Monday, 23 May 2016

இறைவன்


காலை ஆறு மணிக்கு வேப்ப மரம் பஸ் ஸ்டாப்பிற்கு வந்து உட்கார்ந்தாகி விட்டது.

நல்ல பத்து மணி எதிர் வெய்யிலில் வியர்வை ஆறாக ஓடியது.

கடுப்பேற்றும் பக்கத்து தள்ளுவண்டி பழக்கடை முருகேசன் “எண்ணனே எலக்சன் எப்படிணே? உங்க தெருல கெவனிச்சாய்ங்க போல”.

“என்னை கொஞ்சம் கவனி” என்றது அது.

“சற்று நேரம் பொறு” நான்

“சரி . இன்னும் அரைமணி நேரம் சரியா”? அது



அரைமணி நேரம் கடந்த பின் மீண்டும் அழைத்து சற்று கோபமாகவே கடித்து நினைவூட்டியது.

மறுபடியும் “இன்னும் சற்று நேரம் பொறு” என்பது தவிர வேறென்ன சொல்ல, 
சொன்னேன்.

அரை மனதுடன் ஏதோ முணுமணுத்தபடி இருந்தது. நிச்சயம் திட்டியிருக்கும்.

அடுத்த அரைமணியில் டாண் என்று வந்து நின்று ஈ என்று பல்லைக் காட்டியது.

எதிர் டீக்கடையில் இரண்டு மடக்கு தண்ணீர் குடித்து விட்டு உட்கார்ந்தேன்.

“முதலில் உன்னைக் நிரந்தரமாய் கொல்ல ஆயுதம் வாங்கணும். 

நல்ல பார்ட்டி வரட்டும்” நான்.

நக்கலாகப் பாரத்துச் சிரித்தது.

“ஆமா. இரண்டு நாளா இதத்தான் சொல்லிட்டுஇருக்க” என்றது அது.
அரசமரக் காற்று, கண்ணை மூட அச்சாரம் போட குரலொன்று,
“தம்பி இதை பாருப்பா” கேட்கஎதுவும் பேசாமல் அரைமணி நேர வேலை.

எப்படியும் இருபது, இருபத்தை ஐந்து வாங்கலாம்.

டிப்டாப் ஆளு அம்பது கூடத் தேறலாம். மனக்கணக்குகள்.

வேலை முடித்து நிமிர்ந்து பார்த்து கூலி சொல்லும் முன் பத்து ரூபாய் காசை வீசி போட்டு வந்த பஸ்ஸில் ஏறிக் காணாமல் போனான் புண்ணியவான்.

ஓடிப் போய் அரசாங்க உணவகத்தில் ஒரு சாம்பார் சாதம் சாப்பிட சந்தோஷமாக அது செத்துப் போனது.

மாலை மணி ஐந்து, செத்துப் போனவன் திரும்ப வந்தான் பேயாக மறுபடியும்.

அடுத்த செருப்பு அறுந்தவர் வரும் வரை அது போடும் பேயாட்டத்தை ஓட்ட என்னிடம் எந்த மந்திரமும் இல்லை.

அது வயிற்றில் பூசாரியாக உக்கார்ந்து கொண்டு உடுக்கடித்து என்னை ஓட ஓட விரட்டிக் கொண்டிருந்தது.


“உன் வாழ்வு என் கையில் நான் தான் கடவுள்” என்று கொக்கரித்து பசி என்ற அது.

பேருந்துப் பயணம்

பேருந்து அதிரும் தாலாட்டு ஓசை.

மெலிந்து கேட்கும் எப்.எம் வானொலி இசை.

நெரிசலில் சிக்கிய கைக்குழந்தையின் அழுகை.

நடத்துனரின், "டிக்கெட், டிக்கெட்" குரல்.

நம் தோளில் தூங்கி தலை வைத்துத் தூங்கும் பயணியின் மெலிதான குறட்டை.

