Monday, 28 November 2016

குருதட்சணை


“அப்பா, எனக்கு இப்போ கல்யாணம் செய்து கொள்ள விருப்பமில்லை. என்னை ஒரு பரிட்சைக்கு தயார் படுத்திக் கொண்டிருக்கிறேன். அந்தப் பரிட்சையில் கிடைக்கும் முடிவுதான் என் மணவாழ்வு பற்றி முடிவெடுக்கும்” என்று மிகத் தெளிவாக ஆகாஷ் பேசியதும் அதிர்ந்து போனார் சிவசாமி.

“என்னப்பா, ஓன்றுமே புரியவில்லை. இப்ப வரன் பார்க்க ஆரம்பித்தால்தான்  நல்ல வரன் கூடி வர எப்படியும் குறைந்தது ஆறு மாதமாவது ஆகும். அப்புறம் சத்திரம் கிடைத்து பொண்ணு வீட்டுச் சௌகரியம் எல்லாம் பார்த்து கல்யாணம் முடிய இன்னும் ஒரு ஆறு மாசம். ஆகக் கூடி எப்படிப் பார்த்தாலும் ஒரு வருஷத்திற்குக் குறையாமல் ஆகிவிடும். அதற்குள் நீ சொல்கிற பரிட்சை எழுதி முடிவும் தெரிஞ்சிடும் ஆகாஷ். அதால நா இந்த மாதம் நல்ல நாள் நிறைஞ்ச அமாவாசையில் பார்க்க ஆரம்பிக்கிறேனே. என்ன காமாட்சி நீ என்ன சொல்ற”, என்றார் சிவசாமி.

“மன்னிச்சிங்க அப்பா, இது நீங்க நினைக்கிற மாதிரி ஒரு வருடத்தில் எழுதி பாஸ் பண்ணற பரிட்சை எல்லாம் இல்லைப்பா அதை விட நிறைய காலம் பிடிக்கலாம். மேலும் நான் இன்னமும் அதற்கு தயாராகும் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறேன். தயவு செய்து புரிஞ்சிங்கப்பா” என்றான் ஆகாஷ்.
“காமாட்சி, நம்ம பிள்ளை ஏதோ காதல், கத்திரிக்காய் என்கிறாங்களே, அதில எதாவது மாட்டிக்கிட்டான் போலிருக்கு. எல்லாம் இந்த டெலிவிசன் வந்தாலும் வந்தது பசங்க எல்லாம் ரொம்பவே கெட்டுப்போச்சு.”

“சரி. விட்டுச் சொல்லுடா, உனக்கு பிடிச்சிருந்தா அது யாரா இருந்தாலும் நான் வெக்கத்த விட்டு   அவங்க வீட்டுப் படியேறிப் போய் பொண்ணு கேட்கிறேன். சும்மா பரிட்சை அது, இதுன்னு சொல்லிட்டு திடீர்னு ஒருநாளைக்கி மாலையும் கழுத்துமா ஒருத்திய கூட்டிட்டு வந்து காலில் வீழ்ந்து ஆசிர்வாதம் பண்ணச் சொல்லி மானத்தை வாங்காதே”.

“ஏம்பா உங்க தலைமுறையில் எல்லாருக்குமே கல்யாணம் இப்ப வேண்டாம் என்றால் காதல் தான் கண்ணில வந்து நிற்குது. வேற காரணம் இருக்காதா இல்லை இருக்கக் கூடாதா? நீங்க நினைக்கிறது மாதிரி இது பேப்பரில் பேனாவால் எழுதற பரிட்சை இல்லைப்பா”
“ஓ, அப்படி என்னடா பெரிய பரிட்சை”?
“ஆங்.அதெல்லாம் உனக்கு புரியாதப்பா. நீங்க ஆன்ம தேடல் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிங்களாப்பா?

“கலெக்டர் ஆபீஸில் ஜூனியர் அசிஸ்டெண்ட்க்கு இருட்டு ரெக்கார்ட் ரூமில் பைலைத் தேடவே நேரம் இல்லை. இதில் ஆன்ம தேடலா? ஆமா அப்படின்னா என்னடா? கொஞ்சம் விவரமாதான் சொல்லேன்”.

“ அதுப்பா, நாம நம்மையே அறிய தேடற முயற்சிப்பா. ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தோண்டிப் பார்க்கணும். ஞானம் ஊற்றெடுக்கும் வரை தோண்டணும். அப்படி ஞானம் வந்திட்டா வேற இல்லற சுகங்கள் உடம்புக்கு தேவைப்படாது. புரிஞ்சுதாப்பா?

“என்னவோபா, இதுக்கு காதல் கத்திரிக்காயே தேவலை போலிருக்கே.
சரி. நீ கடைசியா என்னதான் சொல்லப் போறே”?
“ஒன்றும் பிரச்சனை இல்லைப்பா. இந்த தேடலுக்கு வழிகாட்டி வேண்டும். அதாவது நல்ல குரு வேண்டும். சில வருடங்களாகத் தேடி அவரையும் கண்டு பிடித்து விட்டேன். கோவர்த்தனகிரியில் உள்ள சுவாமி ஜோதி தீட்சானந்தா ஆசிரமத்திற்கு இந்த வாரம் சனிக்கிழமை போகிறேன். அங்கே ஒரு மாதம் தங்கி பயிற்சி எடுத்துக் கொண்ட பின்னர் ஞான தீட்சை பெற்றுக் கொண்டு குரு காட்டும் வழியில் என்னை அறிய முயலப் போகிறேன். அதில் ஒருவேளை தோல்வி கண்டால் நீங்கள் சொல்லும் இல்லற வாழ்வு முறைக்கு கண்டிப்பாக வந்து விடுவேன். வேறு எதுவும் சொல்ல இப்போது எனக்குத் தெரியவில்லை. அவ்வளவுதான்”.

சிவசாமியின் மனதின் கொஞ்சம் மகிழ்ச்சியும், நிறைய கவலையும் ஆக அடைத்துக் கொண்டது.

எங்கே தன்னோடு பணிசெய்த தசரதன் பையன் வேற்று மதப் பெண்ணை காதலித்து ரகசியமாக பதிவுத்திருமணம் செய்து கொண்டு வந்து தர்ம சங்கடத்தில் தசரதனை ஆளாக்கியது மாதிரி ஆகாஷ் தன்னைச் சங்கடத்தில் ஆழ்த்தவில்லை என்ற மகிழ்ச்சி இருந்தாலும், காமாட்சி,” ஏங்க, நம்ம புள்ளை சாமியாரா காவி கட்டிட்டு போயிடுமாங்க. பயமா இருக்குங்க” என்றபோது வெளியில் “அதெல்லாம் ஒண்ணியும் ஆவாது” என்று தைரியம் சொன்னால் கூட அடிமனத்தில் அப்படி ஒரு பயம் தொற்றிக் கொண்டிருப்பதை அவரால் உணர முடிந்தது.

கலெக்டர் ஆபீஸ் கேண்டீனில் கண்ணில் பட்ட நெருக்கமான நண்பர்களிடம் எல்லாம் சுவாமி ஜோதி தீட்சானந்தா பற்றி விசாரிக்கவும், அவர்கள் இரு வேறு விதமாக கருத்துச் சொல்லவும் மனசில் குழப்பம் அதிகரித்தது. மேலும் வேறு நண்பர்களை விசாரிக்கலாம் என்றால், சர்வே டிபார்ட்மெண்ட் குப்புராஜ், “ என்னண்ணே, சுவாமி ஜோதி தீட்சானந்தா சிஷ்யரா மாற்றிட்டாப்ல என்று பேசிகிறாங்களே” என்று குறும்பாகக் கேட்கவும் அவசரமாக மறுத்து, “ அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நேத்து பொழுதுபோகாம டீவி பார்த்த போது அவரது சொற்பொழிவு கேட்டேன். நல்லா இருந்துச்சு அதான் விசாரிச்சேன்”.
“அப்படியா நம்ம கலெக்டர் ஆபீசில் பேசறவங்க, நீங்க சுவாமிஜி கூட சம்பந்தம் பண்ணப் போற லெவல்ல விசாரிச்சதா பேசிக்கிட்டாங்க” என்றவனின் நக்கல் பேச்சிற்குப் பின்னர் அவர் அலுவலகத்தில் விசாரிப்பது இல்லை என்ற தீர்மானத்திற்கு வந்து விட்டார்.

ஆகாஷ் சனிக்கிழமைதானே ஆசிரமத்திற்குப் போவதாகச் சொன்னான். அவனுடன் தானும் காமாட்சியை கூட்டிக் கொண்டு செல்வது ஒரு மாதம் மூவருமாக தங்குவது என்று முடிவு செய்து விட்டார்.
சூப்பிரண்டெண்ட் ஒரு சிடு மூஞ்சி என்றால் அப்படி ஒரு சிடுமூஞ்சி. ஒரு விதமா ஆபிஸ் அசிஸ்டெண்ட் பாலையாவிடம்  நூற்றைம்பது ரூபாய் கொடுத்தனுப்பி மறுநாள் முதல் மெடிக்கல் சர்டிபிக்கேட்  மஞ்சக் காமாலை என்று பொய்யாக வாங்கியாச்சு. பாலையாவுக்கு தனியாக ஒரு நூறு வெட்டியாச்சு. இல்லையென்றால் கிராதகன் ஆபிஸ் முழுதும் கலெக்டர் வரை எல்லாருக்கும் போஸ்டர் அடித்து ஒட்டாத குறையாக திருட்டு மெடிக்கல் லீவு போட்டதை கரும சிரத்தையாக சொல்லி விடுவான். 

அடுத்தது சூப்பிரண்டெண்ட கவனிக்கனும். கவரிங் லெட்டரும் மெடிக்கல் லீவு விண்ணப்பம், டாக்டர் சர்டிபிக்கேட் மற்றும் முக்கியமான பேப்பர்கள் எல்லாவற்றையும் கொடுத்து பவ்யமாக நின்றார்.
“என்னது மஞ்சக் காமாலையா? காண்டீனில் முருகலா நெய் ரவா தோசை சாப்பிட்டதை பார்த்தேனே” என்றவர், முக்கியமான பேப்பரைப் பார்த்ததும் “சரி சரி. நாளைக்கு ஒரு நாள் அன் அபீஷியலா வந்து பெண்டிங் ஒர்க் எல்லாம் முடிச்சிடுங்க. அடிக்கடி லீவு எடுக்காதீங்க. உடம்பை பார்த்துக்குங்க” என்றார். பத்து முறை தேங்கியூ சார் சொல்லி சீட்டிற்கு வந்து உட்காரும் போது மனசு கொஞ்சம் ஆசுவாசப்பட்டது.

அடுத்தது ஆகாஷிடம் எப்படி நாங்களும் கூட வருகிறோம் என்பதை சொல்வது? கண்டிப்பாக அதை ஏற்றுக் கொள்ள மாட்டான். எப்படியாவது ஆசிரமத்திற்குப் போய் விட்டால் சாமியாரிடம் சொல்லி, கெஞ்சிக் கூத்தாடி பையனை மீட்டு வந்து விடலாம். சாமியாரே ஆகாஷை இல்லறத்திற்கு போகச் சொல்லி உத்தரவிடும் பட்சத்தில் அதிகம் பிரச்சனை இல்லாமல் சம்பந்தம் பண்ண துடித்துக் கொண்டிருக்கும்  தன் தங்கச்சியிடம் பேசி வர தையில் அதிக ஆடம்பரமில்லாமல் திருமணத்தை முடித்து விடலாம். பார்ப்போம். கொஞ்சம் கொஞ்சமாக மனதில் நம்பிக்கை வேர் விட ஆரம்பித்தது.

சாயங்காலம் ஆபீஸ் முடிந்து வீட்டிற்கு வந்தவருக்கு காபி கொடுத்த காமாட்சி, “ என்னங்க, என்ன செய்யப்போறீங்க. என் பிள்ளையை சாமியாராக விடமாட்டேன். அதுக்கு நான் என்ன வேணாலும் செய்யறேங்க” என்றாள்.
“அம்மாடி நீ எதுவும் செய்ய வேண்டாம். எல்லாம் நல்லபடி நடக்கும். நீ எதாவது செய்து என் திட்டத்தை கெடுத்திடாதே. அது போதும்” என்றார்.
ஆகாஷ் வந்ததும், ஆபீசில் சுவாமிஜி பற்றிக் கேட்டதையும் தனக்கே அவரைப் பார்த்து அருளாசி வாங்க ஆசையாக இருப்பதையும் சொன்னதும் மகிழ்ச்சியுடன், “வாங்கப்பா. பார்த்தீங்களா, ஸ்வாமிஜி இப்படித்தான் எல்லார் மனசிலும் புகுந்து குடிகொண்டு விடுவார்” என்று அரைமணி நேரம்  மூச்சு விடாமல் லெக்ச்சர் அடித்து ஓய்ந்தான்.

அப்புறம் காரியங்கள் கடகட என்று நடக்க ஆரம்பித்தது. ஆகாஷே அவருக்கு, காமாட்சிக்கு, அவனுக்கு கோவர்த்தனகிரி எக்ஸ்பிரசில் மூன்றாம் வகுப்பு  ஏர்கண்டிசன் டிக்கெட் எடுத்தான். சனிக்கிழமை ரயிலேறி ஞாயிறு காலை கோவர்த்தனகிரி வந்து சேர்ந்தாகிவிட்டது. ஆகாஷ் தியானம் பண்ண இடைஞ்சலாக இருக்கும் என்பதால் தனி அறையும் , சிவசாமிக்கும், காமாட்சிக்கு இரட்டைப் படுக்கை அறையும் எடுத்துக் கொண்டான். உணவு, தங்குவது மற்றும் இதர பயன்பாடுகளுக்கு மொத்தமாக முன்பணம் பத்தாயிரம் ரொக்கமாக ஆகாஷ் கட்டியதைப் பார்த்த சிவசாமிக்கு மயக்கமே வந்து விட்டது.





ஆசிரமத்தில் எல்லாம் ஒரு ஒழுங்கு, கட்டுப்பாடோடு நடந்தது. எல்லா வேலைகளையும் தன்னார்வத்தொண்டர்கள் செய்தனர். விருந்தினர்களி மிக மரியாதையாக நடத்தினர். எல்லாவற்றிற்கும் மேலாக எப்போதும் எதாவது நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டே இருந்ததால் சிவசாமிக்கும், அதிகம் வெளியுலகப் புழக்கம் இல்லாத காமாட்சிக்கும் நன்கு பொழுது போனது. அடிக்கடி, “நா பெத்து வளர்த்த புள்ளங்க, அவன் நல்ல வழிக்குத்தான் போவான். கெட்ட வழி அவனுக்கு சுட்டுப்போட்டாலும் வராது” என்று சிவசாமியிடம் சொல்ல, அவர் “ஆமா” என்று அழுத்திச் சொல்லி ஒற்றை வார்த்தையில் முற்றுப் புள்ளி வைத்தார்.

கோவர்த்தனகிரி வந்த பதினைந்தாம் நாள் சுவாமிஜி, சிவசாமியைப் பார்க்க அழைத்தாக சுவாமிஜியின் செயலாளர் கூட்டிச் சென்றார். சுவாமிஜி அறையில் அனுமதிக்கு முன் பல விசாரணைகள், சோதிப்புகள். இறுதியாக அறைக்குள் போன சிவசாமி தம்பதியினரிடம் ஆகாஷுக்கு தீட்சை வழங்கி, ஞானோபதேசம் செய்வதில் அவர்களுக்கு ஆட்சேபணை இருந்தால் சொல்லும்படி கேட்டதும், காமாட்சி தன் பிள்ளை சாமியாராகப் போவதை விரும்பவில்லை என்றாள். சிவசாமியும் அதை பிரதிபலித்து, “ நீங்க சொல்ற எந்த வகையான சேவையும் செய்ய அவனை அனுப்பி வைக்கத் தயார். ஆனால் சன்னியாசி ஆவது வேண்டாம். அவன் மனதை மாற்றுவது அவர் கையில் தான் உள்ளது என்று கண்ணீர் மல்க வேண்ட சுவாமிஜி சிரித்தார். இருபத்தோரு வயதுக்கு மேல் அவன் மேஜர். அவன் எடுக்கும் முடிவை கட்டுப்படுத்த யாருக்கும் அதிகாரமில்லை என்று சட்டம் சொன்னார். கொஞ்ச நேரம் மௌனமாக யோசித்தவர்,
 “ஆகாஷ் என்ன படித்திருக்கிறான்” என்றார்.
“பல் மருத்துவம் சுவாமி, ஆனால் பெரிதாக பிராக்டீஸ் இல்லை”.
“ஓ. அப்படியா, இவன் உங்களுக்கு ஒரே மகனா”?
“ ஆமாம்”
அருகில் வாய் பொத்தி பவ்யம் காட்டிய செயலாளரை பார்த்து ஆகாஷை அழைத்து வரச் சொன்னார்.
ஆகாஷிடம், “குழந்தாய், ஞானம் என்பது வெறும் இருபது நாள் பயிற்சியில் வந்து விடுவது இல்லை. உன் மனம் இன்னும் பக்குவப்பட வேண்டும். உன் பெற்றோருடன் பேசியதில் உன்னைத்தவிர அவர்களுக்கு வேறு பிடிப்பும் இல்லை. உன் தொழிலில் உனக்கு சேவை புரியவும் புகழ் பெறவும் ஒரு வழி காட்டுகிறேன். அந்த வழியில் நடந்து உன்னை உணர்ந்து கொள். சம்மதமா”? என்றார்.
“ஆன்மீக குருவே, அப்படியே செய்கிறேன். எல்லாம் உங்கள் சித்தம்” என்றான் ஆகாஷ்.

