Saturday, 3 December 2016

பவுன் மூட்டை (நெடுங்கதை)


காரையார் என்ற நெல்லை மாவட்டத்தில் உள்ள ஊரில் அரசுப் பள்ளி ஆசிரியர் பணியில் சேர எனக்கு ஆணை வந்ததும் எல்லோரும் சொன்னதே,” அந்தப் பக்கத்து ஊர்கள் எல்லாம் நல்ல செழிப்பான ஊர்கள்தான். பக்கத்தில் இரண்டு அணைகள், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம், இயற்கை எழில் கொஞ்சும். ஆனா உன்ன மாதிரி ஆட்களுக்கு சரிப்பட்டு வராது பொறந்தது முதல் சென்னை வாழ்க்கையை அனுபவித்த உனக்கெல்லாம் அந்த கிராமத்து வாழ்க்கையெல்லாம் சரிப்பட்டு வராது” என்பதுதான்.





அவர்கள் வார்த்தைகள் கொஞ்சம் சிந்திக்க வைத்தது. நண்பன்  குமார் கூட , “டேய், எங்க சித்தப்பாவுக்கு தெரிந்த அரசியல் பிரமுகர் ஒருத்தரு இருக்காருடா. ஸ்கூல் எஜிகேஷன் டிபார்ட்மெண்டையே கையில் வைச்சிருக்கார். நீ இரண்டு லட்சம் செலவு பண்ணினால் போதும், இங்கே சிட்டி பக்கத்திலேயே எங்கனா ஒரு ஸ்கூலில் மாடிபிக்கேஷன் ஆர்டர் வாங்கிடலாம்” என்றான். “இதுவரை எதுக்குமே நான் லஞ்சம் கொடுத்ததில்லை. இனிமேலும் கொடுப்பதாக இல்லை” என்று சொன்னதும் சிரித்தான். “தோ டா, இன்னும் இரண்டு மாசத்தில் ஐந்து லகரம் தரேண்டா, டிரான்ஸ்பர் வாங்கிக் கொடுடா ன்னு என் வூட்டாண்ட நீ நிக்கப்போற பாரு” என்று சவால் வேறு விட்டான். அப்பா அம்மாவிற்கு என்னைத் தனியாக விட மனதில்லை.
இண்டர் நெட்டில் காரையார் என்ற பெயரை வைத்துத் தேட ஓரளவுக்கு பரிச்சயமானது. திருநெல்வேலியிலிருந்து சுமாராக ஒரு மணி நேரப் பயணம். மலை அடிவாரம் என்று சொல்ல முடியாது. ஆனால் ஆறேழு கிலோமீட்டர் தூரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை. நான் பணியாற்ற வேண்டிய பள்ளி மலை அடிவாரத்தில் பாவனாசத்திற்கு மேல் காரையாரில் அமைந்திருந்தது என்பதை அறிந்து கொண்டேன்.  அப்புறம் பெட்டி படுக்கை எல்லாம் கட்ட ஆரம்பித்தேன். அப்பா, அம்மா இருவருக்கும் நான் அங்கு போய் வேலை செய்வதில் விருப்பம் இல்லை. இருந்தாலும் அரசாங்க பள்ளி, மெரிட்டில் கிடைத்த வேலை என்பது ஒரு பக்கம். அப்பா கொஞ்சம் இடதுசாரி சிந்தனை கொண்டவர். ஆகவே லஞ்சம் கொடுத்து டிரான்ஸ்பர் என்பதில் உடன்பாடு இல்லை. மேலும் அவ்வளவு பணமும் கிடையாது.
திங்கள் கிழமை பணியில் சேருவதற்கு இரண்டு நாளுக்கு முன்பாகவே வெள்ளிக் கிழமையே நெல்லைக்கு போய் விட்டேன். நெல்லையில் சுமாரான ஒரு லாட்ஜில் தங்கிக் கொண்டு அந்த ஊருக்கு, பஸ் பிடித்து போனேன். நல்ல மார்கழி மாதக் குளிருடன் இதமான வெயில் சின்னச் சின்ன  அழகான கிராமங்கள் பச்சைப்பசேல் வயல்கள், தூரத்தே மேற்கு தொடர்ச்சி மலைகள் என்று பயணம் ரம்யமாக இருந்தது.

பள்ளிக்கூடத்திற்கு இறங்க வேண்டிய இடம் வந்ததும் கண்டக்டர், “ஆள் இறக்கம்”, என்று சப்தமாகச் சொல்லி விசிலடித்து “சார்வாள், இறங்குங்க” என்றதும் ஊரை கூடுதலாகப் பிடித்துப்போனது. வழியேற கண்டக்டரிடம் பேசியபடி வந்ததில் நிறைய தெரிந்து கொண்டேன். “சார்வாள், கமல் நடித்த பாவனாசம் படம் பார்த்திங்கல்லா, அது இங்கனதாம் எடுத்தாவள்ளா” என்று சொல்லி ஆகக் கூடி மனதில் நல்லதொரு ஆரம்பம் தந்து விட்டார்.  அந்த பள்ளிக்குப் போக நான் இறங்கிய இடம் பாவனாசம் கோவில். பக்கத்தில் 50 அடி ஆழத்தில் சுழித்தோடும் தாமிரபரணி ஆறு. அங்கிருந்து காரையார் போக வேண்டும். படிக்கிற குழந்தைகள் எல்லாம் பெரும்பாலும் அங்கேயே உள்ள மலைக்கிராமங்களில்  வசிப்பவர்களே. விக்ரமசிங்கபுரம் என்ற வி.கே புரம் தான் அருகிலுள்ள பெரிய நகரம். பெரிய நெசவாலை ஒன்று அங்குள்ளது. வி கே புரத்தில் தங்கிக் கொண்டு தினம் காரையார் போக வர வசதியாக இருக்கும். அடுத்த முறை சென்னையிலிருந்து வரும் போது தண்டர்பேர்டை ரயிலில் போட்டு எடுத்து வந்து விட வேண்டும்.
தினம் வி கே புரத்திலிருந்து காரையார் செல்ல தோதாயிருக்கும். பேருந்து வர எப்படியும் ஒரு மணி நேரமாகும் என்பதால் எப்படி பொழுதைக் கழிப்பது என்று நினைத்தவன் கோவிலுக்குள் நுழைந்தேன்.

அதிகம் கூட்டம் இல்லை. சுற்றி வந்தவனுக்கு ஒரு பெரிய உரலில் மஞ்சள் இடிப்பதைப் பார்த்தேன். அர்ச்சகரிடம் விசாரித்ததில் மணமாகாத ஆண்களும், பெண்களும் மஞ்சள் கொண்டு வந்து இடித்தால்  விரைவில் திருமணம் ஆகும் என்ற ஐதீகம் என்றார். அப்போது தான்
 "சொன்னாலும் நீர் கேளீரே, சும்மா சுவர் போல் இருந்தீரே
பொன்னா பொன் ஆவரையுடன் பொன்னும் அத்தனை மாலைச் சாற்றால்
கன்னார் பேதி சிலை ரசம் காந்தம் வெள்ளியும் தானுருக்க
என்னாம் என்னாம் என்னாதே பொன்னாம் பொன்னாம் பொன்னாமே"
என்ற பாடலை யாரோ பாடக் கேட்டேன்.

இங்கே இந்த பாடலைப் பாடுவது யார் என்று நினைக்கும் போதே, “பவுன் மூட்டை சாமி வாங்க” என்று அர்ச்சகர் கூப்பிட்ட அந்த  ஆளைப் பார்த்தேன். எப்படிப் பார்த்தாலும் ஐம்பது வயது மதிக்கலாம் . நடு வயதுக்கே உரிய வழுக்கை, நரைத்த முடி, மழுமழு என்று சவரம் செய்த முகம், எம்.ஜி.ஆர்அரும்பு மீசை , தூய வெள்ளை வேட்டி, மல் ஜிப்பா, பச்சை கலர் பட்டை பெல்ட்,  கழுத்தில் தங்கத்தில் உருத்திராட்சம் கட்டிய தங்கச் சங்கிலி. நெற்றியில் பட்டையாக திருநீறு, சந்தனத்தில் குங்குமப் பொட்டு என்று கிராமத்து மைனர் மாதிரி தோற்றம், ஆனால் கையில் சம்பந்தமில்லாத இரண்டு அழுக்கு வேட்டி மூட்டைகள். என்னவோ மனதில் இனம் புரியாத உணர்ச்சி. துக்கமா, சந்தோஷமா என்று சொல்ல முடியாத உணர்ச்சி அந்த மனிதரைப் பார்த்ததும் ஏற்பட்டது. கைக் கடிகாரம் மணி எட்டு  என்று காட்டியது.
“செம்பு பொன்னாகும் சிவாய நமவென்னில்
செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்
செம்பு பொன்னாகும் சிரீயும் கிரீயுமெனச்
செம்பு பொன்னான திருவம் பலமே”
என்றபடி பாடிக்கொண்டு வந்தவர்
என் பக்கம் திரும்பி, “என்னைத் தேடி வந்து விடுவாய் என்று தெரியும். வா, படித்துறையில் நிதானமா உட்கார்ந்து பேசலாம்” என்று சொல்லிவிட்டு விடுவிடு என்று வெளியில் போனார் அந்த மனிதன்.

இந்தத் தோற்றத்தில் சென்னையில் இதுவரை யாரையும் பார்த்ததில்லை. யார் இந்த மனிதர்? நமக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்? நான் வந்த விஷயமே வேற , அப்படி இருக்க என்னுடன் பேச வேண்டுமாமே. கோவிலுக்கு வராமல் பஸ் ஸ்டாண்டிலேயே காத்திருந்திருக்கலாமோ? பள்ளிக்கு வேறு போக வேண்டும். அறை பார்க்க வேண்டும். அடுத்த சனி ஞாயிறில் சென்னை போக டிக்கெட் எடுக்க வேண்டும் இப்படி தலைக்கு மேல் வேலைகள் இருக்க யாரோ நாட்டு ஷோக்காளி கூப்பிட்டதை பெரிதாக எடுத்துக் கொண்டு போக வேண்டுமா?
அர்ச்சகரைக் கேட்கலாம் என்றால் கூட்டம் சேர ஆரம்பித்து விட்டதில் எதுவும் கேட்க முடியவில்லை.

சரி நம்ம வேலையை நாம் பார்க்கப் போகலாம் என்று முடிவெடுத்து பஸ் ஸ்டாண்ட் நோக்கி வரவும் காரையார் போகும் ஒரு தனியார் பேருந்து வரவும் சரியாக இருந்தது. கைகாட்டி நிறுத்தி வண்டியில் ஏறி விட்டேன். பேருந்து சட்டென நடு ரோட்டில் எஞ்ச்சின் அணைந்து போய் நின்று விட்டது.  பத்து நிமிடமாய் ஓட்டுநர் பலமுறை முயன்றும் வண்டி கிளம்பவில்லை. கண்டக்டர், “ எல்லாரும் இறங்கிடுங்க, வண்டி பிரேக் டவுண் ஆகிடுச்சு” என்று அறிவித்த அடுத்த நொடியில் கோவிலில் நான் பார்த்த மைனர் ஆசாமி வண்டியில் ஏறினார். வண்டிக்குள்ளிருந்து இறங்கும் யத்தனத்தில் இருந்த பயணிகளை, “எல்லாரும் இடத்தில் போய் உட்காருங்க. மாரிமுத்து நீ வண்டியை ஸ்டார்ட் பண்ணு” என்று கட்டளையிடும் குரலில் சொன்னார். ஓட்டுநர் மாரிமுத்துவும் வண்டியை இயக்க சமர்த்தாக எஞ்சின் இயங்க ஆரம்பித்தது.

வண்டிக்குள் ஏறி சுற்றும்முற்றும் பார்த்தவர், என்னைப் பார்த்து சிரித்து
“ சாயங்காலம் உன் காரையார் பள்ளிக்கூட வேலையெல்லாம் முடித்துக் கொண்டு என்னை படித்துறையில் பாரு” என்று சொல்லிவிட்டு இறங்கிப் போனார். பேருந்தில் இருந்த எல்லோரும் என்னையே பார்க்க வெட்கம் பிடுங்கித்தின்றது. வாழ்க்கையில் என்னையே நான் அன்னியமாக உணர்ந்தது அந்தக் கணத்தில் தான்.

கண்டக்டரிடம் காரையார் ஒரு டிக்கெட் என்று நூறு ரூபாய் நோட்டை நீட்டியதும்,
“ சார்வாளுக்கு எந்த ஊர்? பவுன்மூட்டை சாமியை மின்னகூட்டியே தெரியுமா? சாமிக்கு வேண்டிய ஆளுன்னு தெரிஞ்ச பின்னாடி டிக்கெட் எல்லாம் வேண்டாம் சார்.  உங்களுக்கு காசு வாங்கி சீட்டுக் கொடுத்தது முதலாளிக்குத் தெரிந்தால் என் சீட்டுக் கிழிஞ்சிடும். காரையாரில் எங்கே போகணும் சார்? அடுத்த டிரிப் மதியம் இரண்டு மணிக்கு காரையார் வருவேன். அதுக்குள்ள எல்லாம் முடித்து வந்திடுங்க. அப்புறம் விட்டா நாலு மணிக்குத்தான்” என்று மூச்சு விடாமல் பேசினார்.