டோல் கேட்களில் விற்கும் வெள்ளரிப் பிஞ்சு,வேர்க்கடலை இன்ன பிற.

சாலையோர சத்திரத்தில் கீச்சுக் குரலில் கேட்டு மறையும் திரைப்பாடல்.

சப்தமாக கைபேசியில் மனைவியிடம் பேசும் குடும்பஸ்தர்.

நிமிடத்திற்கு ஒரு முறை “இரண்டு ரூபாய் பாக்கிச் சில்லறை தரணும்” நினைப்பூட்டும் முதியவர்.

கண்ணால் மொழி பேசும் மௌனக் காதலர்கள்.

காதில் ஒலிப்பான் மாட்டி உலகம் மறந்த இசை ரசிகர்கள்.

கைபேசியில் ‘சாட்’டியபடி இளைய தலைமுறையினர்.

செய்தித்தாளை விரித்து வைத்து படபடக்கும் காற்றிலும் செய்தி வாசிக்கும் அலுவலர்கள்.

இருவர் இருக்கையில் அருகருகே பயந்தபடி அமர்ந்திருந்த காதல் சோடி.

காலைப் பரப்பி அடுத்தவர் உட்கார இடமில்லாத மாதிரி பார்த்துக் கொள்ளும் சாமர்த்தியசாலிகள்.

என்று பேருந்துப் பயணத்தில் ரசிக்கக் கூடிய அம்சங்களுடன் இலவச இணைப்பாக.

போதையில் ‘மண் பானைக் காத்து பானை உடஞ்சா எங்கே போவும்’ என்று பானைத்தத்துவ மழை பொழிந்த திம்மராஜபுரம் ராசப்பன்.
அவன் அருகே இருக்கை வாய்க்கப் பெற்ற எனக்கு
ஆண்டவனின் அருட்கருணை அந்தப் பேருந்துப் பயணம்.

Sunday, 22 May 2016

வாக்கு சேகரிப்புக் காட்சிகள் தேர்தல் - 2016

யானை வரும் முன் மணி ஓசையாக

வேட்பாளர் வரும் முன் "வந்து கொண்டிருக்கிறார்", முழக்கம் ஒலி பெருக்கியில்

ரத,கஜ, துரத பதாதி நால்வகைப் படை இல்லை

நாற்பது இருசக்கர வாகனப் படை கட்சிக் கொடிகள் படபடக்க
வெறிக் கூச்சலிட்டபடி

நாற் சக்கர சரக்குந்துகளில்டண்டணக்கா பேண்ட் செட்

ஸ்கார்ப்பியோ கார்களில் கட்சி முக்கியப் பிரமுகர்கள்

அடுத்து வரும் சரக்குந்தில் ஸ்பாட் விளக்கு ஒளி விளக்குகள்

ஐந்தாறு கட்சிக் கொடி நிறத்தில் துவர்த்தணிந்த வெள்ளுடைப் பிரமுகர்கள்

நடுவில் முண்டா பனியன் துல்லியமாகத் தெரியும் மெல்லிய வெள்ளை மல் சட்டையில்

இலக்கின்றி சிரித்து, கைகூப்பியபடி வேட்பாளர்

"ஏ ஆயா ஏ , பெரிசு ஓரம் போ " ,யோவ் நின்னு போயா அண்ணன் ஓட்டு கேட்டு வராரில்ல" என்ற தொண்டர்கள்

முதலும் கடைசியுமாக தொகுதி மக்களுக்கு காட்சியளிக்க வந்து கொண்டு இருந்தனர்

தேர்தலில் பங்கு கொண்ட சனநாயகத் தெய்வங்கள்.

தெருவில் வந்து கற்பூரம் ஏற்றி தேங்காய் பழம் வெற்றிலை பாக்குடன் மரியாதை செய்து அருள் பெறுங்கள் மக்களே.