அதன்படி ஆகாஷ் சென்னையில் உள்ள சுவாமி ஜோதி தீட்சண்யா சேவை மையத்தில் பல் மருத்துவராக சேவை புரிய இடம் தரப்படும். ஆசிரமம் சொல்லும் கட்டணத்தில் ஏழைகளுக்குப் பல் மருத்துவம் செய்யட்டும். ஆசிரமம் ஆகாஷின் சேவைக்கு மாதம் சன்மானம் தரும். ஆசிரமம் எளிய அமைப்பு என்பதால் கருவிகள் வாங்குவது, நிறுவுவது எல்லாம் ஆகாஷின் செலவு. ஒரு வருடம் கடந்தபின் ஆகாஷ் விரும்பினால் சேவையைத் தொடர்ந்து ஆசிரமத்தின் மையத்தில் தொடரலாம். விரும்பினால் தனியே சொந்தமாகத் தொழில் செய்யலாம். தனியே தொழில் தொடங்கினால் இப்போது அதிகம் பேர் வர வாய்ப்பில்லை. ஆசிரமத்தின் நிழலில் தொழில் செய்தால் பாதுகாப்பு, பெயர் மற்றும் நிறைய வாடிக்கையாளர்களைப் பெற முடியும் என்று எடுத்துச் சொல்லப்பட்டது.

இந்த ஏற்பாடு மூவருக்கும் பிடித்திருக்கவே, சட்டப்படி ஒப்பந்தம் ஆசிரமம் தயாரித்தது. ஞான தீட்சை பெறும் நாளில் கையெழுத்தானது. அளவிலா மகிழ்ச்சியுடன் மூவரும் சென்னைக்கு வந்தனர். லீவு முடிந்து சிவச்சாமி பணியில் சேர்ந்தார். மறு நாளே பிராவிடண்ட் பண்டில் லோன் போட்டார். கொஞ்சம் காமாட்சியின் நகைகளை வங்கியில் விவசாயக் கடன் என்ரு சொல்லி அடகு வைத்தார். அங்கே, இங்கே என்று சிறிது கடன் வாங்கி பதினைந்து லகரங்கள் தேற்றிவிட்டார். ஆகாஷ் போய் ஆசிரம சேவை மையத்தின் கிளை மேலாளரிடம் பேசி விட்டு வந்தான். அவர்களும் அறை ஒதுக்கிக் கொடுத்தனர். கருவிகள் பன்னிரெண்டு லட்சம், இதர வேலைகளுக்கு ஒரு லட்சம் செலவு செய்தான்.  திறப்பு விழாவிற்கு சுவாமிஜியே நேரில் வந்திருந்தார்.

ஆகாஷுக்கு மனம் நிறைந்தது இருந்தது. எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. நான்கு மாதம் கழித்து ஒருநாள் காலையில் மையத்தில் தன் அறையைத் திறக்கப் போனவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவன் அறையில் வேறு ஒரு பல் மருத்துவர் அவன் இடத்தில் உட்கார்ந்திருந்தார். பதறிப்போய் மைய மேலாளரைத் தொடர்பு கொண்டால் அவர் ஆசிரமம் அவனுக்கு வழங்கிய பணி நீக்க ஆணையை மௌனமாகத்தந்தார்.

அதில் சரியாகப் பணிக்கு வராமல் இருப்பதாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. சரி. கருவிகளை எடுத்துக் கொள்ளப் போனால், ஒப்பந்தத்தில் கருவிகள் ஆசிரமத்தின் சொத்தாக கருதப்படும் என்ற ஷரத்து பல்லிளித்தது. ஆசிரமத்தின் சேவை மையத்தில் இவன் தகறாறு செய்யலாம் என்று  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் ஆகாஷை சாப்பிட்டுப்போட்ட எச்சில் இலையாக தெருவில் தூக்கிப் போட்டது ஆசிரமம்.
தான் நன்றாக ஏமாற்றப்பட்டதை சிவசாமிக்கு போன் செய்து சொன்னதும் அதிர்ந்து போனார். கடனை நினைத்து கண்ணீர் வந்தது. அவர் சொன்ன கதையை யாருமே நம்பத் தயாராக இல்லை.


கடைசியில் நகரத்தின் பெரும் புள்ளி  ஒருவர் எல்லாவற்றையும் கேள்விப்பட்டு சிவசாமியின் கடன் அடைத்து பார்க்க படு சுமாராக இருந்ததால் சரியாக வரன் அமையாமல் இருந்த  தன் மகளை ஆகாஷுக்கு திருமணம் செய்து கொடுத்து, தனியாக ஒரு கிளினிக்கும் வைத்துக் கொடுத்தது தனிக்கதை. 

Saturday, 26 November 2016

கூலிக்காரன்

சிந்தாதரிப்பேட்டை புண்ணிய தலத்தில் ஓடும் கூவம் ஆற்றின் கரையில் குடியிருந்த ஏழை ஜனங்களில் பலர் போன வருட பெரு மழையில் பாதிக்கப்பட்டதும், பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப் பட்டனர் இல்லையா. அப்போது துரைப்பாக்கத்திற்கு அரசாங்கத்தின் கருணை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட துரும்பில் ஒன்று நம் முருகேசன். பூர்வீகம் தஞ்சாவூர் பக்கம் . காவிரிப் பாசனம் இருந்த காலத்தில் விவசாயக் கூலியாக நாலஞ்சு தலைமுறையாக வாழ்ந்து வந்த குடும்பம். இவன் காலத்தில் தண்ணித் தகறாறு, மீத்தேன் வாயு என்ற பிரச்சனைகளில் வேலை இல்லாமல் பாதிநாள் ஒரு வேளை சோத்துக்கு வழியில்லாமல் போகவே அசட்டு தைரியத்தில் சென்னைக்கு வண்டி ஏறியவன்.

இவனது 10 வகுப்பு பாஸ் ஒன்றும் பெரிதாக வேலை கிடைக்க உதவவில்லை. முருகேசனுக்கு தலைவரிடம் அலாதி மரியாதை. யாராவது எதாவது தப்பாச் சொன்னா கோவம் வரும்.கண்மண் தெரியாமல் அடித்துக் கூட விடுவான். தலைவருக்காக உயிரையும் தரத் தயார்தான். தலைவரிடம் கட்சி ஆபீசில்  வேலை போட்டுத்தர உறுப்பினர் அட்டை காட்டி கேட்கலாம் என்றால் வாசலில் நிக்கிற வட நாட்டு காவல்காரன் ‘அரே பாய், ஜாவ், ஜாவ்” என்று துரத்துகிறான்.
ஒன்றும் புரியாத நிலையில் எதோ  லாரி கம்பெனியில் கிளீனராக சேர்ந்து டிரைவருக்கு எடுபிடி வேலை செய்தும், சேர்த்து வைத்திருந்த காசில் அவ்வப்போது குவாட்டர் குருதட்சிணையாக வாங்கிக் கொடுத்தும் டிரைவிங் கற்றுக் கொண்டான். அப்படி இப்படி கொஞ்சம் பணம் புரட்டி லைசன்ஸ் எடுத்து விட்டான். முருகேசனுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. லாரி ஓட்டும் போது பொதுவாக ஹைவேயில் இரவு ராணிகள் கைகாட்டினால் சபலமின்றி தவிர்த்து வண்டியை வேகமாக ஓட்டி விடுவான். அனாவசிய செலவுகள் இல்லாததால் பணம் சேர்ந்தது. ஊரில் வெள்ளையும் சொள்ளையுமாகப் போய் இறங்கிய போது தாய்மாமன் கோவிந்தனின்  மகள் செல்லாயிக்கு அவனை கட்டி வைத்து விட்டனர்.

சென்னை வந்து லாரி  கிளீனர் ஆனதும் ஷெட்டில் தங்கிக் கொள்வான். டிரைவர் என்று ஆன பின்னும் அதை தொடர்ந்தான். ஆனால் இப்பொது அப்படி முடியாதே. வீடு பார்க்க வேண்டிய கட்டாயம். ஆறு மாத அட்வான்ஸ், 2500 ரூபாய் வாடகையில் ஆவடியில் அவுசிங்க் போர்டு LIG 13 அடிக்கு 36 அடி அளவில் கோமணம் மாதிரி வீடு கிடைத்தது. பூந்தமல்லியில் கம்பெனி. அதனால் ஆவடியில் இருந்தா வசதி. வீட்டு ஓனர் யாரோ பெரிய ஆபீசராம். அவருக்கு சிட்டிக்குள்ள ஏழெட்டு பங்களாங்க எல்லாம் இருக்காம். அதனால் இங்க வருவதற்கு வாய்ப்பே இல்லை. எல்லாம் புரோக்கர் சின்னப்பன் மூலம் தான். அவருக்கு வேற வேற பேரில் இத மாதிரி பத்திருபது வீடுங்க சிட்டி பூராம் இருக்காம். அந்த மனை குலுக்கலில் மனை கிடைத்த ஆளுங்களை சின்னப்பன் நோட்டம் விட்டு ஆளுக்கு விக்கறதுக்கு நெருக்கடி தருவான். வீடு கட்டற அளவு வசதியில்லாதவர்களிடம் மார்கெட் விலையில் பணம் தவணைப் பணம் போக மீதி பணம் கொடுத்து ஆபீஸர் பேரில்   வாங்கி விடுவான். அப்போ கையெழுத்து போட மட்டும் தான் சப் ரிஜிஸ்ட்ரார் ஆபீசுக்கு வருவாராம் அந்த பணக்கார ஏழை. அப்புறம் சின்னப்பன் அதில் வீடு கட்டி முடியும் வரையில் எல்லாவர்றையும் பார்த்துக் கொள்வானாம். இதெல்லாம் சின்னப்பன், முருகேசனிடம் வாடகைக்கும் அட்வான்சிற்கும் பேரம் பேசும் போது சொன்னது. என்னால் ஒன்றும் செய்ய முடியாது. எல்லாம் அய்யா சொல்றதுதான் என்று கறாராகச் சொல்லிவிட்டான். சரி இதை விடக் குறைவாக எங்கேயும் கிடைக்காது என்பதால் கடன் பதினைந்தாயிரம் ரூபாய் கூட வேலை செய்யும் ஆறுமுகம் கிட்ட இரண்டு வட்டிக்கு தண்டல் வாங்கினான். ஆறுமுகம் வட்டிப்பணம் 15 மாசத்திற்கு நாலாயிரத்தைனூறு ரூபாய் பிடித்துக் கொண்டு பத்தாயிரத்தைனூறு ரூபாய் பணம் கொடுத்து மாதம் ஆயிரம் வீதம் அசலை பதினைந்து மாதம் கொடுத்து விட ஏற்பாடாயிற்று. அது தவிர வட்டியில்லாக் கடனாக அண்டிமாண்டு பத்திரம் பதினைந்தாயிரம் பத்திரமும் எழுதி வாங்க்கிக் கொண்டான்.

குடித்தனம் போட்டாச்சு. எல்லாம் நல்லாத்தான் போய் கொண்டிருந்தது. செலவு முன்ன மாதிரி இல்லை. செல்லாயி உண்டாகி இருந்தாள். டாக்டர் செக்கப், மருந்து மாயம் அப்படி இப்படி என்று செலவு எகிறியதில் என்ன செய்ய என்றே புரியவில்லை. ஒரு நாள் கிளீனர் பாண்டியிடம் தன் நிலையைச் சொல்லிக் கொண்டிருந்த போது, கவலை படாதேண்ணே. நான் பணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றபோது சரி என்று சொன்னதுதான் தப்பாயிற்று.

பாண்டி கூட்டி வந்த ஆள், ஒரு மஞ்சப்பையில் தரும் பொருளை அவன் டிரிப் போகும் ஊரில் அவர் பாண்டியிடம் அடையாளம் சொல்லி அனுப்பிய நபரிடம் கொடுத்து விட வேண்டும். அதற்கு ஆயிரம் ரூபாய் தந்து விடுவார். இதுதான் ஏற்பாடு. முதலில் பயந்தான். ஆனால் பையில் சின்னதாக நூறு கிராம் நிறையில் நாலைந்து கவர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. கிராமத்து மனிசன் முருகேசனுக்கு சந்தேகம் எதுவும் வரவில்லை. ஒரு வருடம் அதற்குள் ஓடிவிட்டது. செல்லாயிக்கு  நிறை மாசம். கர்நாடகாவில் மங்களூருக்குப் போகும் போது திடீரென மடக்கிய போலீஸ் சோதனையில் அவன் கொக்கெயின் என்ற போதைப் பொருள் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டான். அப்போதுதான் மஞ்சப்பையில் இருந்த கவர்கள் பற்றித் தெரிந்தது. தலைக்கு மேல் வெள்ளம், நடப்பது நடக்கட்டும் என்ற மன நிலைக்கு வந்து விட்டான். அப்புறம் பாண்டி தனக்கு ஒன்றும் தெரியாது எல்லாம் முருகேசன் தான் என்று அப்ரூவர் ஆக சாட்சியம் சொல்லி நழுவியதில்  கர்நாடகா சிறையில் தண்டனையாக மூன்று வருடம் கழிந்தது. 

வெளியில் வந்தபோது எந்த லாரிக் கம்பெனியிலும் அவன் நுழைவதற்கு முன்னரே அவன் சரித்திரம் நுழைந்திருந்தது. எந்த வேலையும் கிடைக்கவில்லை. அவன் செயிலுக்குப் போன பின் செல்லாயி எப்படியோ காலத்தைத் தள்ளினாள். ஊருக்குப் போனாலும் கெட்ட பெயர்தான். போதைக் கடத்தக்காரன் பொண்டாட்டி என்று. அப்பா கோவிந்தனை வரச் சொல்லி செய்தி அனுப்பினாள். அனாதை என்று சொல்லி கோஷா ஆஸ்பத்திரியில் பிள்ளை பெற்றுக் கொண்டாள்.  கொஞ்சம் பச்சை உடம்பு சரியானதும் கட்டட வேலைக்குப் போய் வயிற்றுப் பாட்டை எதிர் கொண்டாள். ஓரளவு தைரியம் வந்ததும் அப்பனை ஊருக்குத் திரும்பி அனுப்பிவிட்டாள்.  நாலைந்து மாசத்திற்கு ஒருமுறை மங்களுர் சிறையில் முருகேசனைப் பார்த்து பிள்ளையைக் காட்டிவிட்டு வருவாள்.


முருகேசன் இல்லாத போது ஆவடி வீடு எல்லாம் அவளது தற்போதைய பொருளாதாரத்திற்கு சரிவராது என்பது தெளிவாகப் புரிந்தது. புரோக்கர் சின்னப்பன் தொந்தரவு வேற. “இங்கயே இருந்துக்க. நா அப்பப்ப வந்து போறேன்” என்றவன் முகத்தில் காறித்துப்பி விட்டு சிந்தாதரிப்பேட்டை கூவம் கரையில் தஞ்சம் அடைந்தவள்தான். திரும்பி வந்த முருகேசனுக்கு ஆறுதல் கூறி வந்தாள். அமைவதெல்லாம் சில்லறை வேலைகள் தான். அதுவும்  பல நாட்களில் கிடைக்காது. இப்போ மூணு நாளா வேலை இல்லை. இரண்டு நாள் எப்படியோ தள்ளியாச்சு. குழந்தைக்கு நாளையிலிருந்து கொடுக்க ஒண்ணுமில்லை. புரோக்கர் ரவி வந்து கூப்பிட்டார்.கட்சிக் கூட்டங்களுக்கு போஸ்டர் ஒட்டறது, தோரணம் கட்டறது, கூட்டங்களுக்கு ஆள் சேர்ப்பது கொடிகள் நடுவது இதெல்லாம் அவர்தான் காண்டிராக்ட்.அவனுடைய தலைவருக்கு எதிரிக் கட்சிக் கூட்டமாம்.

