக அவன் அம்மா சொல்லுவாள். திருமணம் செய்து கொள்ளவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சென்னைக்கு வந்து புரவலரையும், கிராமத்தில் தன் தாயாரையும் பார்த்துவிட்டுச் சென்று விடுவான். இடைப்பட்ட காலத்தில் நான் தமிழ்நாடு பப்ளிக் செர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி திருநெல்வேலி கலெக்டர் ஆபீஸில் சூப்பிரண்டெண்ட் ஆக செக்குமாட்டு வாழ்க்கையில் .  என் இரண்டு பசங்களும் பக்கத்து மெட்ரிக் ஸ்கூலில் படிக்கிறதே வாழ்க்கையின் மகாசாதனை. மற்றபடி குறைப்பட்டுக்கொள்ள ஒன்றும் இல்லை.

அவசர அவசரமாக ஆஸ்பத்திரியை அடைந்தேன். உள்ளே நுழையும் முன்பே ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வழிமறித்து, “சார், நீங்கதான் ராகவனா? அவர் சயின்டிஸ்ட்  உங்க நெருங்கிய நண்பராமே. நான் அவரது பாதுகாப்பு அதிகாரி. உங்கள் இருவரும் பேசுவதை யாரும் கேட்காமல் நான் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு எனக்கு தரப்பட்டுள்ளது” என்றார். சட்டையில் மாணிக்கம் காவல் ஆய்வாளர் என்றிருந்தது. “நீங்களும் சயின்டிஸ்டா சார்?” என்றார். “இல்லை, கலெக்டர் ஆபீஸில் சூப்பிரண்டெண்ட், சர்வே டிபார்ட்மெண்ட்” என்றபோது ஏதோ தாழ்வு மனப்பான்மை மனதில் தோன்றியதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். “சரி சார், நீங்க உள்ளே போங்க” என்று சொல்லிவிட்டு விறைப்பாக சல்யூட் வைத்தார்.

அறைக்குள் கட்டிலில் படுத்திருந்தான் ரகு. “வாடா ராகவா, என்று சொல்லிவிட்டு கையில் இரண்டு கடிதங்களைத் தந்தான். இது என்னடா என்ற என்னிடம், வாயில் விரல் வைத்து எச்சரித்தான். “இதில் பெரிய அறிவியல் கண்டுபிடிப்பு பற்றிய குறிப்புகள் இருக்கு. அதை என்னிடமிருந்து கவர்ந்து கொள்ள ஒரு பெரிய கூட்டமே அலைகிறது. அது அவர்கள் கையில் கிடைக்கக் கூடாது, அதனால் தான் சென்னையில் தங்காமல் இங்கே வந்து இருக்கிறேன். என்னை மோப்பம் பிடித்து இங்கு அந்தக் கூட்டம் வருவதற்குள் அதை உன்னிடம் தந்து விட்டேன். வீட்டில் ஒரு கடிதத்தை எங்காவது மறைத்து வைத்துவிடு. மற்றதை  பக்கத்தில் எதாவது பெரிய தபால் ஆபீஸில் அதில் உள்ள விலாசத்திற்கு ஏர் மெயில் அனுப்பி விடு. 

ஒரு வேளை என்னை யாராவது கொன்றுவிட்டால், சரியாக ஒரு மாதம் கழித்து இரண்டாவது கடிதத்தை பிரிக்காமல் அதிலுள்ள விலாசத்திற்கு அனுப்பிவிடு” என்றான். “இடையில் உனக்கு ஏதாவது பிரச்சனை வரமாதிரி இருந்தா அதை கேட்பவர்களிடம் கொடுத்துவிடு. எனக்காக செய்வாயா. இதை கைப்பற்ற பல பன்னாட்டுக் கம்பெனிகளும், அரசியல் தலைவர்களும் அலைகின்றனர். அவர்கள் கையில் மாட்டாமல் இதுவரை காப்பாற்றிவிட்டேன். இனி உன்னிடம் ஒப்படைத்து விட்டேன் இனிமேல் கவலையில்லை”.
“அப்படி என்னடா அதில் உயிர் போகிற ரகசியம்”
“டேய் , நீ இயற்பியலில் நிறை, நீளம், காலம் - அடிப்படை அளவுகள் என்ரு படித்திருப்பாய். ஒரு பொருளைஉதாரணமாக ஒரு பெட்ஷீட் இருந்தால் அதன் நீளம் ஏழு அடி என்றால், ஊருக்குப் போகும் போது அதை மடித்து இரண்டு அடி நீளமுள்ள பெட்டியில் அடைத்து வைக்கிறோம் இல்லையா? அதேபோல குறிப்பிட்ட கன அளவில் அதிக நிறையை அடைக்கிறோம். இதனால் அடர்த்தி கூடும். இது திரவத்திற்கு சாத்தியம் இல்லை. ஆனால் வெப்ப நிலையை அதிகரித்தால் ஆவியாக்கி சாத்தியப் படுத்தலாம் இல்லையா? ஒவ்வொரு பொருளையும் வெவ்வேறு சூழலில் சுருக்க முடியும். 





Time Dilation பற்றி ஈன்ஸ்டீன் சொன்னது படித்திருப்பாயே, அதிகமான வேகத்தில் காலம் நீட்டிப்புஅடைந்து விடும் இல்லையா, அதே மாதிரி காலத்தை பாய் மாதிரி சுருட்டி நம்ம கக்கத்தில் வைத்துக் கொண்டு போகிற மாதிரி ஒரு தியரி அதில் உள்ளது. இப்பொ உன்னைச் சுற்றி ஒரு காலப் பெட்டி உள்ளது. அதை விட பெரிய ஒரு காலப் பெட்டியில் நீ இருந்தால் உன் ஆயுள் முன்னை விட அதிகம். பெட்டியை திறந்தால் காலப் பெட்டகத்தை விட்டு வெளிவந்த உயிர்கள் வெளியில் (Space) கலந்து விடும். அப்புறம் அதையும் வெளியையும் பிரித்துப் பார்க்க முடியாது.  சிறிய காலப் பெட்டியில் இருப்பவன் அப்படியே பெரிய காலப்பெட்டிக்கு மாறிவிட்டால் அவனுக்கு ஆயுள் அதிகரித்துவிடும்” என்று சொல்லிக் கொண்டு போனவனை “நிறுத்துடா, நிறுத்துடா, எனக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த அளவுக்கு எனக்கு புத்திசாலித்தனம் கிடையாது என்பது உனக்குத் தெரியாதா. சரி, நீ சொன்னபடி செய்கிறேன்”
 என்று புறப்பட்டேன்.

 “அம்மாவிடம் என் பிரச்சனை எதையும் சொல்ல வேண்டாம்” “பிழைச்சுக்கிடந்தா சாயங்காலம் பார்க்கிறேன்”  என்று கையசைத்தான்.
வெளியில் வந்தவனை, மாணிக்கம் இன்ஸ்பெக்டர் சல்யூட் வைத்தபடி சிரித்து வழியனுப்பினார். வீட்டிற்கு வராமல் நேராக பஸ் ஸ்டாண்ட் வந்து
பத்தரைமணி மணி புளியரை வண்டியைப் பிடித்து கடையம் தபால் அலுவலகம் வந்து கடிதத்தை ஏர் மெயில் அனுப்பினேன். ரசீதை கிழித்துப்போட்டேன். மத்தியானம் வீட்டிற்கு வந்து அசந்து தூங்கியவனை அம்மா எழுப்பினாள்.

“யாரோ போலீஸ்காராளாம் வந்திருக்கா உன்னை பார்க்கணுமாம். ஆபீஸீல் என்னடா தப்புத்தண்டா பண்ணிணாய்” என்றாள். வந்த ஆட்கள் யாரும் யூனிபார்மில் இல்லை. அதில் சற்று வயதானவராக இருந்தவர், “என்பெயர் மதுசூதனராவ், மத்திய புலனாய்வுத் துறையில் அஸிஸ்டெண்ட் கமிஷ்னர், உங்களிடமொரு வருத்தமான செய்தியை பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் நண்பர் சயன்டிஸ்ட்  டாக்டர் . ரகு உங்களை சந்தித்த பின் மாயமாகி விட்டார். அவர் இருந்த அறையை விட்டு வெளியே வரவில்லை. 

அவர் பாதுகாப்புக்கு இருந்த இன்ஸ்பெக்டர் மாணிக்கம், கடைசியாக நீங்கள் தான் அவரைப் பார்த்ததாகக் கூறினார். அவர் அறையில் இருந்த காமிராவில் உங்கள் சந்திப்பு பதிவாகி இருந்தது. நீங்கள் புறப்பட்டு விட்டபின் அது பதிவெதுவும் செய்யவில்லை. அது சம்பந்தமாக உங்களை விசாரிக்க வந்துள்ளேன்” என்றார்.
அவர்களிடம், நானும் ஆதியோடந்தமாக நடந்த எல்லாவற்றையும் சொன்னதும். அந்த இரண்டாவது கவரை கொடுத்துவிடுங்கள், நாங்கள் மத்திய அரசின் சார்பில் அதை பறிமுதல் செய்ய ஆணையுடன் வந்துள்ளோம். உங்கள் வீட்டை சோதனையிடப் போகிறோம் என்றனர். கடிதம் என் மேசை மீதே கிடந்ததால் அவர்களுக்கு அதிகம் சிரமம் இல்லை. அவர்கள் கூட வந்திருந்த ஒருவர் ரகுவின் கையெழுத்தை  உறுதி செய்தார். மதுசூதனராவ் , “ நாங்கள் கூப்பிடும் போது விசாரணைக்கு வந்து ஒத்துழைக்க வேண்டும். முதல் கவரை கடையம் போஸ்டாபிஸிலிருந்து வாங்கி விட்டோம்”. மறுநாள் செய்தித்தாளில் விஞ்ஞானி மாயம் என்ற செய்தி மட்டும் வந்திருந்தது. கடிதங்களைப்பற்றி எந்த குறிப்பும் இல்லை.

அந்த மத்திய அமைச்சரின் முன்னிலையில் இரண்டு கடிதங்களும் பிரிக்கப்பட்ட போது இரண்டிலும் நான்கு A 4 சைஸ் வெற்றுத் தாள்களே இருந்தன. என்னையும் அப்புறம் யாரும் தொடர்பு கொள்ளவில்லை.

இதெல்லாம் முடிந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் பாபனாசத்தில் ஆடி அமாவாசைக்கு பாணதீர்த்தத்தில் குளிக்கச் சென்ற போது அந்த இருள் பிரியாத அதிகாலைபொழுதில் காணி ஒருவருடன் பேசியபடி என்னைக் கணப் பொழுதில் கடந்து சென்ற சடாமுடி சாமியாரின் முகம் ரகு மாதிரி இருந்தது போல் மனதில் பட்டது.    
    