இருட்டிய பின் இரவில் வீடுதேடி வரும் இலட்சுமி கடாட்சம்

இன்னாட்டு மன்னர் சடாரி வாங்கி நாளை மறுநாள் மை பிரசாதம் இட்டுக்கொண்டு இரவு டாஸ்மாக் சரக்கில் தீர்த்தவாரி

அப்புறம் வழக்கம் போல் ஐந்து வருடங்களுக்குப் புலம்பித் தீர்க்கலாம்.

இன்னும் விடியவில்லை.

Friday, 20 May 2016

ஒரு வாக்குச்சாவடி தலைமைத் தேர்தல் அலுவலரின் மலரும் நினைவுகள் பகுதி (5)



ஒரு வாக்குச்சாவடி தலைமைத் தேர்தல் அலுவலரின் மலரும் நினைவுகள்
பகுதி (5)
நல்ல சாவடியில் பணியாற்றிய திருப்தி இருந்தது. இதுவரை கிட்டத்தட்ட பத்து தேர்தல்களில் நான் பணியாற்றிய எல்லா சாவடிகளும் பதட்டமான சாவடி பட்டியலில் இருந்தபோதிலும் ஒருபிரச்சனையும் வந்தது இல்லை. 
மாலை வாக்குப் பதிவு முடிந்த பின் இயந்திரங்களைப் பிரித்து
(detaching of control and Ballot unit) இனி யாரும் வாக்குப் பதிவு செய்ய வழி இல்லை என்பதை close பொத்தானை அழுத்திய பின் முகவர்களுக்குக் காட்டுதல் மிக அவசியம்.
இயந்திரங்களை மூடி முத்திரை இட்டு பாதுகாப்பாக வைத்து விட்டு, வாக்காளர் பட்டியலை சரிக்கட்ட வேண்டும். அதை PO1 மற்றும் PO2 செய்யும் போதே முகவர்களுக்கு வாக்குச் சீட்டுக் கணக்கு(Ballot paper account) தயார் செய்து வைக்கலாம். அதேமாதிரி வாக்குச் சாவடி தலைமைத் தேர்தல் அலுவரின் குறிப்பேட்டை(Presiding officer’s diary) யும் முடித்து விடலாம்.
அப்புறம் ஏறக்கட்டுதல்.
இதில் சட்டமுறைமைக்கான உறை(Statutory Cover),
சட்ட முறைமையற்ற உறை(Non Statutory Cover), இதர ஆவண உறை மற்றும் பிற வன் பொருட்கள் சிப்பம் கட்டுதல் முடிந்தால் 90% தேர்தல் பணி முடிந்த மாதிரி.
எல்லாம் முடிந்த போது மாலை 7.30 மணி. எல்லாம் நல்லபடியாக முடிக்க உதவிய முகவர்கள், ஊர் பிரமுகர்கள், என் குழுப் பணியாளர்களுடன் கைகுலுக்கி என் நன்றியைத் தெரிவித்தேன். அடுத்தது பள்ளி நிர்வாகி இரவு உணவு அளித்தார். எதாவது குறை, வசதிக் குறைவு இருந்தால் சுட்டிக்காட்டக் கூறினார். ஆனால் அப்படி எதுவுமே இல்லை என்பதே உண்மை.