ஊர்வலம், பொதுக்கூட்டம் இரண்டு நாள் வேலை.சாப்பாடு, போஸ்டர் ஒட்டுக் கூலி தனி.எல்லாம் சேர்ந்து இரண்டாயிரம் ரூபாய் வரும்.ஆனா மனசு கேட்கவில்லை. பிடிவாதமாக மறுத்தான். பிச்சை எடுத்தாலும் இந்த கேவலமான வேலையை செய்ய மாட்டேன் என்றவனை, நாய் வித்த காசு குறைக்கவா செய்யும். உன் தலைவன் என்னைக்கு வேலை தந்து நீ என்னை காப்பாத்த. குடும்பத்தை, புள்ளயைப் பாரு என்று செல்லாயியும், ரவியும் கரைத்தனர். சரி வேற வழியில்லாமல் சம்மதித்து அட்வான்ஸ் இருநூறு ரூபாய் வாங்கியாச்சு. ராவெல்லாம் கொசுக்கடியில் போஸ்டர் ஒட்டி முடிச்சிப்படுக்கும் போது மணி மூணு. காலையில ஆறு மணிகெல்லாம் பச்சைத்தண்னியை குடிச்சிட்டு, துரைப்பாக்கத்திலிருந்து தி. நகர் வந்து   பழைய கிருஷ்ணவேணி தியேட்டர் பக்கம் காத்திருந்தான். ஆட்டு மந்தை மாதிரி லாரியில் நூறு பேரோட ஏற்றிவிட்ட கட்சிக்காரர் ஆளுக்கு ஒரு சுலோக நோட்டீஸ் தந்து எப்படி சொல்லவேண்டும் என்று பயிற்சி கொடுத்தார். வழியேற வாழ்க ஒழிக கோஷம் போட்டபடி பயணம். ஆனால் தலைவர் ஒழிக மட்டும் சொல்ல மனசு இடந்தரவில்லை. யாராவது சிலரோடு பேசிப் பார்க்கலாமே என்றால் அவர்களில் யார் கட்சிக்காரர், யார் தன்னைப்போல கூலிக்கு வந்தவர்கள் என்று தெரியவில்லை.எதாவது பேசப் போய் தன்னிலை மறந்து பேசிட்டால் பிரச்சனை வருவது மட்டுமில்லாமல் அடிவேறு கிடைக்கும். அதனால் ஒண்றும் பேசவில்லை. விவரம் விசாரித்தவர்களிடம் துரைப்பாக்கம் ரவி அண்ணன் ஆள் என்று மட்டும் சொல்லிக் கொண்டான்.

மத்தியானம் வரைக்கும் ஒண்ணுமேசாப்பிடதரவில்லை.அப்புறம் ஒரு பிரியாணி பொட்டலமும், தண்ணி பாக்கெட்டும் கிடைத்தது.மறைமலை நகர் பக்கத்தில் இறக்கிவிட்டனர்.அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் கூட்ட மேடை வரை ஊர்வலம். ஊர்வலம் தொடங்கி முக்கால் மணி நேரமாயிற்று. அரை குறைச் சாப்பாடு, முந்திய நாள் தூக்கமின்மை எல்லாம் சேர்ந்து கண்ணை இருட்டியது. போதாத குறைக்கு பிடிக்காத கட்சி வேறு. திடீரென முன்னால் எதோ குழப்பம். எதிர் திசையில் கூட்டம் ஓடிவர தள்ளு முள்ளு என்ன ஏதுன்னு தெரியதுக்குள்ள முருகேசனை நெடித்தள்ளியது கூட்டம்.அடித்துவந்த வெள்ளம் மாதிரி தள்ளாடியபடி ஓடத்தலைப்பட்ட முருகேசனை மிதித்தபடி முன்னேறியது கூட்டம். காலையில் எல்லாப் பத்திரிக்கைகளிலும் முருகேசன் மற்றும் ஐம்பது பேரின் மரணம் தலைப்புச் செய்தியானது.கூட்டம் நடக்கவில்லை என்றாலும் அந்த எதிரிக்கட்சித் தலைவர் மறு நாள் முருகேசன் வீட்டிற்கு ரவியோடு வந்து ஆறுதல் சொன்னார். இறுதிச் செலவுக்கு இரண்டாயிரம் தந்தவர், விரைவில் ஒரு லட்ச ரூபாய் கட்சி நிதியிலிருந்து தருவதாக வாக்களித்தார். கட்சி ஆபிசுக்கு ரவி அண்ணனுடன் பலமுறை அலைந்து விட்டாள். அங்கே கட்சி உறுப்பினர் அட்டை கேட்டனர். 

செல்லாயிக்கு மூன்று மாதத்திற்குப் பின் கட்சி தர இருந்த ஒரு லட்சம் ரூபாய் அவன் வேற கட்சி என்பதால் கிடைக்காமலேயே போனது.
இப்போது ரவி புரோக்கரின் நிரந்தர ஆட்கள் பட்டியலில் செல்லாயி சேர்க்கப்பட்டு முழுசாக நான்கு மாதம் முடிந்து விட்டது. மாதம் நான்காயிரம் சம்பளமாம். கூட்டத்திற்கு தலைவர்கள் பெயர் வைக்க பிள்ளையோடு வரவேண்டுமாம். இதெல்லாம் முருகேசனின்  ஊர்க்கார நண்பன் முத்துசாமி  நாலு நாள் முன்பு வீட்டில் கொத்தனார் வேலையில் வெள்ளை அடிக்க வந்த போது சொன்ன தகவல்.


*( இக்கதை sirukathaigal.com வலைத்தளத்தில் 25.11.2016 அன்று வெளியானது)

Monday, 21 November 2016

மலைப்பாம்புகள்

ராகவன் பூங்காவில் காலை நடைப் பயிற்சியை முடித்து விட்டு வீட்டிற்குக் கிளம்பும் போது,” அண்ணே, நல்ல இடம் ஒன்னு வந்திருக்கு. பொண்ணு கிளியா இருக்கா.திவாகருக்கு ரொம்பவே பிடிக்கும். சாயங்காலமா குரு ஓரையில கொண்டு வரறேன்” என்றபடி எதிரே வந்தார் தரகர் அய்யாச்சாமி. “சரி. கொண்டு வாங்க” என்றபடி வீட்டை நோக்கி நடந்தார் ராகவன்.
சாயங்காலம் அய்யாச்சாமி காட்டிய அந்த வரனை, அவர் சொன்னபடியே திவாகருக்குப் பிடித்துவிட்டது.
“பொண்ணோட அப்பா ரிட்டயர்ட் டெபுடி செகரட்டரியாக்கும். பல டிபார்ட்மெண்ட்களில் பழம் தின்னு கொட்டை போட்டவர். நல்ல மனுஷாள், ஓரே பொண்ணு, நாகப்பட்டனத்தில் நூறு வேலி காடு கரை இருந்தது. இப்போ எல்லாம் எண்ணைய் எடுக்க ஓ.என்.ஜி. சி யாமே அதுக்குக் கொடுத்தாச்சு. பொண்ணு எம். ஏ. எதிராஜில படிச்சிருக்கா. ஆனா படிச்சிருக்கோம் என்ற கர்வம் துளியும் கிடையாது. இப்போல்லாம் இது மாதிரி மனுஷா சம்பந்தம் கிடைகிறது தெய்வ சங்கல்பம்” என்றவரை, “அப்ப ஜாதகம் பார்த்து சீக்கரம் சொல்லறேன்” என்றார் ராகவன்.
“பாருடா திவாகர், இந்த மனுஷனை, இந்த பூஞ்ச உடம்ப வச்சிண்டு அலையறேன், திரியறேன் எங்கறார். அண்ணனுக்கு கஷ்டம் இருக்கக் கூடாதுன்னு தானே நானே நம்ம வடக்கங்கரை ரங்கநாதனிடம் காட்டி பொருத்தம் பார்த்து கொண்டு வந்திருக்கேன். பத்துக்கு ஒம்பது பொருத்தம், பாபம் சமபலம், தசா சந்திப்பு இல்லை. எல்லாம் நம்ம திவாகருக்கு இவதான் என்கிற மாதிரி அப்படி செட்டாயிருக்கு”.என்ற அய்யாச்சாமிக்கு ஆதரவு குரல் முதலில் திவாகரிடமிருந்து தான் வந்தது.
”அப்பா, அய்யாச்சாமி மாமா என்ன பொய்யா சொல்லப் போறாரு. நீங்க பார்க்கற அந்த வடக்கங்கரை ரங்க நாத ஜோசியரிடம் தான் காட்டியிருக்காரு. அம்மா நீ என்ன சொல்லறே”. என்றதும்,
”ஆமாம் திவா சொல்லறதும் சரிதான் நீங்க நல்ல நாள் பார்த்து பொண் பார்க்க வரோமின்னு தகவல் கொடுத்து ஏற்பாட்டை செய்யுங்க”
என்றதும் ராகவனுக்கு தலையசைப்பதைத் தவிர எதுவும் பேச இருக்கவில்லை. 
“நான் சொல்லக் கூடாது. அம்மா, நீங்களும், திவாகரும் கற்பூர புத்தி, சொன்னவுடன் டக் குனு புரிஞ்சிக்கறீங்க.. அண்ணா ரிட்டயர்ட் தாலுகா ஆபிஸ் சூப்ரண்டெண்ட்தானே. என்ன இருந்தாலும் அவங்க சம்பந்தம் குபேர சம்பத்து மாதிரி. அப்போ நான் உத்தரவு வாங்கிக்கிறேன், அடுத்து நல்ல தகவலோடு வரேன்”, என்று கிளம்பினார்.
அடுத்த வாரமே திவாகர் பெண் பார்த்தான். சம்பந்தி ஏக தடபுடலாக வரவேற்றார். திவாகருக்கு மட்டும் தனிக் கவனிப்பு. பெண்ணை பார்த்து அங்கேயே சம்மதம் சொன்னதும் கடகட என்று கண்மூடித்திறப்பதற்குள் ஆறு மாதங்கள் ஓடி கல்யாணம் வந்து விட்டது. இரண்டு பெட்ரூம் ஃப்ளாட் காணாது என்று திவாகரிடம் மாமனார் அடிக்கடி சொல்லி மூன்று பெட்ரூம் ஃப்ளாட்டுக்கு மாறியாச்சு. பழைய ஃப்ளாட்டை விற்றது போக தேவைப்பட்ட இருபது லட்சத்தை திவாகருக்கு கொடுத்தாகி விட்டது. மாமனார் வீடு வாங்க காட்டிய ஆர்வத்தை துண்டு விழும் பணத்திற்கு அல்லாடிய போது, “ சம்பந்தி நீங்க உங்களுக்கப்பறம் யாருக்கு தரப்போறீங்க. அவங்களுக்குத்தானே. அதை இப்போ கொடுத்தால் வட்டிக்கு வாங்க வேண்டாமே”, என்று சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் சொல்லிச் சொல்லியும், மருமகள் காவ்யா, “திவா அப்பா சொல்லறது சரிதானே” என்று வேப்பிலை அடித்தும், பணத்தை எடுத்துத்தருவது தவிர வேறு வழியில்லை என்ற நிலை. மனைவி யசோதாவிற்கு ஒன்றும் தெரியாது. கணவன், அடுப்படி, பிள்ளை  இப்படியே அவள் வாழ்க்கையை கிட்டத்தட்ட முக்கால் பகுதி கழித்தாயிற்று. ரிட்டயர் ஆன போது கிடைத்த கிராஜூட்டி, பிராவிடண்ட் பண்ட் எல்லாமா சேர்ந்து முப்பது லகரம் வந்தது. அதில் பத்தை அவள் பெயரிலும் மீதியை தன் பெயரிலும் வைப்பு நிதியாக வங்கியில் வத்திருந்தார். பென்ஷன் மாதம் பதினைந்தாயிரம் வருகிறது. அதனால் அதிகம் யோசிக்காமல் எடுத்துக் கொடுத்தார். புது வீட்டில் சின்னஞ்சிறிசுகள் ஒரு படுக்கை அறையிலும், மற்றது இவர்களுக்குமாக ஆனது.  ஆரம்பத்தில் வாரம் வெள்ளிக் கிழமை மதியம் சம்பந்தி ராஜசேகர் தம்பதி சமேதராக பெண்ணைப் பார்க்க வருவர். இரவு சாப்பிட்ட ஹோட்டலுக்கு மாப்பிள்ளையையும், பெண்ணையும் கூட்டிக்கொண்டு போய்விட்டு திரும்புவர். ராகவனையோ, யசோதாவைவோ யாரும் கூப்பிடுவது இல்லை. அவர்களும் இது பற்றி பெருசாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்த இரு நாட்களும் அவர்கள் அந்த மூன்றாவது படுக்கை அறையை தங்கள் அறையாக மாற்றிக் கொண்டு தங்கி விடுவது வாடிக்கை ஆயிற்று.           
ஒரு நாள் திவாகரிடம் ஜாடையாக கேட்டபோது
“ அவங்களுக்கும் யார் அப்பா இருக்காங்க? அதுவும் என் கடமைதானே” என்ற பின் ராகவன் அந்த தலைப்பைத் தொடுவதே இல்லை. மருமகள் காலை எட்டு மணிக்குத்தான் எழுந்திருப்பாள். திவாவுக்கு ஏழு மணிக்கு கிளம்ப அலுவலக கார் வந்திருக்கும். அதற்குள் அவனுக்கு டிபன் செய்து, மதியம் சாப்பிட சமைத்து அனுப்புவது எப்போதும் போல யசோதா அம்மாவின் வேலை ஆயிற்று. ராகவன் அவளிடம் கேட்டால், “பாவம் சின்னஞ்சிறிசுங்க, நாளைக்கு அவதானே பார்த்துக்கப் போறா, நா இருக்கற வரைக்கும் நான் செய்யறேன்”. என்பதே பதிலாக வரும்.
அன்று திவாகர் சீக்கிரமே அலுவலகம் வந்துவிட்டான். எச்.ஆர் ரில் கூப்பிடுவதாக தகவல் வந்தது. கதவை தட்டி உள்ளே நுழைந்தவனை “கங்கிராட்ஸ் திவா. நீங்க பலநாளா ஆசையோடு எதிர்பார்த்த அமெரிக்கா செல்லும் வாய்ப்பு நம்ம சி.எம்.டி உங்களுக்கு அளித்திருக்கிறார். மொத்தம் மூன்று வருடம் காண்டிராக்ட். அப்புறம் நீங்க விரும்பினால் மேலும் ஐந்து வருடம் அல்லது அதற்கு மேலோ இருக்கலாம். நான் இன்னும் இரண்டு மாதம் அவகாசம் தருகிறேன். அதற்குள் இப்ப பாக்கி இருக்கிற வேலை எல்லாம் செட்டில் பண்ணிட்டால் போதும். பை தி பை நீங்க குடும்பத்துடன் போகலாம், ஆனா உங்களுக்கும் உங்க மனைவிக்கும் மட்டும் கம்பெனி விமான கட்டணம் தரும். மற்ற எல்லாருக்கும் நீங்க தான் டிக்கெட் எடுக்க வேண்டும். பாஸ்போர்ட், விசா இதெல்லாம் கம்பெனி பார்த்துக் கொள்ளும். நீங்க அழைச்சுக்கிட்டுப் போறவங்க விவரம், அவங்களுக்கான டிக்கெட் பணம் மூன்று லட்சம் இதை இன்னும் இருபது நாளில் கொடுத்துவிடுங்க. மற்றத நாங்க பார்த்துக்கிறோம். ஆல் தி பெஸ்ட்” என்றார் எச்.ஆர் மேலாளர்.         
திவாகருக்கு ஒரே சந்தோஷம். உடனே காவ்யாவிற்கு  செய்தியை சொன்னான். அவள் உடனே ‘எங்க அப்பாகிட்ட சொல்லுங்க’ என்றாள்.
‘சரி. நீ, எங்க அப்பா, அம்மாவிடம் சொல்லிவிடு’ என்றதற்கு “சரிங்க’ என்று போனை வைத்தாள்.
மாலையில் வீட்டிற்கு வந்த போது அப்பா இல்லை. அம்மா சமையல் அறையில் இருந்தாள். தன் அறைக்கு வந்து காவ்யாவை பார்த்தவனுக்கு அதிர்ச்சி. படுக்கையில் படுத்திருந்தவளை என்னாச்சு காவ்யா என்றான். தெரியலீங்க. காலையிலிருந்தே ஒரே தலை சுற்றல் வாந்தி என்றாள். உடனே அம்மாவிடம் காவ்யாவுக்கு உடம்பு சரியில்லை. டாக்டரிடம் போய்விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு கால் டாக்ஸியில் டாக்டர் கிளினிக் போனான். டாக்டர் அவளைப் பரிசோதித்துவிட்டு, அவள் தாய்மை அடைந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். திவாவுக்கு இரட்டை சந்தோஷம். வீட்டிற்கு வந்ததும் அப்பா,அம்மாவிடம் சொன்னதும் அவர்கள் இருவருக்கும் அப்படி ஒரு சந்தோஷம். அப்படியே அமெரிக்க காண்டிராக்ட் பற்றி சொல்ல ஆனந்தம் பொங்கியது.
விமான கட்டணம் பற்றி பேச்சு வந்ததும் அம்மா உடனே என் பேருல அப்பா போட்ட பணத்தில தரச் சொல்லிடறேன் என்றதும் அவனுக்கு அப்பவே அமெரிக்கா போன மாதிரி இருந்தது. மகள் கருவுற்ற செய்தி கேட்டு சம்பந்தியும், சம்பந்தியம்மாவும் வந்தனர். அம்மா தன்னுடன் இருந்து கவனிக்க காவ்யா விரும்பியதால் அமெரிக்கா கிளம்பும் வரை சம்பந்தி தம்பதி அங்கேயே தங்க முடிவாயிற்று.
சம்பந்தி சுறுசுறுப்பாக முக்கியமான எல்லா பொருட்களையும் மறுநாளே லாரியில் கொண்டு வந்து விட்டார். அவரும் ராகவனும் வாக்கிங் போனாலும் தனித்தனியாகத்தான் போவார்கள். சம்பந்தி ராஜ சேகர் வந்த பின் வரவேற்பறையிலிருந்து தொலைக்காட்சி அவர்கள் அறைக்கு குடிபெயர்ந்தது.
யசோதா அம்மா தான் எல்லாருக்கும் சேர்த்து சமையல். சாப்பாடு, காபி, டிபன் என்று எல்லாம் சம்பந்தி குடும்பத்திற்கும் சேர்த்தே செய்வது எழுதப்படாத சட்டம் என்றானது. அம்மா பாவம் தனியா சமையல் வீட்டு வேலை செய்து கஷ்டப்படுவது திவாகருக்கோ, காவ்யாவிற்கோ, சம்பந்தி அம்மாவுக்கோ கவனத்தில் வராமலே இருந்தது ஆச்சரியம்தான்.
அப்படியும், இப்படியுமாக ஒரு வாரம் ஓடிவிட்டது.
காலையில் நடைபயிற்சி முடித்து வந்தவர் யசோதா எனக்கு நெஞ்சு வலிக்கிறது என்றார். அருகில் உள்ள பெரிய தனியார் ஆஸ்பத்திரியில் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தாயிற்று.
வெளியே அம்மா கண்ணைமூடி பிளாஸ்டிக் சேரில் கவலையாக இருந்தாள். திவாகரை, “மாப்பிள்ளை இப்படி சித்த வாங்கோ” என்று கூப்பிட்ட ராஜ சேகர் “இத பாருங்கோ மாப்பிள்ளை, அப்பாவுக்கு வயசாயாச்சு, தீ ன்னு சொன்னா நாக்கு வெந்திடாது. எதுவும் ஆகலாம் அதனால அப்பாவை பார்த்துக்கணும் அப்படின்னு அமெரிக்க காண்டிராக்ட வேண்டாம் என்று சொல்லிடாதீங்கோ. எங்க ஸ்டேட்ட்ஸுக்கு உங்க குடும்பம் சமதை இல்லனாலும் ஒங்களுக்கு காவ்யாவை கட்டித்தந்ததே உங்க கெரியர் பார்த்துத்தான். முதலில் அவர் எதாவது சேர்த்து வச்சிருக்காரா? அப்படி ஒன்னும் இருக்கற மாதிரி தெரியல. உங்களுக்கு இப்போ ஆயிரம் செலவிருக்கு. கொஞ்சம் தேவலை ஆனதும் வீட்டிற்கு கொண்டு போயிடலாம். இவங்க பணம் பிடுங்குவார்கள். அப்பாவை அமெரிக்கா கூட்டிண்டு போகறதுல தப்பொன்னும் இல்லதான், ஆனா அங்க வைத்தியச் செலவுகள் தாக்குபிடிக்க முடியாது. இங்க நல்ல முதியோர் இல்லம் பார்த்து சேர்த்திடலாம். அவரோட பென்ஷன் தொகைய அங்க கட்டினாலே போதும். கூட ஐந்து, பத்து ஆனாக்கூட நாம கட்டிடலாம். இப்ப காவ்யாவையும் அப்புறம் குழந்தையையும் பார்த்துக்க மாமியும் நானும் உங்களோட வந்திருக்கோம். இங்க எல்லா மனுஷாளையும் விட்டு அமெரிக்கா வர பிடிக்கலைதான், ஆனா உங்களுக்காக அதெல்லாம் விட்டுக் கொடுக்கறோம். என்ன காவ்யா நாஞ்சொல்லறது”, என்றவரிடம் ‘ஆமாங்க, நல்லா யோசித்து பாருங்க. அப்பா சொல்லறதுதான் சரிங்க” என்றாள் காவ்யா. “சரி, இப்ப போய் இதுவரை ஆன தொகை மத்த விவரங்களை தெரிஞ்சிக்கிட்டு வாங்க” என்றவரிடம் பேசவே பிடிக்கவில்லை திவாகருக்கு. ஆனாலும் தன் அமெரிக்க வாழ்வு போய்விடுமோ என்ற பயமும் இருந்தது.