  

     

Monday, 11 July 2016

கூளயன்

டேய், முத்து, “இன்னிக்கி நீ கேட்டபடி கூளயனை நீ கூட்டிக்கிட்டு போ. நூத்தம்பது ரூபாய் அக்காட்ட கொடுத்திட்டு போயிடு. ராத்திரி 9 மணிக்கு கூளையனை கொண்டு விட்டுறணும். மத்ததெல்லாம் உனக்கு தெரிஞ்சதுதான்”. அண்ணாச்சியிடமிருந்து போன் வந்ததும் முத்துவிற்கு சந்தோசம். பதுவா அண்ணாச்சியோட அக்கா, கூளயனை சுப்பம்மாவுக்குத்தான் வாடகைக்கு கொடுப்பார். இன்னிக்கு என்னமோ தெரியலை கூளயனை அவன் கூட அனுப்ப அண்ணாச்சி சம்மதித்தது அவன் அதிருஷ்டம்தான். கூளயன் நல்ல உருப்படி. அவன் வாடகை, சாப்பாடு, போக்குவரத்து எல்லாம் போக கையில் முழுசா குறைந்து ஐநூறு ரூபாயாவது சம்பாதித்துத் தரக் கூடிய உருப்படி.

கூளயன் தலை மற்றும் தலைக்குக் கீழே உடம்பு என்று சொல்ல முடியாத தசைப் பிண்டம். பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும் ஒரு ஊனமுற்ற பிறவி. அண்ணாச்சி அரசியலுக்கு வருவதற்கு முன்னர் உருப்படிகளை அவரே வைத்து தொழில் செய்து கொண்டிருந்தார். இப்போது அரசியலுக்கு வந்த பின் நேரடியாக தொழில் செய்வது கௌரவக் குறைவு என்பதால் இப்போதெல்லாம் உருப்படிகளை வாடகைக்கு விடுகிறார். தொழிலை அவரது துணைவிக்கு காதல் பரிசாக கொடுத்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது. எப்போதாவது பிரச்சனை இந்த போலீஸ், மனித உரிமை அப்படி ,இப்படி வந்தால் தன் அரசியல் செல்வாக்கால் துணைவியை பிரச்சனையிலிருந்து மீட்பதோடு அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. அதற்கு நேரமும் அவருக்கில்லை. முத்து அவரது ஆரம்ப காலங்களிலிருந்தே அவருடன் இருந்த விசுவாசி. இருந்தாலும் துணைவியாருக்கு முத்துவை பிடிக்காது. தொழில் கைமாறியதும் பழைய ஆட்களுடன் நிறைய புது ஆட்களை அக்கா வேலைக்கு எடுத்தார். புதிய ஆட்கள் வேலை கற்றுக் கொண்டது. அப்படியே பழைய ஆட்களுக்கு கல்தா கொடுத்தார். அப்படி வெட்டி விடப்பட்ட ஆட்களில் முத்துவும் ஒருத்தன்.

அண்ணாச்சியிடம் வந்து அழுது புலம்பி, அண்ணாச்சி அக்காவிடம் சிபாரிசு செய்ததில் தினம் நூறு ரூபாய் வாடகைக்கு மூன்று உருப்படிகள் தர அக்கா சம்மதித்தார். அந்த மூன்று உருப்படிகளும் சேர்ந்து தரும் ஒரு நாளைய வருமானத்தை கூளயன் ஒருத்தன் ஒரே நாளில் சம்பாதித்துத் தருவான்.
வழக்கமாக ஒரு உருப்படிக்கு நாள் வாடகை தினத்திற்கு தினம் வேறுபடும். விஷேச நாட்களில் ஒரு வாடகை. வெளியூருக்கு ஒரு வாடகை இப்படி.  இந்த குறைபாடுள்ள மனித ஜீவன்களுக்கு சோறு, தண்ணி, இருப்பிடம் எல்லாம் கிடைக்கிறது. இவர்களால் முத்து போன்ற ஆட்களுக்கு ஜீவனம் நடக்கிறது.
அண்ணாச்சியின் போன் வந்த மறு நிமிடமே முத்து அக்கா வீட்டிற்கு கிளம்பி விட்டான். முத்து தொழிலுக்காக ஒரு ஆட்டோ வைத்திருக்கிறான். தினம் காலையில் உருப்படி என்ற அந்த ஜீவன்களை விடியலுக்கு முன்பாகவே அவனுக்கு ஒதுக்கப்பட்ட ரயில்வே ஸ்டேசனில் நிறைய மக்கள் வந்து போகும்  பாதையில் கொண்டு இறக்கி விடுவான்.

அந்த ஸ்டேசன் காவலர்களை  மாதா மாதம் மாமூலாக கவனித்து விடுவான். அவர்களும் மாசத்தில் ஒரு சின்ன கேஸ் போட்டு உருப்படியை  எழும்பூர் கோர்ட்டில் ஆஜர் படுத்துவார்கள். அங்கே அக்கா அனுப்பும் ஒரு  ஆள் அபராதத்தைக் கட்டி கூட்டிப் போய் விடுவார்கள். நீதிபதி அந்த ஜீவனை அரசாங்க காப்பகத்தில் விடச் சொன்னால் உருப்படியின் அம்மாவாக நடிக்க ஏற்பாடு செய்யப்படும் பெண், நீதிபதியிடம், “ அய்யா வயத்துக் கொடுமை அதானால செஞ்சிட்டேன். இனிமேல அப்படி பிச்சை எடுக்க விடமாட்டேன் அய்யா. என் புள்ளையை நானே வளர்க்கிறேன். காப்பகத்திற்கு அனுப்ப வேண்டாம். அங்க என் புள்ளையின் மூத்திரத்துணி கூட மாத்த அருவருப்புப் படுவாங்க அய்யா” என்று சொல்ல நீதிபதியும், மனிதாபிமான அடிப்படையில் “சரி இனி மேல் இப்படி செய்யாதே. அபராதம் கட்டிட்டு போ”. தீர்ப்பு வந்ததும் அபராதம் கட்டி மறுபடி தொழில் பழையபடி கோலாகலமாக ஆரம்பித்து விடும்.


முத்து அக்கா வீட்டிற்கு வந்த போது காலை மணி ஐந்தரை. அக்கா வழக்கமான இரண்டு ஊனமான ஜீவன்களுடன் அண்ணாச்சி சொன்ன கூளயனையும் முத்து எடுத்துப் போக தயார் நிலையில் வைத்திருந்தாள்.
“ முத்து அவுக சொல்லிட்டாவ. என்னால மீற முடியலை. இன்னும் ஒரு வாரம் கூளயனை ஒனக்கு தாரேன்.  ஏழு நாளுக்கு தினம் நூத்தம்பது வீதம் ஆயிரத்தியம்பது.  ஆயிரம் மொத்தமா கொடுத்திடு. அம்பது ரூவா தள்ளியிருக்கேன். ஆக  வழக்கமான மூன்றுக்கு முன்னூறும், கூளயனுக்கு ஆயிரம், ஆயிரத்தி முன்னூறு கொடு என்றாள். “சரிங்க அக்கா” என்றபடி அந்த பணத்தை எண்ணி அக்காவிடம் கொடுத்து விட்டு உருப்படிகளை தூக்கிக் கொண்டு போய் ஆட்டோவில்  உட்கார வைக்கும்போது தான் கவனித்தான் கூளயனுக்கு உடம்பு அனலாகக் கொதிப்பதை.
“அக்கா, கூளயனுக்கு உடம்பு சரியில்லை போலிருக்கே. நான் அதுக்கு உடம்பு சரியானதும் இரண்டு நாளு கழிச்சி எடுத்துக்கிறேன்”
“நீ எப்பம் வேணா எடுத்துணு போ. ஆனா இப்போலேர்ந்து கரிட்டா ஒரு வாரம் ஏழு நா கணக்கு. அதை குறைக்க முடியாது”.
“என்னக்கா, அதுக்கு உடம்பு சரியில்ல. அதாலதானே சொல்றேன். இப்படி சொன்னா எப்படி”
“ இதான் அண்ணாச்சி சொன்னாவளேன்னு கொடுத்தா விவகாரம் பன்ணுறெ. சரி, கூளயனை வுட்டு வழக்கமான உருப்படிகளோட  போ. நா வழக்கம் போல சுப்பம்மா கிட்ட கொடுத்துக்கிறேன். இந்த கரச்சல்  அவகிட்ட இல்லை. நீ கூளயனை வுட்டுட்டு கிளம்பு நைனா. இந்தா நீ கொடுத்த ஆயிரம்”. என்ற அக்காவிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
திரும்ப அண்ணாச்சியிடம் போனால் அவருக்கு உள்ள பிரச்சனைகளில் இது மிகச் சின்னது. “ஆ, அப்படியா. சரி பேசிப் பார்க்கிறேன்” என்று வெட்டிக் கொள்வார். என்னடா எது கைக்குக் கிடைத்தது வாய்க்கு கிடைக்காம போயிடும் போலிருக்கே. சரி போற வழியில் இந்த மாதிரி ஜீவன்களுக்கு வைத்தியம் செய்யும் அந்த  சேட்டுமார் தர்மாஸ்பத்திரியில் காட்டி மருந்து வாங்கிட்டுப் போகலாம்.அப்படி அங்கே பார்க்க முடியாவிட்டால் ஒரு குரோசின் வாங்கி கொடுத்து கொஞ்சம் காலை பத்து மணிவரை தாக்காட்டி விட்டால் அப்புறம் நான்கு மணிவரை கூட்டம் அதிகம் இருக்காது.

அந்த நேரத்தில் எதாவது ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் காட்டி மருந்து வாங்கிவிடலாம் என்ற தீர்மானத்தோடு கிளம்பி விட்டான். அந்த பெரிய ரயில் நிலையத்தில் ஓரமாக ஆனால் எல்லோர் பார்வையும் படும் இடத்தில் மற்ற மூன்று ஜீவன்களை கீழே துண்டு விரித்து ஒரு வசதியான கோணத்தில் உட்கார வைத்துவிட்டு, இவற்றைப் பார்த்துக் கொள்ளச்  சொல்லி சின்னப் பொண்ணுவிடம் 20 ரூபாய் கொடுத்துவிட்டு, ஆட்டோவில் தர்மாஸ்பத்திரிக்கு கூளயனை எடுத்துக் கொண்டு ஓடினான். ஆஸ்பத்திரி நல்ல மனமுள்ள, தர்ம சிந்தையுள்ள மனிதர்கள் மேற்பார்வையில் நடத்தப் படுகிறது. கூளயனை பார்த்துப் பரிதாபப்பட்டு முதலில் கூப்பிட்டனர். டாக்டரிடம் முத்து கூளயனை தன் மகன் என்று சொல்லி யதும் பரிதாபப் பட்ட டாக்டர் கூளயனுக்கு சத்தான உணவு, மாத்திரைகளை ஆஸ்பத்திரி செலவில் வாங்கிக் கொடுத்தனுப்பினார். கொஞ்சம் நல்ல ஆகாரமும், மருந்தும் சாப்பிட்டதில் கூளயன் காய்ச்சல் குறைந்திருந்தது.