இரவு 10 மணி வரை குறுவட்ட அலுவலர்கள் வராத நிலையில் வடநாட்டு இயந்திரத் துப்பாக்கிக் காவலர்கள் என்னை அறையைப் பூட்டிக் கொண்டு உறங்கச் சொல்லி காவல் இருந்தனர். அவர்கள் பேசிய இந்தி எங்கள் யாருக்கும் தெரியாது. நாங்கள் பேசிய தமிழ் அவர்களுக்குப் புரியாது. இருப்பினும் ஏதோ ஒரு அன்பும் பாசமும் கண்ணுக்குத் தெரியாத சங்கிலி பிணைத்திருப்பதே நம் இந்தியாவின் சிறப்பு. அந்த இரண்டு நாட்களில் சாப்,மேம் என்று அப்படி ஒட்டிக் கொண்டனர்.
நள்ளிரவு 1.30 (14.04.2011) வாக்கில் Zonal officer மற்றும் Mobile force வந்து ஆவணங்களைச் சரிபார்த்து வாங்கிக் கொண்டனர்.
எங்களுக்கு தரப்பட்ட உழைப்பூதியத் தொகையை பிற தேர்தல் அலுவலர்களுக்குப் பகிர்ந்தளித்தேன். நன்றி கூறினேன்.
காவல் துறையினர் தங்கள் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு இன்னும் பாக்கியுள்ள இரண்டு உட்புற கிராம வாக்குச் சாவடிகளுக்குச் சென்றனர்.
அதில் முதல் சாவடியில் “சாாாார்” என்று ஒரு குரல் கேட்டுத் திரும்ப நம்ம PWD சார்.
“சார் நீங்க சொன்னது நேற்று புரியவில்லை. இன்னிக்கு புரிந்து விட்டது” என்றார். 13.04.2011 அதிகாலை 2 மணிக்கு அவரை அந்த சாவடியில் தலைமை அலுவலராக விட்டுச் சென்றனராம். தலையும் காலும் புரியவில்லையாம்.அவஸ்தைப்பட்டு எல்லாம் தயார் பண்ண போறும் போறுமென்று ஆகிவிட்டது. தெரியாம வந்து மாட்டிக்கிட்டேன் சார். இத்தனை ஆவணங்களை ஒரு நாளில் தயார் செய்வது ரொம்ப challenging job sir என்றார். இன்னும் சில ஆவணங்கள் முழுமையாக இல்லை என்றார். அப்புறம் அதை அரை மணி நேரத்தில் சரி செய்து கொடுத்தனர் எங்கள் PO கள். எல்லோரையும் போலீஸ் தச்சூர் கூட்டுச் சாலையில் விடும் போது மணி அதிகாலை நான்கு. நாலரை மணிக்கு திருப்பதியிலிருந்து கோயம்பேடு வரும் ஆந்திர மாநில போக்குவரத்துக் கழக வண்டியை நிறுத்தி ஏறி வீட்டை அடைந்த போது விடிந்திருந்தது.
முற்றும்.