எதுவானாலும் சரி. அப்பா,அம்மாவை கூட்டிப்போக முடியாது. முதலில் அவரது உடல் நிலை விமானத்தில் முப்பத்தாறு மணி நேர  பயணத்தை தாங்க முடியுமா என்பது சந்தேகமே, நல்ல முதியோர் இல்லத்தில் செர்த்து விடலாம். மாமா சொல்வதில் தவறு ஒன்றும் இல்லை. இங்க வைத்து பராமரிக்க செலவாகும். பார்க்கலாம் என்ற நினைப்பில் நடந்தவனை டாக்டர் கூப்பிட்டு, “ நாங்க அதிகம் முயற்சி செய்தோம் ஆனாலும் உங்க அப்பாவை கடவுள் அழைத்துக்கொண்டு விட்டார். ஐ யம் சாரி,” என்றதும் அழுகை பீறிட்டது. அம்மாவிடம் எப்படி சொல்வது என்று அருகில் சென்று, “அம்மா” என்று லேசாக உலுக்கினான். வழக்கம் போல் மகனுக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்க விரும்பாத அம்மா  அவன் மடியில் தன் உயிரற்ற உடலை விட்டு விட்டு சிரித்தபடி கணவருடன் கை கோர்த்து பறந்து வானில் மறைந்தாள்.

Thursday, 20 October 2016

ரயில் பயணங்களில்

துரை சந்திப்பிலிருந்து அந்த பகல் பொழுது பாசஞ்சர் வண்டி மதியம் இரண்டு மணிக்குப் புறப்படும். இப்போது மணி 12.50 தான். இன்னும் முழுசாக 70 நிமிடங்கள் இருந்தது. 5 வது பிளாட் பாரத்தில் தூங்கி வழிந்த படி நின்று கொண்டிருந்தது. அறிவிப்பாளரின் இயந்திரத்தனமான “பயணிகளின் பணிவான கவனத்திற்கு............ மூன்றாவது நடைமேடையிலிருந்து இன்னும் சிறிது நேரத்தில் புறப்படும்” என்று அறிவித்து கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் கடந்து விட்டது. அந்த வண்டி இன்னும் புறப்பட்ட பாடில்லை. என்னுடைய வண்டிக்கும் இதே கதி தான் என்று நினைக்கும் போதே எரிச்சலாக வந்தது. நான் அமர்ந்திருந்த எஸ் 4 பெட்டியில் அதிகம் கூட்டம் இல்லை. மொத்தம் எண்ணினால் 15, 20 நபர்கள் தேறுவது கடினம். நான் பொதுவாகவே பகல் நேர ரயில் பயணங்களில் தனியான ஒற்றை இருக்கையையே விரும்புவேன். 

அதில் நிறைய சௌகரியங்கள். சன்னல் வழியே வேடிக்கை பார்க்கலாம். விருப்பப்பட்டால் சக பயணிகளுடன் பேசலாம். இல்லாவிட்டால் அவர்கள் நடவடிக்கைகளை, உரையாடல்களை கவனிக்காத மாதிரி காட்டியபடி கவனித்தால் நிறைய சுவாரசியமான விஷயங்களை உள் வாங்க முடியும். அப்புறம் அதை அசை போடும் போது அடுத்த கதைக்கு கருப்பொருளை எப்படியும் தேற்றிவிடலாம்.


பொது வெளியில் முகம் காட்டாத, தெரியாத எழுத்தாளனுக்கு கிடைக்கும் இந்த வசதி பிரபலங்களுக்கு வாய்ப்பதில்லை. ஜீன்ஸ், வெள்ளை ஜிப்பா, ஜோல்னா பை, முரட்டு தாடி, மீசை, சதா சிந்திக்கும் முகபாவம் என்று எழுத்தாளனுக்கு ஒரு அடையாளத்தை பத்திரிக்கைகள் தந்து தவறாக அடையாளப்படுத்தி எழுத்தாளர்களுக்கு நிம்மதியை தந்து பல நேரங்களில் நமது பயணங்களை இனிதாக்கி விடுகின்றன. பல எழுத்தாளர்கள் சூடம் ஏற்றி சத்தியம் பண்ணினாலும் இந்த அடையாளங்கள் இல்லாதவரை பொது ஜனம் எழுத்தாளராகவே ஏற்றுக் கொள்வதில்லை. “ இப்படி வழியை அடைச்சிக்கிட்டு நின்னா எப்படி ஏற முடியும், ஒன்னு எறுங்க இல்லை தள்ளி நில்லுங்க”, என்று அதிகாரமாக ஒரு குரல் ஒலித்தது. பெட்டியின் வாசலில் ஒரு எழுபத்தைந்து வயதுத் தோற்றமுள்ள முதியவரை கைத்தாங்கலாக அணைத்தபடி ஏற்றி விட்டுத் தானும் ஏறிக்கொண்டிருந்தார் ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க நடுத்தர வயது மனிதர். சப்தம் போட்ட மனிதர், ஆளை விழுங்கும் பெரிய பெட்டிகள் இரண்டை பிளாட்பாரத்தில் வைத்துக் கொண்டு நின்றிருந்தார்.  அவருக்கும் சுமாராக அறுபது , அறுபத்தைந்து வயதிருக்கும். அவரது உடை, போட்டிருந்த நறுமண திரவியம் பேச்சு எல்லாம் பெரிய அரசாங்கப்  பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர் என்பதைச் சொல்லாமல் சொல்லியது. விலையுயர்ந்த பேண்ட், டீ சர்ட், காலில் நைக் ஷூ, கையில் ஆப்பிள் ஐ - பாட் என்று மார்டன் சர்வாலங்கார பூஷிதராக இருந்தார்.   சப்தம் கேட்டதும், அந்த எழுபத்தைந்து வயது முதியவரை என் பகுதியில் காலியாக இருந்த மூன்று பேர் இருக்கையில் அமர வைத்து விட்டு அந்த ஐம்பது வயது மனிதரும் அமர்ந்தார்.

வண்டிக்கு வெளியே, அதிகாரத் தொனி மனிதர் இன்னும் வண்டியில் ஏறாமல் அந்த மெகா சைஸ் பெட்டிகளை சுமந்து வந்த போர்ட்டருடன் வாதம் செய்து கொண்டிருந்தார். அவர்கள் பிரச்சனை பலத்த வாக்கு வாதத்திற்குப் பின்னர் ஒரு வழியாக போர்ட்டர் நாலு மரியாதையான வசவு வார்த்தைகளை உதிர்த்த பின்னர், போலீசுக்கு புகார் கொடுப்பேன் என்ற இவரது மிரட்டலுடன் ஒரு வழியாக முடிவிற்கு வந்தது. பெட்டியைக் கூட கம்பார்ட்மெண்டில் ஏற்றாமல் போர்ட்டர் கிளம்பி விட்டதால், முகம் சிவக்க பெட்டிகளை வண்டியில் ஏற்ற படு சிரமப்பட்டார். வழியை விட்டு தள்ளி நிற்க சொல்லப்பட்ட ஐம்பது வயது மனிதர் புன்சிரிப்புடன் அவர் பெட்டிகளை மேலிருந்து வாங்கி வண்டிக்குள் ஏற்றினார்.

வண்டியில் ஏறிய மனிதர், பெட்டியை ஏற்ற சிரமப்பட்ட போது உதவி செய்தவருக்கு ஒரு மரியாதைக்குக் கூட நன்றி சொல்லவில்லை. அந்த மெகா பெட்டியோ இருக்கைக்குக் கீழே செல்ல மறுத்து அடம் செய்தது. இரண்டு பெட்டிகளையும் நிற்க வைத்து விட்டதால்  மனிதர்கள் காலை கீழே வைக்க வழியே இல்லாமல் போனது. அந்த முதியவரையும், கூட வவந்திருந்த அந்த ஐம்பது வயது மனிதரையும் பார்த்து,  “கேன் யூ சிட் இன் தி நெக்ஸ்ட் பே”? என்றார். இப்போது என் உள் மனம் சொல்லியது இவர்களுக்கு பெயர் தந்து விடலாம் என்று. சரி முதியவர், கூட வந்தவர், அதிகாரப் பெரியவர் என்று பெயர் தந்து விட்டேன். கூட வந்தவர், முதியவரை என் இருக்கைக்கு எதிரில் இருந்த மற்றொரு ஒற்றை இருக்கையில் உட்கார வைத்தார். தான் என் இருக்கைக்கு பக்கத்தில் இருந்த மூவர் இருக்கையில் வழிபாதையை ஒட்டி அமர்ந்தார். 


அதிகாரப் பெரியவர் என்னை, முதியவரை மற்றும் கூட வந்தவரை நோட்டம் விட்டார். அவரது பார்வை எங்களை அளப்பது போல இருப்பதை என்னால் அனுமானிக்க முடிந்தது. ஆக எங்கள் மூவரில் அவரது தகுதிக்கு உரையாட யாருமே இல்லை, அதிலும் குறிப்பாக முதியவரும், கூட வந்தவரும் சத்தியமாக இல்லை. என்னை வேறு வழியே இல்லாவிட்டால் டைம் பாஸுக்கு கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம் என்ற அவர் அளவீடு  அவரின் கண்களிலேயே தெரிந்தது. சுற்றும் முற்றும் பார்த்தவர் பெட்டியை சிரமப்பட்டுத் திறந்து தன் டேப்லெட்டை எடுத்துக் கொண்டு விரல் தேய்க்க ஆயத்தமானார். மணி இன்னும் இரண்டாகவில்லை. செல்போனில் மின்னேற்ற பிளக் பாயிண்ட் தேடினார். என்ன காரணமோ மின்னேறவில்லை. என்னைப் பார்த்து சிரித்தும் சிரிக்காமலும் ஒரு மோனோலிசா பாவத்தில், “ பிளடி ரயில்வே. திஸ் மஸ்ட் பி பிரைவேட்டைஸ்ட்” என்றவர், மறக்காமல் முதியவரிடமும், கூட வந்தவரிடமும் ஆங்கிலம் தெரியுமா என்று கேட்டார். பதிலுக்கு முதியவர் உங்களுக்குத் தமிழ் தெரிந்திருப்பதால் அதில்  என்னால் இயல்பாக உரையாட முடியும் என்றார். 