மனசு தடுத்தாலும் முத்துவின் தொழிலில் இரக்கத்திற்கு இடம் இல்லை. பெற்றவள் என்ன காரணத்தினாலோ அவனை பிறந்த நாளிலேயே குப்பைத் தொட்டிக்குப் பரிசாக அளித்தாள். அவ்வழியாக வந்த ஒரு குப்பையிலிருந்து பிளாஸ்டிக் கழிவு பொறுக்கி விற்று வாழ்வு நடத்தும் மனிதன் ஒருவன் பச்சிளம் பிள்ளையின் அழுகுரல் கேட்டு தொட்டியைக் கிளற முத்துவைக் கண்டான். அவன் அண்ணாச்சியிடம் கொடுக்க முத்துவிற்கு அன்ணாச்சிதான் நினைவு தெரிந்த நாளிலிருந்து அப்பா, முதலாளி மற்றும் ஆசான் எல்லாம். ஆரம்பத்தில் சரோஜா அக்காவுக்கு இடுப்பில் பிள்ளையாய், அப்புறம் ராதாஅக்காளுடன் பிச்சை எடுக்கும் போது கூடப் போவது  இப்படி படிப்படியாக தொழிலில் எல்லா நிலைகளையும் பார்த்தவன். அவன் உலகத்தில் அம்மா கிடையாது. அண்ணாச்சிதான் எல்லாம். அப்போது அவனுக்கு  பதினைந்து வயது இருக்கும். ஒருநாள் நல்ல போதையில் அண்ணாச்சி அவனைக் குப்பைத் தொட்டியில் கண்டெடுத்த கதையை எல்லாம் சொல்ல மனித இனத்தின் மீதே ஒரு வெறுப்பு உருவானது. அப்புறம் பெண்கள் எல்லாம் கெட்டவர்கள் என்று தன் தாய் பற்றி நினக்கும் போது தோன்றும். ஆனால் அது தவறு எல்லாரும் அப்படியில்லை என்று மனத்தில் சரோஜா அக்காவை நினைத்துக் கொள்வான். சரோஜா அக்கா இடுப்பில் அவனை வைத்துக் கொண்டு பிச்சை எடுக்கும் போது எது கிடைத்தாலும் முதலில் அவனுக்குத்தான் தரும். ரொம்ப நாள் வரை சரோஜா அக்காவைத்தான் தன் அம்மா என்றே நினைத்திருந்தான்.  இப்போது உலகம் புரிய ஆரம்பித்ததும் அவனுக்கு அன்பு , பாசம் இதெல்லாம் வயிற்றுடன் சம்பந்தப்பட்டது என்றானது. கூளயனை பார்த்து சிரிக்க கூளயன் புரியாத ஒலி எழுப்பினான்.

ஆட்டோவிலிருந்து அந்த பழைய பால் பேரிங்க் பொருத்திய தள்ளு வண்டியில் கூளயனை வயிற்றுப் பக்கமாக , தலை மேல் நோக்கி இருப்பது போல் படுக்க வைத்து தண்டவாளத்தை கடக்க உள்ள வழிபாதையின் ஓரமாக வழக்கம் போல் துண்டு விரித்து அலுமினிய கப்பரையை வைத்து விட்டு ரயில்வே பெஞ்சில் நான்கு உருப்படிகளும் கண்ணில் படுவது மாதிரி தோதான இடத்தில் வந்து உட்கார்ந்தான். இப்பொது மணி ஏழு. நல்ல கூட்டம் வரும் நேரம். பத்து மணிக்கு மேல்  சிறிது கூட்டம் குறைந்ததும் அந்த ஜீவன்களுக்கு எதாவது சாப்பிடக் கொடுக்க வேண்டும். எட்டு மணிக்கெல்லாம் சரியான கூட்டம். பிளாட்பாரத்தில் நிற்க இடமில்லை. எட்டரை மணியிருக்கும்.





"அய்யோ, காப்பாத்துங்க, சத்யா ஓடி வா" என்று பலரும் ஏக காலத்தில் போட்ட சப்தத்தில் ஒரு குழந்தை மிரண்டு போய் டிராக்கில் நின்று கொண்டிருந்தது. குரல் கேட்ட நேரத்தில்  முத்து உட்கார்ந்திருந்த பிளாட்பாரத்தை அடுத்த விரைவு வண்டிகள் மற்றும் கூட்ஸ் வண்டிகள் வரும் டிராக்கில் படு வேகமாக ஒலிப்பான் ஒலித்தபடி வந்து கொண்டிருந்தது ஒரு அதி விரைவு வண்டி. டிராக் அருகில் அம்மா கையைப் பிடித்தபடி நின்றிருந்த குழந்தை ஒன்று கையை விட்டு ஓடி விபரீதம் புரியாமல்  நட்ட நடு டிராக்கில் நின்றபடி அழ ஆரம்பித்ததுதான் அந்த சப்தம் கேட்கக் காரணம். என்ன தோன்றியதோ டிராக்  அருகே இருந்த கூளையன் உடம்பை வேகமாகத் தள்ள பால் பேரிங்க் வைத்த அந்த வண்டி வேகமாக ஓடி குழந்தையை ட்ரக்கின் மறுபுறம் தள்ளி விட்டது, அது ட்ரக்கில் நின்றது, விரைவு வண்டி கூளயனின் சக்கர வண்டியைத் தூக்கி அடித்து சென்றது  எல்லாம் கண்மூடிக் கண் திறப்பதற்குள் நடந்து முடிந்து விட்டது. விஷயம் தெரிந்ததும் முத்து, அண்ணாச்சிக்குத் தகவல் தர அண்ணாச்சி, மற்ற விஷயங்களை அவர் அதிகம் பிரச்சனையில்லாது முடித்தார். காப்பாற்றப்பட்ட குழந்தையின் வீட்டில் பூசை அறையில் கூளயனின் படம் மாட்டப்பட்டு, தினம் வணங்கப்படுவதென்னவோ உண்மை. சத்யாவின் மகள் ஒரு நாள் கூளயன் படத்தைக் காட்டி “ யாருமா இது” என்ற போது “ எனக்கு மூத்த அண்ணனாம், அவர் என் உயிரை காப்பாற்றினாராம், அப்படின்னு அம்மா எனக்குச் சொல்லியிருக்காங்க” என்று  சத்யா சொன்னதும் நிஜம். 

Saturday, 9 July 2016

சென்ட்ரல் - சூளூர் பேட்டை மின் தொடர் வண்டி

சென்னையிலிருந்து அருகில் உள்ள ஊர்களுக்கு தினமும் மின்சார ரயிலில்  சென்று பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான அலுவலர்களில் ஒருவர்தான் நம் கதாநாயகர் . தினமும் இப்படி சென்னை - சூளூர் பேட்டை மார்க்கத்தில் உள்ள ஒரு சிற்றூரின் அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார் அவர். ஆனால் அவரது தோரணையைப் பார்த்தால் யாருக்கும் அவர் ஒரு சாதாரண ஆசிரியர் போல காணப்பட மாட்டார். அவரது உடை, கையில் உள்ள பிரீஃப் கேஸ் இதெல்லாம் அவரை பார்ப்பவர்களுக்கு எதோ பெரிய அதிகாரி என்ற எண்ணத்தை எளிதில் ஏற்படுத்திவிடும்.














இப்படி சென்னையை மையமாகக் கொண்டு வெவ்வேறு இடங்களிலிருந்து வந்தாலும், பணியாற்றும் இடத்தைப்பொறுத்து இவர்கள் ஒரு குறிப்பிட்ட பெட்டியில் தான் தினசரி பயணம் செய்வது வழக்கம். அந்த 7.40 வண்டியில் இஞ்சினுக்கு அடுத்த மூன்றாவது பெட்டியில் நம் கதாநாயகருடன் பணியாற்றும் எல்லாரும் இருப்பார்கள். கதாநாயகருக்கு என்ன பெயர் என்று நீங்கள் கேட்கும் சப்தம் காதில் எனக்கும் கேட்கிறது. கதாநாயகர்களுக்கு எதற்குப் பெயர்? கதாநாயகர் என்றே இருந்து விட்டுப் போகட்டுமே. சரி நம் கதைக்கு அவர் பெயர் கொஞ்சம் கூட அவசியம் இல்லை என்பது கதை எழுதும் என்னுடைய தீர்மானமான முடிவு. ஆகவே கதாநாயகரின் பெயர் அறியாமல் படிக்க விரும்பாதவர்களுக்கு , இதுவரை பொறுமையாகப் படித்தமைக்கு நன்றி. 

நமது கதாநாயகருக்கு கடவுள் நம்பிக்கை அதிகம்.  காலையில் அவர் சகுனம் பார்த்து புறப்படும் போது சகுனம் சரியில்லாவிட்டால் அடுத்த 10.30 மணி வண்டிதான். கடந்த 25 வருடங்களாக அவர் சகுனம் சரியாக இருந்து கிளம்பி பள்ளிக்குக் குறித்த நேரத்தில் சென்ற நாட்களை கணக்கிட்டால் ஒரு நூறு நூத்தம்பது நாட்கள் தேறும். தினமும் எதாவது ஒரு வேலையில்லாத காக்கை வலமிருந்து இடம் பறந்து விடும் அல்லது பூனை குறுக்கே பாய்ந்து அவரைக் கடமை ஆற்ற விடாமல் செய்து விடும். அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்த அந்த பூனைக்கோ அல்லது காக்கைகோ தண்டண வழங்க இடமுள்ளதா தெரியவில்லை.
அவர் அப்படி 12 மணிக்கு பள்ளிக்கு போனாலும், மாலையில் சரியாக 4 மணிக்கு ‘டாண்’ என்று வீட்டில் இருப்பார். புள்ளியிலிருந்து புறப்படும் போது சகுனம் எப்போதுமே சரியாக இருப்பது இதிலிருந்து சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகிறது. அவர் பணியாற்றும் ஊரிலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் சென்ட்ரல் வந்து அப்புறம் ஒரு முக்கால் மணிநேர பேருந்துப் பயணம் செய்தால்தான்  வீட்டிற்கு வர முடியும். இதில் ரயிலுக்கும், பேருந்திற்கும் காத்திருக்கும் நேரம் சேர்க்கப்படவில்லை. அப்படியானால் அவர் எவ்வளவு காலம் பள்ளியில் இருந்திருப்பார் என்பதை உங்கள் யூகத்திற்கு விட்டு விடுகிறேன். 

இதில் ஆச்சரியம் அவர் ஒரு முறை கூட எந்த அதிகாரிகளிடம் சிக்கியதில்லை. ஆசிரியர் சங்கத்திலும் எதாவது பொறுப்பு வகிப்பார். அதை வைத்துக் கொண்டு சில மேல் மட்ட அதிகாரிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு முடிந்தவரை பள்ளியில் வேலை செய்யாமல் இருக்க எதாவது மாற்றுப்பணி அப்படி இப்படி என்று காலத்தைக் கழித்து விடுவார். தலைமை ஆசிரியரை சமயத்தில் மிரட்டவும் சங்கப் பொறுப்புகள் உபயோகமாக இருந்தது. ஆக சுக ஜீவனம் என்பது அவரைப் பொறுத்தவரை நூற்றுக்கு நூறு சரியானது. அதிகம் கிம்பளம் கிடைக்கும் வேலை கிட்டாமல் போனதில் அவருக்கு மெகா வருத்தம் உண்டு.






அன்று காலை 7 மணிக்கு கிளம்பி விட்டார். சகுனத்தடை எதுவும் இல்லை. மின்சார ரயிலில் உட்கார இடம் கிடைக்காவிட்டால், அதற்கு காரணம் அவர் வரும் வழியில், அலுவலகம்  செல்லும் மலையாளிப் பெண் கமலா தினம் தலை குளித்து வாசலில் காய வைத்து தலைவாரிக்  கொள்வது தான் என்பார். “மனிசன் வேலைக்கு போகும் போது தினம் ஒரு நாள் போல தலையை விரிச்சிக்கிட்டு ஒரு பொம்பளை வாசலில் நிப்பா? கொஞ்சமாவது அறிவு வேண்டாம்” என்று பொருமுவார்.  