ஒரு வாக்குச்சாவடி தலைமைத் தேர்தல் அலுவலரின் மலரும் நினைவுகள் பகுதி(4)

ஒரு வாக்குச்சாவடி தலைமைத் தேர்தல் அலுவலரின் மலரும் நினைவுகள்
பகுதி(4)

இந்த வாக்குச் சாவடிகளில் சிலவற்றில் வீடியோ எடுப்பார்கள்.
சிலவற்றில் கேமிரா மூலம் லேப்டாப்பில் பதிவு செய்வது மற்றொரு வகை. மிகப் பதட்டமான வாக்குச் சாவடிகளில் மட்டுமே online கண்காணிப்பு.
நான் பணியாற்ற வந்த அந்த வாக்குச்சாவடி online கண்காணிப்பு வகை. அதாவது வாக்குச் சாவடியின் ஒவ்வொரு நிகழ்வும் தேரதல் ஆணைய கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்படும்.
13.04.2011 காலை 6.30 க்கு வேட்பாளர்களின் முகவர்கள் வரவேண்டும். அவர்களுக்கு ஒரு மாதிரித் தேர்தல்(MOCK POLL)நடத்த வேண்டும்.
அதன் முடிவை அவர்களுக்குக் காட்டி, வாக்குப் பதிவு இயந்திரத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்.
அப்புறம் அதை அழித்து விட்டு எல்லா வேட்பாளர் கணக்கிலும் தொடக்க வாக்கு எண்ணிக்கை சுழி(zero) என்பதைக் காட்டி அப்புறம் தான் வாக்குப் பதிவு இயந்திரத்தை முறைப்படி மூடி முத்திரை இட வேண்டும்.
இதற்கு தோராயமாக அரை மணி நேரம் பிடிக்கும். இதற்கிடையில் முகவர்களுக்கு அடையாள அட்டை தருதல்,கருவிகளின் எண்களை குறித்துக் கொள்ள அனுமதித்தல் பச்சைத் தாள் முத்திரையில்(Green paper seal) அவர்கள் கையொப்பம் பெறுதல், தேர்தல் ஆவணங்களில் முகவர்கள் கையொப்பம் வாங்குதலும் செய்ய வேண்டும்.
இந்த கையொப்பம் பெறுவதை இருக்கும் PO (polling officer) களில் ஒருவரிடம் ஒப்படைத்தால் நாம் வாக்குப்பதிவு இயந்திரத்தை அதிகம் பதட்டமில்லாமல் எளிதாக தயார் செய்து முடிக்கலாம்.
ஆனால் முகவர்கள் காலை 6.50க்குத்தான் வருவார்கள். முகவர்கள் குறித்த காலத்தில் வராவிட்டாலும் 6.55க்குள் மாதிரி வாக்குப் பதிவு நடத்தி,இயந்திரத்தை வாக்களிக்கத் தயார் நிலையில் வைக்க தேர்தல் விதிகள் தலைமை அலுவலருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
நன்கு திட்டமிட்டால் முகவர்கள் 6.45க்கு வந்தால் கூட 7 மணிக்கு வாக்குப் பதிவைத் துவக்கி விட முடியும்.
இதில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது என்னவென்றால் ஒவ்வொரு செயலையும் மேலிருந்து ஆணையம் நேரடியாக பாரக்கிறது.
கட்டுப்பாட்டுக்கருவியில் மாதிரி வாக்குப் பதிவு மற்றும் மூடி முத்திரை இடுதல் போன்ற செயல்கள் காலத்துடன் பதிவாகின்றது.
தவறு நடக்க வாய்ப்பில்லை.
இல்லை, 100% வாய்ப்பே இல்லை என்பதே சரி. மேலும் இந்த நிகழ்வுகளை SMS மூலம் உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.
இந்த கண்காணிப்பு போதாது என்று நுண்பார்வையாளர் (Micro Observer) என்பவர் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் நிகழ்வுகளில் பங்கு கொள்ளாமல் நடவடிக்கைகள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருப்பார்.
தேர்தல் நடத்தப்பட்ட விதம் பற்றிய விவர அறிக்கையை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு(பொதுவாக மாவட்ட ஆட்சியர்) அளிப்பார்.
வாக்குச் சாவடிகளில் மூன்று வகை உண்டு. அவை M (ஆண் வாக்காளர்கள் மட்டும்), F(பெண் வாக்காளர் மட்டும்) மற்றும் AV(இருபாலருக்கும்) என இருக்கும். என்னுடைய சாவடி AV வகையை சாவடி.
காலை 7 மணிக்கு எந்த பிரச்சனையுமின்றி வாக்குப் பதிவு தொடங்கியது.
கிட்டத்தட்ட 1000 வாக்காளர்கள். கிராம மக்கள் அதிலும் பெரும்பாலோர் கூலித் தொழில் செய்பவர்கள் என்பதால் சுறுசுறுப்பாக காலையிலேயே வாக்களிக்க வந்து விட்டனர்.
அமைதியாகவும்,நல்ல விறுவிறுப்பாகவும் இருந்தது வாக்குப் பதிவு.
இடையிடையே சில சலசலப்புகள் வருவது சகஜமே. போதை தெளியாமல் வருபவர், பிரச்சனை செய்ய ஆவலோடு வருபவர் இத்யாதி ஆட்களை ஊர் மக்கள் சமாளித்து அனுப்பி விட்டனர்.
தொடரும் பகுதி (5)

ஒரு வாக்குச்சாவடி தலைமைத் தேரதல் அலுவலரின் மலரும் நினைவுகள் பகுதி (3)

ஒரு வாக்குச்சாவடி தலைமைத் தேரதல் அலுவலரின் மலரும் நினைவுகள்
பகுதி (3)