என்னவோ தலை சுற்றியது. ஒன்றும் புரியவில்லை. நல்ல மர்ம நாவலைப் படிக்கிற மாதிரி இருந்தது. கண்டக்டரிடம் பவுன் முட்டை சாமி என்ற நாட்டு ஷோக்காளி பற்றிக் கேட்க நினைத்து வாய் திறந்த போது வார்த்தை வர மறுத்தது. நாக்கெல்லாம் உலர்ந்து போனது.
ஒரு வழியாக பள்ளிக் கூடம் வாசலில் நிறுத்தி இறக்கி விட்ட நடத்துனர்,
 “சார் மறக்காமல் சாமிய பார்த்திடுங்க. நான் இரண்டு மணி டிரிப்பில் உங்களை பிக்அப் பண்ணிக்கிறேன்.ரை ரைட்ட்ட்ட்” என்று இரட்டை விசில் கொடுத்ததும் பேருந்து  மெலிதாகப் புகையைக் கக்கி விட்டுச் சென்றது.

பள்ளிக்கூடம் சிறியதுதான். மொத்தமே என்னையும் சேர்த்தால் எட்டு ஆசிரியர்களும் ஒரு தலைமை ஆசிரியர், ஒரு அலுவலக உதவியாளர் மற்றும் ஒரு இளநிலை உதவியாளர் ஆக  பதினோரு பேர்கள். மாணவர்கள் மொத்தம் முன்னூற்றுச் சொச்சம்தான். வாத்திமார்கள் எல்லாம் அம்பாசமுத்திரம், கல்லிடை, விகே புரம் என்று  உள்ளூர் வாசிகள். நான் மட்டும்தான் மெட்ராஸ்காரன். என் தலையலங்காரம், உடையலங்காரம் எல்லாம் அவர்களிடமிருந்து கொஞ்சம் வேறுபட்டிருந்ததை என்னை அவர்கள் பார்த்த பார்வையில் அறிந்து கொள்ள முடிந்தது. அப்புறம் நான் விரைவில் மாறுதல் பெற்றுச் சென்று விடுவேன் என்ற எண்ணமும் அவர்களுக்கிருந்ததை அறிய முடிந்தது. முக்கியமாக அவர்கள் எல்லாம் நாற்பதைக் கடந்தவர்கள், மணமானவர்கள். நான் மட்டும்தான் நடு இருபதுகளில் இருந்த பிரம்மச்சாரி.

ஓரளவுக்கு பரிச்சயம் ஆகி விட்டனர். மதியம் சத்துணவு ஆயாமா கொடுத்த சாதமும் சாம்பாரும் அத்தனை ருசியாக இருந்தது. இரண்டு மணி பேருந்து பிடிக்க சாலைக்கு வரும் போது அலுவலக உதவியாளர் கசமுத்து கூட வந்தார். அவரிடம் பவுன் மூட்டை சாமி பற்றிக் கேட்க நினைத்தால் மறுபடியும் எதோ ஒன்று என் வாயைக் கட்டியது. சம்பந்தமில்லாமல் எதையோ பேச முடிந்ததே ஒழிய பவுன் மூட்டை சாமி பற்றி எதுவும் பேச முடியவில்லை.

ஞாயிற்றுக் கிழமை வந்தால் தங்குவதற்கு கசமுத்து விகே புரத்தில் நல்ல இடம் பார்த்துத் தருவதாகச் சொன்னார். வாடகை அதிக பட்சம் ஆயிரம் என்றார். பெருந்து வந்தது. நடத்துனர் சினேகமாக சிரித்து சாப்பிட்டாச்சா சார், என்றவர் கசமுத்துவிடம், “அண்ணாச்சி, பவுன் மூட்டை சாமிக்கு  சார்வாளைத் தெரியும். அவாளத்தான் இப்ப பார்க்க பாவநாசம் போறாவ” என்று சொல்லிவிட்டுப் புறப்பட விசில்  கொடுத்தார்.

என்னை கோவில் அருகே இறக்கி விட்டார் நடத்துனர். படித்துறையில் நிறைய சுற்றுலாப் பயணிகள். கிட்டத்தட்ட ஐம்பது படிகள் கீழே இறங்க
ஸ்படிகமாய் தாமிரபரணி ஓடிக்கொண்டிருந்தது. காலையில் பார்த்த மனிதரைத் தேடினால் அந்த அங்க அடையாளத்தில் யாரும் இல்லை.

பக்கத்தில் உள்ள மண்டபத்தில் வந்து உட்கார்ந்த என் அருகில் வந்து அமெரிக்க உச்சரிப்பில், “கேன் யூ ரெககனைஸ் மீ, வீ மெட் சம் டைம் பேக் இன் சென்னை இன் எ மூவி தியேட்டர்” என்று ஆங்கிலம் பேசியவனை  உற்று நோக்கினேன்.
“டூ யூ ஸ்டில் கீப் தட் கோல்டன் பின் தட் ஐ ப்ரெசென்டெட் யூ தட் டைம்” என்றதும் புரிந்தது.

அது நன்றாக நினைப்பிருக்கிறது.  போன 2015 ஜனவரி 26 அன்று பெரம்பூர் எஸ்2 தியேட்டரில் “ஐ” படம் பார்க்கச் சென்றிருந்தேன். படம் ஆரம்பித்த பின் என் அருகில் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்த ஆசாமி இடை வேளையில் விளக்குகள் எரிய ஆரம்பித்ததும் அந்த ஆசாமியின் முகத்தைப் பார்த்தேன். “ சிரித்தபடி படம் எப்படி சார்” என்றான்
“ ம். பரவாயில்லை. ஆனா நம்ப முடியாத கதை” என்றதும்
“பல நேரங்களில் உண்மைகள்  கட்டுக்கதைகளை விட விசித்திரமாக இருக்கும் என்பார்களே. இப்போது கூட என்னால் நம்ப முடியாத ஒன்றை செய்ய முடியும்” என்றான்.
“உங்கள் சட்டையில் ஒரு குண்டூசி குத்தியிருக்கிறது அல்லவா. அதை என்னிடம் கொடுங்கள்”
கண்ணெதிரில் தன் கையில் வைத்திருந்த பையிலிருந்து  ஒரு பச்சிலையை எடுத்து அந்த குண்டூசி மீது தேய்த்துத் திரும்பவும் என்னிடமே திரும்பக் கொடுத்தவன், “ படம் முடிந்ததும் உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கு” என்றான்.
நான் கழிப்பிடம் சென்று விட்டு மீண்டும் இருக்கைக்கு வந்த போது ஆசாமியைக் காணவில்லை. சரி படம் போட்ட பின்னர் வருவான் போல என்று நினைத்திருந்தேன். அவன் படம் முடியும் வரை வரவேயில்லை. படம் முடிந்து வீட்டிற்கு வந்தவன் இந்த நிகழ்ச்சியை அடியோடு மறந்து விட்டேன். ஒரு வாரம் கழித்து சட்டையை துவைக்கப் போடும் போது கையில் ஏதோ குத்தி ரத்தம் வந்தது. சுரீர் என்ற வலியில் எடுத்துப் பார்த்தால் தங்க நிறமாக குண்டூசி இருந்தது கண்டு வியப்புற்றேன். அங்கே தியேட்டரில் நடந்தது நினைவுக்கு வர பக்கத்து மிஸ்ரிமல் சேட் அடகுக் கடைக்குப் போய் குண்டூசியை உரசிப் பார்க்க அசல் சொக்கத்தங்கம். என்னால் நம்ப முடியவில்லை. அதை பத்திரமாக என் டைரியில் குத்தி வைத்தேன். அதோடு சுத்தமாக மறந்து விட்டேன். அன்று தியேட்டரில் பார்த்த அந்த ஆசாமிதான் இப்போது என்னுடன் பாவநாசத்தில் படித்துறையில் பேசுபவன் என்பதை மூளை உணர்த்தியது.
“யா. நௌ ஐ ரிமம்பர்” என்றேன்.
“ஆர் யூ லுக்கின் ஃபார் சம் ஒன் ஹியர்”? என்றவன் சட்டென தமிழில், “காலையில் கோவிலில் அப்புறம் பஸ்ஸில் பார்த்த அந்த நாட்டு ஷோக்காளி மனிதரையா? அப்படியென்றால் அது நான்தான்”, என்றதும் திடுக்கிட்டேன். “சரி. இன்றிரவு என்னுடன் பாணதீர்த்தத்தில் தங்குகிறாய். அங்கே நிறைய அறிந்து கொள்வாய். புறப்படுவோம்”, என்றவனிடம்
“ஒரு நிமிஷம், நீங்கள் யார்” என்றேன் நடுங்கும் குரலில்.
“ அதை இன்றிரவு அறிந்து கொள்வாய். இது ஈசனின் கட்டளை. நாம் யாருமே மீற முடியாத ஒன்று. தலையெழுத்து என்று வைத்துக்கொள். உன் எல்லாக் கேள்விக்கும் விடை தருகிறேன்”.
பாணதீர்த்தத்தை நாங்கள் எப்படி அடைந்தோம் என்பது நினைவில் இல்லை. காட்டுப்பாதை ஒற்றையடித்தடத்தில் நடந்தது மட்டும் லேசாக நினைவில் இருந்தது. நாங்கள் இருவரும் அங்கு போய் சேர்ந்த நேரம் இரவு எட்டு மணி என்றது என் கைக்கெடிகாரம்.

கும்மிருட்டு. ஓ என்று அருவி விழும் பேரொலி. அமானுடமாக இருந்த அந்தச் சூழல் பயமாக இருந்தது. போதாத் குறைக்கு ஒரு அமானுடன் வேறு பக்கத்தில். பேசாமல் குமார் சொன்னதைக் கேட்டு மாடிபிக்கேஷன் ஆர்டருக்கு முயன்றிருக்கலாம். எல்லாம் விதி.

” தொம்மா, ஏ தொம்மா நான் வந்திட்டேன். கூடவே விருந்தாள் ஒருத்தரும் வந்திருக்காரு. சீக்கிரமா விளக்கு போடு. சாப்பாடு விருந்தாளுக்கு கொடு. களைச்சிப் போய் இருக்காரு என்று இருட்டில் எங்கோ பார்த்து குரல் கொடுத்தான். ஐந்து நிமிடம் கழிந்திருக்கும். ஒரு காணிக்காரன் கையில் அரிக்கேன் விளக்கோடும் ஒரு தூக்குச் சட்டியோடும் வந்தான்.
“ சாமி வந்திட்டீங்களா. கும்பிடறேன் சாமி” என்று சொல்லி தூக்குச் சட்டியைத் திறந்து “சாப்பிடுங்க”என்று என் முன் வைத்தான். இருந்த கொலைப்பசியில் என்ன பதார்த்தம் என்று கூட யோசிக்காமல் அள்ளி எடுத்து சாப்பிட ஆரம்பித்தேன். தினைமாவில் மலைத்தேன் ஊற்றி பிசைந்த களி. வாழ்க்கையில் முதல் முறையாக சாப்பிட்டேன். கொஞ்சம் பயம் தெளிந்திருந்தது.
“ தொம்மா, நீ கிளம்பு. நான் இவரோட தனியா பேசணும். சரியா சந்திரன் முக்கால் மேற்கே இறங்கும் போது வந்தாப் போதும்” என்றான்.

அப்புறம் அவன் சொன்னது இதுதான்.
“ என் பெயர் சிவாக்கியன். என்னை திருமழிசைப் பிரான் என்போர் சிலர்.  என்னை நாத்தீகன் என்றும் சொல்வார்கள். நீ கூட படித்திருப்பாயே
“நட்ட கல்லை தெய்வம் என்று புட்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொன என்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ”
என்ற பாடலை.
இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை எனக்கு சித்தித்தது. அதை என் அடுத்த தலை முறைக்கு மாற்ற வேண்டும். அதற்கு பொன் மீது ஆசையில்லாதவனை தேடினேன். அப்படித் தேடும் போது அவர்களிடம் உள்ள எதாவது இரும்புப் பொருளை தங்கமாக மாற்றிக் காட்டுவேன். தங்கமாக மாறியதை அறிந்ததும் என்னைத் தேடி அந்த ரகசியத்தை அறியவே எல்லோரும் முயல்வர். ஆனால் நீ ஒருவன் தான் என்னை அந்த வித்தைக்காகத் தேடி வரவில்லை. ஆகவே என் குருநாதர் சொன்னபடி பொன்னாசை அற்றவன் நீ என்று கண்டு கொண்டேன்”.
"எண்ணான வேதைகோடி உத்தமர்க்குக் கிட்டும் அல்லல்
உண்மையாம் சான்றோர்க்கும் தயை குணம் உள்ளோருக்கும்
தன்மையாம் மொழிகள் கூறி உகந்ததுமே பணிந்திட்டோர்க்கும்
வண்மையாம் மனமுள்ளோர்க்கும் மேன்மையாம் பலிக்கும் தானே"

“எண்ணிக் கணக்கிடமுடியாத கோடிக்கணக்கான ரசவாத முறைகள் உள்ளன.
அவை உத்தமர்களுக்கும், உண்மையான சான்றோருக்கும், இரக்க
குணமுள்ளோருக்கும் , உண்மையானதொண்டருக்கும், நல்ல மனம்
உள்ளவருக்குமே பலிக்கும்”
நான் என்னுடைய அடுத்த பிறவிக்கு வேண்டி சமாதி ஆகப் போகிறேன். அதற்கு முன் உன்னிடம் என் மூட்டையில் உள்ள பச்சிலைகளை உன்னிடம் ஒப்படைக்கிறேன். அதில் ஒன்றே ஒன்று மட்டுமே அய சொர்ண பத்ரம். அய சொர்ண விருட்சத்தின் இலை. அதை அடையாளம் காணும் முறையையும் உபதேசிக்கிறேன். தகுதி வாய்ந்த ஒருவரை  உன் வாழ்நாளில்  தேடிக்கண்டுபிடி. உன் பொறுப்பை அவனிடம் கொடுத்த பின்தான் உனக்கு அமர வாழ்வு சித்திக்கும். பொன் ஒரு ஆட்கொல்லி. இதை என் வரலாறைப் படித்துத் தெரிந்து கொள். ஆகவே கவனமாக இருப்பது உன் கடமை.  இப்போது நீ தைரியமாக துயில் கொள். நான் உனக்குக் காவலிருப்பேன்” என்றவர் யோக நிஷ்டையில் ஆழ்ந்தார்.
அவரையே பார்த்துக் கொண்டிருந்த நான் எப்பொழுது தூங்கினேன்  என்று நினைப்பில்லை. காலை வெயில் சுள் என்று முகத்தில் பட்ட போது , பாபநாசம் கோவில் படித்துறை மண்டபத்தில் படுத்திருந்தேன். பக்கத்தில் இரண்டு அழுக்கு மூட்டைகள்.