இன்றைக்கு கமலா குடும்பத்துடன் குருவாயூர் போய் விட்டதால் அவருக்கு தலைவிரி கோல தரிசனம் இல்லாததில் படுமகிழ்ச்சி. காக்கைகளும், பூனைகளும் வந்து தொந்தரவு தரவில்லை. தினமலர் ராசி பலன், தொலைக்காட்சி ராசிபலன் எல்லாம் இந்த நாள் பொன்நாள் எடுத்ததெல்லாம் பொன்னாகும் என்று சொன்னதில் கூடுதல் குஷியுடன் பேருந்து நிறுத்தம் வந்தார். அங்கும் அதிருஷ்ட லட்சுமி காலியாக பேருந்தை அனுப்பி வைத்தாள். ஏழு ரூபாய் பயணச் சீட்டிற்கு நூறு ரூபாயை எடுத்து நீட்டிய போதும் கண்டக்டர் எரிச்சல் படாமல், எச்சில் தொட்டு எண்ணாமல் சில்லறை தந்து ஆச்சரியப் படுத்தினார்.


ஒரே ஒரு வருத்தம்தான் இன்று நேரத்தோடு பள்ளிக்கு போவதில். மற்றபடி குறை ஒன்றுமில்லை. அந்த சந்தோஷத்தை அசை  போட்டபடி வந்தவருக்கு இன்று வழக்கமான இஞ்சினிலிருந்து மூன்றாவது பெட்டியில், கடைசியாக இருக்கும் நீண்ட பெஞ்சு இருக்கையில் நடுவில் இடம் கிடைத்தது. அதைத்தான் அவரும் விரும்புவார். காரணம் சன்னல் ஓரங்களில் எச்சில் துப்பியிருக்கஅல்லது மூக்கைச் சிந்தியிருக்க வாய்ப்புள்ளதால் அதை பொதுவாக கதாநாயகர் விரும்புவதில்லை. மற்ற நண்பர்கள் வழிபாதைக்கு மறுபுறமுள்ள இருக்கைகளில் இருந்தனர்.

நம்மாள் அருகில் யாரும் இல்லை. கதாநாயகர் கொஞ்சம் கருத்துச் சொல்லிவகை. யாராவது அரசியல் பற்றி பேச ஆரம்பித்தால் அவரால் தன்னைக் கட்டுப்படுத்திகொள்ள முடியாது. அவருக்கு இருபுறமும் அமர்ந்திருந்த ஆட்கள், தமிழ்நாட்டு அரசியலை தினத்தந்தி பேப்பர் வழியாக அலச ஆரம்பிக்கவும் நம்ம சார்வாளுக்கு தலை வெடித்துவிடும் போலிருந்தது. நைசாக முதலில் மையமாக சிரித்து அவர்களின் உரையாடலில் கலந்து கொள்ள தன் சம்மதத்தை வெளியிட்டார். அப்புறம் அவர்களுடன் ஜோதியில் கலந்த போது வண்டி தண்டையார் பேட்டை தாண்டியிருந்தது. 
விம்கோ நகர் வரும்போது அரசியல் தாண்டி சொந்தக் கதை பற்றி பேச்சு திரும்பியது. கத்திவாக்கம் வரும் போது அவர்கள் அரசு பொது மருத்துவமனை அதில் காணப்படும் பிரச்சனைகள் பற்றி பேச ஆரம்பித்தனர். காசு இல்லாததால் அவர்கள் படும் பாட்டை சொல்லவும் அப்படியே நம்ம கதாநாயகர் அவர்களிடம் அவர்களின் பிரச்சனை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.
“சார் என் ஒயிஃப்க்கு உடம்பு சரியில்லாமல் இங்கே அந்த ராம்நாத் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தோம்”.
“இவரு என் மச்சான், அவர் என் தம்பி”
 “கையில ஒரு லட்ச ரூபாய் வரை கொண்டு வந்திருந்தோம்”.
 “ஆனால் அந்த டெஸ்ட் இந்த டெஸ்ட் என்று எல்லாம் கரைந்து போய் விட்டது.”
“இப்போ ஹோல் பாடி ஸ்கேனாமே, அது பண்ண அப்புறம் மருந்து வாங்க என்று 20 ஆயிரம் தேவை.” ஒரு 5000 ரூபாய் இப்போதைக்கு கிடைத்தால் கூட இண்ணிக்கு அவசரத்துக்கு சமாளித்து விடுவேன். அதற்குள் தம்பி ஊருக்கு போய் பணம் புரட்டி எடுத்து வந்திடுவான்” ஆனா இந்த பட்டணத்தில் யாரிடமும்  நம்பிக்கையா நகையைக் கொடுக்க முடியலை.
“நகை என் ஒயிஃப் போட்டிருந்தது.  8 சவரன் ஆரம், கல்லு வச்சது,”
 “அதை மார்வாடி கடையில் அவசரத்துக்கு வைக்கலாமின்னா, அங்க சேட்டு ரேசன் கார்ட் கொடுத்தால்தான் அடகு பிடிப்பாராம். சந்தேகப்படறாப்படி.”
“அதால நம்ம ஊரு சுளூர் பேட்டைக்கு போய் அடகு வைக்கலாம் ன்னு ஊருக்கு போய்க்கிட்டிருக்கோம்”. “இங்க தெரிஞ்சவங்க யாராவது இருந்தாக்கூட கை மாத்து வாங்கி எப்படியாவது அட்ஜஸ்ட் பண்ணலாம்” “மத்தியானம் ஒரு மணிக்குள்ளாற பணம் கட்டணமாம்”.


என்று பாதி கண்ணீரும், கவலையுமாக  தேம்ப ஆரம்பித்தார்.
அப்போது பக்கத்தில் இருந்த அவர் மச்சான் தன் பையிலிருந்து அந்த ஆரத்தை எடுத்தபடி, “பாருங்க சார்” என்று காட்டவும், நம்ம கதாநாயகருக்கு கையில் வாங்கிப் பார்க்க ஆசைதான். இருந்தாலும் ஒரு ஒப்புக்கு                     “ அதெல்லாம் வேண்டாம். அத்தனை பணம் எங்கிட்ட இல்லை” என்றார்.  
அப்போது பக்கத்தில் இருந்த தம்பி, “அட, இன்னா சார் சொம்மா பாரு சார். என்னா தூக்கினா ஓடப்போற” என்றதும், கதாநாயகருக்கு காலை சகுனம் நல்லாயிருந்தது, உட்கார இடம் கிடைத்தது, தொலைக்காட்சியில் சொன்ன ஆரூடம் எல்லாம் மனதில் ஓட ஆரம்பித்தது. அதை வேண்டா வெறுப்போடு வாங்கிப் பார்ப்பது போல் பாவனையில் வாங்கிப் பார்த்தார். வாத்தியார் வேலை தவிர ரியல் எஸ்டேட், வட்டிக்கு நகை வாங்கறது, அண்டிமாண்டு பத்திரத்துக்கு கடன் 2 வட்டிக்கு விடுவது எல்லாம் கரை கண்டவர்.  

மனசுக்குள் சின்ன கணக்குப் போட்டார். பொருள் தங்க நகைதான். வெயிட்டும்  குறைந்து 60 கிராமாவது இருக்கும். சவரன் 20000 போனால் கூட 5 சவரன் அப்படின்னாலும் எப்படியும் ஒரு லகரம் தேறும். கையில் இருபதாயிரம் இல்லை. அதனால் என்ன, பள்ளிக்கு பக்கத்திலேயே உள்ள ஸ்டேட் பாங்கில் கணக்கில் எப்படியும் ஒரு அம்பதாயிரம் இருக்கும். பார்ட்டி மடிந்தால் 25000 அல்லது 30000 பணம் பாங்கில் எடுத்துக் கொடுத்து விடலாம். அவர்கள் நகையை மீட்க வந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம். 

இப்போது ஒரு பொய் விலாசம் கொடுத்து விடலாம் என்றவாறு என்ணங்கள் மனதில் ஓட,
“ கையில் அவ்வளவு பணம் இல்லையே, உங்களுக்கு உதவ ஆசைதான் ஆனா என்ன செய்ய”, என்றதும், மச்சான் நபர்
“பரவாயில்லை சார், உங்களைப் போல அடுத்தவன் கஸ்டத்த உணரவே இந்த மெட்ராசில ஆள் இல்லை. நீங்க எங்க கஸ்டத்த புரிஞ்சிக்கிட்டதுக்கு சந்தோசம் சார் என்றவாறு நகையை மீண்டும் பையில் வைத்துக் கொள்ளவும், நம்ம கதாநாயகருக்கு என்ன சொல்ல என்று புரியவில்லை.
“வேணுமின்னா என் கூட கும்மிடிப்பூண்டியில் இறங்குங்க. பக்கத்தில் பாங்கில் பணம் இருக்கான்னு பார்த்துவிட்டு இருந்தா எடுத்துத் தருகிறேன்”
“பாவம், பணம் கிடைக்க தாமதமானால் ஒரு உயிர் அனாவசியாமா போய்விடுமே என்பதுதான். மத்தபடி பணம் கிடைச்சதும் அட்ரஸ் தருகிறேன். இரண்டு நாளில் பணத்தைத் தந்துவிட்டு மறக்காம வாங்கிக்கிட்டுப் போயிடணும். எனக்கு எதுக்கு உங்க வீட்டு நகை? மனிதாபிமானம் தான் முக்கியம்” ஆமா, உங்களுக்கு  எவ்வளவு  வேண்டும்”.

“குறைஞ்சது 50000 ரூபாயாவது வேணும்”.
அத்தினி பணம் இருக்கா தெரியலை. பார்க்கலாம்”.
“ டேய், முருகா என்னடா சாரை தொந்தரவு பண்ணிக்கிட்டு” நாம கும்மிடிப்பூண்டியில் எறங்கி பாங்குக்கு போய் பணம் இல்லாட்டா டைம் வேஸ்டாயிடும்”. “பரவாயில்லை சார், எங்க கஸ்டம் எங்களோட , நன்றி சார்” என்று சட்டென பேச்சை முடிக்கவும், கதாநாயகருக்கு பார்ட்டியை விட மனசில்லை. தனக்கு உரிமையுள்ள எதையோ இழந்த மாதிரி மனசில் ஒரு சோகம்.
“ ஒரு 20000 பாங்கில் கெடக்கும், எப்படியும் நாளைக்குள் பணத்தை புரட்டி மூட்டுகிறதானால் தருகிறேன்” 
உடனே தம்பிக் காரன், “அண்ணே, சூளூர் பேட்டை போய்விட்டு பணம் புரட்டி மீண்டும் சென்னை வர மூணு மணி ஆகிடும். அண்ணி நெலமைய நினச்சுப் பாருங்க”
உடனே மச்சான்காரன், “ஆமா, மாமா. தம்பி சொல்லுறதும் சர்த்தான்”
என்று ஆமோதிக்க மனசே இல்லாமல் மாமன் காரன், சரி என்ற ஒற்றை வார்த்தையுடன் முடித்துக் கொண்டான்.

