காலை ஆறு மணிக்கு வேப்ப மரம் பஸ் ஸ்டாப்பிற்கு வந்து உட்கார்ந்தாகி விட்டது.
நல்ல பத்து மணி எதிர் வெய்யிலில் வியர்வை ஆறாக ஓடியது.
கடுப்பேற்றும் பக்கத்து தள்ளுவண்டி
பழக்கடை முருகேசன் “எண்ணனே எலக்சன் எப்படிணே? உங்க தெருல கெவனிச்சாய்ங்க போல”.
“என்னை கொஞ்சம் கவனி” என்றது அது.
“சற்று நேரம் பொறு” நான்
“சரி . இன்னும் அரைமணி நேரம் சரியா”? அது
அரைமணி நேரம் கடந்த பின் மீண்டும் அழைத்து சற்று கோபமாகவே கடித்து நினைவூட்டியது.
மறுபடியும் “இன்னும் சற்று நேரம் பொறு” என்பது தவிர வேறென்ன சொல்ல,
சொன்னேன்.
சொன்னேன்.
அரை மனதுடன் ஏதோ முணுமணுத்தபடி இருந்தது. நிச்சயம் திட்டியிருக்கும்.
அடுத்த அரைமணியில் டாண் என்று வந்து நின்று ஈ என்று பல்லைக் காட்டியது.
எதிர் டீக்கடையில் இரண்டு மடக்கு தண்ணீர் குடித்து விட்டு உட்கார்ந்தேன்.
“முதலில் உன்னைக் நிரந்தரமாய் கொல்ல ஆயுதம் வாங்கணும்.
நல்ல பார்ட்டி வரட்டும்” நான்.
நக்கலாகப் பாரத்துச் சிரித்தது.
“ஆமா. இரண்டு நாளா இதத்தான் சொல்லிட்டுஇருக்க” என்றது அது.
அரசமரக் காற்று, கண்ணை மூட அச்சாரம் போட குரலொன்று,
“தம்பி இதை பாருப்பா” கேட்கஎதுவும் பேசாமல் அரைமணி நேர வேலை.
எப்படியும் இருபது, இருபத்தை ஐந்து வாங்கலாம்.
டிப்டாப் ஆளு அம்பது கூடத் தேறலாம். மனக்கணக்குகள்.
வேலை முடித்து நிமிர்ந்து பார்த்து கூலி சொல்லும் முன் பத்து ரூபாய்
காசை வீசி போட்டு வந்த பஸ்ஸில் ஏறிக் காணாமல் போனான் புண்ணியவான்.
ஓடிப் போய் அரசாங்க உணவகத்தில் ஒரு சாம்பார் சாதம் சாப்பிட சந்தோஷமாக
அது செத்துப் போனது.
மாலை மணி ஐந்து, செத்துப் போனவன் திரும்ப வந்தான் பேயாக மறுபடியும்.
அடுத்த செருப்பு அறுந்தவர் வரும் வரை அது போடும் பேயாட்டத்தை ஓட்ட என்னிடம்
எந்த மந்திரமும் இல்லை.
அது வயிற்றில் பூசாரியாக உக்கார்ந்து கொண்டு உடுக்கடித்து என்னை ஓட
ஓட விரட்டிக் கொண்டிருந்தது.
“உன் வாழ்வு என் கையில் நான் தான் கடவுள்” என்று கொக்கரித்து பசி என்ற
அது.

No comments:
Post a Comment