நிதானமாகச் சிந்தித்தேன். மூட்டையில் உள்ள இலைகளில் அய சொர்ண பத்ரம் எது என்பதை நான் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். மற்றபடி யாருக்கும் தெரியாது. மனிதனை கொல்லும் ஆட்கொல்லி நான் அடுத்த தலைமுறைக்கு தரப் போவதில்லை. அமர வாழ்வு எனக்கு வேண்டாம். பொன்னுக்கு இந்த மனிதகுலம் அடித்துக் கொள்ள வேண்டாம். நானும் பவுன் மூட்டை தூக்கி பைத்தியமாக, சித்தனாக அலைய வேண்டாம் என்று தீர்க்கமாக முடிவெடுத்தேன்.  மலையேறி ஒவ்வொரு இலையாக காட்டுக்குள் போட்டு இரண்டு மூட்டைகளையும் காலி செய்தேன். எதற்கும் இருக்கட்டும் என்று அய சொர்ண பத்ரத்தை அலைபேசியில் நாலைந்து படம் எடுத்துக் கொண்டு பாபநாசம் ஆற்றுக்கு வந்து தலை மூழ்கி கோவிலுக்குச் சென்றேன்.
தரிசனம் முடித்து வெளியில் வந்தால் கசமுத்து சார்வாள் திருநெல்வேலியிலிருந்து காலையிலே வந்திட்டீயள் போல, டீ காந்திமதி சார்வாள் நம்ம ஸ்கூலுக்கு வந்திருக்கிற கணக்கு சார் என்றான். வணக்கம் சொன்ன காந்திமதிக்குப் பின்னால் நேற்று மாலை பார்த்த ஆசாமி குறும்பாகச் சிரித்தபடி கையில் இரண்டு அழுக்கு மூட்டைகளை வைத்துக் கொண்டு என்னைப் பார்த்து, “சார்வாள் என்னதான் மறதியானாலும் லக்கேஜை இப்படி மறந்து விட்டிட்டு போகலாமா” என்றார்.  

Monday, 28 November 2016

குருதட்சணை


“அப்பா, எனக்கு இப்போ கல்யாணம் செய்து கொள்ள விருப்பமில்லை. என்னை ஒரு பரிட்சைக்கு தயார் படுத்திக் கொண்டிருக்கிறேன். அந்தப் பரிட்சையில் கிடைக்கும் முடிவுதான் என் மணவாழ்வு பற்றி முடிவெடுக்கும்” என்று மிகத் தெளிவாக ஆகாஷ் பேசியதும் அதிர்ந்து போனார் சிவசாமி.

“என்னப்பா, ஓன்றுமே புரியவில்லை. இப்ப வரன் பார்க்க ஆரம்பித்தால்தான்  நல்ல வரன் கூடி வர எப்படியும் குறைந்தது ஆறு மாதமாவது ஆகும். அப்புறம் சத்திரம் கிடைத்து பொண்ணு வீட்டுச் சௌகரியம் எல்லாம் பார்த்து கல்யாணம் முடிய இன்னும் ஒரு ஆறு மாசம். ஆகக் கூடி எப்படிப் பார்த்தாலும் ஒரு வருஷத்திற்குக் குறையாமல் ஆகிவிடும். அதற்குள் நீ சொல்கிற பரிட்சை எழுதி முடிவும் தெரிஞ்சிடும் ஆகாஷ். அதால நா இந்த மாதம் நல்ல நாள் நிறைஞ்ச அமாவாசையில் பார்க்க ஆரம்பிக்கிறேனே. என்ன காமாட்சி நீ என்ன சொல்ற”, என்றார் சிவசாமி.

“மன்னிச்சிங்க அப்பா, இது நீங்க நினைக்கிற மாதிரி ஒரு வருடத்தில் எழுதி பாஸ் பண்ணற பரிட்சை எல்லாம் இல்லைப்பா அதை விட நிறைய காலம் பிடிக்கலாம். மேலும் நான் இன்னமும் அதற்கு தயாராகும் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறேன். தயவு செய்து புரிஞ்சிங்கப்பா” என்றான் ஆகாஷ்.
“காமாட்சி, நம்ம பிள்ளை ஏதோ காதல், கத்திரிக்காய் என்கிறாங்களே, அதில எதாவது மாட்டிக்கிட்டான் போலிருக்கு. எல்லாம் இந்த டெலிவிசன் வந்தாலும் வந்தது பசங்க எல்லாம் ரொம்பவே கெட்டுப்போச்சு.”

“சரி. விட்டுச் சொல்லுடா, உனக்கு பிடிச்சிருந்தா அது யாரா இருந்தாலும் நான் வெக்கத்த விட்டு   அவங்க வீட்டுப் படியேறிப் போய் பொண்ணு கேட்கிறேன். சும்மா பரிட்சை அது, இதுன்னு சொல்லிட்டு திடீர்னு ஒருநாளைக்கி மாலையும் கழுத்துமா ஒருத்திய கூட்டிட்டு வந்து காலில் வீழ்ந்து ஆசிர்வாதம் பண்ணச் சொல்லி மானத்தை வாங்காதே”.

“ஏம்பா உங்க தலைமுறையில் எல்லாருக்குமே கல்யாணம் இப்ப வேண்டாம் என்றால் காதல் தான் கண்ணில வந்து நிற்குது. வேற காரணம் இருக்காதா இல்லை இருக்கக் கூடாதா? நீங்க நினைக்கிறது மாதிரி இது பேப்பரில் பேனாவால் எழுதற பரிட்சை இல்லைப்பா”
“ஓ, அப்படி என்னடா பெரிய பரிட்சை”?
“ஆங்.அதெல்லாம் உனக்கு புரியாதப்பா. நீங்க ஆன்ம தேடல் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிங்களாப்பா?

“கலெக்டர் ஆபீஸில் ஜூனியர் அசிஸ்டெண்ட்க்கு இருட்டு ரெக்கார்ட் ரூமில் பைலைத் தேடவே நேரம் இல்லை. இதில் ஆன்ம தேடலா? ஆமா அப்படின்னா என்னடா? கொஞ்சம் விவரமாதான் சொல்லேன்”.

“ அதுப்பா, நாம நம்மையே அறிய தேடற முயற்சிப்பா. ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தோண்டிப் பார்க்கணும். ஞானம் ஊற்றெடுக்கும் வரை தோண்டணும். அப்படி ஞானம் வந்திட்டா வேற இல்லற சுகங்கள் உடம்புக்கு தேவைப்படாது. புரிஞ்சுதாப்பா?

“என்னவோபா, இதுக்கு காதல் கத்திரிக்காயே தேவலை போலிருக்கே.
சரி. நீ கடைசியா என்னதான் சொல்லப் போறே”?
“ஒன்றும் பிரச்சனை இல்லைப்பா. இந்த தேடலுக்கு வழிகாட்டி வேண்டும். அதாவது நல்ல குரு வேண்டும். சில வருடங்களாகத் தேடி அவரையும் கண்டு பிடித்து விட்டேன். கோவர்த்தனகிரியில் உள்ள சுவாமி ஜோதி தீட்சானந்தா ஆசிரமத்திற்கு இந்த வாரம் சனிக்கிழமை போகிறேன். அங்கே ஒரு மாதம் தங்கி பயிற்சி எடுத்துக் கொண்ட பின்னர் ஞான தீட்சை பெற்றுக் கொண்டு குரு காட்டும் வழியில் என்னை அறிய முயலப் போகிறேன். அதில் ஒருவேளை தோல்வி கண்டால் நீங்கள் சொல்லும் இல்லற வாழ்வு முறைக்கு கண்டிப்பாக வந்து விடுவேன். வேறு எதுவும் சொல்ல இப்போது எனக்குத் தெரியவில்லை. அவ்வளவுதான்”.

சிவசாமியின் மனதின் கொஞ்சம் மகிழ்ச்சியும், நிறைய கவலையும் ஆக அடைத்துக் கொண்டது.

எங்கே தன்னோடு பணிசெய்த தசரதன் பையன் வேற்று மதப் பெண்ணை காதலித்து ரகசியமாக பதிவுத்திருமணம் செய்து கொண்டு வந்து தர்ம சங்கடத்தில் தசரதனை ஆளாக்கியது மாதிரி ஆகாஷ் தன்னைச் சங்கடத்தில் ஆழ்த்தவில்லை என்ற மகிழ்ச்சி இருந்தாலும், காமாட்சி,” ஏங்க, நம்ம புள்ளை சாமியாரா காவி கட்டிட்டு போயிடுமாங்க. பயமா இருக்குங்க” என்றபோது வெளியில் “அதெல்லாம் ஒண்ணியும் ஆவாது” என்று தைரியம் சொன்னால் கூட அடிமனத்தில் அப்படி ஒரு பயம் தொற்றிக் கொண்டிருப்பதை அவரால் உணர முடிந்தது.

கலெக்டர் ஆபீஸ் கேண்டீனில் கண்ணில் பட்ட நெருக்கமான நண்பர்களிடம் எல்லாம் சுவாமி ஜோதி தீட்சானந்தா பற்றி விசாரிக்கவும், அவர்கள் இரு வேறு விதமாக கருத்துச் சொல்லவும் மனசில் குழப்பம் அதிகரித்தது. மேலும் வேறு நண்பர்களை விசாரிக்கலாம் என்றால், சர்வே டிபார்ட்மெண்ட் குப்புராஜ், “ என்னண்ணே, சுவாமி ஜோதி தீட்சானந்தா சிஷ்யரா மாற்றிட்டாப்ல என்று பேசிகிறாங்களே” என்று குறும்பாகக் கேட்கவும் அவசரமாக மறுத்து, “ அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நேத்து பொழுதுபோகாம டீவி பார்த்த போது அவரது சொற்பொழிவு கேட்டேன். நல்லா இருந்துச்சு அதான் விசாரிச்சேன்”.
“அப்படியா நம்ம கலெக்டர் ஆபீசில் பேசறவங்க, நீங்க சுவாமிஜி கூட சம்பந்தம் பண்ணப் போற லெவல்ல விசாரிச்சதா பேசிக்கிட்டாங்க” என்றவனின் நக்கல் பேச்சிற்குப் பின்னர் அவர் அலுவலகத்தில் விசாரிப்பது இல்லை என்ற தீர்மானத்திற்கு வந்து விட்டார்.

ஆகாஷ் சனிக்கிழமைதானே ஆசிரமத்திற்குப் போவதாகச் சொன்னான். அவனுடன் தானும் காமாட்சியை கூட்டிக் கொண்டு செல்வது ஒரு மாதம் மூவருமாக தங்குவது என்று முடிவு செய்து விட்டார்.
சூப்பிரண்டெண்ட் ஒரு சிடு மூஞ்சி என்றால் அப்படி ஒரு சிடுமூஞ்சி. ஒரு விதமா ஆபிஸ் அசிஸ்டெண்ட் பாலையாவிடம்  நூற்றைம்பது ரூபாய் கொடுத்தனுப்பி மறுநாள் முதல் மெடிக்கல் சர்டிபிக்கேட்  மஞ்சக் காமாலை என்று பொய்யாக வாங்கியாச்சு. பாலையாவுக்கு தனியாக ஒரு நூறு வெட்டியாச்சு. இல்லையென்றால் கிராதகன் ஆபிஸ் முழுதும் கலெக்டர் வரை எல்லாருக்கும் போஸ்டர் அடித்து ஒட்டாத குறையாக திருட்டு மெடிக்கல் லீவு போட்டதை கரும சிரத்தையாக சொல்லி விடுவான். 