இதற்குள் ரயில் பொன்னேரிக்கு வந்து விட்டது. இடையில் அவரவர் மனதில் பல கணக்குகள். இதோ கும்மிடிப்பூண்டியும் வந்துவிட்டது. 


இறங்கும் போது மற்ற ஆசிரியர்களும் இறங்க கதாநாயகரிடம்,
“என்னப்பா, எங்களைக் கண்டுக்கவே இல்லை, புது பிரண்ட்ஸ் கிடைச்சதும் நான்கெல்லாம் கண்ணுக்குத் தெரியவில்லைதானே” என்றதற்கு
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை, சொந்தக் காரங்க கிராமத்திலிருந்து வந்தாங்க. நீங்க போங்க, நாண் இவங்களை பஸ் ஏத்தி விட்டுட்டு வரேன். தலைவரிட்ட அரை மணி பெர்மிசன் சொல்லிடுங்க” என்றபடி
“ முருகா, நாம போகலாம்” என்றார்.

ஆசிரியர்களும் இவர் குணம் தெரிந்து, “சரி சார், நாங்க பர்மிசன் சொல்லிவிடுகிறோம் “ என்றவாறு விரைந்து நடையைக் கட்டினர்.
கதாநாயகர் பாங்கிற்குப் போய் பணம் 20000 ரூபாய் எடுத்து கொடுத்தார். பொருளை முருகன் எனப்பட்டவன் பையோடு கையில் கொடுத்து,
“சார் அட்ரஸ் தாங்க. முடிந்தால் சாயங்க்காலமே வந்து மீட்டுக்கிறோம்” அக்கா கண்ணு முழிச்சதும் ஆரத்தைத்தான் கேட்பாங்க” என்றான்.
“அட, நீயி சொம்மா இருக்க மாட்ட? சாருக்கு பள்ளிக்கு லேட் ஆகிடும். நாம பாங்கில் அட்ரஸ்  கேட்டுக்கலாம்”

உடனே உஷாரான கதாநாயகர்,” ஆ, அதெல்லாம் வேண்டாம். இதோ தருகிறேன்”. என்றபடி பிரீஃப் கேசில் பொருளை பத்திரப்படுத்தி விட்டு
ஒரு காகிதத்தில் அவரது 10 வருடங்களுக்கு முன்பு குடியிருந்த வீட்டின் அட்ரஸை எழுதிக் கொடுத்து விட்டு அவசர  அவசரமாக பள்ளியை நோக்கி நடக்க ஆரம்பித்தார். மனதில் அப்படி பழைய அட்ரசில் விசாரித்தாலும் யாருக்கும் சரியான விலாசம் தெரியாது. பள்ளிக்கு மோப்பம் பிடித்து வந்தாலும் ,” அடடா, எதோ ஞாபகத்தில பழைய அட்ரசை எழுதித்தந்திட்டேன்”. அப்படி எதாவது சொல்லிக்கலாம். கடவுளே, அவங்க மீட்டு எடுக்க தேடி வராம பொருள் எனக்கே சொந்தமானா உனக்கு தேங்காய் சூறை உடைகிறேன் என்று மனசுக்குள் வேண்டியபடி பின்னால் பார்க்காமல் படபடப்போடு பள்ளிக்கு வந்தவர், தலைமை ஆசிரியருக்கு ஒரு அசட்டு சிரிப்புடன் வணக்கம் வைத்துவிட்டு,


“ சார், சொந்தக்காரங்க கூட வந்தாங்க. பஸ் ஏற்றி விட்டு வந்தேன் சார்’. கையெழுத்துப் போட்டுக்கிறேன் சார்” என்று அவர் அனுமதிக்கும் முன்பே வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு விட்டு, தன் அறைக்குச் சென்று கதவை சாத்திக்கொண்டு பிரிஃப் கேஸை திறந்து பையிலிருந்து பேப்பரில் சுற்றப்பட்டிருந்த பொருளைப் பிரித்துப் பார்த்தார். பித்தளையில் செய்யப்பட்டிருந்த நகை பல்லிளித்து சிரித்தது. கடவுள் சூறைத் தேங்காய் வேண்டுதலுக்கு செவி சாய்த்து புன்முறுவல் பூத்துக் கொண்டார். 