ஆனால் அதிகாரப் பெரியவர் என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்து விட்டு, “ இப்போதெல்லாம் முன்னைப் போல பெரிய மனிதர்கள் ரயிலில் பயணிப்பதில்லை. கண்டவர்களுடன் எல்லாம் பயணிக்க வேண்டியுள்ளது, அதிலும் குறிப்பாக கிராமத்தான்கள் தொல்லை தாங்க முடியவில்லை. என்று ஆங்கிலத்தில் குறைபட்டுக் கொண்டார்.
நான் அதை ஆமோதிக்க வேண்டும் என்ற அவரது எதிர்பார்ப்பு கண்களில் பளிச்சிட்டது. இரயில்  சரியாகக் கிளம்பி விட்டது. நான் எதுவும் பேசவில்லை. அவராகவே ஆரம்பித்தார். கையில் ராபின் குக் புத்தகத்தை எடுத்து விரித்தவர், எவன் சார் தமிழில் இப்படியெல்லாம் எழுதறான்  என்றார். நான் ஆமோதிக்கக் காத்திருந்தார். எனக்கோ பயங்கரக் கடுப்பு. இருந்தாலும் மறைத்துக் கொண்டு சார் நீங்க தமிழ் எழுத்தாளர்களில் யாரைப் படித்திருக்கிறீங்க? என்றதும், நான் அந்த கருமத்தை எல்லாம் விரலால் கூடத் தொடுவது கிடையாது. எல்லாம் காப்பி. ஒரிஜினாலிட்டி இல்லாதவை என்று தீர்ப்புக் கொடுத்தார். சரி சார் எங்கே போகிறீர்கள் என்று இலக்கியம் பேசுவதை நாகரீகமாக மடை மாற்றினேன். என்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இருப்பதே சாலச் சிறந்தது என்றுபட்டது.


முதியவர் மற்றும் கூட வந்தவரை பார்த்துவிட்டு தன் பிரதாபத்தைத் தமிழில் அளக்க ஆரம்பித்தார். ஆங்கிலத்தில் பிரதாபத்தை சொல்வதால் முதியவரையும், கூடவந்தவரையும் பிரமிக்க வைக்க முடியாதல்லவா. தமிழ் நாடு அரசில் மின் வாரியத்தில் கணக்கு அலுவலர் ஆகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மனைவி காலமாகி விட்டார். சொந்த ஊர் திருச்சிப் பக்கம் வாலாடி. ஒரே மகன் திருமணம் ஆகி விட்டது. தற்போது அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் பேராசியர் பணியில். சம்பந்தி கர்நாடக அரசில் செயலாளர் அந்தஸ்தில் ஐஏஎஸ் அலுவலர். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் அமெரிக்காவில் பிள்ளையுடன் இருந்துவிட்டு காலையில் மதுரைக்கு விமானத்தில் வந்தவர், அங்கிருந்து வாலாடிக்கு ரயிலில் வருகிறார். மகன், மருமகள் மற்றும் பேரன் எல்லாம் சம்பந்தி வீட்டிற்கு பெங்களூரூ  வேறு விமானத்தில் வந்து விட்டனர். அங்கிருந்து மறுபடி வேறு விமானத்தில்  திருச்சிக்கு வந்து, இவர் திருச்சிக்கு வந்ததும் ரயில் நிலையத்தில் வந்து சேர்ந்து கொள்வதாக ஏற்பாடு. ஒரு வாரம் இருந்து வாலாடியில் உள்ள பூர்வீக வீடு நில புலன்களை விற்று விட்டு அவருக்கு சென்னையில் உள்ள ‘’பானாபானி” ஓய்வு பெற்றோர் இல்லத்தில் குடியமர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




அவர் பிள்ளை அங்கே உதவிப் பேராசிரியர் ஆகத்தான் ஐந்து வருடங்களுக்கு முன்  சேர்ந்தானாம். அவனுடைய துறைத்தலைவரும் இந்தியர்தானாம். ஏதோ தன் சொந்த காரணங்களுக்காக அமெரிக்க பல்கலைக்கழக வேலையை ராஜிநாமாச் செய்து விட்டு  பாரதியார் பல்கலைக்கழத்தில் சேர வந்து விட்டாராம். அதனால் போகும் போது இவரது பிள்ளையை தன் இடத்திற்கு பரிந்துரை செய்து விட்டுச் சென்று விட்டாராம். பல்கலைக்கழகத்திலும் செனட்டில்  அதை ஏற்றுக் கொண்டு  அதிகார மனிதரின் பிள்ளையை துறைத்தலைவர் ஆக நியமித்து விட்டார்களாம். ஆகவே தன் பிள்ளையால் அடிக்கடி விடுப்பு எடுக்க முடியாது. மேலும் திருச்சி வரை எடுத்துப்பிடித்து வருவதும் கடினம். சென்னை என்றால் சௌகரியம் என்பதால் ‘பானாபானி’யில் இருக்க ஏற்பாடு ஆகியது எல்லாம் சொன்னார். ரயில் திண்டுக்கல் தாண்டியிருந்தது. தமிழில் இதையெல்லாம் சொல்லும் போதே முதியவரையும், கூடவந்தவரையும் ஓரக்கண்ணால் பார்க்கத்தவறவில்லை. அப்படியே என்னிடம் “ நீங்க என்ன வேலை செய்கிறீர்கள்” என்று ஆரம்பித்தார். பள்ளிக்கூட வாத்தியார் என்றதும், குஷியாகி, “அப்படியா, படிக்கும் போது சரியாகப் படிக்கலயா? கோவிச்சிக்காதீங்க போக்கத்தவன் போலீஸ், வாக்கத்தவன் வாத்தி என்பார்கள்” என்று சொல்லிவிட்டு ஹஹஹா என்று பெரிய ஹாஸியம் சொன்னது போலச் சொல்லிச் சிரித்தார். அப்படியே சட்டென ஆங்கிலத்திற்கு மாறி, தாழ்ந்த குரலில் நீங்க பரவாயில்லை. சக பயணிகள் மாதிரி கைநாட்டுகள் இல்லை என்று சொன்னார். முதியவரிடமோ அல்லது கூட வந்தவரிடமும் எந்த எதிர் வினையும் இல்லை. 

எனக்கு அவர் சொல்வது பற்றி எல்லாம் கவலையே இல்லை. அவரது அங்கீகாரமும் என் அப்போதைய தேவை இல்லை. மேலும் அதிகபட்சம் இன்னும் இரண்டு அல்லது மூன்று மணி நேரப் பயணத்தில் யாரிடமும் மல்லுக்கட்ட அவசியமும் இல்லை. என் கவனம் எல்லாம் அவர் பேச்சில், செயல்பாடுகளில் கதை தேடுவதிலேயே இருந்ததை அவர் அறியவில்லை.
வண்டி திருச்சியை நெருங்கிக் கொண்டிருந்த போது கை பேசியில் அவருக்கு அழைப்பு வந்தது. அவர் பேசியதிலிருந்து திருச்சி சந்திப்பில் காத்திருக்கும் மகன் பேசுவதை அறிந்து கொள்ள முடிந்தது. அவர் கோச் எண்ணை என்னிடம் கேட்டார். நான் அதைச் சொன்னதும் எஸ் 4 , எஸ் 4 என்று போனில் தகவல் சொன்னார்.


அந்தக் கால சினிமா கதைகளில் எப்படி படம் முடியும் முன் வில்லனைக் கைது செய்ய மட்டும் போலீஸ் வருமோ அது மாதிரி பயணச் சீட்டு பரி சோதகர் வந்தார். ஒவ்வொருவரின் பயணச் சீட்டையும் வாங்கிச் சரிபார்த்தவரிடம் ரயில்களில் தகுதி குறைந்து ஆட்களுடன் பயணிக்க வேண்டியதாகி விட்டது என்று ஆதங்கப் பட்டவரை புழுவை போல் பார்த்தபடி ஒன்றும் பேசாமல் நகர்ந்தார். இன்னும் ஐந்து நிமிடங்களில் திருச்சி வந்து விடும். முதியவரிடம் நீங்கள் இந்த வயதான காலத்தில் ஏன் பயணம் செய்ய வேண்டும் என்று பரிகசிக்க அவர் என்னைத் தன்னுடன் வைத்துக்கொள்ளும் பொருட்டு மகன் அவரை கிராமத்திலிருந்து திருச்சிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார். வண்டி பிளாட்பாரத்திற்குள் நுழைந்து மெல்ல நகர்ந்து நின்றது.


முதியவரும், கூட வந்தவரும் இறங்க தயாராகவும், அதிகார மனிதரின் மகன் குடும்பத்துடன் வாலாடிக்குப் போக வண்டியில் ஏறவும் சரியாக இருந்தது. உள்ளே ஏறிய அதிகார மனிதரின் மகன் கூட வந்தவரைப் பார்த்து, “ ஹலோ புரொபசர், வாட் அ சர்ப்பிரைஸ்.உங்களை சந்திப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை” என்றதும் அதிகார மனிதர் சிவாஜி தொனியில்
“ யோகேஷ், என்னப்பா சொல்கிறாய்” என்றார்.
“ அப்பா மீட் மிஸ்டர் தியாகராஜன். நான் சொன்னேனே அந்த பேராசிரியர்   இவர்தான். என்னை துறைத்தலைவர் பதவிக்கு புரபோஸ் செய்தவர்” என்றவர்.
“ ஏன் புரொபசர் அந்த அமெரிக்க பல்கலைக்கழக வேலையை விட்டீர்கள், உங்கள் சொந்த விவகாரத்தில் தலையிடுவதாக நினைக்க வேண்டாம்” என்றவரிடம், கூட வந்தவர் “ இவர் என் தந்தை. அம்மா இறந்த பின் தனியாக அவரை விட மனதில்லை. ஆகவே என்னோடு வைத்துக் கொள்ளவே இந்தியா வந்தேன். நேரம் கிடைத்தால் பாரதியார் பல்கலைக் கழகத்தில் சந்திப்போம். வருகிறேன்” என்று சொல்லிச் சிரித்தபடி விடை பெற்றார்.


அதிகார மனிதரின் மகனுடன் வந்த டை கட்டிய மனிதரிடம் தன் தந்தையை காட்டி மிஸ்டர். கிரிதரன், இவரை உங்கள் பொறுப்பில் அடுத்த வாரம் சென்னையில் ஒப்படைக்கிறேன். என்னால் அதிகம் விடுப்பு எடுத்து அடிக்கடி வர முடியாது. என்ன ஆனாலும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். தவிர்க்க முடியாத போது தகவல் தந்தால் போதும். அடுத்த வாரம் சென்னையில் சந்திப்போம்” என்று அழுத்தமாகச் சொல்லவும் ரயில் கிளம்பவும் சரியாக இருந்தது.


அதிகார மனிதரின் உண்மையான பயணம் வாலாடிக்குப் பின் தான் ஆரம்பிக்கப் போகிறது என்பதை நினைத்தேன். இறைவன் கணக்குகள் பல சமயம் சரியாகவே இருப்பதாகத் தோன்றியது.  

Thursday, 29 September 2016

ஆடி அமாவாசை

கிட்டத்தட்ட மூன்று நாளா ஒரு கிராக்கி கூட வரவில்லை. செல்போனுக்கு ரீசார்ஜ் பண்ணவில்லை. கையில் சுத்தமாக ஒத்தை ரூபாய் கூட இல்லை. உள்வரும் அழைப்புகள் மட்டும்தான். வெளிச் செல்லும் அழைப்புகள் பேச முடியாது. இப்படி ஒரு நாளை கற்பனை கூடச் செய்து பார்த்ததில்லை. அவன் தொழிலில் செல்போன் அத்தனை முக்கியம். ராமுவுக்கு பசி தாங்கவில்லை. கிட்டத்தட்ட மூன்று நாளாக கொலைப் பட்டினி. அலுப்பும் சலிப்புமாக வந்தது. மனைவி வேறு துர்கா மாத விலக்கு. அப்படி இல்லாவிட்டால் அவளாவது எதாவது திவசம் திங்கள் என்று சமைக்கப் போய் விடுவாள். அதுவும் இல்லை.  திருச்சியில் காலேஜில் படிக்கிற மகனுக்கு யாரோ பெயர் சொல்லாத தர்மவான் மதியம் சாப்பாடு சத்திரத்தில் போட்டு படிக்க கட்டணம் கட்டுகிறார். இல்லையென்றால் அவனும் ராமுவின் தொழிலுக்குத்தான் வந்திருப்பான்.

ராமுவின் பிள்ளை மாதவன் பிளஸ் டூ வில் 1160 மார்க் எடுத்திருந்தான். சென்னையில் அரசாங்கப் பள்ளியில் ஆசிரியர்கள் பணம், உடை என்று உதவியதிலும் சத்துணவு ஆயாக்களின் பரிதாபத்தால் மதியம் ஒரு வேளை உணவுமாக மிகுந்த போராட்டங்களுக்கிடையே பள்ளிப்படிப்பு முடிந்தது. சென்னையில் கல்லூரியில் சேர்க்கிற அளவுக்கு ராமுவுக்கு ஐவேஜி கிடையாது. கணக்கு வாத்தியார் பொன்னையா சார் திருச்சிக்காரர். தேர்வு முடிவுகள் வந்ததும் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற அவனது கல்வி முடங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். தான் படித்த செயிண்ட் ஜோசப் கல்லூரிக்கு கூட்டிப் போய் மாதவனின் நிலையை தன் ஆசிரியரான பாதிரியாரிடம் சொல்ல, அந்த கிருஸ்தவப் பாதிரியார் பரிதாபப்பட்டு தர்மவான் ஒருவரைக் கைகாட்டினார். மாதவனை மட்டுமே பார்த்து ராமுவை யாரென்று தெரியாமலே, பார்க்காமலேயே பாதிரியார் சொன்னதை மட்டும் வைத்து  அந்தப் புண்ணியவான் தான் டிரஸ்டியாக  உள்ள தர்ம சத்திரத்தில் தங்கிக் கொண்டு மத்தியானம் சாப்பிடவும் வகை செய்து கொடுத்தார். அதற்கு பதிலாக சத்திரத்தில் தங்க வரும் ஆட்களுக்கு அறை காட்டி, ரசீது எழுதி, காலையில் அலுவலகம் திறந்து என்று கிட்டத்தட்ட ஒரு கிளார்க் மாதிரி கல்லூரி நேரம் தவிர மற்ற நேரங்களில் வேலை செய்ய வேண்டும். 

எப்படியோ அவனும் இரண்டாம் வருடம் பி.எஸ்சி  வந்து விட்டான். இன்னும் ஒரு வருட படிப்பு. அந்த ரங்கநாதன் பார்த்துப்பான். சத்திரத்தில் தங்க வருபவர்கள் அவனது குணத்திற்காகவும் பண்பான பேச்சுக்காகவும் பலமுறை பத்து இருபது என்று பணம் தந்துவிட்டுப் போவது வழக்கம். ஆனால் அதை அங்கே வைத்துள்ள டிரஸ்டின் தர்ம உண்டியலில் செலுத்த சொல்லிவிட வேண்டும். இதை டிரஸ்டி  முகுந்தன் செட்டியார் முதலிலேயே சொல்லி விட்டார்.  மாதாமாதம் டிரஸ்ட் காரியஸ்தர் வந்து அதை திறந்து பணத்தை எடுத்து எண்ணித் தருவார். அதை அவனே சலான் எழுதி தெப்பக்குளம் கரூர்வைஸ்யா வங்கிக் கிளையில் கட்டி ரசீதை கார்யஸ்தரிடம் தர வேண்டும். அவனுக்கும் அதில் எந்த சங்கடமும் இல்லை. தனக்கு சோறிட்டு படிக்க வைக்கும் அந்த அறக்கட்டளைக்கு அவன் செய்யும் நன்றிக்கடனாக அதை கருதினான்.
‘படித்து நல்ல வேலைக்குப் போய் அப்பா, அம்மாவை நல்லபடியா பார்த்துக்கணும். இனி அப்பா அந்த வேலைக்குப் போய் அவமானப்படக் கூடாது'. இதுதான் அவன் தினசரி பிரார்த்தனை.