இந்த கிராமம் மீஞ்சூருக்கு அருகில் உள்ள புராதனமான பாடல் பெற்ற சிவாலயம் உள்ள ஊர்.
ஆலயத்தை ஒட்டியே பள்ளி வளாகம். நல்ல அமைதியான சூழல். பொதுவாக வாக்குப்பதிவு முடிந்ததும் வெளி வாயில் கதவை மூடி விட்டு வரிசையில் நிற்பவர்களுக்கு token வழங்கி வாக்களிப்பை நிறைவு செய்வோம்.
இந்த பள்ளியில் அப்படி ஒரு gate இல்லை. ஆனால் எந்த பிரச்சனையும் இல்லை. பள்ளியின் தாளாளர் இரவு உணவு, தேர்தல் நாள் அன்று காலை சிற்றுண்டி மதிய உணவு மற்றும் இரவுச் சாப்பாடு எல்லாம் ஏற்பாடு செய்திருந்தார்.

சாவடியிலிருந்து சற்றுத் தொலைவில் இருந்த அவர் இல்லத்தில் உள்ள குளியல், கழிப்பறை ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்திருந்தார். மொத்தம் இரண்டு சாவடிகள் இரண்டும் 15’×10’ அளவிலான அடுத்தடுத்த அறைகள்.

என்னுடன் பணியாற்ற வந்த PO1 மற்றும் PO3 இருவரும் மகளிர். PO2 ஆண். நானும் அவரும் எங்கள் சாவடியில் தங்கவும், இரண்டு மகளிரும் பக்கத்துச் சாவடி மகளிருடன் ஒன்றாகத் தங்கவும் முடிவாயிற்று. இதற்கிடையில் BSNL அலுவலர்கள் online voting transmission க்கு modem மற்றும் camera பொருத்தினர். மிகவும் பதட்டமான சாவடியாம்.

குறுவட்ட அலுவலர் தேரதல் தொடர்பான பொருட்களை அளித்து விட்டு சரிபாரத்து வைக்கச் சொல்லிப் போனார்.
முதலில் control மற்றும் Ballot unit களை சரிபார்த்து அப்புறம் இதர பொருட்களை சரிபார்த்து முடிக்க இரவு 7 மணி. அப்புறம் polling booth தயார் செய்தல், போஸ்டர் ஓட்டுதல் எல்லாம் நல்லபடி நடந்தேறியது. PO1,2,3 எல்லாம் மிகவும் சுறுசுறுப்பு, நல்ல ஒத்துழைப்புத் தந்தனர். அவர்களில் PO3 புதியவர் எனவே கூடுதலாக கற்பதில் ஆர்வமாயிருந்தார்.
இரவு 8 மணிக்கு மணக்க மணக்க பூரி மசாலா வந்து சேர்ந்தது. ஆனந்தமாக சாப்பிட்டுக் கொண்டு இருந்த போது ஊர் எல்லாக் கட்சி பிரமுகர்களும் வந்தனர். வணக்கம் சொல்லி வரவேற்றோம். அவர்கள் நாங்கள் வெவ்வேறு கட்சியினர்தான், எங்களுக்குள் ஆயிரம் பிரச்சனைகள் உண்டு இருந்தாலும் நீங்கள் எங்கள் ஊரில் பணி செய்ய வந்தவர்கள். உங்கள் பணியில் எந்தக் குறுக்கீடும் இராது.
அதேபோல் உங்களை பாதுகாப்பாக அனுப்பி வைப்போம் என்று சொல்லிச் சென்றனர். தங்கள் ஊரின் நற் பெயரை காப்பாற்ற அவர்கள் முனைப்பாக இருப்பது சந்தோஷமாக இருந்தது.
இரவு 10 மணிக்கு Zonal officer திரும்ப வந்து எல்லாம் சரியாக இருப்பதை உறுதிப் படுத்திக் கொண்டு வாழ்த்துச் சொல்லி கிளம்பிப் போனார்.
இரவு 11 மணிக்கு பார்வையாளர்கள் வந்து சென்றனர். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை காவல் துறையினர் வந்தபடி இருந்தனர்.
எங்கள் சாவடிகளின் காவலர்கள் , எப்போதும் இல்லாமல் இளைஞர்கள். மயக்கமே வந்து விட்டது. பொதுவாக ஒரு ஊர்க்காவல் படை அல்லது வயதான முன்னாள் இராணுவ வீரர்தான் இருப்பர். இந்த முறை வட இந்திய இளைய காவலர்கள் இயந்திர துப்பாக்கியுடன். மிகவும் மகிழச்சியாக இருந்தது.
இடையிடையே கட்டுப்பாட்டு அறைக்கு SMS அனுப்புதல் என்று பரபரப்பாக தூக்கம் இன்றி இரவு கடந்து கொண்டிருந்தது. அதிகாலை 4 மணிக்கு ஒவ்வொருவராக காலைக்கடன்களை முடித்து 5 மணிக்கு தேர்தல் நடத்த நாங்கள் தயார் ஆகிவிட்டோம்.
தொடரும் (4)