அடுத்தது சூப்பிரண்டெண்ட கவனிக்கனும். கவரிங் லெட்டரும் மெடிக்கல் லீவு விண்ணப்பம், டாக்டர் சர்டிபிக்கேட் மற்றும் முக்கியமான பேப்பர்கள் எல்லாவற்றையும் கொடுத்து பவ்யமாக நின்றார்.
“என்னது மஞ்சக் காமாலையா? காண்டீனில் முருகலா நெய் ரவா தோசை சாப்பிட்டதை பார்த்தேனே” என்றவர், முக்கியமான பேப்பரைப் பார்த்ததும் “சரி சரி. நாளைக்கு ஒரு நாள் அன் அபீஷியலா வந்து பெண்டிங் ஒர்க் எல்லாம் முடிச்சிடுங்க. அடிக்கடி லீவு எடுக்காதீங்க. உடம்பை பார்த்துக்குங்க” என்றார். பத்து முறை தேங்கியூ சார் சொல்லி சீட்டிற்கு வந்து உட்காரும் போது மனசு கொஞ்சம் ஆசுவாசப்பட்டது.

அடுத்தது ஆகாஷிடம் எப்படி நாங்களும் கூட வருகிறோம் என்பதை சொல்வது? கண்டிப்பாக அதை ஏற்றுக் கொள்ள மாட்டான். எப்படியாவது ஆசிரமத்திற்குப் போய் விட்டால் சாமியாரிடம் சொல்லி, கெஞ்சிக் கூத்தாடி பையனை மீட்டு வந்து விடலாம். சாமியாரே ஆகாஷை இல்லறத்திற்கு போகச் சொல்லி உத்தரவிடும் பட்சத்தில் அதிகம் பிரச்சனை இல்லாமல் சம்பந்தம் பண்ண துடித்துக் கொண்டிருக்கும்  தன் தங்கச்சியிடம் பேசி வர தையில் அதிக ஆடம்பரமில்லாமல் திருமணத்தை முடித்து விடலாம். பார்ப்போம். கொஞ்சம் கொஞ்சமாக மனதில் நம்பிக்கை வேர் விட ஆரம்பித்தது.

சாயங்காலம் ஆபீஸ் முடிந்து வீட்டிற்கு வந்தவருக்கு காபி கொடுத்த காமாட்சி, “ என்னங்க, என்ன செய்யப்போறீங்க. என் பிள்ளையை சாமியாராக விடமாட்டேன். அதுக்கு நான் என்ன வேணாலும் செய்யறேங்க” என்றாள்.
“அம்மாடி நீ எதுவும் செய்ய வேண்டாம். எல்லாம் நல்லபடி நடக்கும். நீ எதாவது செய்து என் திட்டத்தை கெடுத்திடாதே. அது போதும்” என்றார்.
ஆகாஷ் வந்ததும், ஆபீசில் சுவாமிஜி பற்றிக் கேட்டதையும் தனக்கே அவரைப் பார்த்து அருளாசி வாங்க ஆசையாக இருப்பதையும் சொன்னதும் மகிழ்ச்சியுடன், “வாங்கப்பா. பார்த்தீங்களா, ஸ்வாமிஜி இப்படித்தான் எல்லார் மனசிலும் புகுந்து குடிகொண்டு விடுவார்” என்று அரைமணி நேரம்  மூச்சு விடாமல் லெக்ச்சர் அடித்து ஓய்ந்தான்.

அப்புறம் காரியங்கள் கடகட என்று நடக்க ஆரம்பித்தது. ஆகாஷே அவருக்கு, காமாட்சிக்கு, அவனுக்கு கோவர்த்தனகிரி எக்ஸ்பிரசில் மூன்றாம் வகுப்பு  ஏர்கண்டிசன் டிக்கெட் எடுத்தான். சனிக்கிழமை ரயிலேறி ஞாயிறு காலை கோவர்த்தனகிரி வந்து சேர்ந்தாகிவிட்டது. ஆகாஷ் தியானம் பண்ண இடைஞ்சலாக இருக்கும் என்பதால் தனி அறையும் , சிவசாமிக்கும், காமாட்சிக்கு இரட்டைப் படுக்கை அறையும் எடுத்துக் கொண்டான். உணவு, தங்குவது மற்றும் இதர பயன்பாடுகளுக்கு மொத்தமாக முன்பணம் பத்தாயிரம் ரொக்கமாக ஆகாஷ் கட்டியதைப் பார்த்த சிவசாமிக்கு மயக்கமே வந்து விட்டது.





ஆசிரமத்தில் எல்லாம் ஒரு ஒழுங்கு, கட்டுப்பாடோடு நடந்தது. எல்லா வேலைகளையும் தன்னார்வத்தொண்டர்கள் செய்தனர். விருந்தினர்களி மிக மரியாதையாக நடத்தினர். எல்லாவற்றிற்கும் மேலாக எப்போதும் எதாவது நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டே இருந்ததால் சிவசாமிக்கும், அதிகம் வெளியுலகப் புழக்கம் இல்லாத காமாட்சிக்கும் நன்கு பொழுது போனது. அடிக்கடி, “நா பெத்து வளர்த்த புள்ளங்க, அவன் நல்ல வழிக்குத்தான் போவான். கெட்ட வழி அவனுக்கு சுட்டுப்போட்டாலும் வராது” என்று சிவசாமியிடம் சொல்ல, அவர் “ஆமா” என்று அழுத்திச் சொல்லி ஒற்றை வார்த்தையில் முற்றுப் புள்ளி வைத்தார்.

கோவர்த்தனகிரி வந்த பதினைந்தாம் நாள் சுவாமிஜி, சிவசாமியைப் பார்க்க அழைத்தாக சுவாமிஜியின் செயலாளர் கூட்டிச் சென்றார். சுவாமிஜி அறையில் அனுமதிக்கு முன் பல விசாரணைகள், சோதிப்புகள். இறுதியாக அறைக்குள் போன சிவசாமி தம்பதியினரிடம் ஆகாஷுக்கு தீட்சை வழங்கி, ஞானோபதேசம் செய்வதில் அவர்களுக்கு ஆட்சேபணை இருந்தால் சொல்லும்படி கேட்டதும், காமாட்சி தன் பிள்ளை சாமியாராகப் போவதை விரும்பவில்லை என்றாள். சிவசாமியும் அதை பிரதிபலித்து, “ நீங்க சொல்ற எந்த வகையான சேவையும் செய்ய அவனை அனுப்பி வைக்கத் தயார். ஆனால் சன்னியாசி ஆவது வேண்டாம். அவன் மனதை மாற்றுவது அவர் கையில் தான் உள்ளது என்று கண்ணீர் மல்க வேண்ட சுவாமிஜி சிரித்தார். இருபத்தோரு வயதுக்கு மேல் அவன் மேஜர். அவன் எடுக்கும் முடிவை கட்டுப்படுத்த யாருக்கும் அதிகாரமில்லை என்று சட்டம் சொன்னார். கொஞ்ச நேரம் மௌனமாக யோசித்தவர்,
 “ஆகாஷ் என்ன படித்திருக்கிறான்” என்றார்.
“பல் மருத்துவம் சுவாமி, ஆனால் பெரிதாக பிராக்டீஸ் இல்லை”.
“ஓ. அப்படியா, இவன் உங்களுக்கு ஒரே மகனா”?
“ ஆமாம்”
அருகில் வாய் பொத்தி பவ்யம் காட்டிய செயலாளரை பார்த்து ஆகாஷை அழைத்து வரச் சொன்னார்.
ஆகாஷிடம், “குழந்தாய், ஞானம் என்பது வெறும் இருபது நாள் பயிற்சியில் வந்து விடுவது இல்லை. உன் மனம் இன்னும் பக்குவப்பட வேண்டும். உன் பெற்றோருடன் பேசியதில் உன்னைத்தவிர அவர்களுக்கு வேறு பிடிப்பும் இல்லை. உன் தொழிலில் உனக்கு சேவை புரியவும் புகழ் பெறவும் ஒரு வழி காட்டுகிறேன். அந்த வழியில் நடந்து உன்னை உணர்ந்து கொள். சம்மதமா”? என்றார்.
“ஆன்மீக குருவே, அப்படியே செய்கிறேன். எல்லாம் உங்கள் சித்தம்” என்றான் ஆகாஷ்.

அதன்படி ஆகாஷ் சென்னையில் உள்ள சுவாமி ஜோதி தீட்சண்யா சேவை மையத்தில் பல் மருத்துவராக சேவை புரிய இடம் தரப்படும். ஆசிரமம் சொல்லும் கட்டணத்தில் ஏழைகளுக்குப் பல் மருத்துவம் செய்யட்டும். ஆசிரமம் ஆகாஷின் சேவைக்கு மாதம் சன்மானம் தரும். ஆசிரமம் எளிய அமைப்பு என்பதால் கருவிகள் வாங்குவது, நிறுவுவது எல்லாம் ஆகாஷின் செலவு. ஒரு வருடம் கடந்தபின் ஆகாஷ் விரும்பினால் சேவையைத் தொடர்ந்து ஆசிரமத்தின் மையத்தில் தொடரலாம். விரும்பினால் தனியே சொந்தமாகத் தொழில் செய்யலாம். தனியே தொழில் தொடங்கினால் இப்போது அதிகம் பேர் வர வாய்ப்பில்லை. ஆசிரமத்தின் நிழலில் தொழில் செய்தால் பாதுகாப்பு, பெயர் மற்றும் நிறைய வாடிக்கையாளர்களைப் பெற முடியும் என்று எடுத்துச் சொல்லப்பட்டது.

இந்த ஏற்பாடு மூவருக்கும் பிடித்திருக்கவே, சட்டப்படி ஒப்பந்தம் ஆசிரமம் தயாரித்தது. ஞான தீட்சை பெறும் நாளில் கையெழுத்தானது. அளவிலா மகிழ்ச்சியுடன் மூவரும் சென்னைக்கு வந்தனர். லீவு முடிந்து சிவச்சாமி பணியில் சேர்ந்தார். மறு நாளே பிராவிடண்ட் பண்டில் லோன் போட்டார். கொஞ்சம் காமாட்சியின் நகைகளை வங்கியில் விவசாயக் கடன் என்ரு சொல்லி அடகு வைத்தார். அங்கே, இங்கே என்று சிறிது கடன் வாங்கி பதினைந்து லகரங்கள் தேற்றிவிட்டார். ஆகாஷ் போய் ஆசிரம சேவை மையத்தின் கிளை மேலாளரிடம் பேசி விட்டு வந்தான். அவர்களும் அறை ஒதுக்கிக் கொடுத்தனர். கருவிகள் பன்னிரெண்டு லட்சம், இதர வேலைகளுக்கு ஒரு லட்சம் செலவு செய்தான்.  திறப்பு விழாவிற்கு சுவாமிஜியே நேரில் வந்திருந்தார்.

ஆகாஷுக்கு மனம் நிறைந்தது இருந்தது. எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. நான்கு மாதம் கழித்து ஒருநாள் காலையில் மையத்தில் தன் அறையைத் திறக்கப் போனவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவன் அறையில் வேறு ஒரு பல் மருத்துவர் அவன் இடத்தில் உட்கார்ந்திருந்தார். பதறிப்போய் மைய மேலாளரைத் தொடர்பு கொண்டால் அவர் ஆசிரமம் அவனுக்கு வழங்கிய பணி நீக்க ஆணையை மௌனமாகத்தந்தார்.

அதில் சரியாகப் பணிக்கு வராமல் இருப்பதாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. சரி. கருவிகளை எடுத்துக் கொள்ளப் போனால், ஒப்பந்தத்தில் கருவிகள் ஆசிரமத்தின் சொத்தாக கருதப்படும் என்ற ஷரத்து பல்லிளித்தது. ஆசிரமத்தின் சேவை மையத்தில் இவன் தகறாறு செய்யலாம் என்று  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் ஆகாஷை சாப்பிட்டுப்போட்ட எச்சில் இலையாக தெருவில் தூக்கிப் போட்டது ஆசிரமம்.
தான் நன்றாக ஏமாற்றப்பட்டதை சிவசாமிக்கு போன் செய்து சொன்னதும் அதிர்ந்து போனார். கடனை நினைத்து கண்ணீர் வந்தது. அவர் சொன்ன கதையை யாருமே நம்பத் தயாராக இல்லை.


கடைசியில் நகரத்தின் பெரும் புள்ளி  ஒருவர் எல்லாவற்றையும் கேள்விப்பட்டு சிவசாமியின் கடன் அடைத்து பார்க்க படு சுமாராக இருந்ததால் சரியாக வரன் அமையாமல் இருந்த  தன் மகளை ஆகாஷுக்கு திருமணம் செய்து கொடுத்து, தனியாக ஒரு கிளினிக்கும் வைத்துக் கொடுத்தது தனிக்கதை. 

Saturday, 26 November 2016

கூலிக்காரன்

சிந்தாதரிப்பேட்டை புண்ணிய தலத்தில் ஓடும் கூவம் ஆற்றின் கரையில் குடியிருந்த ஏழை ஜனங்களில் பலர் போன வருட பெரு மழையில் பாதிக்கப்பட்டதும், பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப் பட்டனர் இல்லையா. அப்போது துரைப்பாக்கத்திற்கு அரசாங்கத்தின் கருணை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட துரும்பில் ஒன்று நம் முருகேசன். பூர்வீகம் தஞ்சாவூர் பக்கம் . காவிரிப் பாசனம் இருந்த காலத்தில் விவசாயக் கூலியாக நாலஞ்சு தலைமுறையாக வாழ்ந்து வந்த குடும்பம். இவன் காலத்தில் தண்ணித் தகறாறு, மீத்தேன் வாயு என்ற பிரச்சனைகளில் வேலை இல்லாமல் பாதிநாள் ஒரு வேளை சோத்துக்கு வழியில்லாமல் போகவே அசட்டு தைரியத்தில் சென்னைக்கு வண்டி ஏறியவன்.