மாதவன் பிளஸ் டூ படிப்பு முடிந்ததும் அவனை திருச்சிக்கு அனுப்பி வைக்க சாமு புரோகிதம் சுந்தர வாத்தியாரிடம், “ஸ்வாமி, மாதவன் பிளஸ் டூ பாஸ் பண்ணிட்டான். பள்ளிக்கூடத்திலே பொன்னய்யா சார் உபகாரத்திலெ பட்டப்படிப்புக்கு சீட் கிடச்சிருக்கு. இப்போ கொஞ்சம் இரண்டாயிரம் ரூபாய் பணம் தந்து உதவினா கோடி நமஸ்காரம்” என்றதும்

அவர் ஹாஹா என்று பெரிய ஹாஸ்யத்தைக் கேட்டவர் போல் சிரித்து “ஓ, அப்படியா சேதி. பிள்ளையை ஏண்டா கிருஸ்தவ காலேஜில சேர்க்கற. நாளைக்கு கிருஸ்தவனா மாறிடப் போறான். எதோ உன்கூட வந்து இரண்டு மந்திரம் கத்துண்டு கூடமாட ஒத்தாசையா வைத்துக் கொள்ள நினைத்தேன். இப்படி பொணம் தூக்கி கர்மா செய்யறதுக்கெல்லாம் இந்த ஆசை வராலாமா. எல்லாம் கலிகாலம். இப்போ என்னிட்ட பணம் இல்லை”, என்று நிர்தாட்சண்யமா அவர் பேசிய பின்புதான் தெரிந்தது தன் அப்பா புரோகிதர் இல்லை. பிணம் தூக்கி கர்மா செய்யும் சவண்டி என்று. கண்ணில் கண்ணீர் வந்தது. 

நேராக பொன்னையா சார் வீட்டிற்கு வந்தவன் நடந்ததைச் சொல்லி அழ, மனுஷன் அவனைச் சமாதானப்படுத்தி கையில் இரண்டாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து தெரிந்த லாரியில் ஏற்றி விட்டார்.
அன்றிலிருந்து மனசில் ஒரு வைராக்கியம். படிப்பு தவிர வேறு நினைப்பில்லை.
ராமுவின் முன்னோர்கள் எல்லாம் காவேரிக்கரையில் நிலம் நீச்சோடு வாழ்ந்தவர்கள் தான். குடி, கூத்தி, திண்ணைச் சீட்டுக் கச்சேரி என்ற ஜபர்தஸ்தில் காலமும் பணமும் கரைந்து, ராமு தலைஎடுக்கும் போது ஊர்முச்சூடும் கடன். ராமுவின் அப்பாவின் கூத்தி மயக்கத்தில் அடித்த அடியும் உதையும் பொறுக்க மாட்டாமல் அவனைப் பெற்றெடுத்த புண்ணியவதி முப்பது வயதிலேயே போய் சேர்ந்து விட்டாள். கடன் காரர்கள் துரத்த இருந்த கொஞ்ச நிலத்தையும் வீட்டையும் விற்றுவிட்டு உள்ளூரில் கடன்களை ஒன்றும் பாதியுமாய் கொடுத்து விட்டு, மிச்சமிருந்த ஒரு லட்சத்துடன் சென்னைக்கு வந்த ராமுவின் அப்பா வைத்தியநாதனுக்கு பழைய வாய் மட்டும் அப்படியே இருந்தது. எந்த வேலையிலும் கால் தரிக்கவில்லை. ஹோட்டல் சரக்கு மாஸ்டர் எல்லாம் கௌரவ குறைவு, புரோகிதம், கோவில் அர்ச்சகர் வேலைக்கு உருப்படியாக மந்திரம் எதுவும் தெரியாது. இப்படி இருந்தாலும் ஏ. ஆர்.ஆர் கும்பகோணம் வெத்தலை, பன்னீர் புகையிலை டிகிரி காபி என்று பழைய நினைப்புகள் பொழைப்பைக் கெடுத்தது. ஊரில் நிலம் வித்து கடன் பைசல் பண்ணியது போக மீதம் இருந்த பணமும் சென்னை வாழ்க்கையில் கரைய அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாத போது சவண்டி சாப்பிட பலிக்கடா ஆக்கப்பட்டவன் தான் ராமு. பாவம் தன் படிக்க ஆசைப்பட்டதைச் சொல்ல முடியவில்லை. ஆஸ்பத்திரியில் ஆரம்பித்து செத்த வீட்டில் 13 நாள் அபர காரியத்திற்கும் அந்த பத்து பதினைந்து வயதில் புரோகிதம் கிருஷ்ண வாத்தியாரிடம் சேர்த்து விடப்பட்டான். 

பயம், அருவெருப்பு எல்லாம் முதலில் இருந்தது. அப்புறம் நமது கதையும் இதுதானே என்ற நினைப்பில் எல்லாம் காணாமல் போனது.
காலம் ஓடிப் போய் விட்டது. ஸ்ரீமான் வைத்தியநாதன் கண்ணை மூட இப்போது இந்த துறையில் முப்பது வருட அனுபவம். கிருஷ்ண வாத்தியார் காலமான பின் ராமுவிற்கு ஆதரவு இல்லை. சவண்டிக்கு எந்த பிராமணன் பெண் கொடுப்பான். கன்னையன் பேட்டை மின் மயானத்தில் டிராலி தள்ளும் மாரிதான், “ அய்யரே, நீயும் எத்தினி நாளு ஒண்டிக்கட்டையா காலம் தள்ளுவே. நல்ல குணவதியா ஒரு பொண்ணு நம்ம ஊட்டாண்ட இருக்கு. அது அப்பனும் உன்னை மாதிரி சாவு வீட்டு வேலை செய்யுறவர்தான். நீ பொண்ணைப் பார்த்து சரின்னா நான் கிட்ட இருந்து முடிக்கிறேன்”, என்றான்.  சவண்டி என்றே பெயராகிப் போனவனை அய்யரே என்று அழைப்பது கன்னையன் பேட்டை பணியாளர்கள் மட்டும்தான்.அப்படி மாரியால் ராமுவிற்கு கட்டி வைக்கப் பட்டவள் தான் துர்கா. 

ராமுவின் அப்பா ஸ்ரீமான். வைத்தியநாதன் உயிரோடு இருந்தபோது ஒரு நாள் கூட அவன் திருமணம் பற்றி பேச்செடுத்ததே இல்லை. அவன் சாப்பிட்டு வந்த பின் தந்த தெஷ்ணையை வாங்கிக்கொண்டு தி.நகர் கிளப்பிற்கு சீட்டாடப் போய் விடுவார். எப்போதும் தலைமை வாத்தியாருக்கு தெஷ்ணையில் கமிஷன் கொடுப்பது வழக்கம். அப்போது சுந்தர வாத்தியாரிடத்தில் வேலை. அது கூட மாரிதான் சிபாரிசு செய்து வாங்கித்தந்ததுதான். தெஷ்ணையில் நூறு ரூபாய் வழக்கம் போல கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்தவனிடம்,
“ டேய் ராமு, நாளையிலிருந்து ஐம்பது ரூபாய் கமிஷன் கொடு. அது போதும்” என்றார்.
மறுநாள் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த சுந்தர வாத்தியாரிடம் ஐம்பது ரூபாய் தர, “ என்னடா ராமு அம்பது ருபாய் குறைகிறதே” என்றவரிடம்
“அப்பா, அம்பது ரூபாய் கொடுத்தால் போதும் என்று சொல்லியனுப்பினார்”
என்றதும், “ ஓகோ. அப்படியா. சரி” என்று பதில் வந்தது. அப்புறம் அவர் அவனை கூப்பிடவே இல்லை.
அப்பாவிடம், எந்த மாற்றமுமில்லை. “அடப்போடா, இவன் இல்லைனா வேற வாத்தியார். அவரை விட உனக்குத்தான் கிராக்கி அதிகம்” என்று அலட்சியமாகப் பதில் வந்தது. அப்புறம் மாரிதான் சுந்தர வாத்தியாரிடம் மத்யஸ்தம் பேசி மீண்டும் வேலை வாங்கித்தந்தான். என்ன கமிஷன் தொகை அதிகமானதுதான் மிச்சம்.
மெல்ல நடந்து சுடுகாட்டிற்கு வந்தவன் பசி மயக்கத்தில் காரியம் செய்யும் ஷெட்டில் சுருண்டு படுத்து விட்டான்.






“அய்யரே, அய்யரே எழுந்துரு” என்ற மாரியின் குரல் கேட்டு எழுந்தவனைப் பார்த்த மாரி, “ சாப்பிடலையா? உன்னை பார்த்தாலெ தெரியுது. வா இன்னிக்கு ஆடி அம்மாசியாமெ பொண்சாதி குளிச்சி புது மண் சட்டியில சுத்தமா சமைச்சதுதான். அத்த நீ சாப்பிடு. நான் காசியோட போயி கடையில சாப்பிட்டுக்கிறேன், நம்மை போல ஏழைக்கு ஏது சாதி அய்யரே". என்று சொன்னவன் கைத்தாங்கலாக அவனை நந்தவன ஓரத்தில் உட்கார வைத்து தலை வாழை இலையில் கொண்டு வந்த சாப்பாட்டை சிரத்தையாகப் பரிமாறினான். நான் பட்டினி கிடக்கும் போது உதவாத சாதி செத்துப் போகட்டும் என்று மனதார ராமு நினைத்த போது அந்த மயான பூமியில் ருத்திரன் சந்தோஷமாக சிரித்துக் கொண்டு அரிசந்திரனைப் பார்த்தான். 

Monday, 5 September 2016

விதி

காலையில் சீக்கிரமே எழுந்திருக்கணும். பிராஜெக்ட் மேனேஜர் சுந்தரம் சார் நேற்றே சொல்லியிருந்தார். இது அதி முக்கியமான கிளையண்ட், கரெக்ட்டா சொன்ன தேதியில் ரிப்போர்ட் கொடுத்து விடணும். வரும் 15 ஆம் தேதிதான் கடைசி என்றாலும் 15 நாள் முன்னால் முடித்து புரோகிராமை ரன் பண்ணி எல்லாம் சரி செய்ய அந்த 15 நாள் கண்டிப்பாகத் தேவை. மாலதிக்கு எல்லாம் தெரியும். இருந்தும் நான்கு நாட்களாக ஒன்றும் செய்ய முடியவில்லை.  போன ஞாயிறு கோவிந்த் வந்து பெண் பார்த்து விட்டுப் போனான். அப்புறம் வரிசையாக திங்கள், புதன் கிழமை, வியாழன் என்று இதுவரை இந்த வாரத்திலேயே மூன்று பேர்கள் வந்தாயிற்று. ஆக மூன்று வெட்டி பர்மிஷன். சுந்தரம் சார் நல்ல புராஜெக்ட் மேனேஜர். நடுத்தர வயது குடும்பஸ்தர். மாலதி வயசில் அவருக்கும் ஒரு பெண் கல்யாணத்திற்கு நிற்கிறாள். ஆகவே கடுப்படிக்க மாட்டார். புரிந்து கொள்வார். அம்மா ஆடி வெள்ளி, வரலட்சுமி விரதம் எல்லாம் லீவு எடுக்கச் சொன்னபோது கூட மறுத்து விட்டாள். ஆக இன்று கண்டிப்பாக எவ்வளாவு நேரம் ஆனாலும் முடித்துக் கொடுத்து விட வேண்டும். கடகடவென்று குளித்து விட்டு வரலாம் என்றால் “வெள்ளிக்கிழமை தலையில் ஒரு குத்து எண்ணைய் வைச்சுக் குளி. முடிவேற அதிகமா உதிருது, எல்லாம் கம்பியூட்டர் சூடு. கண்ணெல்லாம் பொங்கி, முகம் அதைப்பா இருக்கு” அம்மா கிச்சனிலிருந்தே குரல் கொடுத்தாள். மாலதிக்கும் வெங்காயம், மிளகு, சீரகம் எல்லாம் போட்டு காய்ச்சிய நல்லென்ணய் தலையில் அரக்கி அரக்கித்  தேய்த்து குளிக்கப் பிடிக்கும். அவர்கள் வீடு இருந்த தெருவில் முனியக்காவின் நடுத்தர எளிய குடும்பம் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தது. அந்த வீடு பெரிய ஃப்ளாட் கட்ட விலை போனபின் வீடு கிடைக்காமல் முனியக்கா தம்பதி தவித்தனர்.  கணவன் , மனைவி இருவர் மட்டுமே. குழந்தை இல்லை. மாலதி வீட்டின் பின்புறம் இருந்த ஒரு சின்ன இரண்டு அறை வீடு பூட்டிக் கிடந்தது. அதில் வாடகைக்கு  வந்தவர்தான் முனியக்காவும் அவரது கணவர் ராஜூவும்.  முனியக்காவின் கணவர் ராஜூ ஐ.சி.எப் பில் கலாசியாக இருந்தார். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டார். அதனால் தானோ என்னவோ கடவுளுக்கு மிகவும் பிடித்துப் போய் அவரை முப்பத்தைந்து வயதிலேயே கூட்டிக்கொண்டான். அப்போது முனியம்மாவிற்கு முப்பது வயது. தன்னை அழகாகப் படைத்ததிற்கு திருமணம் ஆன புதிதில் சந்தோஷப்பட்டவள், இப்போது அழகாக இருப்பதற்கு வருந்தினாள். அப்போது தெய்வம் போல மாலதியின் குடும்பம் அடைக்கலம் தந்து வீட்டோடு வைத்துக் கொண்டது. ஏதோ பென்ஷன் வந்தது. கழுகுகளின் பார்வையிலிருந்து தப்ப, நிம்மதியாக, பாதுகாப்பாகத் தூங்க ஒரு இடம் கிடைத்தது. அறியாத சின்ன வயதிலிருந்தே  மாலதிக்கு முனியக்காதான் எல்லாம். சின்னப் பிள்ளையிலிருந்து இன்று வரை அந்த பாசம் கொஞ்சமும் குறையவில்லை. வீட்டு அருகில் இருந்த கிருஸ்து அரசன் மெட்ரிக் பள்ளியில் கொண்டு விட்டு மதியம் சாதம் ஊட்டி, திரும்பவும் மாலையில் கூட்டி வருவது என்று முனியக்காதான் தன் பிள்ளை போல பார்த்துக் கொண்டாள். மாலதி அவளை அக்கா என்றே அழைத்தாள். பள்ளியில் தினம் தினம் நடந்த கதை எல்லாம் முனியக்காவிடம் சொல்லாவிட்டால் அவளுக்கு நாள் போகாது. இரவில் அக்காவை கட்டிக்கொண்டு தூங்கப் போகும் போது கதை சொல்லுவது. அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வது இப்படி ஒரு அன்னியோனியம் அந்த இருவருக்கும் இடையில். அப்புறம் மீனாட்சி காலேஜில எம்.சி.ஏ முடித்து கேம்பஸில் அந்த பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த பின்பும் முனியக்கா தலையில் எண்ணைய் தேய்த்து விட வேண்டும். அப்புறம் அக்கா மசாஜ் செய்து குளிப்பாட்டும் போது தூக்கம் கண்ணைச் சொக்கும் அவளுக்கு. குளித்து விட்டு வந்தால் சூடாக இட்லி, சாம்பார் கொத்தமல்லி சட்னியுடன். முனியக்காவும் மாலதியும் சேர்ந்து போனால் நிறையப் பேர் அம்மா, பெண் என்றே நினைத்திருப்பர். இன்று முனியக்கா ஆடி கடைசி வெள்ளி என்பதால், மாங்காடு கருமாரியம்மன் கோவிலுக்கு  அதிகாலையிலேயே போயாச்சு. மாலதிக்கு எண்ணைய் தேய்த்துக் குளிக்கவே பிடிக்கவில்லை. “முனியக்கா வந்த பின் ஞாயிற்றுக்கிழமை குளிக்கிறேன்” என்று பதில் கொடுத்து விட்டு குளியலறைக்குள் புகுந்தாள். பூவாக விழுந்து மேனி நனைத்த ஷவரை ரசித்தபடி குளித்தாள். இன்னிக்கு அந்த மஞ்சள் கலர் சுடிதார் போட்டுக் கொண்டு போகணும். ஆபிஸில் ராம லட்சுமி அவளது அணித்தலைவர். மாலதியை விட நான்கு வயது பெரியவள். ராம லட்சுமியின் திருமணம் காதல் திருமணம். அவளைப் பொருத்தவரை பெண் பார்த்தல் எல்லாம் சுத்த வேஸ்ட்.  பெண் பார்க்க வந்த கதையெல்லாம் கேண்டீனில் விலாவாரியாக சொல்லி இருவரும் சிரித்துக் கொண்டாடியாயிற்று. வியாழக்கிழமை வந்த அந்த சுகுமாரின் அக்கா , அவள் தலை முடியை தொட்டு பார்க்கிற மாதிரி இழுத்துப் பார்த்தது. திங்கள் கிழமை வந்த கோபாலின் சித்தி பேங்க் பாஸ் புத்தகத்தை பார்க்காமல் இடத்தை காலி பண்ணுவதாக இல்லை. இதை எல்லாம் கேண்டீன் வட்ட மேஜை மகாநாட்டில் சிரிக்கச் சிரிக்கப் பேசியாச்சு. ராம லட்சுமி, “நீ அந்த கும்பலை சும்மா விட்டிருக்கக் கூடாது. அந்த அம்மா பல் செட்டை தட்டியிருக்கணும்” என்றாள்.  நினைத்தாலே சிரிப்பு வந்தது. அவசரமாக இரண்டு தோசைகளை சாப்பிட்டவள், “ அம்மா இன்னிக்கு புராஜெக்ட் முடிக்கணும். கொஞ்சம் லேட் ஆகும். கவலைப்படாதே. ராம லட்சுமியோட காரில் வந்து விடுவேன். பை. அப்பா என்னை சி.எம்.பி.டி யில் கொண்டு விட்டுருங்க, பிளீஸ்” என்றபடி வெளியே வந்தாள். அப்பா வண்டி எடுப்பதற்கு முன் வாசல் கதவை திறந்தபடி வந்தார் முனியக்கா.
“ அப்பா, மாலதியை நான் ஸ்கூட்டியில் பஸ் ஸ்டாண்ட்டில் கொண்டு விடுகிறேன். நீங்க உங்க வேலைகளை கவனியுங்கள்” என்று சொல்லியபடி பிரசாதத்தை மேசையில்  வைத்துவிட்டு  ஸ்கூட்டி சாவியை எடுத்துக் கொண்டார். “ வாடா, செல்லம் போகலாம்” என்று வண்டியை ஸ்டார்ட் செய்தார். பின் சீட்டில் உட்கார்ந்து , அம்மா, அப்பாவிற்கு டாடா சொல்லியபடி, “ ஓகே. போகலாம் கா” என்றாள் மாலதி. சாயங்காலம் வந்து கோவிலுக்குப் போகலாம் என்று மாலதி சொன்னாள். அப்புறம் அண்ணா நகரில் சாந்தி காலனி ஸ்ரீ மித்தாயில் இரவு சாப்பிடுவதென முடிவாயிற்று. திருப்போரூர் செல்லும் குளிர் சாதன 570 பேருந்து வந்ததும் ஏறி அமர்ந்து கொண்ட மாலதி, முனியக்காவிற்கு டாடா என்று கையசைத்தாள்.  