ஒரு வாக்குச்சாவடி தலைமைத் தேர்தல் அலுவலரின் மலரும் நினைவுகள். பகுதி (2)

ஒரு வாக்குச்சாவடி தலைமைத் தேர்தல் அலுவலரின் மலரும் நினைவுகள்.

பகுதி (2)

போன முறை சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நாள் 13.04.2011.

12.04.2011 காலை 8 மணிக்கு பொன்னேரி L.N.G அரசினர் கல்லூரிக்கு வரச் சொல்லி கைபேசியில் தகவல் வந்திருந்தது.

காலை 5 மணிக்கே எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு 6.30க்கு கிளம்பி பேருந்து நிறுத்தம் வரவும் செங்குன்றம்(Redhills) செல்லும் 114 எண் பேருந்து காலியாக வந்தது.

செங்குன்றத்திலிருந்து அடிக்கடி பொன்னேரிக்கு பேருந்து உண்டென்பதால் அதில் ஏறி செங்குன்றம் வந்தாயிற்று.

மணி 7, எனவே சிற்றுண்டி சாப்பிட அவகாசமில்லை. இட்லி, பொங்கல் வடை பார்சல் வாங்கிக் கொண்டு பொன்னேரிக்கு வண்டி ஏறியாச்சு.

டாண்ணு 7.50க்கு சின்ன பெட்டியுடன் சங்கே முழங்கு எம்.ஜி.ஆர் மாதிரி பொன்னேரி பேருந்து நிலையத்தில் இறங்கினேன்.

வெளியே வந்து ஆட்டோ கேட்டால் 50 ரூபாய்(1கி.மீ தூரம்) என்று பேரம் பேசிக் கொண்டிருக்கும் போது, “அண்ணே வாங்க. காலேஜிற்குத்தானே, நான் கொண்டு விடுகிறேன்” என்ற குரல் வந்த திசையில் நம்ம பள்ளித் துணை ஆய்வாளர் திரு. திருவரசு தம்பி புன்னகையுடன்.

எட்டு மணிக்கு காலேஜ் வந்தால் வழக்கம் போல ஒரே களேபரம். அணி எண்(Team Number) படி ஒவ்வோர் அறையிலும் கிட்டத்தட்ட 100 பேர். இயந்திரத் துப்பாக்கி ஏந்திய மத்திய காவல் துறையினர் மயம்.

என் அணி எண் கூப்பிடப்படவில்லை. சிற்றுண்டியை முடித்து கை கழவி சற்று ஓய்வாக ஒரு மரத்தடியில் அமர்ந்தேன். 11 மணி வாக்கில் எல்லா அணி எண்ணும் படிக்கப்பட்டு விட்டது.