இவனது 10 வகுப்பு பாஸ் ஒன்றும் பெரிதாக வேலை கிடைக்க உதவவில்லை. முருகேசனுக்கு தலைவரிடம் அலாதி மரியாதை. யாராவது எதாவது தப்பாச் சொன்னா கோவம் வரும்.கண்மண் தெரியாமல் அடித்துக் கூட விடுவான். தலைவருக்காக உயிரையும் தரத் தயார்தான். தலைவரிடம் கட்சி ஆபீசில்  வேலை போட்டுத்தர உறுப்பினர் அட்டை காட்டி கேட்கலாம் என்றால் வாசலில் நிக்கிற வட நாட்டு காவல்காரன் ‘அரே பாய், ஜாவ், ஜாவ்” என்று துரத்துகிறான்.
ஒன்றும் புரியாத நிலையில் எதோ  லாரி கம்பெனியில் கிளீனராக சேர்ந்து டிரைவருக்கு எடுபிடி வேலை செய்தும், சேர்த்து வைத்திருந்த காசில் அவ்வப்போது குவாட்டர் குருதட்சிணையாக வாங்கிக் கொடுத்தும் டிரைவிங் கற்றுக் கொண்டான். அப்படி இப்படி கொஞ்சம் பணம் புரட்டி லைசன்ஸ் எடுத்து விட்டான். முருகேசனுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. லாரி ஓட்டும் போது பொதுவாக ஹைவேயில் இரவு ராணிகள் கைகாட்டினால் சபலமின்றி தவிர்த்து வண்டியை வேகமாக ஓட்டி விடுவான். அனாவசிய செலவுகள் இல்லாததால் பணம் சேர்ந்தது. ஊரில் வெள்ளையும் சொள்ளையுமாகப் போய் இறங்கிய போது தாய்மாமன் கோவிந்தனின்  மகள் செல்லாயிக்கு அவனை கட்டி வைத்து விட்டனர்.

சென்னை வந்து லாரி  கிளீனர் ஆனதும் ஷெட்டில் தங்கிக் கொள்வான். டிரைவர் என்று ஆன பின்னும் அதை தொடர்ந்தான். ஆனால் இப்பொது அப்படி முடியாதே. வீடு பார்க்க வேண்டிய கட்டாயம். ஆறு மாத அட்வான்ஸ், 2500 ரூபாய் வாடகையில் ஆவடியில் அவுசிங்க் போர்டு LIG 13 அடிக்கு 36 அடி அளவில் கோமணம் மாதிரி வீடு கிடைத்தது. பூந்தமல்லியில் கம்பெனி. அதனால் ஆவடியில் இருந்தா வசதி. வீட்டு ஓனர் யாரோ பெரிய ஆபீசராம். அவருக்கு சிட்டிக்குள்ள ஏழெட்டு பங்களாங்க எல்லாம் இருக்காம். அதனால் இங்க வருவதற்கு வாய்ப்பே இல்லை. எல்லாம் புரோக்கர் சின்னப்பன் மூலம் தான். அவருக்கு வேற வேற பேரில் இத மாதிரி பத்திருபது வீடுங்க சிட்டி பூராம் இருக்காம். அந்த மனை குலுக்கலில் மனை கிடைத்த ஆளுங்களை சின்னப்பன் நோட்டம் விட்டு ஆளுக்கு விக்கறதுக்கு நெருக்கடி தருவான். வீடு கட்டற அளவு வசதியில்லாதவர்களிடம் மார்கெட் விலையில் பணம் தவணைப் பணம் போக மீதி பணம் கொடுத்து ஆபீஸர் பேரில்   வாங்கி விடுவான். அப்போ கையெழுத்து போட மட்டும் தான் சப் ரிஜிஸ்ட்ரார் ஆபீசுக்கு வருவாராம் அந்த பணக்கார ஏழை. அப்புறம் சின்னப்பன் அதில் வீடு கட்டி முடியும் வரையில் எல்லாவர்றையும் பார்த்துக் கொள்வானாம். இதெல்லாம் சின்னப்பன், முருகேசனிடம் வாடகைக்கும் அட்வான்சிற்கும் பேரம் பேசும் போது சொன்னது. என்னால் ஒன்றும் செய்ய முடியாது. எல்லாம் அய்யா சொல்றதுதான் என்று கறாராகச் சொல்லிவிட்டான். சரி இதை விடக் குறைவாக எங்கேயும் கிடைக்காது என்பதால் கடன் பதினைந்தாயிரம் ரூபாய் கூட வேலை செய்யும் ஆறுமுகம் கிட்ட இரண்டு வட்டிக்கு தண்டல் வாங்கினான். ஆறுமுகம் வட்டிப்பணம் 15 மாசத்திற்கு நாலாயிரத்தைனூறு ரூபாய் பிடித்துக் கொண்டு பத்தாயிரத்தைனூறு ரூபாய் பணம் கொடுத்து மாதம் ஆயிரம் வீதம் அசலை பதினைந்து மாதம் கொடுத்து விட ஏற்பாடாயிற்று. அது தவிர வட்டியில்லாக் கடனாக அண்டிமாண்டு பத்திரம் பதினைந்தாயிரம் பத்திரமும் எழுதி வாங்க்கிக் கொண்டான்.

குடித்தனம் போட்டாச்சு. எல்லாம் நல்லாத்தான் போய் கொண்டிருந்தது. செலவு முன்ன மாதிரி இல்லை. செல்லாயி உண்டாகி இருந்தாள். டாக்டர் செக்கப், மருந்து மாயம் அப்படி இப்படி என்று செலவு எகிறியதில் என்ன செய்ய என்றே புரியவில்லை. ஒரு நாள் கிளீனர் பாண்டியிடம் தன் நிலையைச் சொல்லிக் கொண்டிருந்த போது, கவலை படாதேண்ணே. நான் பணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றபோது சரி என்று சொன்னதுதான் தப்பாயிற்று.

பாண்டி கூட்டி வந்த ஆள், ஒரு மஞ்சப்பையில் தரும் பொருளை அவன் டிரிப் போகும் ஊரில் அவர் பாண்டியிடம் அடையாளம் சொல்லி அனுப்பிய நபரிடம் கொடுத்து விட வேண்டும். அதற்கு ஆயிரம் ரூபாய் தந்து விடுவார். இதுதான் ஏற்பாடு. முதலில் பயந்தான். ஆனால் பையில் சின்னதாக நூறு கிராம் நிறையில் நாலைந்து கவர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. கிராமத்து மனிசன் முருகேசனுக்கு சந்தேகம் எதுவும் வரவில்லை. ஒரு வருடம் அதற்குள் ஓடிவிட்டது. செல்லாயிக்கு  நிறை மாசம். கர்நாடகாவில் மங்களூருக்குப் போகும் போது திடீரென மடக்கிய போலீஸ் சோதனையில் அவன் கொக்கெயின் என்ற போதைப் பொருள் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டான். அப்போதுதான் மஞ்சப்பையில் இருந்த கவர்கள் பற்றித் தெரிந்தது. தலைக்கு மேல் வெள்ளம், நடப்பது நடக்கட்டும் என்ற மன நிலைக்கு வந்து விட்டான். அப்புறம் பாண்டி தனக்கு ஒன்றும் தெரியாது எல்லாம் முருகேசன் தான் என்று அப்ரூவர் ஆக சாட்சியம் சொல்லி நழுவியதில்  கர்நாடகா சிறையில் தண்டனையாக மூன்று வருடம் கழிந்தது. 

வெளியில் வந்தபோது எந்த லாரிக் கம்பெனியிலும் அவன் நுழைவதற்கு முன்னரே அவன் சரித்திரம் நுழைந்திருந்தது. எந்த வேலையும் கிடைக்கவில்லை. அவன் செயிலுக்குப் போன பின் செல்லாயி எப்படியோ காலத்தைத் தள்ளினாள். ஊருக்குப் போனாலும் கெட்ட பெயர்தான். போதைக் கடத்தக்காரன் பொண்டாட்டி என்று. அப்பா கோவிந்தனை வரச் சொல்லி செய்தி அனுப்பினாள். அனாதை என்று சொல்லி கோஷா ஆஸ்பத்திரியில் பிள்ளை பெற்றுக் கொண்டாள்.  கொஞ்சம் பச்சை உடம்பு சரியானதும் கட்டட வேலைக்குப் போய் வயிற்றுப் பாட்டை எதிர் கொண்டாள். ஓரளவு தைரியம் வந்ததும் அப்பனை ஊருக்குத் திரும்பி அனுப்பிவிட்டாள்.  நாலைந்து மாசத்திற்கு ஒருமுறை மங்களுர் சிறையில் முருகேசனைப் பார்த்து பிள்ளையைக் காட்டிவிட்டு வருவாள்.


முருகேசன் இல்லாத போது ஆவடி வீடு எல்லாம் அவளது தற்போதைய பொருளாதாரத்திற்கு சரிவராது என்பது தெளிவாகப் புரிந்தது. புரோக்கர் சின்னப்பன் தொந்தரவு வேற. “இங்கயே இருந்துக்க. நா அப்பப்ப வந்து போறேன்” என்றவன் முகத்தில் காறித்துப்பி விட்டு சிந்தாதரிப்பேட்டை கூவம் கரையில் தஞ்சம் அடைந்தவள்தான். திரும்பி வந்த முருகேசனுக்கு ஆறுதல் கூறி வந்தாள். அமைவதெல்லாம் சில்லறை வேலைகள் தான். அதுவும்  பல நாட்களில் கிடைக்காது. இப்போ மூணு நாளா வேலை இல்லை. இரண்டு நாள் எப்படியோ தள்ளியாச்சு. குழந்தைக்கு நாளையிலிருந்து கொடுக்க ஒண்ணுமில்லை. புரோக்கர் ரவி வந்து கூப்பிட்டார்.கட்சிக் கூட்டங்களுக்கு போஸ்டர் ஒட்டறது, தோரணம் கட்டறது, கூட்டங்களுக்கு ஆள் சேர்ப்பது கொடிகள் நடுவது இதெல்லாம் அவர்தான் காண்டிராக்ட்.அவனுடைய தலைவருக்கு எதிரிக் கட்சிக் கூட்டமாம்.

ஊர்வலம், பொதுக்கூட்டம் இரண்டு நாள் வேலை.சாப்பாடு, போஸ்டர் ஒட்டுக் கூலி தனி.எல்லாம் சேர்ந்து இரண்டாயிரம் ரூபாய் வரும்.ஆனா மனசு கேட்கவில்லை. பிடிவாதமாக மறுத்தான். பிச்சை எடுத்தாலும் இந்த கேவலமான வேலையை செய்ய மாட்டேன் என்றவனை, நாய் வித்த காசு குறைக்கவா செய்யும். உன் தலைவன் என்னைக்கு வேலை தந்து நீ என்னை காப்பாத்த. குடும்பத்தை, புள்ளயைப் பாரு என்று செல்லாயியும், ரவியும் கரைத்தனர். சரி வேற வழியில்லாமல் சம்மதித்து அட்வான்ஸ் இருநூறு ரூபாய் வாங்கியாச்சு. ராவெல்லாம் கொசுக்கடியில் போஸ்டர் ஒட்டி முடிச்சிப்படுக்கும் போது மணி மூணு. காலையில ஆறு மணிகெல்லாம் பச்சைத்தண்னியை குடிச்சிட்டு, துரைப்பாக்கத்திலிருந்து தி. நகர் வந்து   பழைய கிருஷ்ணவேணி தியேட்டர் பக்கம் காத்திருந்தான். ஆட்டு மந்தை மாதிரி லாரியில் நூறு பேரோட ஏற்றிவிட்ட கட்சிக்காரர் ஆளுக்கு ஒரு சுலோக நோட்டீஸ் தந்து எப்படி சொல்லவேண்டும் என்று பயிற்சி கொடுத்தார். வழியேற வாழ்க ஒழிக கோஷம் போட்டபடி பயணம். ஆனால் தலைவர் ஒழிக மட்டும் சொல்ல மனசு இடந்தரவில்லை. யாராவது சிலரோடு பேசிப் பார்க்கலாமே என்றால் அவர்களில் யார் கட்சிக்காரர், யார் தன்னைப்போல கூலிக்கு வந்தவர்கள் என்று தெரியவில்லை.எதாவது பேசப் போய் தன்னிலை மறந்து பேசிட்டால் பிரச்சனை வருவது மட்டுமில்லாமல் அடிவேறு கிடைக்கும். அதனால் ஒண்றும் பேசவில்லை. விவரம் விசாரித்தவர்களிடம் துரைப்பாக்கம் ரவி அண்ணன் ஆள் என்று மட்டும் சொல்லிக் கொண்டான்.