பழைய மகாபலிபுர சாலையில் அந்த பொறியியல் கல்லூரியின் ரோமியோக்களில் ஆனந்தும் ஒருவன்.  ஓ என்று சிரிப்பும் களிப்புமாய் அரட்டைக் கச்சேரி ஓடிக்கொண்டிருந்தது.  

சேகர் தான் ஆரம்பித்தான், “ டேய் மச்சி, நேத்து கேசவன் தண்டர்பேர்டில் பாரீஸிற்கு கூட்டிப் போனான் டா. ஸ்பீட்னா அது ஸ்பீட். ஜஸ்ட் 30 நிமிஷம் டா, வி.ஜி.பி லேர்ந்து பாரீஸுக்கு. அவனை நம்ம காலேஜில எந்த கொம்பனாலும் அடிச்சிக்க முடியாது”.

திரும்பிப் பார்த்தான் ஆனந்த்.” எங்க திரும்பிச் சொல்லு”

“ நம்ம காலேஜில் எந்த கொம்பனாலும் கேசவனை பைக் ரேசில் அடிச்சிக்க முடியாது”

“ தூ. போடா, அந்த நாய இன்னிக்கு என்னோட ரேசிங் வரச் சொல்லு. அப்ப தெரியும் இந்த ஆனந்த் யாருன்னு”
ஆனந்தின் அப்பா மகேஸ்வரனுக்கு பரம்பரை சொத்து ஏகத்துக்கும் இருந்தது.  மூணார்,கொடைகானலில் ரிசாட், டீ எஸ்டேட்கள்.சென்னையில் இரண்டு தலைமுறைகளாக செய்து வரும் பேக்கேஜிங்  தொழிலில் நிறைய  சம்பாத்தியம். போறாத குறைக்கு வாழ வந்த மகாலட்சுமி வேற சீதனமாய் ஏகத்துக்கும் கொண்டு வந்தாள். ஆனால் இருபத்தைந்து வயதில் திருமணம் ஆன அவர்களுக்கு புத்திர பாக்கியத்திற்கு கோவில் கோவிலாக ஏறி இறங்க வைத்தான் ஆண்டவன். கடைசியில் கடவுள் அவரது முப்பத்தைந்து வயதில் கண் திறந்தார். மகேஸ்வரன் மகாலட்சுமி தம்பதிக்கு ஆனந்த்  பிறந்தான். அதிகமான செல்லம் கொடுத்து வளர்ந்த பணக்கார பிள்ளைகளுக்கும் இருக்கும் அத்தனை கெட்ட பழக்கங்களையும் பதினைந்து வயதுக்குள் கற்றுக் கொண்டு விட்டான். பள்ளியில் படிக்கும் போது செய்த தவறுகளை பணத்தால் மூடினார் மகேஸ்வரன். தவமிருந்து பெற்ற பிள்ளையில்லையா. வீட்டில் தங்கும் நேரம் குறைந்து போனது. கேட்டது உடனே கிடைத்தது. தினமும் விதவிதமான கார்களும் , பெண்களும். ஊர் சுற்றுதலுக்கே நேர்ந்து விட்டது போன்ற நுனி நாக்கில் ஆங்கிலமும், கொஞ்சும் பேச்சுமாக பல பெண் நண்பிகளுடன் பொழுது கழிந்தது. கல்லூரிக்கு வருவதே அன்றைக்கு யாரோடு சுற்றுவது என்பதை தீர்மானிக்கத்தான்.
அருகில் இருந்த கோபி, “ மச்சான் நீ பொண்ணுகளுடன் கடலை போட்டுபீச்சில் சுத்தத்தான் லாயக்கு. ரேசெல்லாம் உனக்கு எதுக்குடா” என்றதும்.
அகிலா, ஆனந்த் மேல் சாய்த்தபடி,” ஷேம்.ஆனந்த். ஹீ சேய்ஸ் யூ ஆர் அன்பிட் ஃபார் ரேசிங்யா. ப்ரூவ் ஹூம் யூ ஆர்” என்றவள்
“கோபி, இஸ் கேசவன் தாட் மச் மேன்லி? என்று கண்கள் விரியக் கேட்டதும் ஆனந்த்தின் கோபம் இன்னும் அதிகமாயிற்று.
கூட  ஆனந்த் போடும் சில்லறை காசுகளுக்கு அலையும் ஒரு அல்லக்கை கூட்டம் உசுப்பேற்ற ஆரம்பித்தது.
“ தல, அந்த கேசவன் தேர்ட் இயர் ஈ சிஈ டா. நாம நேர அங்க போறோம். ஆளைத் தூக்கறோம். ரேசிங் மாயாஜாலில் ஆரம்பிக்கிறோம். அதே பாரீஸ் கார்னரை இருபது நிமிஷங்களில் யாரு போறாங்களோ , அவன் தான் காலேஜ் தலை. சரியா”?
 இருபது பேர் கொண்ட அந்த கூட்டம் ஆனந்தின் தலைமையில் கேசவனை தேடிப் போனது. கேசவனைப் பார்த்து ரேசிங் வர கூப்பிட்டது. மறுத்த கேசவனை நக்கலடித்து வெறுப்பேற்றியது. கேசவன் பக்கத்தில் வந்த அகிலா,” கேசவ்  ஐ தாட் யூ ஆர் பிரேவ். நௌ ஐ அண்டர்ஸ்டாண்ட் யூ ஆர் புல்ஷிட்” என்று சொல்லவும் , எல்லோரும் சிரிக்க கேசவனுக்கு அசிங்கமாகி விட்டது.

“ஒகே. சேலஞ்ச் அச்செப்டட்” மாயாஜால் டு பாரீஸ் கார்னர் 25 மினிட்ஸ். சிக்னல், போலீஸ், ஆக்ஸிடெண்ட் இதில் போட்டுக்கொடுக்கக் கூடாது. அது அவரவர் பொறுப்பு என்று போட்டி விதிகள் இருபக்கமும் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆளுக்கு ஒருவரை பில்லியனில் ஏற்றிக்கொள்ள முடிவானது. காலை 9.30க்கு மாயாஜாலில் போட்டியாளர்கள் புறப்படத் தயாராயினர். ஆனந்திற்கு க்வாட்டர் ரகசியமாக தரப்பட்டது.

கோயம்பேட்டிலிருந்து அந்த 570 பேருந்து  அக்கரை பேருந்து நிறுத்தத்தில் மாலதி இறங்கினாள். பேருந்தில் பயணிக்கும் போது கலவையான கனவுகள் மனதில் பல கற்பனைகள். காதில் செல்பேசிலிருந்து “ எங்கே வாழ்க்கை தொடங்க்கும், அது எங்கே எவ்விதம் முடியும்.....” என்று P.B.ஸ்ரீனிவாஸ் பாடிக் கொண்டிருந்தார். பாடலை ரசித்து,பேருந்துக் கனவுகளை அசை போட்டபடி சாலையைக் கடக்க சிக்னலுக்காக காத்திருந்தாள்.
அந்த சிக்னல் கேசவன் கடந்து செல்லவும் சிவப்புக்கு மாறியது. பாதசாரிகள் கடக்க பச்சை மனிதன் விழ, சிக்னல் விழுந்ததும் சாலையின் குறுக்கே ஜீப்ரா கிராசிங்கில் மாலதி நிதானமாக நடக்க ஆரம்பித்தாள். இன்னும் நாலைந்து பேர் அவள் பின்னால். எதிரே யாரும் இல்லை. பின்னால் வந்த ஆனந்திற்கு கடும் போதையில், கேசவன் சிக்னலை தாண்டி விட்டது மட்டுமே தெரிந்தது.  சிவப்பு சிக்னல் விழுந்தது தெரியவில்லை. கடுமையான வேகம் சாலையைக் கடக்கும் மாலதி கண்டு பதட்டத்தில் பிரேக்கை அழுத்தியும் வண்டி நிற்கவில்லை. மாலை செய்தித்தாள்களில் மாலதி, ஆனந்தின் புகைப்படங்களுடன் விபத்து குறித்த விபரமும் போக்குவரத்து அமைச்சரின் இருவரின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த செய்தியும் “சென்னையில் கோர விபத்து - இருவர் மரணம்” என்ற தலைப்புச் செய்தியாக  முதல் பக்கத்தில் ஆறு காலத்தில் வெளியாகியிருந்தது.

Friday, 29 July 2016

நம்பிக்கை நட்சத்திரம் / உடையும் குமிழ்கள்

கிட்டத்தட்ட ஒரு மாதமாச்சு. டீசர் வெளியான நாளிலிருந்தே எப்படியும் முதல் நாள் தலைவர் படத்தைப் பார்க்கணும் என்ற வெறி ஆறுமுகத்தைப் பிடித்து ஆட்டியது. கூட வேலை பார்க்கும் ஷகாபுதீனிடம் சொல்லி டிக்கெட் எடுக்க ஏற்பாடு செய்த்திருந்தான். ஷகாபுதீன் இவன் ஊர்க்காரர்தான். சென்னைக்கு வந்து பல வருடங்கள் சர்வீஸ் போட்ட ஆள். பார்க்காத வியாபாரமில்லை. பழகாத மனுசரில்லை. படிப்பு என்னவோ பத்தாவதுதான்.
“லே, பத்தமடையிலெ கூட என்னத்தெரியாதவன் இருப்பாண்டே, ஆனா இந்த மெட்ராசில என்னெயத் தெரியாதவன் இருக்க மாட்டான்” என்பார்.
நானாவித ஆசாமிகளும் பழக்கமாதலால் ஆறுமுகத்திற்கு டிக்கெட் வாங்கித்தர வாக்குக் கொடுத்து விட்டார்.

ஷகாபுதீன் அண்ணாச்சிக்கு தி. நகரில் அந்த பெரிய ஜவுளிக்கடையில் மூன்றாவது தளத்தில் ஆயத்த ஆடைகள் பிரிவில் வேலை. வாழ்க்கையில் அடிமட்டத்திலிருந்து படிப்படியாக மேலே வந்தவர். பத்தாவது முடித்து , மேல் நிலை வகுப்பு படிக்க ஆசைதான். ஆனால் அவரது வறிய வீட்டுச் சூழல் அதற்கெல்லாம் இடம் தரவில்லை. நாலைந்து பழைய சட்டை வேட்டியுடன் சென்னைக்கு “வாயில் இருக்குது வழி”, என்று சொல்லி வீட்டை விட்டு புறப்பட்டவர்தான். ஆரம்பத்தில் வாசுதேவ நல்லூர் ஹக்கீம் அண்ணன் எக்மோர் ரயில் நிலையத்தில் வைத்திருந்த பெட்டிக்கடையில் தான் வாழ்க்கையை ஆரம்பித்தார். அப்புறம் கட்டுச் செட்டாக இருந்து காசு சேர்த்து சொந்தமாக ஒரு பிளாட்பார கடையை பாண்டி பசாரில் ஆரம்பித்தார்.

அது ஒரு போராட்டமான வாழ்க்கை. எப்போ போலீஸ் வரும் எப்போ எல்லாவற்றையும் தூக்கிட்டுப் போகும் என்பது எல்லாம் கடவுளுக்குத்தான் வெளிச்சம். என்னதான் சூரியன் கிழக்க உதிக்க மறந்தாலும் மாமூலும், தண்டலும் கண்டிப்பாகத் தந்து விட வேண்டும். முப்பத்தைந்து வயது வரை இந்த இரண்டுங்கெட்டான் நிலையற்ற வாழ்க்கை கருதியே நிக்காஹ் கூட செய்து கொள்ளவில்லை. பின்னாளில் இந்த ஜவுளிக்கடையில் வேலைக்கு சேர்ந்த பின் நிலையான சம்பளம் என்றான பின்னால்தான் நிக்காஹ் செய்து கொள்ள சம்மதமளித்தார். மேரூனிஸ்ஸாவும் நல்ல பெண்தான். பட்டதாரி மாப்பிள்ளைகள் பலர் வந்த போதும் ஷகாபுதீனின் நல்ல குணத்துக்காகவே காத்திருந்து மணந்து கொண்டாள்.

குடும்பம் ஊரில்தான். மெட்ராஸ் ஊரில் பிழைக்கப் போய் சம்பாதித்து கடைசியில் பத்தமடையில் வீடு கட்டி செட்டில் ஆகவேண்டும் என்பதுதான் அவரது எண்ணம். மாதம் ஒரு முறை ஊருக்குப் போய் விடுவார். வெள்ளிக்கிழமை இரவு நெல்லை எக்ஸ்பிரஸில் கிளம்பி சனி,ஞாயிறு குடும்பத்துடன் கழித்து விட்டு திங்கள் மாலை மீண்டும் நெல்லை எக்ஸ்பிரஸ் பிடித்து செவ்வாய் காலை வந்து விடுவார். மற்றபடி லீவு எதுவும் எடுப்பதில்லை. அப்படி போகும் போது எப்படியும் பதினைந்தாயிரம் இல்லை இருபதாயிரம் கொடுத்துவிடுவார். ஊரில் அத்தனை விலைவாசி இல்லை. மாமியார், மாமனார் அப்புறம் மகன் ரபீக் ஆக நான்கு ஜீவன்களுக்கு அது தாராளமாகப் போதும். இதிலும் எப்படியும் சீட்டுக் கட்டி, பீடி சுற்றி, பாய் நெய்து என்று எதாவது ஒரு வகையில் எப்படியும் மாதம் மூன்றாயிரம் சேர்த்து விடும் சாமர்த்தியம் மேரூன்னிஸாவிற்கு உண்டு. சேர்மாதேவி பாண்டியன் கிராம பாங்கில் அப்படியும் இப்படியுமாக ஒரு ஐம்பதாயிரம் போட்டு வைத்திருக்கிறாள்.    