என் அணி எண் படிக்கப்படவில்லை. அணி எண் படித்து முடித்திருந்த அலுவலரிடம் என் அணி எண் சொல்லி இது வரை அழைக்கப்படவில்லை என்றேன். அவர் வழக்கம் போல “ அதெல்லாம் தெரியாது சார். ரிட்டனிங் ஆபிசர் கிட்ட கேளுங்க” என்றார்.

மனதிற்குள் சிரித்தபடி மீண்டும் அரசமரத்தடிக்கே வந்தேன். மணி12 ஆகிவிட்டது. அய்யோபாவமாக இருந்த ஒரு ஆசாமி மைக்கில் பெயர் கூப்பிடாதவங்க எல்லாம் அறை எண் **** ல் இருங்கள் என்றார்.

 நல்லவேளையாக அந்த அறை நம்ம போதி மரத்திற்கு அருகிலேயே இருந்தது. அங்கே உள்ளே போனதும் நம் ஆணையை பார்த்த அந்த அலுவலர், “நீங்கள் reserve sir.லஞ்ச் சாப்பிட்டு ஒன்னரை மணிக்கு வந்து இங்கேயே இருங்க position confirm பண்ணிட்டு கூப்பிடுவோம் என்றார்.

அதற்குள் போதி மரத்தில் உட்கார்ந்த நேரமோ என்னவோ ஞானம் வந்து விட்டது. என்னுடன் இருந்த ஒரு PWD அலுவலர் ஒருவர், “சார் reserve க்கு duty இல்லாட்டாலும் remuneration உண்டு” என்று அல்ப சந்தோஷத்தில் இருந்தார்.

 ஆனால் எனக்குத் தெரியும் அதில் உள்ள சிக்கல். திடீரென அதிகாலை 3 மணிக்கு எழுப்பி ஏதாவது ஆள் இல்லாத வாக்குச்சாவடிக்கு police vanல் ஏற்றிஅனுப்புவார்கள். அங்கே போனால் 3 மணி நேரமும் வேலை ஆளைத் தின்று விடும்.

அதை விட இப்போதே பணியிடம் கிடைப்பது நல்லது. ஆகவே யார் வந்து சொன்னாலும் முதலில் போவது நல்லது என்ற என் வார்த்தைகளை அந்த PWD அலுவலர் ஏற்கவில்லை.

 அதெல்லாம் “சமாளிச்சிக்கலாம் சார்” என்றவருக்கு அதுதான் முதல் தேர்தல் பணியாம்.
“சார் polling station -------க்கு Presiding officer வரவில்லை” என்ற குரல் என் காதில் தேனாகப் பாய்ந்தது.(Naan அம்மா கவனிக்க)

 என்னுடன் reserve duty யில் 10 நபர்கள் இருந்தனர். எல்லோரும் காது கேட்காத மாதிரி நழவினர்.

நான் தயங்காமல் எனக்குப் போடச் சொல்லி திருத்திய ஆணை போட்டு வாங்கிக் கொண்டேன். மற்றவர்கள் என் முதுகிற்குப் பின்னால் நக்கலாகச் சிரிப்பதை உணர முடிந்தது.

ஆணை வாங்கும் போது பிறபகல் மணி 3.00.
என் குழு உறுப்பினர்கள் எல்லோரையும் சந்தித்து குறு வட்ட அலுவலரிடம் (Zonal officer) SIM card வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.

பொன்னேரியிலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ள சிற்றூர். ஷேர் ஆட்டோ பிடித்து வசதியாக வந்து சேர்ந்தேன்.

அது என்ன SIM card என்றால் வாக்குச் சாவடி தலைமை அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு தொடர்பு கொள்ளத் தரப்படும் அரவான் SIM. வாக்குப் பதிவு இயந்திரம் இன்ன பிற சாதனங்களை ஒப்படைத்ததும் மரித்துவிடும் அந்த SIM card.

தேர்தல் நடைபெறும் போது கட்டுப்பாட்டு அறையுடன் அனைத்து விபரங்களையும் பரிமாற இந்த சிம் தான்.

……..தொடரும்