மத்தியானம் வரைக்கும் ஒண்ணுமேசாப்பிடதரவில்லை.அப்புறம் ஒரு பிரியாணி பொட்டலமும், தண்ணி பாக்கெட்டும் கிடைத்தது.மறைமலை நகர் பக்கத்தில் இறக்கிவிட்டனர்.அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் கூட்ட மேடை வரை ஊர்வலம். ஊர்வலம் தொடங்கி முக்கால் மணி நேரமாயிற்று. அரை குறைச் சாப்பாடு, முந்திய நாள் தூக்கமின்மை எல்லாம் சேர்ந்து கண்ணை இருட்டியது. போதாத குறைக்கு பிடிக்காத கட்சி வேறு. திடீரென முன்னால் எதோ குழப்பம். எதிர் திசையில் கூட்டம் ஓடிவர தள்ளு முள்ளு என்ன ஏதுன்னு தெரியதுக்குள்ள முருகேசனை நெடித்தள்ளியது கூட்டம்.அடித்துவந்த வெள்ளம் மாதிரி தள்ளாடியபடி ஓடத்தலைப்பட்ட முருகேசனை மிதித்தபடி முன்னேறியது கூட்டம். காலையில் எல்லாப் பத்திரிக்கைகளிலும் முருகேசன் மற்றும் ஐம்பது பேரின் மரணம் தலைப்புச் செய்தியானது.கூட்டம் நடக்கவில்லை என்றாலும் அந்த எதிரிக்கட்சித் தலைவர் மறு நாள் முருகேசன் வீட்டிற்கு ரவியோடு வந்து ஆறுதல் சொன்னார். இறுதிச் செலவுக்கு இரண்டாயிரம் தந்தவர், விரைவில் ஒரு லட்ச ரூபாய் கட்சி நிதியிலிருந்து தருவதாக வாக்களித்தார். கட்சி ஆபிசுக்கு ரவி அண்ணனுடன் பலமுறை அலைந்து விட்டாள். அங்கே கட்சி உறுப்பினர் அட்டை கேட்டனர். 

செல்லாயிக்கு மூன்று மாதத்திற்குப் பின் கட்சி தர இருந்த ஒரு லட்சம் ரூபாய் அவன் வேற கட்சி என்பதால் கிடைக்காமலேயே போனது.
இப்போது ரவி புரோக்கரின் நிரந்தர ஆட்கள் பட்டியலில் செல்லாயி சேர்க்கப்பட்டு முழுசாக நான்கு மாதம் முடிந்து விட்டது. மாதம் நான்காயிரம் சம்பளமாம். கூட்டத்திற்கு தலைவர்கள் பெயர் வைக்க பிள்ளையோடு வரவேண்டுமாம். இதெல்லாம் முருகேசனின்  ஊர்க்கார நண்பன் முத்துசாமி  நாலு நாள் முன்பு வீட்டில் கொத்தனார் வேலையில் வெள்ளை அடிக்க வந்த போது சொன்ன தகவல்.


*( இக்கதை sirukathaigal.com வலைத்தளத்தில் 25.11.2016 அன்று வெளியானது)

Monday, 21 November 2016

மலைப்பாம்புகள்

ராகவன் பூங்காவில் காலை நடைப் பயிற்சியை முடித்து விட்டு வீட்டிற்குக் கிளம்பும் போது,” அண்ணே, நல்ல இடம் ஒன்னு வந்திருக்கு. பொண்ணு கிளியா இருக்கா.திவாகருக்கு ரொம்பவே பிடிக்கும். சாயங்காலமா குரு ஓரையில கொண்டு வரறேன்” என்றபடி எதிரே வந்தார் தரகர் அய்யாச்சாமி. “சரி. கொண்டு வாங்க” என்றபடி வீட்டை நோக்கி நடந்தார் ராகவன்.
சாயங்காலம் அய்யாச்சாமி காட்டிய அந்த வரனை, அவர் சொன்னபடியே திவாகருக்குப் பிடித்துவிட்டது.
“பொண்ணோட அப்பா ரிட்டயர்ட் டெபுடி செகரட்டரியாக்கும். பல டிபார்ட்மெண்ட்களில் பழம் தின்னு கொட்டை போட்டவர். நல்ல மனுஷாள், ஓரே பொண்ணு, நாகப்பட்டனத்தில் நூறு வேலி காடு கரை இருந்தது. இப்போ எல்லாம் எண்ணைய் எடுக்க ஓ.என்.ஜி. சி யாமே அதுக்குக் கொடுத்தாச்சு. பொண்ணு எம். ஏ. எதிராஜில படிச்சிருக்கா. ஆனா படிச்சிருக்கோம் என்ற கர்வம் துளியும் கிடையாது. இப்போல்லாம் இது மாதிரி மனுஷா சம்பந்தம் கிடைகிறது தெய்வ சங்கல்பம்” என்றவரை, “அப்ப ஜாதகம் பார்த்து சீக்கரம் சொல்லறேன்” என்றார் ராகவன்.
“பாருடா திவாகர், இந்த மனுஷனை, இந்த பூஞ்ச உடம்ப வச்சிண்டு அலையறேன், திரியறேன் எங்கறார். அண்ணனுக்கு கஷ்டம் இருக்கக் கூடாதுன்னு தானே நானே நம்ம வடக்கங்கரை ரங்கநாதனிடம் காட்டி பொருத்தம் பார்த்து கொண்டு வந்திருக்கேன். பத்துக்கு ஒம்பது பொருத்தம், பாபம் சமபலம், தசா சந்திப்பு இல்லை. எல்லாம் நம்ம திவாகருக்கு இவதான் என்கிற மாதிரி அப்படி செட்டாயிருக்கு”.என்ற அய்யாச்சாமிக்கு ஆதரவு குரல் முதலில் திவாகரிடமிருந்து தான் வந்தது.
”அப்பா, அய்யாச்சாமி மாமா என்ன பொய்யா சொல்லப் போறாரு. நீங்க பார்க்கற அந்த வடக்கங்கரை ரங்க நாத ஜோசியரிடம் தான் காட்டியிருக்காரு. அம்மா நீ என்ன சொல்லறே”. என்றதும்,
”ஆமாம் திவா சொல்லறதும் சரிதான் நீங்க நல்ல நாள் பார்த்து பொண் பார்க்க வரோமின்னு தகவல் கொடுத்து ஏற்பாட்டை செய்யுங்க”
என்றதும் ராகவனுக்கு தலையசைப்பதைத் தவிர எதுவும் பேச இருக்கவில்லை. 
“நான் சொல்லக் கூடாது. அம்மா, நீங்களும், திவாகரும் கற்பூர புத்தி, சொன்னவுடன் டக் குனு புரிஞ்சிக்கறீங்க.. அண்ணா ரிட்டயர்ட் தாலுகா ஆபிஸ் சூப்ரண்டெண்ட்தானே. என்ன இருந்தாலும் அவங்க சம்பந்தம் குபேர சம்பத்து மாதிரி. அப்போ நான் உத்தரவு வாங்கிக்கிறேன், அடுத்து நல்ல தகவலோடு வரேன்”, என்று கிளம்பினார்.
அடுத்த வாரமே திவாகர் பெண் பார்த்தான். சம்பந்தி ஏக தடபுடலாக வரவேற்றார். திவாகருக்கு மட்டும் தனிக் கவனிப்பு. பெண்ணை பார்த்து அங்கேயே சம்மதம் சொன்னதும் கடகட என்று கண்மூடித்திறப்பதற்குள் ஆறு மாதங்கள் ஓடி கல்யாணம் வந்து விட்டது. இரண்டு பெட்ரூம் ஃப்ளாட் காணாது என்று திவாகரிடம் மாமனார் அடிக்கடி சொல்லி மூன்று பெட்ரூம் ஃப்ளாட்டுக்கு மாறியாச்சு. பழைய ஃப்ளாட்டை விற்றது போக தேவைப்பட்ட இருபது லட்சத்தை திவாகருக்கு கொடுத்தாகி விட்டது. மாமனார் வீடு வாங்க காட்டிய ஆர்வத்தை துண்டு விழும் பணத்திற்கு அல்லாடிய போது, “ சம்பந்தி நீங்க உங்களுக்கப்பறம் யாருக்கு தரப்போறீங்க. அவங்களுக்குத்தானே. அதை இப்போ கொடுத்தால் வட்டிக்கு வாங்க வேண்டாமே”, என்று சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் சொல்லிச் சொல்லியும், மருமகள் காவ்யா, “திவா அப்பா சொல்லறது சரிதானே” என்று வேப்பிலை அடித்தும், பணத்தை எடுத்துத்தருவது தவிர வேறு வழியில்லை என்ற நிலை. மனைவி யசோதாவிற்கு ஒன்றும் தெரியாது. கணவன், அடுப்படி, பிள்ளை  இப்படியே அவள் வாழ்க்கையை கிட்டத்தட்ட முக்கால் பகுதி கழித்தாயிற்று. ரிட்டயர் ஆன போது கிடைத்த கிராஜூட்டி, பிராவிடண்ட் பண்ட் எல்லாமா சேர்ந்து முப்பது லகரம் வந்தது. அதில் பத்தை அவள் பெயரிலும் மீதியை தன் பெயரிலும் வைப்பு நிதியாக வங்கியில் வத்திருந்தார். பென்ஷன் மாதம் பதினைந்தாயிரம் வருகிறது. அதனால் அதிகம் யோசிக்காமல் எடுத்துக் கொடுத்தார். புது வீட்டில் சின்னஞ்சிறிசுகள் ஒரு படுக்கை அறையிலும், மற்றது இவர்களுக்குமாக ஆனது.  ஆரம்பத்தில் வாரம் வெள்ளிக் கிழமை மதியம் சம்பந்தி ராஜசேகர் தம்பதி சமேதராக பெண்ணைப் பார்க்க வருவர். இரவு சாப்பிட்ட ஹோட்டலுக்கு மாப்பிள்ளையையும், பெண்ணையும் கூட்டிக்கொண்டு போய்விட்டு திரும்புவர். ராகவனையோ, யசோதாவைவோ யாரும் கூப்பிடுவது இல்லை. அவர்களும் இது பற்றி பெருசாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்த இரு நாட்களும் அவர்கள் அந்த மூன்றாவது படுக்கை அறையை தங்கள் அறையாக மாற்றிக் கொண்டு தங்கி விடுவது வாடிக்கை ஆயிற்று.           
ஒரு நாள் திவாகரிடம் ஜாடையாக கேட்டபோது
“ அவங்களுக்கும் யார் அப்பா இருக்காங்க? அதுவும் என் கடமைதானே” என்ற பின் ராகவன் அந்த தலைப்பைத் தொடுவதே இல்லை. மருமகள் காலை எட்டு மணிக்குத்தான் எழுந்திருப்பாள். திவாவுக்கு ஏழு மணிக்கு கிளம்ப அலுவலக கார் வந்திருக்கும். அதற்குள் அவனுக்கு டிபன் செய்து, மதியம் சாப்பிட சமைத்து அனுப்புவது எப்போதும் போல யசோதா அம்மாவின் வேலை ஆயிற்று. ராகவன் அவளிடம் கேட்டால், “பாவம் சின்னஞ்சிறிசுங்க, நாளைக்கு அவதானே பார்த்துக்கப் போறா, நா இருக்கற வரைக்கும் நான் செய்யறேன்”. என்பதே பதிலாக வரும்.
அன்று திவாகர் சீக்கிரமே அலுவலகம் வந்துவிட்டான். எச்.ஆர் ரில் கூப்பிடுவதாக தகவல் வந்தது. கதவை தட்டி உள்ளே நுழைந்தவனை “கங்கிராட்ஸ் திவா. நீங்க பலநாளா ஆசையோடு எதிர்பார்த்த அமெரிக்கா செல்லும் வாய்ப்பு நம்ம சி.எம்.டி உங்களுக்கு அளித்திருக்கிறார். மொத்தம் மூன்று வருடம் காண்டிராக்ட். அப்புறம் நீங்க விரும்பினால் மேலும் ஐந்து வருடம் அல்லது அதற்கு மேலோ இருக்கலாம். நான் இன்னும் இரண்டு மாதம் அவகாசம் தருகிறேன். அதற்குள் இப்ப பாக்கி இருக்கிற வேலை எல்லாம் செட்டில் பண்ணிட்டால் போதும். பை தி பை நீங்க குடும்பத்துடன் போகலாம், ஆனா உங்களுக்கும் உங்க மனைவிக்கும் மட்டும் கம்பெனி விமான கட்டணம் தரும். மற்ற எல்லாருக்கும் நீங்க தான் டிக்கெட் எடுக்க வேண்டும். பாஸ்போர்ட், விசா இதெல்லாம் கம்பெனி பார்த்துக் கொள்ளும். நீங்க அழைச்சுக்கிட்டுப் போறவங்க விவரம், அவங்களுக்கான டிக்கெட் பணம் மூன்று லட்சம் இதை இன்னும் இருபது நாளில் கொடுத்துவிடுங்க. மற்றத நாங்க பார்த்துக்கிறோம். ஆல் தி பெஸ்ட்” என்றார் எச்.ஆர் மேலாளர்.         
திவாகருக்கு ஒரே சந்தோஷம். உடனே காவ்யாவிற்கு  செய்தியை சொன்னான். அவள் உடனே ‘எங்க அப்பாகிட்ட சொல்லுங்க’ என்றாள்.
‘சரி. நீ, எங்க அப்பா, அம்மாவிடம் சொல்லிவிடு’ என்றதற்கு “சரிங்க’ என்று போனை வைத்தாள்.
மாலையில் வீட்டிற்கு வந்த போது அப்பா இல்லை. அம்மா சமையல் அறையில் இருந்தாள். தன் அறைக்கு வந்து காவ்யாவை பார்த்தவனுக்கு அதிர்ச்சி. படுக்கையில் படுத்திருந்தவளை என்னாச்சு காவ்யா என்றான். தெரியலீங்க. காலையிலிருந்தே ஒரே தலை சுற்றல் வாந்தி என்றாள். உடனே அம்மாவிடம் காவ்யாவுக்கு உடம்பு சரியில்லை. டாக்டரிடம் போய்விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு கால் டாக்ஸியில் டாக்டர் கிளினிக் போனான். டாக்டர் அவளைப் பரிசோதித்துவிட்டு, அவள் தாய்மை அடைந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். திவாவுக்கு இரட்டை சந்தோஷம். வீட்டிற்கு வந்ததும் அப்பா,அம்மாவிடம் சொன்னதும் அவர்கள் இருவருக்கும் அப்படி ஒரு சந்தோஷம். அப்படியே அமெரிக்க காண்டிராக்ட் பற்றி சொல்ல ஆனந்தம் பொங்கியது.
விமான கட்டணம் பற்றி பேச்சு வந்ததும் அம்மா உடனே என் பேருல அப்பா போட்ட பணத்தில தரச் சொல்லிடறேன் என்றதும் அவனுக்கு அப்பவே அமெரிக்கா போன மாதிரி இருந்தது. மகள் கருவுற்ற செய்தி கேட்டு சம்பந்தியும், சம்பந்தியம்மாவும் வந்தனர். அம்மா தன்னுடன் இருந்து கவனிக்க காவ்யா விரும்பியதால் அமெரிக்கா கிளம்பும் வரை சம்பந்தி தம்பதி அங்கேயே தங்க முடிவாயிற்று.
சம்பந்தி சுறுசுறுப்பாக முக்கியமான எல்லா பொருட்களையும் மறுநாளே லாரியில் கொண்டு வந்து விட்டார். அவரும் ராகவனும் வாக்கிங் போனாலும் தனித்தனியாகத்தான் போவார்கள். சம்பந்தி ராஜ சேகர் வந்த பின் வரவேற்பறையிலிருந்து தொலைக்காட்சி அவர்கள் அறைக்கு குடிபெயர்ந்தது.
யசோதா அம்மா தான் எல்லாருக்கும் சேர்த்து சமையல். சாப்பாடு, காபி, டிபன் என்று எல்லாம் சம்பந்தி குடும்பத்திற்கும் சேர்த்தே செய்வது எழுதப்படாத சட்டம் என்றானது. அம்மா பாவம் தனியா சமையல் வீட்டு வேலை செய்து கஷ்டப்படுவது திவாகருக்கோ, காவ்யாவிற்கோ, சம்பந்தி அம்மாவுக்கோ கவனத்தில் வராமலே இருந்தது ஆச்சரியம்தான்.
அப்படியும், இப்படியுமாக ஒரு வாரம் ஓடிவிட்டது.
காலையில் நடைபயிற்சி முடித்து வந்தவர் யசோதா எனக்கு நெஞ்சு வலிக்கிறது என்றார். அருகில் உள்ள பெரிய தனியார் ஆஸ்பத்திரியில் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தாயிற்று.
வெளியே அம்மா கண்ணைமூடி பிளாஸ்டிக் சேரில் கவலையாக இருந்தாள். திவாகரை, “மாப்பிள்ளை இப்படி சித்த வாங்கோ” என்று கூப்பிட்ட ராஜ சேகர் “இத பாருங்கோ மாப்பிள்ளை, அப்பாவுக்கு வயசாயாச்சு, தீ ன்னு சொன்னா நாக்கு வெந்திடாது. எதுவும் ஆகலாம் அதனால அப்பாவை பார்த்துக்கணும் அப்படின்னு அமெரிக்க காண்டிராக்ட வேண்டாம் என்று சொல்லிடாதீங்கோ. எங்க ஸ்டேட்ட்ஸுக்கு உங்க குடும்பம் சமதை இல்லனாலும் ஒங்களுக்கு காவ்யாவை கட்டித்தந்ததே உங்க கெரியர் பார்த்துத்தான். முதலில் அவர் எதாவது சேர்த்து வச்சிருக்காரா? அப்படி ஒன்னும் இருக்கற மாதிரி தெரியல. உங்களுக்கு இப்போ ஆயிரம் செலவிருக்கு. கொஞ்சம் தேவலை ஆனதும் வீட்டிற்கு கொண்டு போயிடலாம். இவங்க பணம் பிடுங்குவார்கள். அப்பாவை அமெரிக்கா கூட்டிண்டு போகறதுல தப்பொன்னும் இல்லதான், ஆனா அங்க வைத்தியச் செலவுகள் தாக்குபிடிக்க முடியாது. இங்க நல்ல முதியோர் இல்லம் பார்த்து சேர்த்திடலாம். அவரோட பென்ஷன் தொகைய அங்க கட்டினாலே போதும். கூட ஐந்து, பத்து ஆனாக்கூட நாம கட்டிடலாம். இப்ப காவ்யாவையும் அப்புறம் குழந்தையையும் பார்த்துக்க மாமியும் நானும் உங்களோட வந்திருக்கோம். இங்க எல்லா மனுஷாளையும் விட்டு அமெரிக்கா வர பிடிக்கலைதான், ஆனா உங்களுக்காக அதெல்லாம் விட்டுக் கொடுக்கறோம். என்ன காவ்யா நாஞ்சொல்லறது”, என்றவரிடம் ‘ஆமாங்க, நல்லா யோசித்து பாருங்க. அப்பா சொல்லறதுதான் சரிங்க” என்றாள் காவ்யா. “சரி, இப்ப போய் இதுவரை ஆன தொகை மத்த விவரங்களை தெரிஞ்சிக்கிட்டு வாங்க” என்றவரிடம் பேசவே பிடிக்கவில்லை திவாகருக்கு. ஆனாலும் தன் அமெரிக்க வாழ்வு போய்விடுமோ என்ற பயமும் இருந்தது.