ஷகாப் பாய்க்கு கிட்டத்தட்ட மாதம் முப்பதாயிரம் வருமானம். தி. நகரில் கட்டுப்படியாத வாடகைக்குப் பதிலாக சற்று தள்ளி ஐயாயிரம் ரூபாய் வாடகைக்கு கொடுங்கையூரில் வீடு எடுத்து கடையில் வேலை செய்யும் நாலைந்து பேர் பங்கிட்டு ஆளுக்கு ஆயிரம் ரூபாய் வாடகை. நம்ம ஆறுமுகத்தை கடையில் வேலைக்கு ஷகாபுதீன் பாய் சேர்க்கிறதுக்கு முன்னால் அவன் உஸ்மான் ரோட்டில்  கிருஷ்ணவிலாஸ் ஹோட்டலில் சப்ளையர். காலையில் 9 மணிக்குப் பின் வியாபாரம் கொஞ்சம் சுமாரக இருக்கும் . அப்போது வெளியே நடைபாதையில் முதலில் ஒரு குருட்டுப் பிச்சைக் காரர் அடுத்தது குடைக்குள் கைக்குட்டை வைத்தபடி நடமாடியபடி வியாபாரம் செய்யும் ஒரு இருபது வயது இளைஞன் அப்புறம் கழுத்தில் செவ்வக அட்டைப் பெட்டியைக் கட்டிக் கொண்டு அதில் சின்ன சின்ன பிளாஸ்டிக் குப்பிகளில் சோப்புத்தண்ணீரையும் அதில் முக்கி ஊதுவதற்கு பிளாஸ்டிக் ஊது வளையம் வைத்துக் கொண்டு, ஊதியபடி காற்றில்  வண்ண வண்ண சோப்புக் குமிழிகளை விட்டபடி வியாபாரம் செய்யும் பத்து பன்னிரண்டு வயதுச் சிறுமி. இவர்கள் தான் அவனது தினசரி காட்சியாளர்கள். அந்த சிறுமி அரக்கு நிறப் பாவாடையும் சந்தன நிறத்தில் மேல் சட்டையும் போட்டிருப்பாள். சரியாக பகலில் பதினொன்று முதல் பன்னிரண்டு மணி வரை அவளைக் காண முடியும். அதன் பின் மீண்டும் மாலை நான்கு முதல் ஒன்பது மணி வரை இருப்பாள்.

அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் கேட்கும் தொலைவில் ஆறுமுகம் இல்லை. ஆனால் அவர்களின் பேச்சு என்னவாக  இருக்கும் என்று கற்பனை செய்து பார்ப்பான். அந்த சிறுமியின் உடை அரசாங்கம் இலவசமாக வழங்கும் பள்ளிச் சீருடை என்பதும் அவள் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கிறாள் என்றும் அவனால் அனுமானிக்க முடிந்தது. கூட்டம் இல்லாத வேளைகளில் அச்சிறுமி எதிர்வாடையில் உள்ள ஆயத்த ஆடைக்கடையில் காட்சிப்பெட்டியில் உள்ள சிறுமியின் மேல் அணிவிக்கப்பட்ட ஆடையை பார்ப்பாள். அப்புறம் கர்சீப் விற்கும் அண்ணனிடம் ஏதோ சொல்லிச் சிரிப்பாள்.  

இதெல்லாம் பழைய சங்கதி. இப்பொது அந்த ஆயத்த ஆடைக்கடைக்கே ஆறுமுகம் வேலைக்கு வந்து சேர்ந்து ஆறு மாதமாகி விட்டது. தினமும் அந்தப் பெண் காட்சிப் பெட்டி அருகில் நிற்பதையும், சில சமயம் தனக்குள் பேசிச் சிரிப்பதையும் பார்க்கும் போது அந்தப் பெண்ணிடம் பேச வேண்டும் என்று தோன்றும். கடையில் தினமும் வேளை முடிந்து ஷகாபுதீன் பாயுடன் அறைக்குப் போய் சாப்பிட்டு தூங்குவதற்கு கிட்டத்தட்ட மணி 12 ஆகிவிடும். காலையில் ஒன்பது மணிக்கு பாயுடன் கிளம்பி கடைக்கு வந்தால் வேலை நெட்டி முறிக்கும்.   

உடைளை வாடிக்கையாளர்கள் கலைத்துப் போட்டால் மீண்டும் மடித்து அதன் இடத்தில் மாட்ட வேண்டும். வாடிக்கையாளர்கள் எடுத்த துணிகளை வாங்கி பில் போட கௌண்டரில் கொடுக்க வேண்டும். இதற்கிடையில் சந்தடிசாக்கில் திருடவரும் ஆட்களையும் அடையாளம் கண்டு சூப்பிரவைசரை எச்சரிக்க வேண்டும். நல்லவேளையாக ஷகாப் பாய் தான் அவனது சூப்ரவைசர். அவரிடமிருந்து நிறைய தெரிந்து கொண்டிருக்கிறான். திருட வரும் ஆட்களை நேரடியாக பிடிக்க கூடாது. தனியாகப் பிடித்தால் அடையாளம் வைத்துக் கொண்டு எங்காவது தனியா பார்க்கும் போது பிளேடால் கிழித்து விடுவார்களாம். அதனால் போலீசுக்கு தகவல் சொல்லித்தான் பிடிக்கணுமாம். எல்லாம் பாய் சொல்லிக் கொடுத்த பால பாடம்.
நாளைக்கு படம் ரிலீஸ். ஷகாப்புதீன் பாய்யை இப்போது கேட்க முடியாது. அப்படி மீறிக் கேட்டால்,” எலே, புத்தியை வியாபாரத்தில் வை. அண்ணாச்சி நம்ம நம்பித்தான் முதல் போட்டு வியாபாரம் செய்யறார். கடைக்கு வந்துட்டா கோவில் மாதிரி. அங்கன யாவாரம் தவிர வேற சிந்தனை இருந்தா தப்புலே” என்று சொல்லிவிடுவார். இன்னிக்கு வெள்ளிக்கிழமை தொழுகைக்கு போகும் போது சொல்லி ஞாபகப்படுத்தலாம். மனதை கட்டுப்படுத்திக்கொண்டு வாடிக்கையாளர்களை கவனிக்க ஆரம்பித்தான்.
முதலாளி அண்ணாச்சி வழக்கமாக தினமும் ஒரு சுற்று வருவார். இன்னிக்கும் வரும் போது “என்ன பாய், மணி பன்னிரெண்டு, தொழப் போகலையா” என்றார். பாய் மீது அவருக்கு அபார நம்பிக்கை. பாய்க்கும் முதலாளி மேல் தேவ விசுவாசம். முதலாளி தன் சொந்த ஊருக்குப் போகும் போது அவருக்கு நம்பிக்கையான ஷகாப் பாய்தான் கார் ஓட்டுவார். ஊருக்குப் போன பின் பாய்க்கு ஒரு வாரம் முழு ஓய்வுதான். அங்கே உள்ளூர் டிரைவர் இருப்பார். பாயை பத்தமடை அனுப்பி விடுவார். புறப்படும் முன் நாள் போன் செய்து காயாமொழிக்கு வரச் சொல்லி விடுவார்.
“அய்யா, நீங்க வரப் பார்த்தேன். அதுதான் நின்னுட்டேன் “ என்றார்.
“சரி, நீங்க கிளம்புங்க”
“உத்தரவு”  பாய்  கிளம்பி விட்டார்.
சே, முதலாளி வந்ததில் காரியம் கெட்டுப்போச்சு. எல்லாம் விதி. மனசுக்குள் நொந்து கொண்டான் ஆறுமுகம். பத்து நாட்களாக ஊரில் நண்பர்களுக்கெல்லாம் போன் செய்து படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது பற்றி பெருமை பீற்றியாச்சு. அடுத்து அவனுங்களுக்கு கட்டம் கட்டமா கதை சொல்லி போன் பேசணும். நடக்குமோ என்னவோ தெரியலை.
தொழுகை முடிந்து பாய் கொஞ்சம் தாமதமாக வந்தார். “லே, ஆறுமுகம் கொஞ்சம் தண்ணி கொண்டாலே” என்றார்.
தண்ணியை வாங்கி ஒரு மிடறு குடித்தவர், “ஆறு, அது என்னடா டிக்கெட் அந்த வெலை விக்கி? இருநூறு ரூபாயாமலெ, நமக்கு எதுக்குடா அத்தினி செலவு? ஒரு நா நல்லா சாப்பிடலாமேடே, அதான் உன்னைய கேட்டுக்கிட்டு வாங்கலாமின்னு திரும்பி வந்திட்டேன்’  என்றார்.
“இல்லை பாய் அண்ணாச்சி, பொறந்தது முதல் இது நா தொட்டு இப்படி ஒருக்கா கூட படம் பார்த்தது இல்லை. ஏதோ உங்க தயவுல ஒரு அதிருஷ்டம் கிடச்சதாதான் நினைச்சேன், எப்படியும் பார்க்கணும் பாய்”.



“அதுக்கில்லைடா, ஏதோ பத்தம்பது ரூவாய்னா பரவாயில்லை. இருநூறு என்னதும் மலைப்பாயிருந்தது”.
“ பாய் அது அந்தக் காலம். நீங்க படமே பார்க்க மாட்டீங்க. நீங்க பார்த்த காலத்து டிக்கெட் அம்பது ரூபாய். இப்பொ குறைஞ்சது இருநூறு. விலை வாசி எல்லாம் ஏறிட்டு”. எப்படியும் வாங்கிடுங்க பாய்”.

“சரி. மேனேஜர் தெரிஞ்சவர்தான். நம்ம முதலாளிக்கு பங்காளிங்க தியேட்டர்தான். காலையில் வாங்கித் தாரேன்”. பொழுது எப்போ புலரும், ஷகாப் பாய் எப்போ எழுந்துப்பார் என்று நினைத்தே ஆறுமுகத்திற்கு தூக்கம் வரவில்லை. வழக்கம் போல பாய் எல்லா வேலையையும் முடித்துவிட்டு, தனக்கும் ஆறுமுகத்திற்கும் டிபன் கட்டிக்கொண்டு கிளம்ப மணி எட்டாயிற்று. கடை வாசலில் வராமல் பின் பக்கம் வழியா வண்டியை கடைப் பார்க்கிங்கில் விட்டவர். “நீ உள்ளே வராதே. பிளாட்பாரத்தில் நில். நான் முதலாளியிட்ட ஒரு தகவல் சொல்லிட்டு வரேன்” என்றார்.

பிளாட்பாரத்தில் கடைக்கு அருகில் நின்றவன் அப்பொதுதான் பார்த்தான் அந்த சோப்புக் குமிழி சிறுமியை. அது ஆறுமுகத்தை சட்டை பண்ணாமல் காட்சிக் கண்னாடிப் பெட்டியில் உள்ள பொம்மை அணிந்துள்ள உடையைத் தான் அணிந்து பள்ளிக்கு போய் மற்ற குழந்தைகளிடம் காட்டுவதாக கற்பனை செய்து தனக்குத்தானே பேசி சிரித்தபடி இருந்தது. காட்சி, அந்த கற்பனை உரையாடல்கள் எல்லாம் கவனத்தை ஈர்த்தது. கொஞ்ச நேரத்திற்குப் பின் கர்சீப் இளைஞனிடம், “அண்ணா என்னிக்கு அந்த முட்டாய் கலர் டிரஸ் வாங்கித் தருவாய்” என்றது. அதற்கு அவன்,
“அது ஒனக்கு நல்லாயிராது. தீபாவளி நேரத்தில் நல்ல டிரஸ் சீப்பா அண்ணன் வாங்கித்தருவேன்” என்றான்.
உடனே அது அந்த பிச்சைகார கிழவனிடம் போய் “ தாத்தா, நீ சொல்லு தாத்தா, அது எனக்கு நல்லாத்தானே இருக்கும். அண்ணன் பொய் சொல்லுது” என்று புகார் சொன்னது. “இல்லை. அது ஒனக்கு நல்லா இருக்காது. அண்ணன் சொல்லறது சரிதான்”
“போ, தாத்தா, ஒனக்கு கண்ணே தெரியாது. அப்புறம் எப்படி அந்த கலர் எனக்கு நல்லாயில்லைன்னு உனக்குத் தெரிஞ்சது” எதிர் கேள்வி போட்டது அந்தப் பெண். இதை வேடிக்கை பார்த்ததில் நேரம் போனதே தெரியவில்லை ஆறுமுகத்திற்கு.

“ வா, போகலாம்” என்று பாய் கூப்பிட்டதும் சுயநிலைக்கு வந்தான். வண்டியில் தியேட்டருக்கு வந்து பாய் நேராக மேனேஜரைப் பார்த்து டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்தார். “லே, படம் பார்த்துவிட்டு தலை வலி என்று லீவு கேட்க கூடாது. ஆமா” என்று சொல்லி விட்டு மாலை மூன்று மணிக்குள் கடைக்கு வந்து விடும்படி கூறிவிட்டு மோட்டார் பைக்கில் சென்று விட்டார்.

ஆறுமுகத்தை அடுத்த ஒரு மணி நேரத்தில் கடையில் பார்த்த ஷகாபுதீன் பாய்க்கு ஆச்சரியம்.
“என்னடே, பிரச்சனை. படத்துக்குப் போகலையா?”
“இல்லை அண்ணாச்சி, அந்த மிட்டாய் கலர் ஃப்ராக் என்ன விலை?”
“ அது எண்ணூறு ரூபாய் டே. ஏலே, என்ன ஊருக்குப் போகப் போறியா? ஒரு வார்த்தை கூடச் சொல்லலை”
“அதெல்லாம் ஒன்னும் இல்லை பாய். அந்த ஃபிராக் நான் வாங்கிக்கிறேன். பில்லு போட சொல்லுங்க”
கௌண்டரில் எண்ணூறு ரூபாய் பணத்தை எண்ணி கொடுத்து விட்டு, டெலிவெரி பகுதியில் சோமுவிடம் டெலிவெரி வாங்கிக் கொண்டான். ஷகாபுதீன் பாயை, “அண்ணாசி, என்னோட கொஞ்சம் வாங்க” என்று கூப்பிட்டவன், கீழே பிளாட்பாரத்திற்கு வந்தான். இன்னமும் அந்த சிறுமி கண்ணாடி காட்சிப் பெட்டியில் உள்ள பொம்மையுடன் பேசிக் களித்துக் கொண்டிருந்தது. அதை கூப்பிட்டு அருகே வரச் சொல்லி,
“ பாய் அண்னாச்சி, பாப்பாவுக்கு அந்த ஃப்ராக்கை கொடுத்துடுங்க” என்றான்.

அந்த சிறுமி முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். கர்சீப் அண்ணன் தாங்க்ஸ் சார் என்று ஆயிரம் தடவை சொல்லியிருப்பான். ஷஹாபுதீன் பாய், ஆறுமுகம் இருவரையும் சுற்றி பெருங் கூட்டம். கூட்டத்தை விலக்கி கடைக்கு வந்தவன் பாயிடம், “ நீங்க போன பின்னாடி அங்கே வந்த ஒரு ரசிகருக்கு டிக்கெட் தேவைப்பட்டது. அவர் என்னிடம் ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட்டை தர முடியுமான்னு கேட்டார். வேற சந்தர்ப்பமாக இருந்திருந்தா மாட்டேன். ஆனா காலையில் இந்த பிஞ்சின் ஆசையை கேட்டபோது பாவமாக இருந்தது. நா தர்மம் எதுவும் செய்யவில்லை. அந்த அளவுக்கு பணவசதியும் இல்லை. தலைவர் எனக்கு இப்படி ஒரு நல்ல வாய்ப்பைக் கொடுத்தார். பண வசதி இருந்த பணக்காரன் யாரும் இந்த பிள்ளையின் ஆசையை இந்த ஜென்மத்தில் பூர்த்தி செய்யப் போவதில்லை. பணம் உள்ளவன் கையில் இருந்த அதிகப்படி பணத்தை அந்த குழந்தையின் ஆசையை நிறைவேற்ற ஆண்டவன் காட்டிய படி பயன்படுத்தினேன் அவ்வளவுதான் பாய். நான் செய்தது தப்பானா என்னை மன்னிச்சிருங்க பாய்” என்ற ஆறுமுகத்தை இறுக்கமாக அணைத்துக் கொண்ட ஷஹாபுதீனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.