Wednesday, 29 June 2016

நடைபாதை வாழ்வு

அது நகரத்தின் மிகப் பிரதானமான சாலையில் அமைந்துள்ள ஒரு கட்டிடம். பார்க்கவே நல்ல பணக்காரக் களையுடன் புதிதாக வண்ணம் அடிக்கப்பட்டு விளங்கியது. வாசலில் சிவப்பு வண்ண கூண்டுக்குள் வட இந்திய வாயிற்காவலர், பச்சை நிறச் சீருடையில் ஜாவ், ஜாவ் என்றபடி பிளாட்பாரத்தில் நிற்பவர்களைக் கூட அதிகாரமாகத் துரத்திக்கொண்டிருந்தார். அடிக்கடி பல வகையான கார்களில் அலங்காரமாக நடுவயது பணக்கார பெண்மணிகள் வந்த வண்ணம் இருந்தனர். எதிரே பிளாட்பாரத்தில் பக்கத்து மதில் சுவற்றில் ஒரு புறமும், சாலையில் மறுபுறமும் ஆக சாய்வாக கட்டப்பட்ட பழைய நடந்து முடிந்த திருமணத்தில் வைக்கப்பட்டிருந்த ஃப்ளெக்ஸ் பதாகையை கூரையாக வைத்துக் கட்டப்பட்ட குடியிருப்பு. எதிரே வந்து போகும் கார்களையும் , அதிலிருந்து இறங்கி நடந்து கம்பீரமாக ஆங்கிலத்தில் பேசியபடி செல்லும் பெண்மணிகளையும் வேடிக்கை பார்த்தபடி இருந்தாள் ரோசம்மா.
சின்ன வயதில் இந்த கட்டிடத்திற்கு வரும் பெண்களைப் போல மதிய வேளைகளில் கற்பனை செய்து கொண்டு தனக்குத்தானே தஸ், புஸ் என்று ஆங்கிலத்தில் பேசுவதாக கற்பனை செய்து விளையாடுவாள். அப்பன் மாரி அம்மா செல்வி இருவரும் வேலைக்கு போய்விட்டால் அவளுக்கு பொழுது போக்கே இதுதான்.
மாரிக்கு சால்ட் குவார்ட்டஸ்சில் மூட்டை தூக்கும் கூலி வேலை. அம்மா செல்விக்கு மார்க்கெட்டில் பூக்கட்டி தரும் வேலை. பெரிய பூக்கடையில் அவளைப்போல் இருபது இருபத்தைந்து பேர் பூக்கட்டுகிறார்கள். சின்ன வயதில் வால்டாக்ஸ் ரோடு கொண்டித்தோப்பில் வீடு. வீடு இதே போல பிளாஸ்டிக் ஷீட் மறைப்புத்தான்.
அங்கே மாரி சைக்கிள் ரிக்சா இழுத்துக்கிட்டிருந்தான். இப்பொவெல்லாம் யார் சைக்கிள் ரிக்சாவில் பயணம் செய்கிறார்கள். கறிகடையிலிருந்து கறி ஏற்றி வரக் கூட மீன்பாடி வண்டிதான். தொழிலை மாற்ற ரிக்சாவை விற்று கிடைத்த பணத்தை வைத்து கூட கொஞ்சம் காசு கடன் வாங்கி சால்ட் குவார்ட்டஸ் சுமைதூக்குவோர் சங்கத்தில் உறுப்பினர் ஆகி விட்டான். ரோசம்மா பிறந்தபின் அவளை கரையேற்ற காசு வேண்டும் என்பதால் செல்வியும் பூக்கடை வேலைக்கு வந்து விட்டாள். அப்படி இப்படி போலீசுக்கு, ரவுடிகளுக்கு இப்படி பயந்து பயந்து ஜீவனம். திடீர் திடீரென்று பிளாட்பாரத்தை விட்டு துரத்துவார்கள். கையில் கிடத்தவற்றை எடுத்துக்கொண்டு தொலைவாகப் போய் இருந்து விட்டு மீண்டும் பழையபடி வர வேண்டும். எல்லாம் பத்திரிக்கைகள் போட்டோ எடுக்கிறவரைதான்.
ரோசம்மாவை பக்கத்து கார்போரேசன் பள்ளியில் சேர்க்கப் போனால் அது என்னவோ சாதி சான்றாமே அதுவும் வருமானச் சான்றும் கேட்டார்கள். மாரிக்கு சாதி எல்லாம் தெரியவில்லை. அதை தெரியவைக்கும் முன்பே 1962 இல் அவனது பெற்றோர் காரனமின்றி குடிசைகள் எரிந்தன அல்லவா, அப்போது தீவிபத்தில் இறந்து போய் விட்டனர். அப்போது அவனுக்கு வயது ஆறு. அப்புறம் காட்டுச் செடியாக எப்படி எப்படியோ தானே வளர்ந்தான். அதெல்லாம் பெரிய கதை. 2000 வாக்கில் கட்டிட காண்டிராக்டரிடம் எடுபிடியாக வேலை பார்த்தபோது அங்கு சித்தாளாக தன்னைப்போல ஆதரவற்ற செல்வியை பாடிகார்ட் முனீஸ்வரன் கோவிலில் வைத்து தாலிகட்டி கல்யாணம் செய்து கொண்டான். இருவருக்குமே சாதியில்லாம் கிடையாது, தெரியாது. அப்படிப்பட்டவனிடம் சாதியைச் சொல் அல்லது முழுக் கட்டணம்தான் என்றது பள்ளி நிர்வாகம்.
வெறுத்துப் போன அவன் ரோசம்மாவை பள்ளிக்கு அனுப்பவில்லை. இப்பொழுது ரோசம்மாவுக்கு வயது பதினான்கு. காலையில் வேலைக்குப் போனால் பொழுதுபோன பின்புதான் முதலில் செல்வியும் அப்புறம் மாரியும் வருவார்கள். மாரி குடிகாரன் இல்லை. ஆனாலும் உடம்பு வலிக்காக கொஞ்சம் சாராயமோ, மதுவோ சாப்பிட்டு வருவது வழக்கம். செல்வி வரும் போதே அரிசியும் கொஞ்சம் காயும் வாங்கிவந்தால் அன்று அரிசிச் சோறும் சாம்பாரும். இல்லாவிட்டால் ஆளுக்கு இரண்டு பன்னும் டீயும் தான்.
இப்படி வாயைக்கட்டி வயத்தைக்கட்டி இருபதாயிரம் ரூபாய் சேர்த்துவிட்டாள்.  அந்த மறப்புக் குடிசையின் சுவற்றில் மாட்டியுள்ள மஞ்சள் பையில்தான் அதை பத்திரப் படுத்தியிருந்தாள். இன்னும் ஒரிரு வருசத்தில் ரோசம்மாவை நல்ல மாப்பிள்ளை பார்த்து கட்டிக் கொடுக்கணும்.ரோசம்மாவும் கஷ்டம் தெரிந்த புள்ளைதான். தனக்கு வேண்டியதை வாங்க, புரசைவாக்கம் பக்கத்தில் ஒரு பணக்காரங்க வீட்டில் வீட்டு வேலை செய்து சம்பாதித்துக் கொள்ளுகிறாள்.
ரோசம்மாவின் மறைப்புக்கு எதிரே இருந்த முன்னால் சொன்ன கட்டிடத்தில் இருந்து இயங்கிக் கொண்டிருந்தது ஒரு மகளிர் சங்கம். கோடீஸ்வர்களின் பொழுது போகாத மனைவிமார்கள் சேர்ந்து நடத்தும் சங்கம். இன்று அங்கே மகளிர் தினம் கொண்டாடுவது பற்றிய விவாதக் கூட்டம். உழைக்கும் மகளிரை எப்படி கவுரவிப்பது என்பதை ஆராய கூட்டம் தலைவி திருமதி. அகிலா தலைமையில் கூடியது.
தொழிலதிபர் சிவாவின் மனைவிதான் அகிலா.மகளிர் தினம் கொண்டாட இந்தமுறை மகளிர் நல அமைச்சரை அழைக்க வேண்டும் என்பதில் எல்லோருக்கும் உடன்பாடுதான். அகிலாவின் சமீபத்திய வெளிநாட்டுப் பயணம் பற்றிய புராணங்களை வெளியில் தெரியாமல் கொட்டாவி விட்டபடி கேட்ட உறுப்பினர்கள் வாய் மட்டும் நைஸ் ஜீ, இண்ரெஸ்டிங்க் ஜீ என்றபடி இருந்தது.
அகிலாவை மட்டம் தட்ட முயலும் கும்பல் ஒன்றும் அதில் உண்டு. அது தொழிலதிபர் ஆனந்தனின் மனைவி திவ்யா. எதாவது குறை சொல்ல வேண்டியதன் கட்டாயம். ஆகவே சங்க கட்டிடத்திற்கு எதிர் வாடையில் இருக்கும் அந்த அசிங்கம் பிடித்த மறைப்பு குடியிருப்பு பற்றி புகார் சொல்ல அதை அவர் ஆதரவாளர்கள் பிடித்துக் கொண்டனர். இந்த குடிசைகளை அப்புறப் படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் விவாதப் பொருளானது. அகிலா எந்த முயற்சியும் இவ் விஷயத்தில் எடுக்கவில்ல என்று குற்றம் சாட்டப்பட்டது. அகிலா தான் வெளிநாடு சென்றிருந்ததால் இந்த சுணக்கம் என்றதும், அப்போது வெளிநாடு அடிக்கடி செல்லாத தலைவரை தேர்ந்தெடுப்போம் என்றதும் நிலைமை சிக்கலானது.
சிக்கலை தீர்க்க உடனே மாநகர கமிஷ்னர், அமைச்சர், காவல் துறை என்று தொலைபேசியில் தொடர்பு கொள்ளப்பட்டனர். விழாவிற்கு முன் எல்லாம் சரி செய்யப்படுமென்று  உறுதிமொழி தரப்பட்டது. அகிலா அம்மையாருக்கு மூச்சு வந்தது. அடுத்தது விழாவிற்கு கூட்டம் சேர்ப்பது சம்பந்தமாக ஏஜென்சி தொடர்பு கொள்ளப்பட்டது. அவர்களின் முகவர் உடனே வந்தார். 500 நபர்களுடன் கூட்டம் ஏற்பாடு செய்ய 5 லட்சம் செலவழிப்பது என்று முடிவானது. இதற்கான ஸ்பான்சர்களை அமைச்சரின் கடைக்கண் பார்வையை எதிர் நோக்கியுள்ள தொழிலதிபர்களிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் அகிலா பெற்றுவிட்டார். உடனே ஆனாலும் நம்ம பிரிசிடெண்ட் மாதிரி சாமர்த்தியம் யாருக்கும் வராது என்று திவ்யா கோஷ்டியின் மூக்கை அகிலா கோஷ்டியினர் உடைத்தனர்.
கூட்டம் இனிதே முடிந்தது. மறுநாள் காலையில் ஐந்து மணிக்கே வழக்கம் போல மாரியும், செல்வியும் வேலைக்குப் போய் விட்டனர். ஏழு மணிக்கு ரோசம்மா வீட்டு வேலைக்கு கிளம்பும் முன் அதிரடியாக ஏதோ கலவரத்தை அடக்க வருவது போல இருபது காவலர்களுடன் ஒரு காவல்துறை வாகனம் வந்தது. கையில் வாக்கி டாக்கியுடன் ஜீப்பில் இருந்தபடி அதிகாரி யாரிடமோ எஸ் சார், எஸ் சார் ஓகே சார் என்று பேசிக்கொண்டிருந்தார்.
ரோசம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அங்கே வந்த காவலர்களில் ஒருவரைக் கேட்டபோது எங்கிரோச்மென்ட் எவிக்சன் என்றார். அது எதுவும் புரியவில்லை. அவள் காதில் எவிக்சன் என்பது எலக்சன் என்று கேட்டதில் மனது சமாதானம் ஆனது. அந்த பகுதியில் ஒரே மறைப்புக் குடிசை மாரியின் குடிசை ஒன்றுதான். வேறு எதுவும் இல்லை. பக்கத்து கார்பொரேஷன் கழிவறைக்கு நடந்து போய் எல்லாம் முடித்துக் கொண்டு திரும்ப தன் மறைப்புக் குடிசைக்கு வந்தாள்.
அந்த சுவற்றில் ஆணியில் மாடியிருந்த பையில் கை விட்டு ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொண்டு பல் போன சீப்பால் தலையை சீர் செய்து கொண்டு சுமாரான ஒரு பழைய  சுடிதாரை மாற்றிக்கொண்டு புரசைவாக்கம் கிளம்ப தயாரானபோது, மற்றொரு ஜீப் வந்தது. இதில் வந்தவர்கள் காக்கி சட்டை அணிந்திருக்கவில்லை. வந்தவர்கள் போலீஸ் ஜீப்பை நோக்கிச் சென்றனர். எதோ பேசினார்கள்.
அடுத்த சில நிமிடங்களில் ஆறு, ஏழு பெண் போலீசார் ரோசம்மாவின் கையைப் பிடித்து வெளியே இழுத்தனர். ஆண் போலீசார் அந்த மறைப்பை அகற்றினர். சுவற்றில் மாட்டியிருந்த பையை எடுத்து தூக்கி எறிந்தனர். பையில் செல்வி, ரோசம்மா திருமணத்திற்கு சேர்த்திருந்த இருபதாயிரம் பணம் இருந்தது. அது சில்லறையும் நோட்டுகளுமாக கீழே சிதறி விழுந்தது.பத்திரிக்கை நிருபர்கள் படம் எடுத்துக் கொண்டனர். ரோசம்மாவை கதறக் கதற போலீஸ், வண்டியில் ஏற்றியது. சைதாப்பேட்டை சிறு குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் செய்தது. ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது மூன்று மாத சிறை என்ற தீர்ப்புப்படி பணம் கட்ட முடியாமல் சிறைக்குப் போனாள் ரோசம்மா.

மாலை வந்த செய்தித்தாளில் சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம். அகற்றும் பணி நடக்கும் போது கிடைத்த பையில் கேட்பார் அற்றுக் கிடந்த ரூபாய் ஐந்தாயிரம் அரசுக்கணக்கில் சேர்க்கப்பட்டது என்று வந்த செய்தியை பொதுமக்கள் பெரிதும் பாராட்டி முகநூலில் பதிவிட்டிருந்தனர்.    

Wednesday, 22 June 2016

மிருகக் காட்சி சாலை

து பெருநகரத்தின் மிகப்  பெரிய மிருகக் காட்சி சாலை. எப்பொதும் வண்ணவண்ணச் சீருடைகள் அணிந்த ஏதாவது ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியின் மாணவர்கள் கூட்டமும் அவர்களை "ஏய், வரிசையாய் போ", என்ற வாத்திமார்கள் பிள்ளைகளை அதட்டும் சப்தமும் அடிக்கடி கேட்டபடி இருக்கும். 
அன்று அந்த மிருகக் காட்சி சாலையில் எக்கச்சக்க கூட்டம். கூட்டத்தை விலக்க ஹார்ன் அடித்தபடி மூடிய அந்த மாமிச வேன் வந்து நின்றது. கதவு திறக்கும் முன்பே ஓடியும் பறந்தும் வந்தன தெரு நாய்களும், காகங்களும். உலோக முத்திரையுடன் பூட்டியிருந்த கதவை திறக்கும் முன் சுகாதார ஆய்வாளர் மற்றும் சூப்பரின்டெண்டெண்ட் வருவார்கள். இன்று அவர்கள் இருவருமே இல்லை. 
"நாளைக்கி நீயே பார்த்து வண்டிய அனுப்பிடு", "என்னைய எதிர்பார்க்காதே" என்று சூப்பரிண்ட் நேற்றே சொல்லிவிட்டார். எல்லாம் அவனுக்குத் தெரியும்.
கதவைத் திறந்து குதித்த வேன் டிரைவர், "தொள்ளாயிரம் கிலோ", என்றான். 
வவுச்சரில் ஆயிரம் கிலோ என்று பதிவு செய்தவன் டிரைவரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டான். "என்ன இன்னிக்கி 50 கிலோ கூடப் போட்டிருக்கு" என்றவனிடம், 
"மதுரையிலிருந்து அய்யா வீட்டிற்கு  விருந்தாளிக வந்து இருக்காக". "நாளை சரிபண்ணிக்கலாமாம், அய்யா சொன்னாவ" என்றவனிடம் சிரித்தபடி எனக்கு ஒரு 5 கிலோ நாளைக்கி தனியா எடுத்து வை, போசொல்ல வந்து எடுத்துக்கறேன்" என்றான்.
தினமும் வரும் கறி எடையில் ஐம்பது கிலோ சேர்த்து வவுச்சரில் எழுத வேண்டும் என்று சூப்ரண்ட் வேலை கத்துக் கொள்ளும் போதே சொல்லியிருந்தார். இன்றைக்கு 100 கிலோ.
வேனில் வந்த உதவி ஆள் குத்து மதிப்பாக ஒரு நூறு கிலோ கறியை எடுத்து வைத்து விட்டு மீதத்தை பட்டியல் பார்த்துப் பகிர்ந்து பிளாஸ்டிக் வாளிகளில் போட்டான். மொத்தம் கிட்டத்தட்ட 80 கூண்டுகள். பட்டியலில் ஒவ்வொரு கூண்டில் உள்ள விலங்கிற்கும் எத்தனை கிலோ மாமிசம் என்ற அளவு இருக்கும்.

தினமும் சூப்ரண்ட் அய்யா வீட்டிற்கு பதுவா இரண்டு கிலோ. இன்றைக்கு அவருக்கு மட்டும் 15 கிலோ. சானிட்டரி ஆசாமி சுத்த சைவம். கறி சாப்பிடாவிட்டாலும் கறியை காசா மாற்றி சாப்பிடுவார். அவரது தினசரி கோட்டா 2 கிலோவை அமீர் வந்து வாங்கிக் கொள்ளுவான். சானிட்டரி ஆசாமி அதை தர்மம் கொடுத்ததாக சொல்லிக் கொள்வார். ஆனால் அமீர் கிலோவிற்கு மார்கெட் விலையை விட 50 ரூபாய் குறைவாகத் தருவதாகச் சொல்லியிருக்கிறான். அவனுக்கு சிரிப்பு வரும். உத்திராட்சப் பூனைகள். நாளைக்கு அமிர் பாய் வாங்காட்டா இல்லை வாங்க ஆளில்லாட்டா சானிட்டரி சார் கறி சாப்பிட ஆரம்பித்து விடும். 