எதுவானாலும் சரி. அப்பா,அம்மாவை கூட்டிப்போக முடியாது. முதலில் அவரது உடல் நிலை விமானத்தில் முப்பத்தாறு மணி நேர  பயணத்தை தாங்க முடியுமா என்பது சந்தேகமே, நல்ல முதியோர் இல்லத்தில் செர்த்து விடலாம். மாமா சொல்வதில் தவறு ஒன்றும் இல்லை. இங்க வைத்து பராமரிக்க செலவாகும். பார்க்கலாம் என்ற நினைப்பில் நடந்தவனை டாக்டர் கூப்பிட்டு, “ நாங்க அதிகம் முயற்சி செய்தோம் ஆனாலும் உங்க அப்பாவை கடவுள் அழைத்துக்கொண்டு விட்டார். ஐ யம் சாரி,” என்றதும் அழுகை பீறிட்டது. அம்மாவிடம் எப்படி சொல்வது என்று அருகில் சென்று, “அம்மா” என்று லேசாக உலுக்கினான். வழக்கம் போல் மகனுக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்க விரும்பாத அம்மா  அவன் மடியில் தன் உயிரற்ற உடலை விட்டு விட்டு சிரித்தபடி கணவருடன் கை கோர்த்து பறந்து வானில் மறைந்தாள்.

Thursday, 20 October 2016

ரயில் பயணங்களில்

துரை சந்திப்பிலிருந்து அந்த பகல் பொழுது பாசஞ்சர் வண்டி மதியம் இரண்டு மணிக்குப் புறப்படும். இப்போது மணி 12.50 தான். இன்னும் முழுசாக 70 நிமிடங்கள் இருந்தது. 5 வது பிளாட் பாரத்தில் தூங்கி வழிந்த படி நின்று கொண்டிருந்தது. அறிவிப்பாளரின் இயந்திரத்தனமான “பயணிகளின் பணிவான கவனத்திற்கு............ மூன்றாவது நடைமேடையிலிருந்து இன்னும் சிறிது நேரத்தில் புறப்படும்” என்று அறிவித்து கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் கடந்து விட்டது. அந்த வண்டி இன்னும் புறப்பட்ட பாடில்லை. என்னுடைய வண்டிக்கும் இதே கதி தான் என்று நினைக்கும் போதே எரிச்சலாக வந்தது. நான் அமர்ந்திருந்த எஸ் 4 பெட்டியில் அதிகம் கூட்டம் இல்லை. மொத்தம் எண்ணினால் 15, 20 நபர்கள் தேறுவது கடினம். நான் பொதுவாகவே பகல் நேர ரயில் பயணங்களில் தனியான ஒற்றை இருக்கையையே விரும்புவேன். 

அதில் நிறைய சௌகரியங்கள். சன்னல் வழியே வேடிக்கை பார்க்கலாம். விருப்பப்பட்டால் சக பயணிகளுடன் பேசலாம். இல்லாவிட்டால் அவர்கள் நடவடிக்கைகளை, உரையாடல்களை கவனிக்காத மாதிரி காட்டியபடி கவனித்தால் நிறைய சுவாரசியமான விஷயங்களை உள் வாங்க முடியும். அப்புறம் அதை அசை போடும் போது அடுத்த கதைக்கு கருப்பொருளை எப்படியும் தேற்றிவிடலாம்.


பொது வெளியில் முகம் காட்டாத, தெரியாத எழுத்தாளனுக்கு கிடைக்கும் இந்த வசதி பிரபலங்களுக்கு வாய்ப்பதில்லை. ஜீன்ஸ், வெள்ளை ஜிப்பா, ஜோல்னா பை, முரட்டு தாடி, மீசை, சதா சிந்திக்கும் முகபாவம் என்று எழுத்தாளனுக்கு ஒரு அடையாளத்தை பத்திரிக்கைகள் தந்து தவறாக அடையாளப்படுத்தி எழுத்தாளர்களுக்கு நிம்மதியை தந்து பல நேரங்களில் நமது பயணங்களை இனிதாக்கி விடுகின்றன. பல எழுத்தாளர்கள் சூடம் ஏற்றி சத்தியம் பண்ணினாலும் இந்த அடையாளங்கள் இல்லாதவரை பொது ஜனம் எழுத்தாளராகவே ஏற்றுக் கொள்வதில்லை. “ இப்படி வழியை அடைச்சிக்கிட்டு நின்னா எப்படி ஏற முடியும், ஒன்னு எறுங்க இல்லை தள்ளி நில்லுங்க”, என்று அதிகாரமாக ஒரு குரல் ஒலித்தது. பெட்டியின் வாசலில் ஒரு எழுபத்தைந்து வயதுத் தோற்றமுள்ள முதியவரை கைத்தாங்கலாக அணைத்தபடி ஏற்றி விட்டுத் தானும் ஏறிக்கொண்டிருந்தார் ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க நடுத்தர வயது மனிதர். சப்தம் போட்ட மனிதர், ஆளை விழுங்கும் பெரிய பெட்டிகள் இரண்டை பிளாட்பாரத்தில் வைத்துக் கொண்டு நின்றிருந்தார்.  அவருக்கும் சுமாராக அறுபது , அறுபத்தைந்து வயதிருக்கும். அவரது உடை, போட்டிருந்த நறுமண திரவியம் பேச்சு எல்லாம் பெரிய அரசாங்கப்  பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர் என்பதைச் சொல்லாமல் சொல்லியது. விலையுயர்ந்த பேண்ட், டீ சர்ட், காலில் நைக் ஷூ, கையில் ஆப்பிள் ஐ - பாட் என்று மார்டன் சர்வாலங்கார பூஷிதராக இருந்தார்.   சப்தம் கேட்டதும், அந்த எழுபத்தைந்து வயது முதியவரை என் பகுதியில் காலியாக இருந்த மூன்று பேர் இருக்கையில் அமர வைத்து விட்டு அந்த ஐம்பது வயது மனிதரும் அமர்ந்தார்.

வண்டிக்கு வெளியே, அதிகாரத் தொனி மனிதர் இன்னும் வண்டியில் ஏறாமல் அந்த மெகா சைஸ் பெட்டிகளை சுமந்து வந்த போர்ட்டருடன் வாதம் செய்து கொண்டிருந்தார். அவர்கள் பிரச்சனை பலத்த வாக்கு வாதத்திற்குப் பின்னர் ஒரு வழியாக போர்ட்டர் நாலு மரியாதையான வசவு வார்த்தைகளை உதிர்த்த பின்னர், போலீசுக்கு புகார் கொடுப்பேன் என்ற இவரது மிரட்டலுடன் ஒரு வழியாக முடிவிற்கு வந்தது. பெட்டியைக் கூட கம்பார்ட்மெண்டில் ஏற்றாமல் போர்ட்டர் கிளம்பி விட்டதால், முகம் சிவக்க பெட்டிகளை வண்டியில் ஏற்ற படு சிரமப்பட்டார். வழியை விட்டு தள்ளி நிற்க சொல்லப்பட்ட ஐம்பது வயது மனிதர் புன்சிரிப்புடன் அவர் பெட்டிகளை மேலிருந்து வாங்கி வண்டிக்குள் ஏற்றினார்.

வண்டியில் ஏறிய மனிதர், பெட்டியை ஏற்ற சிரமப்பட்ட போது உதவி செய்தவருக்கு ஒரு மரியாதைக்குக் கூட நன்றி சொல்லவில்லை. அந்த மெகா பெட்டியோ இருக்கைக்குக் கீழே செல்ல மறுத்து அடம் செய்தது. இரண்டு பெட்டிகளையும் நிற்க வைத்து விட்டதால்  மனிதர்கள் காலை கீழே வைக்க வழியே இல்லாமல் போனது. அந்த முதியவரையும், கூட வவந்திருந்த அந்த ஐம்பது வயது மனிதரையும் பார்த்து,  “கேன் யூ சிட் இன் தி நெக்ஸ்ட் பே”? என்றார். இப்போது என் உள் மனம் சொல்லியது இவர்களுக்கு பெயர் தந்து விடலாம் என்று. சரி முதியவர், கூட வந்தவர், அதிகாரப் பெரியவர் என்று பெயர் தந்து விட்டேன். கூட வந்தவர், முதியவரை என் இருக்கைக்கு எதிரில் இருந்த மற்றொரு ஒற்றை இருக்கையில் உட்கார வைத்தார். தான் என் இருக்கைக்கு பக்கத்தில் இருந்த மூவர் இருக்கையில் வழிபாதையை ஒட்டி அமர்ந்தார். 


