அறை என்னவோ பெரிசுதான் ஆனால் நாலு வாசல்
அதில் மூன்று திறந்திருக்க ஒன்று மட்டும் பூட்டியிருந்தது.உள்ளே பார்த்தால் ஒரு தாடிக்காரக் கிழவன் திருவள்ளுவர் சாயலில் எங்கள் வருகையை பேச்சைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல் அறையில் அவர் பாட்டுக்கு ஏதோ எழுதுவதும் கசக்கி எறிவதும்
அருகே வைத்திருந்த கருவியிலிருந்து மானாவாரியாக பேப்பரை கிழிப்பதும்
எழுதுவதும் கசக்கிப் போடுவதும் திரும்ப எழுதுவதும் என்று
கடமையே கண்ணாயிருந்தார். மரியாதைக்கு நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.
கொஞ்சம் என்னவோ மாதிரித்தான் இருந்தது.
இந்த அறையை வேறு நல்ல அறை கிடைக்கும் வரை
இவருடன் பகிர்ந்து கொள்ளச் சொன்னாங்க முடியுமா? என்றான் கூட வந்தவன்.
அறையில் கிட்டத்தட்ட பாதிக்கு இந்த கிழவன் எழுதி எழுதி கசக்கிப்போட்ட பேப்பர் குப்பைதான்.சரி என்றேன். வேற வழியில்லை.
வேலையில்லாதவனுக்கு கூடப் பேசக் கொள்ள ஒரு துணை.
கொஞ்சம் நம்ம ரூம் மேட் தாத்தா பற்றி கேட்டேன்.
அதற்கு அவன், “அதெல்லாம் தெரியாது சார். ஓனருக்கு சொந்தக்காரராம். ரொம்ப நாளா இருக்காராம்.கொஞ்சம் அகராதி புடிச்சவராம். படைப்பாளியோ என்னவோ சொன்னாங்க
ஓனரயே ஒரு தரம் மட்டம் தட்டிப் பேசினானாம். அவரு அந்த கோவத்தில
நாலு வாசலில் ஒண்ணை அடைச்சிட்டதா சொல்லுவாங்க.
குடும்பம் இருக்காம். அந்தம்மா பெரிய படிப்பாளியாம்.
அவங்க இவரைத் தேடி வந்ததில்லை. இவரும் இந்த இடத்தை விட்டு அடியெடுத்து வெச்சதில்லை” என்றான். அதற்கு மேல் அவன் வாயை கிண்டி எந்த தகவலும் வராது என்பது தேர்ந்த நிருபனான எனக்குத் தெரிந்து விட்டது.
நான், “ரூம் கிளீன் பண்ணணும்” என்றதும் ஆள் வரும் என்று சொல்லி
காணாமல் போனான்.
வந்த ரூம் பாய் நல்ல வயசாளி. நம்ம ரூம் மேட்டை விடவும் பழசாகத் தெரிந்தார்.என்னை பார்த்து சினேகமாக “நீதானா இங்கே இருக்கப்போறாய்” என்றார். தலையசைத்த என்னைப் பார்த்து, ஜாக்கிரதை. அவர தொந்தரவு செய்யக் கூடாது. அதிகமா குப்பை ஆனா கதவை தட்டு. நான் வந்து அள்ளிகிட்டு போறேன். அவரா விரும்பினா ஒரிரு வார்த்தை பேசுவார். மற்றபடி உனக்கு எந்த பிரச்சனையும் இராது”. என்றபடி பேப்பர் பந்துகளை எடுத்து ஒரு கூடையில் போட்டுக் கொண்டார்.
“அப்புறம் வரேன், இதுல இன்னும் நிறைய வேலை இருக்கு”. என்றபடி கிளம்பியவருக்கு டிப்ஸ் கொடுக்க நினைத்து பர்ஸை எடுப்பதற்குள் காணாமல் போனார். சகஜ நிலைக்கு வந்து நம்ம திருவள்ளுவரைப் பார்த்தேன். இப்போ கொஞ்சம் கசக்காமல் ஐந்தாறு பக்கங்கள் எழுதியிருந்தார் . ஒரு ஆவலில் உந்தப்பட்டு அதை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். அருமையான கதை. அது வளர்ந்து வர வர படித்துக் கொண்டிக்கும் போதே திடீரென கசக்கி எறிந்தார். எனக்கோ சரியான கோபம். இது போல் கிட்டத்தட்ட ஒரு ஐம்பது முறை ஆகி விட்டது. அறையும் நிறைய ஆரம்பித்து விட்டது. ரூம் சர்வீஸ் தாத்தாவை கதவைத் தட்டிக் கூப்பிட்டேன்.
வந்தவரிடம் ,” என்ன இந்த ஆள் மகா கிறுக்கனாக இருப்பான் போல் இருக்கே” என்றபடி வந்தலிருந்து நான் பார்த்ததை சொன்னேன்.
தாத்தா சிரித்தார். “கண்ணு பொயுது போகாங்காட்டியும் நூலக ரூம்புக்கு வா அங்க இந்த பேப்பர் அல்லாம் பிரிச்சி, சரி பண்ணி, தனித்தனியா பிரிச்சி பைண்டு பண்ணி வச்சிருக்கேன். அங்க வந்து படி” , என்றவருடன் சென்றேன்.
நூலகர் நல்ல திறமையான ஆளாக இருக்க வேண்டும். அது அடுக்கிவைக்கப்பட்ட அந்த ஒழுங்கு, நேர்த்தியில் பளிச்சிட்டது. வருடம் நாள், என்று அழகாக அடுக்கப்பட்ட புத்தகங்களை எடுத்துப் படித்ததில் நேரம் போனது தெரியவில்லை. ஒவ்வொன்றும் அப்படி அழகான கதைகள், காவியங்கள், கவிதைகள். சோகம், மகிழ்ச்சி இப்படி நவரசமும் எல்லாவற்றிலும் கலந்திருந்தது. சில எழுதப்படாமல் வெற்றாக, சில ஓரிரு வரிகள், சில நூறு பக்கங்கள். திகைத்துப் போனவன் அறைக்குத் திரும்பினேன்.
மனது அடித்துக் கொண்டது. கண்டிப்பாக இன்று என்னுடைய இந்த அறைக் கிறுக்கனை இது பற்றி கேட்க வேண்டும். அலுப்பாக இருந்தது. கண்னயர்ந்து எழுந்தால் என் மீது அத்தனை காகிதங்கள். அவற்றை தள்ளி விட்டு எழும் போது சில நம்ம திருவள்ளுவ ரூம் மேட் மீது பட்டதும், திரும்பினார். இது தான் சமயம் என்று என்னை அறிமுகம் செய்து கொள்ள ஆரம்பித்ததும் வேண்டாம் என்று கையசைத்தார்.
உடனே சந்தேகத்தை வினவ,
“ என் பெயர் பிரம்மா” இதுவரை எழுதிய எதுவும் எனக்குத் திருப்தியாக இல்லை என்று சொல்லிவிட்டு மீண்டும் தலை குனிந்தபடி எழுத ஆரம்பித்தார் என் தாடிக்கார அறை நண்பன்.
“ என் பெயர் பிரம்மா” இதுவரை எழுதிய எதுவும் எனக்குத் திருப்தியாக இல்லை என்று சொல்லிவிட்டு மீண்டும் தலை குனிந்தபடி எழுத ஆரம்பித்தார் என் தாடிக்கார அறை நண்பன்.

No comments:
Post a Comment