ஒவ்வொரு மூடியுள்ள பிளாஸ்டிக் வாளியிலும் அந்தத்த கூண்டின் எண் மற்றும் விலங்கின் படம் வரையப்பட்டிருந்தது. வாளியின் மூடியில் எடுத்துப்போக வேண்டிய பணியாளரின் பெயர் பெயிண்டில் எழுதியிருந்தது.
அப்புறம் மத்தவங்களுக்கு ஆளுக்கு அரைக் கிலோவும் கால் கிலோவுமா எவர்சில்வர் டப்பாகளில் போட்டாச்சு. கூட்டற லட்சுமி வீட்டுக்காரன் தான் தினமும் தனக்கு எலும்பு தான் கிடைக்கிறது. கறியே இல்லை என்று தகராறு செய்வான். இன்னிக்கு அவனுக்கு கொஞ்சம் கறியா போட்டாச்சு. 
மணி ஒன்று ஆனதும் பிளாஸ்டிக் வாளிகளை காத்திருந்த அந்தந்த பகுதி பணியாட்களிடம் மிருகங்களுக்கு உணவு தர கொடுக்க வேண்டும். காத்திருந்த பணியாளர்களை அழைத்து அவரவர் வாளிகளையும், அவர்கள் எவர்சில்வர் டப்பாகளையும் கொடுத்தாகி விட்டது. 
உணவு எல்லாக் கூண்டுகளுக்கும் போயாகி விட்டதற்கு பணியாட்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டான். அய்யா வீட்டு ராங்கி புடிச்ச சமையல்காரி அதிகாரமாக வந்து " இன்னா லேட்டு" அய்யாகிட்ட ஒரு வார்த்தை சொன்னா ஒன் சீட்டு கிழிஞ்சிடும்" என்று தினமும் சொல்லுவாள். அய்யா அவளிடம் அலமேலு, அலமேலு என்று வழிவதைப் பலமுறை கண்டிருக்கிறான். எதுக்கு பெரிய இடத்துப் பொல்லாப்பு. பரம சிவன் கழுத்துப் பாம்பு. 
"தோ. ரெடியா இருக்கு அக்கா", என்று அவன் சொன்னதும்
"இம்மாம் வெயிட்டு எல்லாம் தூக்க முடியாது. கோட்ரஸுக்கு எங்கூட வந்து கொண்டு வச்சிட்டுப் போடா தம்பி" என்றாள்.
மறுக்க முடியாது. மறுத்தால் ஒன்றுக்குப் பத்தாக அய்யாகிட்ட வத்தி வைக்கும். அய்யாவிடம் பாட்டு வாங்க வேண்டும். திரும்பிப் பார்த்தால் இன்னும் புலி படம் போட்ட ஒரே ஒரு பக்கெட் தான் எடுத்துப் போகப்படாமல் இருந்தது. வருகைப் பதிவேட்டில் சரிபார்த்தான். வருகைப் பதிவேட்டில் புலிக் கூண்டுக்கு உணவு தரும் தோமா அன்று விடுப்பு என்று குறிக்கப்பட்டிருந்தது.
"அக்கா புலிக் கூண்டிற்கு ஆளு இல்ல. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோக்கா", "புலி பசி தாங்காது" என்றவனிடம்

"அப்போ அய்யா பசி தாங்குவார்னு சொல்றியா" உன்னைய அவரு வைக்கற இடத்தில வைக்கலை. அதான் நீ ஆடுற" 



உண்மையிலேயே புலி பசி தாங்காது. வேற ஆட்களிடம் கொடுக்கலாம். ஆனால் மூன்று மணிக்குத்தான்  மற்ற டிரைனர்கள் வருவார்கள்.
சரி என்ன செய்வது. பேய்க்கு முன் புலி என்ன செய்யும். விதியே என்று அவள் பின்னால் இரண்டு பக்கெட்களையும் எடுத்துக் கொண்டான். புலி பக்கெட்டை திறந்து பார்த்த அலமேலு, அதிலிருந்து இன்னும் ஒரு கால்கிலோ கறியை தன் டப்பாவில் அடைத்துக் கொண்டது. வழியேற எசமானி போல் வசவு சொல்லியபடியே வந்தது. இருக்கட்டும். அம்மாவிடம் இதைப் பற்றி கொஞ்சம் காதில் போட வேண்டியதுதான். இல்லாட்டா இதுவே எசமானியாக மாறிவிடும் என்று நினைத்துக் கொண்டான். 
லக்கி பிரியாணி கடை பையன் வந்து மீதமுள்ள இருபத்தைந்து கிலோ கறியை வாங்கிட்டு போயிட்டா அப்புறம் வேற வேலை இல்லை. தோட்டக்கார மாரியை ஆபிஸில் விட்டு விட்டு பக்கெட்டை தூக்கியபடி புலிக் கூண்டை நோக்கி நடந்தான். லக்கி பிரியாணி கடையிலிருந்து கிலோவுக்கு 5 ரூபாய் இவனுக்கு கமிஷன் டாண் என்று ஒவ்வொரு மாதமும் முதல் தேதி வந்துவிடும். மற்றபடி அது யாரால் விற்கப்படுகிறது எவ்வளவுக்கு விற்கப்படுகிறது என்பதெல்லாம் தெரியாது. பெரிய இடத்து சமாச்சாரம் என்பதால் அதில் அவனுக்குப் பெரிய அளவில் ஈடுபாடில்லை. 
கூண்டுப்புலிக்கு தினம் வேண்டிய அளவு உணவை விட குறைவாகவே கிடப்பதால் மிகவும் பசித்துக் கிடந்தது. போதாத குறைக்கு இன்று மணி வேறு அரை மணி நேரம் அதிகம். கடும் பசியுடன் சரியான வேட்டைக்கு காத்திருந்தது.
அவனுக்கு காலையிலிருந்தே மனசு சரியில்லை. தங்கச்சியின் மாமியார் இன்னும் போடாத அந்த மைனர் செயின் பற்றி பேசுகிற மாதிரி ஏசியது பற்றியே நினைத்தபடி இருந்தான். போதாத குறைக்கு இங்கே இந்த அலமேலுவின் அட்டகாசம். அழுகை வந்தது. ஆண்பிள்ளை அழக்கூடாது. அடக்கிக் கொண்டான்.இந்த சிந்தனையில் புலிக்கூண்டின் நடு கம்பித் தடுப்பை போட மறந்து முன் கதவைத் திறந்தான். தான் உள்ளே நுழைந்ததும் கதவை சாத்தி தாளிட்டான்.
பக்கெட்டின் பச்சை மாமிச இரத்த வாடைக்கு புலி உறுமியபடி வந்த போது வேடிக்கை பார்த்த மக்கள் கூட்டம் "ஓ" எனக் கத்தி ஆர்ப்பரித்துக் கூச்சல் போட்டது.பக்கெட்டை வைத்து வெளியே வர கதவை பார்த்து வரும் போது அவன் பின் மண்டையில் புலி ஓங்கி அடித்து கவ்வியபடி உட்புறம் கம்பீரமாய் நடந்தது. 
வெளியே ஆபீசில் லக்கி பிரியாணி கடைப் பையன் அவன் வருகைக்காக காத்திருந்தான்.


Monday, 20 June 2016

அண்னாமலையாருக்கு ஒரு மடல்

                                                                                                                               சென்னை,
                                                                                                                                20.06.2016.

அன்புள்ள அண்ணாமலையாருக்கு,
அன்பன் சுப்ரமணியன்  எழுதுவது. உன்னிடம் செல் போன் இல்லாததாலும், கம்ப்யூட்டர் வசதிகள் இல்லை என்பதாலும் இப்படிக் கடிதம் எழுத வேண்டியுள்ளது. நான் கடிதம் எல்லாம் எழுதி பல காலமாகிவிட்டது. இப்போதெல்லாம் e - mail, message, Whats app, Facebook இப்படித்தான் தொடர்பு கொள்கிறேன். என்னமோ நான் ஜம்பமாகச் சொல்வதாக நினைக்காதே.  என் ஜம்பம் உன்னிடம் சாயாது என்பது நம் இருவருக்கும் தெரியும். நிற்க. நாங்கள் பத்திரமாக நேற்றிரவு  சென்னை வந்து சேர்ந்தோம்.
தினமும் காலையில் உன்னை வந்து அடைய வேண்டும் என்று நினப்பது வாடிக்கைதான்.

அதுக்காக திடீரென்று, "சனிக்கிழமை என்னை வந்து பார்" என்று கனவில் வந்து சொன்னால் என்ன அர்த்தம்? மாதக் கடைசியில் ஒரு பென்சன் வாங்கும் குடும்பஸ்தன் கஷ்டங்கள் நீ அறியாததா? எப்படியோ உருட்டிப்பிரட்டி சனிக்கிழமை வர முடிவு செய்து விட்டேன்.

ஒரு டவேரா வண்டியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு குடும்ப சகிதம் சனிக்கிழமை கார்த்தால  7 மணிக்கு கிளம்பினோம். போருர் டோல் ஆரம்பிச்சா உன்னை வந்து சேர்வதற்குள் 75, 75 ரூபாயா சொத்து பூராவும் காலியாகி விடும் போல. அச்சிறுப்பாக்கத்தில் ரமணா ஹோட்டல் அருகே கையில் கொண்டு வந்திருந்த இட்லி, சட்னி, சாம்பாருடன் சாப்பிட்டாயிற்று. பாவம் என் மனைவி, ரகுராம் ராஜன் மாதிரி நம்ம நிதி நிலையைப் புரிஞ்சிண்டு காலை 4 மனிக்கே எழுந்து டிபன் தயார் செய்து இருந்தாள். இல்லாவிட்டால் இன்னும் ஒரு 1000 ரூபாய் துண்டு விழுந்திருக்கும்.

டிரைவர் பாலா நல்ல மனிதர். அதிகம் சிரமம் இல்லாமல் அருமையாக காரை இயக்கினார். வழக்கமா சாஸ்தாக் குட்டி சார்தான் வருவார். இந்த முறை அவர் குற்றாலத்திற்குச் சென்று விட்டதால் பாலா வந்தார். 1970 - 1980 கால கட்ட இளைய ராஜா பாட்டாகப் போட்டார். நன்றாக அனுபவித்தோம். "ஆமாம் பக்திப் பாடல்கள் கிடைக்கவில்லையா" என்ற உன் முணுமுணுப்பு கேட்கிறது.
S.P.B யின் நமச்சிவாயா பாட்டும் கேட்டோம். இப்பொ திருப்தியா?
10.30 க்கு உன் ஊருக்குள் வந்து விட்டோம். நல்ல நேரம் பார்த்து வரச் சொன்னாய். அன்று மாலை  முதல் பௌர்ணமி. உன்னைச் சுற்ற வரும் அடியவர் கூட்டத்தைக்  கட்டுப்படுத்த வாகனங்களை  3 கிலோமீட்டர் தூரம் உன் வீட்டிலிருந்து தள்ளி நிறுத்தச் சொல்லுவார்களாமே. நல்ல வேளை நாங்கள் உன் இல்லம் வரும் வரை அப்படி நெரிசல் இல்லை.

வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கினால் உன் வீட்டை மராமத்து அதாவது திருப்பணி செய்கிறார்கள். அதை நீ சொல்லவே இல்லையே. சரி என்னைப் போல எத்தனை பேர் கனவில் வர வேண்டியுள்ளது. உனக்கும் அலைச்சல்தான். சரி மராமத்து நடக்கும் வீட்டில் எப்படி நீயும் உண்ணாமலை தாயாரும் இருக்கமுடியும்? ஒரே தூசும் தும்புமாக இருக்குமே. அலர்ஜி ஆகிவிடும். ஜாக்கிரதை.



உன் இல்லத்திற்கு வருவதற்கு முன் காலணிகளை விட காலணி பாதுகாப்பு மையத்திற்கு வந்தால் பெரிய எழுத்தில் இலவசம் என்று போட்டிருந்தார்கள். ஆனால் அங்கு எட்டு சோடிகளுக்கு 16 ரூபாய்  கேட்டனர். கொஞ்சம் கோபம் வந்தது. ஆனால் கேட்ட மனிதர் சிவப்பழமாக இருக்கவே என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன். எனக்கு அடுத்து வந்த மனிதர் வாய் விட்டே கேட்டு விட்டார். அவருக்கு நல்ல அர்ச்சனை கிடைத்தது.
காசு கொடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை. 5 ரூபாய் கூட வாங்கிக் கொள்ளட்டும்.  சட்டப்படி காலணி பாதுகாப்புக்கு 5 ரூபாய் என்று போர்ட் போட்டு வசூலிக்கட்டும். அதை விடுத்து இலவசம், காசு கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்று பெரிய அறிவிப்புப் பலகை எல்லாம் வைப்பது யாரை ஏமாற்ற? எதுக்கு எல்லாம் யோக்கியமாக நடப்பதாக ஒரு பில்டப்? உன்னை ஏமாற்ற முடியாது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. பாவம். அறியாமல் செய்கிறார்கள் மன்னித்து விடு. அந்த பொய்கள் உன் கண்ணெதிரவே நடப்பது கொஞ்சம் மனதுக்கு நெருடலாயிருந்தது.

உள்ளே சுமாரான கூட்டம். அதிலும் புதிது புதிதாக ஆட்கள் உன்னைப் பார்க்க குறுக்கு வழியில் சேர்கிறார்கள். எல்லாம் உன் மைத்துனர் மனைவி லட்சுமியின் கடாட்சம்தான் காரணம். கொடுக்க வேண்டியதை கொடுத்து உன்னை சீக்கிரம் பார்த்துவிட வேண்டுமாம். அந்த கூட்டத்தில் நீ யாரைப் பார்த்தாய் ?  உன்னையே நினைத்த பூசலாருக்கு முதல் இடம் தந்து ராஜராஜனை பின்னுக்குத் தள்ளியவன் ஆயிற்றே நீ. கட்டாயம் உனக்கு தரிசனம் தந்த செல்வந்தர்களைவிட ஏழை பக்தன் தான் உனக்கு முக்கியம் என்பது கூட அறியாத மனிதர்கள். உன்னை விற்பனை செய்பவர்களையும் பொறுத்தருள்வாய். காரணம் அன்பே சிவம் என்பாய். சரி.

நீ  ஏமாந்த சோணகிரிதான். பஸ்மாசுரன் முதல் இன்றைய பல திருத்தல நிர்வாகங்கள் வரை எல்லாரும் உன்னை நல்லா ஏமாற்றுகிரார்கள். உனக்கு நல்லா அபிசேகம் பண்ணினால் உச்சி குளிர்ந்து போய் எல்லாவற்றயும் மன்னித்து விடுவாய்.

அம்மை உண்ணாமுலையின் சன்னதியில் கூட்டம் இல்லை. யாரோ  நல்ல உள்ளம் கொண்ட  சிவனடியார்கள்  இரண்டு பேர் தந்த சர்க்கரைப் பொங்கல், புளியோதரை சாப்பிட்டு கை கழுவினோம். நல்லவேளை கை கழுவும் தண்ணீருக்கு நிர்வாகம் காசு வாங்கவில்லை.

உன் சொத்துக்களை ஊரெங்கும் சாப்பிடுகிறார்கள். நீயோ இமைய மலையில் இயற்கை  AC யில் புலித்தோலை கட்டிக் கொண்டும் இடுகாட்டுச் சாம்பலை பூசிக்கொண்டும் கவலையின்றி இருக்கிறாய். என்னால் அவ்வளவு தூரம் வர முடியாது. அந்த அளவு உடல் வலிமை நீ அருளவில்லையே. பரவாயில்லை, இந்த உலக மேடையில் ஆடி முடிந்ததும் அங்கு வந்து உன் திருப்பாதம் தானே அடையப் போகிறேன்.

முதலில் ரமணாசிரமம். நாங்கள் சென்ற நேரம் அதிஷ்டானம் திறக்கவில்லை.எனவே வெளியில் சுற்றிவிட்டு அதிஷ்டான சன்னதியை வணங்கி வெளியே வந்தோம்.அடுத்தது உன் வீட்டைச் சுற்றி வந்தோம். காரில்தான் வலம்  வந்தோம். 14 கிலோமீட்டர் வலம் வர உடம்பில் தெம்பு இல்லை. ஈசானலிங்க சன்னதியில் தரிசனம்  செய்துவிட்டு வரும் வழியில் ஒரு சிவனடியார் காசு கேட்டார். பார்க்கும்  சிவனடியார்களுக்கு கொடுக்க 1 மற்றும் 2  ரூபாய் நாணயங்கள் வைத்திருந்தேன். அதில் ஒன்றைத் தந்ததும் கோபமாக இதையெல்லாம் வாங்க மாட்டேன்.



கோவில் கட்டிக் கொண்டிருக்கிறேன். வந்து என் ஊரில் பார் என்றார்.   அவரது சிவபக்தியைப் பார்த்து 10 ரூபாய் வாங்கிய பின் பெரிய கும்பிடு போட்டார். சிவனடியார் இந்த அற்ப மானிடனை 10 ருபாய் காசுக்கு கும்பிட்டதை சகிக்க முடியவில்லை.



அடுத்து அடையார் ஆனந்த பவனில் நல்ல சாப்பாடு. இரண்டு விஷயங்கள் குறிப்பிட வேண்டும். முதலில் இருக்கைகளுக்கு இடையில் நல்ல இடைவெளி. மற்றது சென்னையைப் போல் சாப்பிடும் போதே பின்புறம் நின்றபடி நாம் சாப்பிடுவதை இமைக்காமல் எப்போ எழுந்திடுவோமென்ற எதிர்பார்ப்புடன் ரசம் சாப்பிட்டாச்சு, இப்போ மோர் என்று நேர்முக வர்ணனை சொல்லியபடி   பார்க்கும் கூட்டம் இல்லை. சென்னையில் கல்யாண சத்திரங்களிலும் இதே கதைதான். உன் கல்யாணத்தில் பொதிகை மலையில் எப்படி சமாளித்தாய்? 33 கோடி தேவர்கள் , கோபக்கார ரிஷிகள் , பாவம் நீ .

மணி இதற்கே பிற்பகல் 3.00 இன்னும் 1மணி நேரத்தில் கிரிவலம் தொடங்கும் சமயம் என்பதால் திருக்கோவிலூரில் உன் மைத்துனர் மாலவனை காணப் புறப்பட்டோம்.
கோவிலும் அதிலுறைந்த உலகளந்தவனும் அத்தனை அழகு. கூட்டம் அவ்வளவு இல்லை. அந்த பச்சை வண்ணன் தரிசனம் மனம் நிறைத்தது.
அங்கிருந்து அப்படியே ரகோத்தமர் மடம் வந்து அவரது ஜீவ சமாதியை வணங்கினோம். குரங்குகளுக்குப் பஞ்சமில்லை. நாங்கள் சென்ற பொழுது அங்கு மாலை வேளை பூஜைகள் நடந்து கொண்டிருந்தன.

நீ வழி நடத்தியபடி அடுத்து ஞானந்த தபோவனம். ஞானாந்தரின் அதிஷ்டானத்தில் எளிய வழிபாட்டு முறைகள், மாலை வழிபாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு எளிய உணவு வழங்கப்படுகிறது. உணவு  உண்டபின், நீ வழிகாட்டியபடி என் அன்னை, தந்தை, சகோதரர் நினவு நாட்களில் அன்னதானம் செய்ய ஏற்பாடுகள் செய்தபின் சென்னை நோக்கி பயணம் . அரகண்ட நல்லூர் வரும் போது சிறிய மழை. அப்புறம் 10 கிலோமீட்டருக்குப் பின் ஒன்றுமில்லை. நள்ளிரவு 12.30 க்கு பத்திரமாக இல்லம் வந்து சேர்ந்தோம்.
எங்களை வரவழைத்து மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்க வைத்த உனக்கு எப்படி நன்றி சொல்வேன்.
உன்னிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். என்னை பிற மனிதர்களுக்கு உபயோகமாக வாழவை. எவரோடும் பகைமை கொள்ளாத மனதைக் கொடு.

அடுத்தமுறை பயணமும் உனக்கான பயணமாக அமையட்டும், தினமும் இங்கு என் இல்லம்  அருகில் உள்ள உன் இல்லத்திற்கு  வந்தால் கண்டிப்பாக நீ தூசி தும்பு பிரச்சனை இன்றி  இருப்பாய் என்று நினைக்கிறேன். உனக்கும் வீட்டு ரிப்பேர் வேலைகள் முடியும் வரை சௌகரியமாக இருக்கும்.

உன்னுடைய எதையும் மன்னிக்கும் குணம் எனக்கும் கைவர வேண்டும். உன் திருக் கோயில்களில் எல்லாம் உன் மைத்துனர் க்கு இடம் தருவாய். ஆனால் உன்  மைத்துனர் திருக் கோவில்களில் உனக்கு இடம் கிடையாது. இனிமேலாவது  இப்படி ஏமாளியாக இருக்காதே.

நான் ராஜா மகள் எழுதிய இப்படிக்குக் கோதை யின் பிரதியெடுத்த பதிப்பு என்று நீ உண்ணாமுலைத்தாயிடம் சொல்லிச் சிரிப்பது கேட்கிறது.  புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது. பூனை என்றதும் ஷாஜகான் சார் பூனைக் குட்டிகளுடன் படும் பாடு நினைவுக்கு வந்தது.  அடுத்தமுறை வரும் வழியில் இளைஞர் சுந்தரபாண்டியனையும் அவர் இல்லத்தில் தினம் வரும் காக்கைகளையும்  விழுப்புரத்தில் காண ஆவல்.அதற்கும் அருள் செய் ஈசனே.

சிவார்ப்பணம்.ஓம் நமச்சிவாயா.

உன் நினைவை மறவாத,
வெ.சுப்ரமணியன்.