அதிகாரப் பெரியவர் என்னை, முதியவரை மற்றும் கூட வந்தவரை நோட்டம் விட்டார். அவரது பார்வை எங்களை அளப்பது போல இருப்பதை என்னால் அனுமானிக்க முடிந்தது. ஆக எங்கள் மூவரில் அவரது தகுதிக்கு உரையாட யாருமே இல்லை, அதிலும் குறிப்பாக முதியவரும், கூட வந்தவரும் சத்தியமாக இல்லை. என்னை வேறு வழியே இல்லாவிட்டால் டைம் பாஸுக்கு கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம் என்ற அவர் அளவீடு  அவரின் கண்களிலேயே தெரிந்தது. சுற்றும் முற்றும் பார்த்தவர் பெட்டியை சிரமப்பட்டுத் திறந்து தன் டேப்லெட்டை எடுத்துக் கொண்டு விரல் தேய்க்க ஆயத்தமானார். மணி இன்னும் இரண்டாகவில்லை. செல்போனில் மின்னேற்ற பிளக் பாயிண்ட் தேடினார். என்ன காரணமோ மின்னேறவில்லை. என்னைப் பார்த்து சிரித்தும் சிரிக்காமலும் ஒரு மோனோலிசா பாவத்தில், “ பிளடி ரயில்வே. திஸ் மஸ்ட் பி பிரைவேட்டைஸ்ட்” என்றவர், மறக்காமல் முதியவரிடமும், கூட வந்தவரிடமும் ஆங்கிலம் தெரியுமா என்று கேட்டார். பதிலுக்கு முதியவர் உங்களுக்குத் தமிழ் தெரிந்திருப்பதால் அதில்  என்னால் இயல்பாக உரையாட முடியும் என்றார். 


ஆனால் அதிகாரப் பெரியவர் என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்து விட்டு, “ இப்போதெல்லாம் முன்னைப் போல பெரிய மனிதர்கள் ரயிலில் பயணிப்பதில்லை. கண்டவர்களுடன் எல்லாம் பயணிக்க வேண்டியுள்ளது, அதிலும் குறிப்பாக கிராமத்தான்கள் தொல்லை தாங்க முடியவில்லை. என்று ஆங்கிலத்தில் குறைபட்டுக் கொண்டார்.
நான் அதை ஆமோதிக்க வேண்டும் என்ற அவரது எதிர்பார்ப்பு கண்களில் பளிச்சிட்டது. இரயில்  சரியாகக் கிளம்பி விட்டது. நான் எதுவும் பேசவில்லை. அவராகவே ஆரம்பித்தார். கையில் ராபின் குக் புத்தகத்தை எடுத்து விரித்தவர், எவன் சார் தமிழில் இப்படியெல்லாம் எழுதறான்  என்றார். நான் ஆமோதிக்கக் காத்திருந்தார். எனக்கோ பயங்கரக் கடுப்பு. இருந்தாலும் மறைத்துக் கொண்டு சார் நீங்க தமிழ் எழுத்தாளர்களில் யாரைப் படித்திருக்கிறீங்க? என்றதும், நான் அந்த கருமத்தை எல்லாம் விரலால் கூடத் தொடுவது கிடையாது. எல்லாம் காப்பி. ஒரிஜினாலிட்டி இல்லாதவை என்று தீர்ப்புக் கொடுத்தார். சரி சார் எங்கே போகிறீர்கள் என்று இலக்கியம் பேசுவதை நாகரீகமாக மடை மாற்றினேன். என்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இருப்பதே சாலச் சிறந்தது என்றுபட்டது.


முதியவர் மற்றும் கூட வந்தவரை பார்த்துவிட்டு தன் பிரதாபத்தைத் தமிழில் அளக்க ஆரம்பித்தார். ஆங்கிலத்தில் பிரதாபத்தை சொல்வதால் முதியவரையும், கூடவந்தவரையும் பிரமிக்க வைக்க முடியாதல்லவா. தமிழ் நாடு அரசில் மின் வாரியத்தில் கணக்கு அலுவலர் ஆகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மனைவி காலமாகி விட்டார். சொந்த ஊர் திருச்சிப் பக்கம் வாலாடி. ஒரே மகன் திருமணம் ஆகி விட்டது. தற்போது அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் பேராசியர் பணியில். சம்பந்தி கர்நாடக அரசில் செயலாளர் அந்தஸ்தில் ஐஏஎஸ் அலுவலர். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் அமெரிக்காவில் பிள்ளையுடன் இருந்துவிட்டு காலையில் மதுரைக்கு விமானத்தில் வந்தவர், அங்கிருந்து வாலாடிக்கு ரயிலில் வருகிறார். மகன், மருமகள் மற்றும் பேரன் எல்லாம் சம்பந்தி வீட்டிற்கு பெங்களூரூ  வேறு விமானத்தில் வந்து விட்டனர். அங்கிருந்து மறுபடி வேறு விமானத்தில்  திருச்சிக்கு வந்து, இவர் திருச்சிக்கு வந்ததும் ரயில் நிலையத்தில் வந்து சேர்ந்து கொள்வதாக ஏற்பாடு. ஒரு வாரம் இருந்து வாலாடியில் உள்ள பூர்வீக வீடு நில புலன்களை விற்று விட்டு அவருக்கு சென்னையில் உள்ள ‘’பானாபானி” ஓய்வு பெற்றோர் இல்லத்தில் குடியமர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




அவர் பிள்ளை அங்கே உதவிப் பேராசிரியர் ஆகத்தான் ஐந்து வருடங்களுக்கு முன்  சேர்ந்தானாம். அவனுடைய துறைத்தலைவரும் இந்தியர்தானாம். ஏதோ தன் சொந்த காரணங்களுக்காக அமெரிக்க பல்கலைக்கழக வேலையை ராஜிநாமாச் செய்து விட்டு  பாரதியார் பல்கலைக்கழத்தில் சேர வந்து விட்டாராம். அதனால் போகும் போது இவரது பிள்ளையை தன் இடத்திற்கு பரிந்துரை செய்து விட்டுச் சென்று விட்டாராம். பல்கலைக்கழகத்திலும் செனட்டில்  அதை ஏற்றுக் கொண்டு  அதிகார மனிதரின் பிள்ளையை துறைத்தலைவர் ஆக நியமித்து விட்டார்களாம். ஆகவே தன் பிள்ளையால் அடிக்கடி விடுப்பு எடுக்க முடியாது. மேலும் திருச்சி வரை எடுத்துப்பிடித்து வருவதும் கடினம். சென்னை என்றால் சௌகரியம் என்பதால் ‘பானாபானி’யில் இருக்க ஏற்பாடு ஆகியது எல்லாம் சொன்னார். ரயில் திண்டுக்கல் தாண்டியிருந்தது. தமிழில் இதையெல்லாம் சொல்லும் போதே முதியவரையும், கூடவந்தவரையும் ஓரக்கண்ணால் பார்க்கத்தவறவில்லை. அப்படியே என்னிடம் “ நீங்க என்ன வேலை செய்கிறீர்கள்” என்று ஆரம்பித்தார். பள்ளிக்கூட வாத்தியார் என்றதும், குஷியாகி, “அப்படியா, படிக்கும் போது சரியாகப் படிக்கலயா? கோவிச்சிக்காதீங்க போக்கத்தவன் போலீஸ், வாக்கத்தவன் வாத்தி என்பார்கள்” என்று சொல்லிவிட்டு ஹஹஹா என்று பெரிய ஹாஸியம் சொன்னது போலச் சொல்லிச் சிரித்தார். அப்படியே சட்டென ஆங்கிலத்திற்கு மாறி, தாழ்ந்த குரலில் நீங்க பரவாயில்லை. சக பயணிகள் மாதிரி கைநாட்டுகள் இல்லை என்று சொன்னார். முதியவரிடமோ அல்லது கூட வந்தவரிடமும் எந்த எதிர் வினையும் இல்லை. 

எனக்கு அவர் சொல்வது பற்றி எல்லாம் கவலையே இல்லை. அவரது அங்கீகாரமும் என் அப்போதைய தேவை இல்லை. மேலும் அதிகபட்சம் இன்னும் இரண்டு அல்லது மூன்று மணி நேரப் பயணத்தில் யாரிடமும் மல்லுக்கட்ட அவசியமும் இல்லை. என் கவனம் எல்லாம் அவர் பேச்சில், செயல்பாடுகளில் கதை தேடுவதிலேயே இருந்ததை அவர் அறியவில்லை.
வண்டி திருச்சியை நெருங்கிக் கொண்டிருந்த போது கை பேசியில் அவருக்கு அழைப்பு வந்தது. அவர் பேசியதிலிருந்து திருச்சி சந்திப்பில் காத்திருக்கும் மகன் பேசுவதை அறிந்து கொள்ள முடிந்தது. அவர் கோச் எண்ணை என்னிடம் கேட்டார். நான் அதைச் சொன்னதும் எஸ் 4 , எஸ் 4 என்று போனில் தகவல் சொன்னார்.


அந்தக் கால சினிமா கதைகளில் எப்படி படம் முடியும் முன் வில்லனைக் கைது செய்ய மட்டும் போலீஸ் வருமோ அது மாதிரி பயணச் சீட்டு பரி சோதகர் வந்தார். ஒவ்வொருவரின் பயணச் சீட்டையும் வாங்கிச் சரிபார்த்தவரிடம் ரயில்களில் தகுதி குறைந்து ஆட்களுடன் பயணிக்க வேண்டியதாகி விட்டது என்று ஆதங்கப் பட்டவரை புழுவை போல் பார்த்தபடி ஒன்றும் பேசாமல் நகர்ந்தார். இன்னும் ஐந்து நிமிடங்களில் திருச்சி வந்து விடும். முதியவரிடம் நீங்கள் இந்த வயதான காலத்தில் ஏன் பயணம் செய்ய வேண்டும் என்று பரிகசிக்க அவர் என்னைத் தன்னுடன் வைத்துக்கொள்ளும் பொருட்டு மகன் அவரை கிராமத்திலிருந்து திருச்சிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார். வண்டி பிளாட்பாரத்திற்குள் நுழைந்து மெல்ல நகர்ந்து நின்றது.


முதியவரும், கூட வந்தவரும் இறங்க தயாராகவும், அதிகார மனிதரின் மகன் குடும்பத்துடன் வாலாடிக்குப் போக வண்டியில் ஏறவும் சரியாக இருந்தது. உள்ளே ஏறிய அதிகார மனிதரின் மகன் கூட வந்தவரைப் பார்த்து, “ ஹலோ புரொபசர், வாட் அ சர்ப்பிரைஸ்.உங்களை சந்திப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை” என்றதும் அதிகார மனிதர் சிவாஜி தொனியில்
“ யோகேஷ், என்னப்பா சொல்கிறாய்” என்றார்.
“ அப்பா மீட் மிஸ்டர் தியாகராஜன். நான் சொன்னேனே அந்த பேராசிரியர்   இவர்தான். என்னை துறைத்தலைவர் பதவிக்கு புரபோஸ் செய்தவர்” என்றவர்.
“ ஏன் புரொபசர் அந்த அமெரிக்க பல்கலைக்கழக வேலையை விட்டீர்கள், உங்கள் சொந்த விவகாரத்தில் தலையிடுவதாக நினைக்க வேண்டாம்” என்றவரிடம், கூட வந்தவர் “ இவர் என் தந்தை. அம்மா இறந்த பின் தனியாக அவரை விட மனதில்லை. ஆகவே என்னோடு வைத்துக் கொள்ளவே இந்தியா வந்தேன். நேரம் கிடைத்தால் பாரதியார் பல்கலைக் கழகத்தில் சந்திப்போம். வருகிறேன்” என்று சொல்லிச் சிரித்தபடி விடை பெற்றார்.


அதிகார மனிதரின் மகனுடன் வந்த டை கட்டிய மனிதரிடம் தன் தந்தையை காட்டி மிஸ்டர். கிரிதரன், இவரை உங்கள் பொறுப்பில் அடுத்த வாரம் சென்னையில் ஒப்படைக்கிறேன். என்னால் அதிகம் விடுப்பு எடுத்து அடிக்கடி வர முடியாது. என்ன ஆனாலும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். தவிர்க்க முடியாத போது தகவல் தந்தால் போதும். அடுத்த வாரம் சென்னையில் சந்திப்போம்” என்று அழுத்தமாகச் சொல்லவும் ரயில் கிளம்பவும் சரியாக இருந்தது.


அதிகார மனிதரின் உண்மையான பயணம் வாலாடிக்குப் பின் தான் ஆரம்பிக்கப் போகிறது என்பதை நினைத்தேன். இறைவன் கணக்குகள் பல சமயம் சரியாகவே இருப்பதாகத் தோன்றியது.